போர், கலவரங்களில் 12,000 குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர்: ஐ. நா. அறிக்கை

டந்த  ஆண்டு போர் உள்ளிட்ட உள்நாட்டுக் கலவரங்களில் ஆப்கானிஸ்தான், ஏமன், பாலஸ்தீனம், சிரியா ஆகிய நாடுகளில் 12,000க்கும் அதிகமான குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

மத்தியக் கிழக்கு நாடுகளான ஏமன் மற்றும் சிரியாவில் அரசுக்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே கடந்த சில வருடங்களாக போர் நடந்து வருகிறது. பாலஸ்தீனத்துக்கும் இஸ்ரேலுக்கும் இடையே காசா எல்லையில் நடைபெறும் மோதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

ஆப்கானிஸ்தானில் தலிபான்களுக்கும் ஆளும் அரசுக்கும் இடையே கடந்த 18 வருடங்களாக போர் நிகழ்ந்து வருகிறது. இந்நிலையில் இந்த  நாடுகளில் கடந்த 2018 ஆம் ஆண்டு அங்கு நடைபெற்ற போர் மற்றும் உள்நாட்டுக் கலவரங்களில் பலியான குழந்தைகள் பற்றி ஐ.நா. அறிக்கை வெளியிட்டுள்ளது.

un-report-conflicts-kill-and-hurt-a-record-12-000-children

இதுகுறித்து ஐக்கிய நாடுகள் வெளியிட்ட அறிக்கையில் கூறும்போது, “ கடந்த 2018 ஆம் ஆண்டு மட்டும் சிரியா, ஏமன், ஆப்கானிஸ்தான், பாலஸ்தீனம் ஆகிய நாடுகளில் பலியான குழந்தைகளின் எண்ணிக்கை 12 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.  மேலும் கடத்தல், போராளிகளாகப் பயன்படுத்துதல், பாலியல் ரீதியாக துன்புறுத்தல் மற்றும் பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகள் மீதான தாக்குதல்கள் என பல்வேறு வன்முறைகள் குழந்தைகள் மீது நிகழ்த்தப்பட்டுள்ளன.

இதில் ஆயுதம் ஏந்திய தீவிரவாதிகளின் வன்முறைகள் எந்தவித மாற்றமும் இல்லாமல் தொடர்ந்து அதே சீராக இருந்து வருகிறது. ஆனால், அரசுப் படைகள் மற்றும் சர்வதேச பாதுகாப்புப் படைகளின் வன்முறை தாக்குதல்கள் கடந்த ஆண்டில் அதிகரித்துள்ளது நமக்கு எச்சரிக்கை மணியாக அடிக்கப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

-தமிழ் இந்து
ஜுலை 30, 2019

Tags: