“நான் கொழும்புக்குப் போகப் போறேன். வீரகேசரிக்கு!” என்றார் புதுமைப்பித்தன்.

மாலன்

dinamani86

ரு நாளிதழின் முதன்மையான பணி செய்தி சொல்வது. சொல்கிற செய்தியைத் தெளிவாக, பாரபட்சமின்றிச் சொல்ல வேண்டும் என்பது இதழியல் அறம். இந்த அறம் இந்நாளில் பின்பற்றப்படுகிறதா என்பதே இன்று பல தருணங்களில் விவாதப் பொருளாக ஆகி விட்டது. அந்த அறத்தை தனது நெடிய பயணத்தில் கைவிடாமல் பின்பற்றி வருவது தினமணியின் சாதனைகளில் ஒன்று.

ஆனால் தினமணி செய்திகளை அளிப்பதற்கும் அப்பால், தமிழ் இலக்கியத்திற்குத் தொடர்ந்து பங்களித்து வந்திருக்கிறது. அதில் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம் என்னவென்றால் தினமணியின் முதல் ஆசிரியர் திரு. டி. எஸ் சொக்கலிங்கம் காலம் தொடங்கி, இன்றைய ஆசிரியர் திரு.வைத்தியநாதன் காலம் வரை 85 ஆண்டுகளாக இந்த இலக்கியப் பணி இடையறாது நடந்து கொண்டிருக்கிறது. இது தமிழில் எந்த நாளிதழுக்கும் இல்லாத, தினமணிக்கு மாத்திரமே உரிய தனிச்சிறப்பாகும்.

இதற்கு முக்கியக் காரணம், தினமணியைத் தலைமையேற்று வழிநடத்திய ஆசிரியர்கள் அனைவரும் இதழியலாளர்கள் மட்டுமல்ல, இலக்கிய ஆசிரியர்களும் கூட.அவர்களது பணிச்சுமைக்குத் தோள் கொடுத்துப் பகிர்ந்து கொண்டு, உடன் பயணிக்கும் ஆசிரியர் குழுவிலும் அநேகம் பேர் கவிதை, புனைவுகள் இவற்றில் கைதேர்ந்த இலக்கியச் சிற்பிகள். இது தினமணிக்கு அருளப்பட்ட வரம்.

தினமணியின் முதல் ஆசிரியர் டி.எஸ். சொக்கலிங்கம் தினமணியில் பொறுப்பேற்பதற்கு முன்பாகவே இலக்கிய உலகில் பெரும் மதிப்பைப் பெற்றிருந்தார். அவர் தமிழ் இலக்கியத்தின் மறுமலர்ச்சியை ஏற்படுத்திய இதழ் என்று வரலாற்றாசிரியர்களாலும் நவீனத் தமிழ் இலக்கியத்தின் முதல் வித்து என்று படைப்பாளிகளாலும் கொண்டாடப்படும் மணிக்கொடி இதழை நிறுவியவர்களில் ஒருவர்.

டி.எஸ்.சொக்கலிங்கம் முன்னோடி இதழாளர் மட்டுமல்ல. ஒரு தேர்ந்த மொழி பெயர்ப்பாளர். டால்ஸ்டாயின் “போரும் சமாதானமும்” என்ற உலக இலக்கியங்களில் உன்னதமான படைப்பு ஒன்றை மொழி பெயர்த்துத் தமிழுக்குத் தந்தவர்.

புதுமைப்பித்தன் என்ற தமிழ் இலக்கியத்தின் “பிரம்ம ராட்சசனை’ பேணி வளர்த்துக் காத்தவர் சொக்கலிங்கம் தான் பணியாற்றிய, மணிக்கொடி, காந்தி உள்ளிட்ட எல்லாப் பத்திரிகைகளிலும் அவரைத் தன்னோடு அழைத்துச் சென்று இணைத்துக் கொண்டவர். புதுமைப்பித்தனை தினமணிக்குக் கொண்டு வந்தவரும் அவர்தான்.

மணிக்கொடி பொருளாதார நெருக்கடியைச் சந்தித்துக் கொண்டிருந்த காலகட்டத்தில், அதன் நிறுவனர்களில் ஒருவரான வ.ராமசாமி (வ.ரா) இலங்கை ‘வீரகேசரி’ இதழில் பொறுப்பேற்றுக் கொண்டு இலங்கை சென்றார். ‘வீரகேசரி’ இதழுக்கு மேலும் சில தேர்ந்த கைகளை பணிக்கு எடுத்துக்கொள்ள விரும்பினார். மணிக்கொடியில் புதுமைப்பித்தன் எழுதியிருந்ததால் புதுமைப்பித்தனை அவரது எழுத்தின் மூலம் வ.ரா அறிவார். பணியாட்களைத் தேர்வு செய்ய வீரகேசரி உரிமையாளர் சென்னைக்குப் புறப்பட்ட போது புதுமைப்பித்தனையும் பணிக்கு அழைத்துவரச் சொல்லியிருந்தார் வ.ரா. வீரகேசரி அதிபரும் புதுமைப்பித்தனைச் சந்தித்தார். அவரும் வரச் சம்மதித்துவிட்டார் அப்போது ஒரு திருப்பம் நேர்ந்தது.

டி. எஸ். சொக்கலிங்கத்தைக் கண்டு தமது முடிவைக் கூறி விடை பெற்றுக் கொள்ள போனார். போன இடத்தில் புதுமைப்பித்தனின் வாழ்க்கையிலேயே ஒரு புதிய மாறுதல் காத்திருந்தது. ” நான் கொழும்புக்குப் போகப் போறேன். வீர கேசரிக்கு!” என்றார் புதுமைப்பித்தன். “போறதுன்னே தீர்மானிச்சாச்சா?” என்றார் சொக்கலிங்கம்.

“வேறெ வழி? பிழைப்புக்குத்தானே? “

” தினமணியில் சேர்கிறீர்களா?”

புதுமைப்பித்தன் யோசித்துப் பார்த்தார். ‘கொழும்புக்குப் போவானேன்? ஆளும் புதுசு; இடமும் புதுசு’ என்று நினைத்தார், அவ்வளவுதான். சொக்கலிங்கம் ஆசிரியராக இருந்து நடத்திவந்த, தினமணியில் புதுமைப்பித்தன் உதவியாசிரியராகச் சேர்ந்து விட்டார். 1935-ஆம் வருஷத்தில் தினமணி ஸ்தாபனத்தில் வேலைக்கமர்ந்த புதுமைப்பித்தன் 1943-ஆம் வருஷத்தின் இறுதியில், சொக்கலிங்கம் தினமணியை விட்டு விலகியபோது அவருடன் கூட விலகிய – ஆசிரியர் குழாத்தில் தாமும் ஒருவராக விளங்கினார். (புதுமைப்பித்தன் வரலாறு-தொ.மு.சி. ரகுநாதன். பக் 44).

தினமணியின் ஆண்டு மலர் தயாரிக்கும் பொறுப்பு புதுமைப்பித்தனிடம் ஒப்படைக்கப்பட்டது. அவை இன்றளவும் இலக்கியப் பொக்கிஷங்களாகத் திகழ்கின்றன. ‘நாசகாரக் கும்பல்’ போன்ற அவரது சிறந்த சிறுகதைகள் தினமணி ஆண்டுமலர்களில் வெளிவந்தது தான்.

43 ஆண்டுகள் தினமணியின் ஆசிரியராகப் பணியாற்றி தினமணியைத் தரமான நம்பகமான பத்திரிகையாக வரலாற்றில் இடம் பெறச் செய்தவர் ஏ.என்.சிவராமன். நாளிதழ் என்பது படித்துவிட்டுத் தூக்கி எறிந்துவிடும் என்ற நிலையிலிருந்து, எடுத்து பத்திரப்படுத்தி வைத்துக் கொள்ள வேண்டிய ஒன்று என்ற நிலையை ஏற்படுத்தியவர் ஏ.என். சிவராமன். (அவர் எழுதிய கட்டுரைகளை நான் இன்றும் பாதுகாத்து வருகிறேன்) தினமணி தொடங்கப்பட்ட செப்டம்பர் 11, 1934-லிருந்து தினமணியோடு 52 ஆண்டுகள் தன்னைப் பிணைத்துக்கொண்டவர் ஏ.என்.எஸ். குமாஸ்தா, கணக்கன், அரைகுறை பாமரன், அரைகுறை வேதியன், ஒண்ணேகால் ஏக்கர் பேர்வழி, எனப் பல விநோதமான புனைப் பெயர்களில் பொருளாதாரம், அறிவியல், உலக அரசியல், வேளாண்மை போன்ற பொருள்களில் அவர் எழுதிய கட்டுரைகள் பிரபலமானவை. ஆனால் பலர் அறியாத விஷ்யம் ஒன்றுண்டு. அது ஏ.என்.எஸ் சிறுகதைகளும் எழுதியிருக்கிறார் என்பது புனைப்பெயரில் இல்லாமல் ஆ.நா.சிவராமன் என்ற பெயரில் அவர் எழுதிய கதைகள் தினமணியில் மட்டுமின்றி அன்றைய இலக்கிய இதழ்களான, மணிக்கொடி, காந்தி இதழ்களில் வெளிவந்திருக்கின்றன. அவர் கம்பனில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டவர். சா.கணேசன் காரைக்குடியில் நடத்திய கம்பன் விழாக்களில் தொடர்ந்து பங்கேற்று வந்தார்.

புனைகதைகளுக்காகத் தினமணிக் கதிர் என்ற இதழ் தினமணி குடும்பத்திலிருந்து ஏ.என்.எஸ் தினமணி ஆசிரியராக இருந்த காலத்தில்தான் தோன்றியது.

தினமணி கதிரை துமிலன், சி.சு. செல்லப்பா என்ற ஜாம்பவான்கள் பொறுப்பேற்று நடத்தினார்கள். பின்னால் எழுத்து இதழின் மூலம் மட்டுமல்ல தினமணிக் கதிரின் வழியாகவும் பல புதிய எழுத்தாளர்களை அறிமுகப்படுத்திய பெருமை சி.சு. செல்லப்பாவிற்கு உண்டு.

ஒரு அனுபந்தமாக, இலவச இதழாக இருந்த தினமணிக்கதிரை அப்போது வெளிவந்து கொண்டிருந்த மைய நீரோட்ட இதழ்களான குமுதம், ஆனந்தவிகடன் ஆகிய இதழ்களுக்குச் சவால் விடுகிற வகையில் பொலிவோடு கொண்டுவந்தவர் சாவி.

அவர் ஆசிரியப் பொறுப்பில் இருந்தபோது ஜெயகாந்தன், இந்திரா பார்த்தசாரதி, சிவசங்கரி, சுஜாதா, ஸ்ரீவேணுகோபாலன் போன்ற முன்னணி எழுத்தாளர்களின் படைப்புக்கள் கோபுலு, மணியம் செல்வன், ஜெயராஜ் போன்றோரின் சிறந்த ஓவியங்களுடன் வெளி வந்தன.. சாகித்ய அகாதெமி பரிசு பெற்ற ஜெயகாந்தனின் “சில நேரங்களில் சிலமனிதர்கள்’ தினமணிக்கதிரில்தான் தொடராக வந்தது.

தீபம் நா. பார்த்தசாரதி, கணையாழி கஸ்தூரிரங்கன் போன்ற இலக்கியச் சிற்றேடுகளின் ஆசிரியர்கள் தினமணியின் இலக்கியப் பங்களிப்பை தினமணிக் கதிர் வழியே தொடர்ந்தார்கள். அந்த காலகட்டத்தில் ராஜம் கிருஷ்ணன், லா.ச.ரா ஆகியோரின் படைப்புக்கள் அதில் வெளிவந்தன. ராஜம் கிருஷ்ணன் படைப்புக்களிலேயே வித்தியாசமான படைப்பான, மணியம்மாள் என்ற புரட்சிக்காரப் பெண்மணியின் வாழ்க்கைக் கதை பாதையில் பதிந்த அடிகள் என்ற பெயரில் கதிரில் தொடராக வந்தது. பின்னாளில் சாகித்ய அகாதெமி பரிசு பெற்ற, காலவரிசையில் அமையாத லா.ச.ராவின் சிந்தாநதியும் கதிரில் வந்ததுதான். புனைவல்லாத புனைவு என்ற புதிய வகையில் நான் எழுதிய ஜன கண மனவும் கதிரில்தான் வெளியானது. சோதனைப் படைப்புகளுக்குக் கதிர் தயங்காது இடம் கொடுத்து வந்தது.

நான் தினமணியின் பொறுப்பில் இருந்தபோது, தமிழ் இதழ்கள் அணுகாத இரு இலக்கிய வகைகளை தினமணி கதிர் வழியே அறிமுகப்படுத்தினேன். அவை தலித் இலக்கியம், புலம் பெயர்ந்தோர் இலக்கியம் ஆகியன. தலித் இலக்கியத்திற்கு எனச் சிறப்பிதழ்களும், அயலக இலக்கியத்திற்கு என்று சிறப்பிதழ்களும் வெளியாகின.


‘பிற நாளிதழ்கள் அணுகத் துணியாத துறைகளில் தினமணி நம்பிக்கையுடன் ஈடுபடுவதன் காரணம், தினமணி வாசகர்களின் சிந்தனைத் திறனும், தமிழைப் பிற நவீன மொழிகளுக்கு ஈடாக வளர்க்க வேண்டும் என்பதில் எமக்கும் வாசகர்களுக்கும் உள்ள ஆர்வமுமேயாகும்’ என்று ஒருமுறை தினமணி எழுதியது. அந்த ஆர்வம் எண்பத்து ஐந்து ஆண்டுகளாக இன்றும் குன்றாமல் தொடர்கிறது.


