பார்வை: உடன் இருப்பவர்களால் நிகழ்த்தப்படும் வன்முறை
உணவு, உடை, கலாச்சாரம் போன்றவை மண்ணுக்கும் மக்களுக்கும் ஏற்ப மாறுபடும் என்றாலும் உலகம் முழுவதும் ஒன்று மட்டும் ஒன்றுபோலவே இருக்கிறது. பெண்கள் மீது நிகழ்த்தப்படும் வன்முறைதான் அது என்பதைத் தன் பங்குக்கு வலுவாக உணர்த்தியிருக்கிறது உலக சுகாதார நிறுவனம்.
அண்மையில் அது வெளியிட்டிருக்கும் உலகளாவிய மதிப்பீட்டின்படி மூன்று பெண்களில் ஒருவர் தங்கள் குடும்பத்தைச் சேர்ந்த ஆணால் வன்முறைக்கு ஆளாக்கப்படுகிறார். அந்த ஆண், கணவன், தந்தை, சகோதரன் என யாராக வேண்டுமானாலும் இருக்கலாம். அல்லது குடும்பத்தைச் சேர்ந்த நெருங்கிய உறவினராகவும் இருக்கலாம்.
38 சதவீதப் பெண்கள் தங்கள் இணையரால் கொல்லப்படுவதாகவும் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. 37.7 சதவீத இந்தியப் பெண்கள் தங்கள் இணையரால் வன்முறைக்கு ஆளாக்கப்படுகிறார்கள். தென் கிழக்கு ஆசிய நாடுகளின் பட்டியலில் இப்படியொரு இடத்தைப் பிடித்து இந்தியா முன்னிலை வகிக்கிறது.
பெண்கள் மீதான வன்முறைக்குப் பல்வேறு காரணங்கள் சொல்லப்பட்டாலும் பாலினப் பாகுபாடுதான் மிக முக்கியக் காரணமாக இருக்கிறது. ஆண் முதல் பாலினமாக நடத்தப்படுகிற இடத்தில் இயல்பாகவே பெண் இரண்டாம் நிலைக்குத் தள்ளப்பட்டுவிடுகிறாள். சாதி, மதம், சடங்குகள் எல்லாமே பெண்ணை அடக்கி ஒடுக்கும் வழக்கத்தை காலம் காலமாகத் தொய்வின்றி அடுத்தடுத்த தலைமுறைகளுக்குக் கடத்திவருகின்றன.
இதில் படித்தவர்கள், படிக்காதவர்கள் என்ற பாகுபாடெல்லாம் இல்லை. கல்வி அறிவற்றவர்கள் உடல் ரீதியான வன்முறையில் இறங்குகிறார்கள் என்றால் கற்றறிந்தவர்களோ மிக நுட்பமாகப் பெண்ணின் மனத்தைச் சிதைக்கின்றனர். இது தவிர சமூக, பொருளாதாரக் காரணிகளும் பெண்ணின் மீதான வன்முறைக்குக் காரணமாக இருக்கின்றன.
குடும்பத்துக்குள் செயல்படுத்தப்படும் வன்முறைகள் ஏராளம். உடல்ரீதியான வன்முறை மட்டுமல்ல; பொருளாதாரச் சுரண்டல், உளவியல்ரீதியான வன்முறை, குழந்தைகளை அடித்துத் துன்புறுத்துவது போன்றவையும் குடும்ப வன்முறையில் அடங்கும்.
உலகமயமாக்கலுக்குப் பிறகு பெண்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிகளும் வன்முறைகளும் முடிவின்றி நீண்டுகொண்டே செல்கின்றன. ஊடகங்கள் பெண்களைப் பண்டமாகச் சந்தைப்படுத்த, பெண்களைப் பாதுகாப்பின்மை சூழ்ந்துகொள்கிறது. எப்போதும் தன் உடல் குறித்த கவனத்துட னேயே இருக்கும்படி அது பெண்களைக் கட்டமைக்கிறது.
குடும்பமும் சமூகமும் பெண்ணுக்கு வெவ்வேறு நெருக்கடிகளைத் தருகின்றன. குடும்ப வன்முறையிலிருந்து தப்பிக்கிறவர்கள் சமூகத்தின் தாக்குதலுக்கு ஆளாகிறார்கள். அது ஊதிய வேறுபாடாகவோ பணியிடத்தில் நடக்கிற பாலியல் சீண்டலாகவோ இருக்கலாம். அல்லது பயணங்களின்போது எதிர்கொள்ளும் பாலியல் வன்முறையாகவும் இருக்கலாம். அல்லது இந்தச் சமூகம் ஏற்றி வைத்திருக்கும் கற்பிதங்களிலும் புனித பிம்பங்களுக்குள்ளும் புதைந்துபோவதாகவும் இருக்கலாம். இவையெல்லாம் வெறும் உதாரணங்கள் மட்டுமே.
இவற்றைத் தாண்டி பெண்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள் கணக்கற்றவை. இப்படியான வன்முறைகள் பெண்களின் உடல், மனம், பாலியல், இனப்பெருக்கம் ஆகியவற்றின் நலத்தைப் பாதிக்கின்றன. சிறு வயதில் பாலியல் சீண்டலுக்கோ வன்முறைக்கோ ஆளாகும் ஆண் குழந்தை கள் வளர்ந்த பிறகு பிறர் மீது வன்முறையை நிகழ்த்துவார்கள். பெண்கள், வன்முறைக்கு இலக்காவார்கள்.
தங்கள் இணையரால் வன்முறைக்கு ஆளாக்கப்படும் பெண்களில் 42 சதவீதத்தினர், வன்முறையின் விளைவாக உடலில் காயங்கள் ஏற்படுவதாகத் தெரிவித்துள்ளனர்.
உடல்ரீதியான அல்லது பாலியல் ரீதியான வன்முறைக்கு ஆளாக்கப்படும் பெண்களுக்குப் பாலியல் தொற்று ஏற்படுவதற்கான சாத்தியம் ஒன்றரை மடங்கு அதிகம். மற்றவர்களோடு ஒப்பிடுகையில் இப்படியான வன்முறைக்கு ஆளாகும் பெண்கள் இரு மடங்கு அதிக எண்ணிக்கையில் கருச்சிதைவு செய்துகொள்கின்றனர்.
பெண்கள் மீது நிகழ்த்தப்படும் வன்முறைகளால் மன அழுத்தம், குழப்பம், பதற்றம், தூக்கக் குறைபாடு, சாப்பிடுவதில் சிக்கல் போன்றவை ஏற்படக்கூடும். சில நேரம் இது தற்கொலைக்கும் இட்டுச் செல்லும்.
வன்முறையின் விளைவாக உடல்ரீதியான பாதிப்புகளும் ஏற்படும். தலைவலி, முதுகு வலி, வயிற்று வலி, செரிமானக் குழாயில் சிக்கல் போன்றவற்றுடன் ஒட்டுமொத்த உடல் நலமும் பின்னடைவைச் சந்திக்கக்கூடும்.
இணையரால் பிரயோகிக்கப்படும் வன்முறை பெரிய அளவிலான குறுகிய கால/நீண்ட காலப் பாதிப்புகளை ஏற்படுத்தவல்லவை. அம்மா வன்முறைக்கு ஆளாக்கப்படுவதைப் பார்த்து வளரும் குழந்தைகள், வளர்ந்த பிறகு வன்முறையைக் கையில் எடுக்கலாம் அல்லது வன்முறைக்கு அடங்கி நடக்கலாம். பெண்களுக்கு மனரீதியான ஆலோசனை வழங்கி ஆற்றுப்படுத்துவது, பொருளாதார முன்னேற்றம் குறித்து எடுத்துச் சொல்வது போன்றவற்றுடன் மக்கள் நலப் பணியாளர்கள் அடிக்கடி வீடு களுக்குச் சென்று பார்வையிடுவது போன்றவற்றால் பெண்கள் மீதான வன்முறையை ஒழிக்கவோ குறைக்கவோ முடியும் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. ஏற்கெனவே அப்படிச் செய்து அதனால் கிடைத்த பலனாலேயே இதைச் சொல்வதாகவும் அது தெரிவிக்கிறது.
குடும்ப வன்முறை குறித்து யார் புகார் தரலாம்? # தன் மீது வன்முறையை ஏவும் கணவன், மாமனார், மாமியார், நாத்தனார் உள்ளிட்ட புகுந்த வீட்டு உறவுகள் குறித்துப் புகார் தரலாம். # மகன் மீது அம்மா புகார் தரலாம். # தந்தை அல்லது சகோதரன் மீது மகளோ சகோதரியோ புகார் தரலாம். # திருமணம் செய்துகொள்ளாமல் சேர்ந்து வாழும் உறவில் இணையர் மீது புகார் தரலாம். |
எதற்கெல்லாம் புகார் தரலாம்? # குடும்ப வன்முறை # வரதட்சணை # வல்லுறவு # தொடர்ச்சியான துன்புறுத்தல் # காவல் நிலையத்தில் புகார் ஏற்றுக்கொள்ளப்படாதது # பணியிடப் பாலியல் தொல்லை # இரண்டாவது திருமணம் செய்துகொள்ளுதல் # வீட்டை விட்டு வெளியேற்றப்படுதல் # கைவிட்டுச் செல்லுதல் # பாலினரீதியான ஒடுக்குதல் |
கைகொடுக்கும் சட்டங்கள்
# குடும்ப வன்முறை தடைச்சட்டம்
# வரதட்சணை தடைச் சட்டம்
# பணியிடப் பாலியல் வன்முறை தடைச் சட்டம் (தடுத்தல், பாதுகாத்தல், தீர்வுகாணுதல்)
# இந்திய விவாகரத்துச் சட்டம்
-தமிழ் இந்து
ஜுன் 9, 2019