புல்கட்டு உரசியதால் தகராறு: நெல்லையில் தலித் இளைஞர் படுகொலை!

img

நெல்லை மாவட்ட ஜனநாயக வாலிபர் சங்கத்தின் பொருளாளரான 24 வயது இளைஞர் அசோக் படுகொலை செய்யப்பட்ட சம்பவம், நெல்லை அரசியல் வட்டாரத்தையும், சமுதாய வட்டாரத்தையும் உலுக்கிக் கொண்டிருக்கிறது.

திருநெல்வேலி மாநகரத்தை ஒட்டியுள்ள கிராமம் கரையிருப்பு. தச்சநல்லூர்- தாழையூத்துக்கு மத்தியில் இருக்கும் இந்த கிராமம் தச்சநல்லூர் காவல்நிலைய எல்லைக்குட்பட்டது. கரையிருப்பு கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் அசோக், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் இளைஞர் அணியான ஜனநாயக வாலிபர் சங்கத்தில் தீவிரமாக ஈடுபட்டு வந்தார். அந்த வட்டாரத்தில் நிலவும் சாதிக் கொடுமைகளுக்கு எதிராகவும் போராடி வந்தார்.

இந்நிலையில்தான் நேற்றிரவு (ஜூன் 12) சாதியவாதிகளால் படுபயங்கரமாக வெட்டிக் கொல்லப்பட்டிருக்கிறார் அசோக்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய நெல்லை மாவட்டத் தோழர்கள்,

“இரண்டு வாரங்களுக்கு முன் தனது தாயார் ஆவுடையம்மாளை இரு சக்கர வாகனத்தில் அழைத்துக் கொண்டு வயலில் இருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தார் அசோக். அப்போது சைக்கிளில் புல் கட்டும் ஏற்றிக் கொண்டு வந்தார். அந்த புல் கட்டின் மறுமுனை ஆதிக்க சாதிக்காரரின் மீது பட்டுவிட்டது. இது தொடர்பாக அசோக்கை அவர் தட்டிக் கேட்க, அசோக்கும் கடுமையாக எதிர்த்தார். இரு தரப்புக்கும் தகராறு ஏற்பட்டதால் தச்சநல்லூர் காவல்நிலையத்தில் இருவருமே புகார் செய்திருக்கிறார்கள்.

ஆனால் காவல்துறை ஆதிக்க சாதியினர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.நம்ம ஆள் மேலயே போலீஸ்ல புகார் கொடுத்துட்டானா என்று வன்மத்தில் இருந்த அவர்கள், நேற்று (ஜூன் 12) இரவு திட்டமிட்டு கரையிருப்பு அருகே அசோக்கை வெட்டிக் கொலைசெய்திருக்கிறார்கள். நெல்லை காவல்துறையின் மெத்தனப் போக்கே முற்றிலும் இதற்குக் காரணம். இது முழுக்க முழுக்க சாதியப் படுகொலை. தமிழக அரசு தலையிட்டு குற்றவாளிகளைக் கைது செய்ய வேண்டும்” என்று கூறினார்கள்.

நேற்றிரவு முதலே நெல்லை மருத்துவமனையில் அசோக்கின் உடலை பெற மாட்டோம் என்று போராட்டம் நடத்தினார்கள் மார்க்சிஸ்ட் கட்சியினர். இன்று நெல்லை-மதுரை நெடுஞ்சாலையில் நெல்லை மாவட்டச் செயலாளர் பாஸ்கரன் உள்ளிட்ட பலர் சாலை மறியல் போராட்டத்தில் இறங்கிவிட்டனர். தகவல் அறிந்த மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளரான கே.பாலகிருஷ்ணனும் நெல்லைக்குப் புறப்பட்டார். அசோக்கின் அம்மாவை சந்தித்த கே.பாலகிருஷ்ணன் அவருக்கு ஆறுதல் தெரிவித்தார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில்,

“ திருநெல்வேலி மாவட்டம், தச்சநல்லூர் அருகே கரையிருப்பு கிராமத்தில் வசிக்கும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் நெல்லை மாவட்டப் பொருளாளரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இடைக்குழு உறுப்பினருமான தோழர் அசோக் (வயது 24) அந்த கிராமத்தில் உள்ள சாதி வெறியர்களால் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்த படுகொலையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது.

கரையிருப்பு கிராமத்தில் உள்ள தலித் மக்கள் தங்களது வேலை மற்றும்அன்றாடப் பணிகளுக்காக வேறு சமூக மக்கள் வசிக்கும் பொதுப்பாதை வழியாகவே செல்ல முடியும். அவ்வழியே செல்லும் தலித் மக்களை சில சாதி ஆணவம் கொண்ட வெறியர்கள் சாதிய ரீதியாக இழிவுபடுத்தும் செயல்கள் தொடர்ந்து நடந்து வந்துள்ளன. இதனை தட்டிக் கேட்க முன்வருபவர்களை இடைமறித்து இழிவுபடுத்துவது, அச்சுறுத்தி தாக்குவது போன்ற சம்பவங்களும் நடந்துள்ளன.

இந்நிலையில் அசோக் அவ்வழியே தனது தாயாருடன் இரண்டு வாரங்களுக்கு முன்பு இருசக்கர வாகனத்தில் செல்லும் போது சில சாதிவெறி சமூக விரோத சக்திகளால் வழிமறிக்கப்பட்டு தாக்கப்பட்டனர். இதுகுறித்து காவல்துறையினரிடம் புகார் அளிக்கப்பட்டும், புகார் மீது காவல்துறையினர் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. நேற்று (12.06.2019) இரவு சுமார் 9.00 மணியளவில்அசோக் வேலைக்கு செல்லும் போது, சாதி வெறியர்களால் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்த படுகொலைக்கு காவல்துறையின் மெத்தனப்போக்கே காரணமாகும்” என்று குற்றஞ்சாட்டியவர்,

“தென்மாவட்டங்களில் இதுபோன்று தலித் மக்கள் மீதான தாக்குதல்களும், படுகொலைகளும் சாதிய வெறியர்களால் தொடர்ச்சியாக நிகழ்த்தப்படுகிறது. அரசும், காவல்துறையும் இதனை தடுத்து நிறுத்தவும், சமூக நல்லிணக்கத்தை உறுதிப்படுத்தவும் உறுதியான நடவடிக்கைகளை எடுக்காததனுடைய விளைவே இதுபோன்ற படுகொலை சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெறுகின்றன. எனவே, அசோக்கை படுகொலை செய்த கொலையாளிகள் அனைவரையும் உடனடியாக கைது செய்து, கொலைக்குற்றப் பிரிவுகளுடன் – எஸ்.சி., / எஸ்.டி. வன்கொடுமைத் தடுப்புச் சட்டப் பிரிவுகளை இணைப்பது உள்ளிட்ட சட்டரீதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமெனவும், படுகொலை செய்யப்பட்ட அசோக்கின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு மற்றும் அரசு வேலைவாய்ப்பு வழங்கிட வேண்டுமெனவும், முன்னரே புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காத காவல்துறையினர் மீது உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் .

அசோக் படுகொலையை கண்டித்தும், சாதி வெறியர்கள் மீது உரிய நடவடிக்கைகள் எடுத்திட வலியுறுத்தியும் அனைத்து மாவட்டங்களிலும் உடனடியாக கண்டன இயக்கங்கள் நடத்திட வேண்டும்” என்றும் கேட்டுக் கொண்டிருக்கிறார். 

இதையடுத்து தமிழகம் முழுவதும் மார்க்சிஸ்ட் கட்சி ஆர்பாட்டத்தில் இறங்கியிருக்கிறது. அசோக் படுகொலையைக் கண்டித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மத்திய குழு ஜூன் 15 ஆம் தேதி தேசிய அளவில் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்திருக்கிறது.

நெல்லையை உலுக்கியுள்ள இந்த சாதியப் படுகொலை தென் மாவட்டங்களில் மீண்டும் ஒரு பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

இணையத்தளம்: மின்னம்பலம்

Tags: