18-ம் நூற்றாண்டை சேர்ந்த தமிழ் எண்கள் பொறித்த மைல் கல்: அம்பாசமுத்திரம் அருகே கண்டுபிடிப்பு

திருநெல்வேலிமாவட்டம் அம்பாசமுத்திரத்திலிருந்து பிரம்மதேசம் செல்லும் சாலையின் இடது புறத் தில் உள்ள கவுதமபுரி வண்டன் குளக்கரையில் 18- ம் நூற்றாண்டை சேர்ந்த தமிழ் எண் களுடன் கூடிய மைல்கல் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

தஞ்சாவூர் அருகிலுள்ள புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக்கழகம் நிறுவனர் ஆ.மணிகண்டன், தலைவர் கரு.ராசேந்திரன், ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத் தின் நிறுவன தலைவர் வே.ராஜ குரு, கொல்லங்குடி கா.காளிராசா, மதியழகன் ஆகியோர் அடங்கிய குழுவினர் இதை கண்டறிந்துள்ளனர். இந்த மைல் கல்லின் வரலாற்று பின்னணி குறித்து மணிகண்டன், ராஜகுரு ஆகியோர் கூறியதாவது:

புதுக்கோட்டை மாவட்டம் மற்றும் தஞ்சை மாவட்ட பகுதிகளில் 5 மைல்கல் கல்வெட்டுகள் கண் டெடுக்கப்பட்டுள்ளன. இந்த கல்வெட்டுகளில் தமிழ் ரோமன், அரபுஎண்கள் பொறிக்கப்பட்டுள்ளது. இது இப்பகுதியில் அடையாளம் காணப்பட்ட முதல் தமிழ் எண் மைல் கல்லாகும்.

முதலாம் ராஜராஜ சோழன் ஆட்சிக் காலத்தில் மிக முக்கியமான தளமாகவும், ஆங்கிலேயர் ஆட்சியில் 1850 -ம் ஆண்டுவரை தாலுகா தலைமையிடமாகவும் இருந்த பிரம்மதேசம் வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாகும்.

ஆங்கிலேயர் ஆட்சியின் மிக முக்கியமான கட்டுமான கட்டமைப்பு விரிவாக்கத்தின் ஒரு பகுதியாக 18- ம் நூற்றாண்டின் இறுதி காலக்கட்டத்தில் அம்பாசமுத்திரம் தொடங்கி பிரம்மதேசம் வரை இச்சாலை அமைக்கப்பட்டு, முக்கிய வழியாக பயன்படுத்தப்பட்டுள்ளது.

கவுதமபுரியில் கண்டுபிடிக்கப்பட்ட இக்கல்வெட்டில் அம்பாச முத்திரம் “க”, பிரம்மதேசம் “க” என பொறிக்கப்பட்டுள்ளது. அதாவது கல்வெட்டு நடப்பட்டுள்ள வண்டன் குளக்கரையிலிருந்து இரண்டு ஊர்களும் நேரெதிர் திசையில் ஒரு மைல்தூரம் என்று ஒரு பக்கத்தில் மட்டும் பொறிக்கப்பட்டுள்ளது. அம்பாசமுத்திரம் மற்றும் பிரம்மதேசம் செல்பவர்களுக்காக குறிப்பிட்ட இடைவெளிகளில் இந்த கல்வெட்டுகள் நடப்பட்டிருக்கவேண்டும்.

காலம் குறித்த குறிப்புகள் இல்லை

ஆனால், இந்த வழியில் வேறு எங்கும் சாலை ஓரத்தில் இது போன்ற தமிழ் எண் பொறிக்கப்பட்ட கல்வெட்டுகளை அடையாளம் காணவில்லை. இக்கல்வெட்டின் மூலம் 200 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே முக்கியத்துவம் வாய்ந்த நெடுஞ்சாலையாக இது இருந்துள்ளதை மைல்கல் கல்வெட்டு உறுதிப்படுத்துகிறது.

மைல் கல்லின் காலம் குறித்த தெளிவான குறிப்புகள் இல்லை என்பதால் பிரம்மதேசம் தாலுகா தலைமையிடமாக இருந்த கால கட்டத்தில் அதாவது கி.பி. 1850-க்கு முன்னதாக தமிழகம் முழுவதும் சாலை அமைத்த போது கிழக்கிந்திய கம்பெனியினரால் இக்கல்வெட்டுகள் அமைக்கப்பட்டிருக்க வேண்டும்.

தற்போது நடைமுறையிலுள்ள அரபுஎண்களை பயன்படுத்தாமல் ரோமன் எண்கள், தமிழ் எண்கள் மட்டுமே இந்த மைல் கற்களில் பொறிக்கப்பட்டிருப்பதன் மூலம் ஆங்கிலேயர் ஆட்சியின் தொடக்கத்தில் தமிழக ஆட்சி நிர்வாகத்தில் ரோமன் மற்றும் தமிழ் எண்கள் மட்டுமே பயன்பாட்டில் இருந்துள்ளது தெரிய வருகிறது.

ஆங்கிலேயர் காலத்திலேயே தமிழ் எண்கள் அரசு மற்றும் பொது மக்கள் பயன்பாட்டில் இருந்துள்ளதை அறிய முடிகிறது. மேலும், சமீப காலமாகத்தான் புழக்கத்திலிருந்து அவை அற்றுப்போயிருக்கிறது என்பதை புரிந்து கொள்ளலாம்.

தமிழ் இந்து, 30.05.2019

Tags: