அஞ்சலி: கிரீஷ் ரகுநாத் கர்னாட் – அதிகாரத்திற்கெதிராக உண்மைகளை உரத்துப் பேசியவர்
நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலின் போது “வெறுப்புணர்வுக்கெதிராக வாக்களியுங்கள்” என்று பகிரங்கமாக மோடி அரசுக்கெதிராக அறைகூவல் விடுத்தவரும், ஆனந்த் டெல்டும்ப்டே போன்ற அறிவுத் துறையினரை அர்பன் நக்ஸல்கள் என்ற பெயரில் மோடி அரசு பழிவாங்கல் நடவடிக்கைக்கு இரையாக்கிய போது தானும் ஓர் ‘அர்பன் நக்ஸல்’ என்று பகிரங்கமாக அறிவித்துக்கொண்டவருமான புகழ்பெற்ற நாடகாசிரியர், நடிகர், திரைப்பட இயக்குநர், பாரதீய ஞானபீட விருது பெற்ற கிரிஷ் கர்னாட் (19 மே1938 – 10 ஜூன் 2019) இன்று காலமானார்.
யயாதி, ஹயவதனா, துக்ளக், நாகமண்டலா, தலெதண்டெ போன்ற நாடகங்களை எழுதி இந்திய நாடகங்களின் முகவரியை மாற்றியவர். தொன்மங்களை, வரலாற்றுப்போக்குகளை மறுவாசிப்புக்குட்படுத்தி சமகாலக் கண்கொண்டு அவற்றில் பொதிந்துள்ள இருத்தலியக்கேள்விகளை அலசுகிற அவரது நாடகங்கள் இந்திய நாடகங்களின் எல்லைகளை விரிவு செய்வதாயிருந்தன. சம்ஸ்காரா, ஒந்தனொந்து காலதள்ளி, மந்தன், நிஷாந்த், போன்ற படங்களின் மூலம் திரைக்கதையாசிரியராகவும் வம்ச விருசக்ஷா, உத்ஸவ் போன்ற படங்களின் திரை இயக்குநராகவும் பணியாற்றி இந்தியாவின் நியோ ரியலிச திரை இயக்கத்திற்கு வலு சேர்த்தவர்.
கடந்த பல ஆண்டுகளாய் மேலெழுந்து வரும் பாசிச அபாயத்திற்கெதிராய் உரத்து குரல் கொடுத்தவர். நரேந்திர தபோல்கர், கல்புர்கி, பன்சாரே, கௌரி லங்கேஷ் என சங்கப்பரிவாரத்தின் கொல்லப்பட வேண்டியவர்களின் வரிசையில் கிரீஷ் கர்னாட் பெயரும் இருந்ததை உளவுத்துறை சுட்டிக்காட்டியபோதும் அதிகாரத்திற்கெதிராக உண்மைகளை உரத்துப் பேசுகிறவராயிருந்தார். அவரது இருப்பும் பன்முகப் பங்களிப்பும் முன்னிலும் கூடுதலாக தேவைப்படுகிற இக்காலத்தில் அவர் நம்மைவிட்டுப் பிரிந்திருக்கிறார். அவரது மரணத்திற்கு மகிழ்ச்சி தெரிவித்து சங் பரிவாரத்தினர் கொண்டாடுமளவுக்கு தன் வாழ்நாள் முழுவதும் மதச்சார்பின்மையையும் நாட்டின் பன்மைத்துவத்தையும் உயர்த்திப் பிடித்தவர். அன்னாரது மறைவுக்கு தமுஎகச ஆழ்ந்த அஞ்சலியை உரித்தாக்குகிறது.
இப்படிக்கு
சு.வெங்கடேசன், மாநிலத்தலைவர் ஆதவன் தீட்சண்யா, பொதுச்செயலாளர்