இலங்கையில் ஏற்பட்டுள்ள அமெரிக்காவின் அதீத அக்கறை!
–பிரதீபன்
அமெரிக்க அரசின் இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ (Mike Pompeo) யூன் மாத இறுதியில் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார் என அந்நாட்டின் இராஜாங்கத் திணைக்களம் அறிவித்துள்ளது.
யூன் 24 முதல் 30 வரை அவர் மேற்கொள்ளவுள்ள மூன்று இந்தோ – பசுபிக் பிராந்திய நாடுகளுக்கான விஜயத்தின் போது அவர் முதலில் இந்தியா செல்லவுள்ளார்.
இந்திய விஜயம் பற்றிக் குறிப்பிட்டுள்ள அமெரிக்க அரசு, இந்தியாவில் மோடி திரும்பவும் தேர்தலில் வெற்றி பெற்றிருப்பது அவரது இலட்சியங்களை அடையவும், இந்தியாவை உலகின் நடுநிலை ஸ்தானத்துக்கு வளர்க்கவும் வழிவகுக்கும் எனத் தெரிவித்துள்ளது. அமெரிக்க அரசு வெளியிட்டுள்ள இந்தக் கருத்தின் அர்த்தம் எதிர்காலத்தில் இந்தப் பிராந்தியத்தில் மோடியின் இந்தியா அமெரிக்க வல்லரசின் இளைய கூட்டாளியாக மேலும் உறுதியுடன் செயல்படப் போவதின் வெளிப்பாடு எனக் கருதப்படுகிறது.
இராஜாங்க செயலாளரின் இலங்கை விஜயத்தைப் பொறுத்தவரை ஏப்ரல் 21இல் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்களால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு அமெரிக்காவின் ஒருமைப்பாட்டைத் தெரிவிப்பதற்காகவே என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு ஏற்கெனவே உலகத் தலைவர்கள் பலரும் தமது வன்மையான கண்டனத்தையும், இலங்கை மக்களுக்கு தமது ஒருமைப்பாட்டையும் தெரிவித்திருக்கின்றனர். அதில் அமெரிக்காவும் அடங்கும். அதற்கும் மேலாக உலக வல்லரசான அமெரிக்காவின் இராஜாங்க செயலாளர் நேரடியாக இலங்கை வந்து தனது ஒருமைப்பாட்டைத் தெரிவிக்க இருக்கிறார் என்றால், அதன் பின்னணியில் மிகப்பெரும் நோக்கம் ஒன்று இருப்பதாகவே பலரும் கருதுகின்றனர்.
இலங்கையில் கடந்த வருடம் ஒக்ரோபரில் இருந்து அரசியல் குழப்பங்கள் நாளுக்குநாள் அதிகரித்து வருகின்றன. அதற்கிடையில் ஏப்ரல் 21 பயங்கரவாதத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு புதிதாக இன முரண்பாடுகள் தோற்றுவிக்கப்பட்டுள்ளன. அத்துடன், இந்த வருட இறுதியில் நாட்டின் மிக முக்கியமான ஜனாதிபதித் தேர்தலும் நடைபெறவுள்ளது.
இந்தச் சூழ்நிலையில் அமெரிக்க அரசின் சர்வ வல்லமை பொருந்திய இராஜாங்க அமைச்சரின் இலங்கை விஜயம் இலங்கை – அமெரிக்க உறவுகளில் புதிய பரிமாணங்களை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இறுதியாக மைக் பொம்பியோ அமெரிக்காவின் இன்னொரு இளைய கூட்டாளியான யப்பான் செல்கின்றார்.
இந்த விஜயங்களின் நோக்கம் இந்தோ – பசுபிக் பிராந்தியத்தில் சுதந்திரமான, வெளிப்படையான தன்மையை ஏற்படுத்துவது என அமெரிக்கா தெரிவித்துள்ளது. இதை இன்னொரு வார்த்தையில் சொல்வதானால், அமெரிக்காவின் பிரதான போட்டி நாடான சீனாவின் செல்வாக்கை இப்பிராந்தியத்தில் மட்டம் தட்டும் அமெரிக்காவின் முயற்சிகளில் ஒன்றே பொம்பியோவின் விஜயத்தின் உள்கிடக்கை எனலாம்.