படைபிலக்கியத்திற்கு மட்டுமல்ல, திறனாய்வுக்கும் தமிழ் மொழிக்கும் தினமணி ஆற்றியுள்ள பணிகள் தனித்துவமானவை மட்டுமல்ல சிறப்பானவையும் கூட.அதற்கெனத் தொடங்கப்பட்டதுதான் தமிழ் மணி.

முனைவர் ஐராவதம் மகாதேவன் ஆசிரியராக இருந்த போது 1989ஆம் ஆண்டு ஆகஸ்ட் ஒன்பதாம் தேதி “தமிழ்ப் படைப்பிலக்கியத்திற்கான களனை அமைப்பதில் சில சிறு பத்திரிகைகள் லாப நோக்கம் கருதாது தம்மை அர்ப்பணித்துப் பணிபுரிந்து வருகின்றன. அவற்றில் திறனாய்வு நோக்கிலான அம்சங்கள் மிகக்குறைவு என்றே சொல்லலாம்.எனவே தமிழ் இலக்கியத்தின் திறனாய்வுத் துறைக்கு ஒரு களனாக திகழ்வதையே தமிழ்மணி தன் பிரதான குறிக்கோளாகக் கொண்டு இயங்கும்’ என்ற குறிக்கோளை அறிவித்துக் கொண்டு தமிழ் மணி ஒலிக்கத் தொடங்கியது.

சிறிது காலம் தமிழ் மணி, வாரம் இருமுறை. புதன், சனிக்கிழமைகளில் ஒரு பக்க அளவிற்கு தமிழியல், என்ற பகுதியின் வழியே தமிழ் இலக்கியம், அறிஞர்கள் பற்றிய கட்டுரைகளையும், மதிப்புரை பகுதியில் புதிய நூல்கள் பற்றிய அறிமுகம் ஆகியவற்றை வெளியிட்டு வந்தது. பின் காகித விலை உயர்வின் காரணங்களுக்காக, தனி இணைப்பாக இல்லாது. அறிவியல் கட்டுரைகளை வெளியிட்டுக்கொண்டிருந்த தினமணிச் சுடரின் பகுதியாக வந்து கொண்டிருந்தது.

தமிழ் மணியைத் தனி இணைப்பாக பெரிய அளவில் வெளியிட வேண்டும் என்ற ஆசிரியரின் விருப்பம் ஏறத்தாழ ஓராண்டுக்குப் பிறகு 1990 செப்டம்பர் வாக்கில் நிறைவேறியது

தமிழ் மணி தமிழைச் செம்மையாக மரபு குலையாமல் எழுதுவதில் கவனமாக இருந்தது.. ஒரு இதழில் வாசகர் ஒருவர், அண்மைக்காலமாக தினமணி இலங்கை அதிபர் பிரேமதாசாவை பிரமேதாசர் என்றும், மத்திய அமைச்சர் உபேந்திராவை உபேந்திரர் என்றும் எழுதி வருகிறது. இவர்கள் அரசியலில் வலுவாக இருக்கிறார்கள் என்பதாலா இந்தப் புதிய மரியாதை? என்பதைப்போல ஒரு கேள்வியை எழுப்பியிருந்தார்.

தமிழின் மரபைப் பேணுவதற்காக இந்த மாற்றம் என்று கூறிய தமிழ்மணி, வடமொழிப் பெயர்களைத் தமிழில் எழுதும் போது அன், அர் விகுதிகள் சேர்த்து எழுதுவதுதான் மரபு. இராமா என்பதை இராமன் என்றும் கிருஷ்ணா என்பதைக் கிருஷ்ணன் என்றுதான் எழுதுவதுதான் தமிழ் மரபு. இராமதாஸ் என்பதை இராமதாசர் என்றுதானே எழுதுகிறோம் என்று எடுத்துக்காட்டுகளோடு விளக்கியிருந்தது.

தனக்கு முன்பிருந்த ஆசிரியர்களைப் பின்பற்றி இன்றைய தினமணி ஆசிரியர் தமிழ்ப் பணி இலக்கியப் பணி இரண்டையும் சிறப்பாக ஆற்றிவருகிறார் நீதியரசர் இராமசுப்ரமணியனின் சொல்வேட்டை பகுதி ஒரு சிறந்த உதாரணம் தமிழ்மணியில் வெளியாகும் கட்டுரைகளும், மதிப்புரைப் பகுதியில் வெளியாகும் நூல் அறிமுகங்களும் மற்றொரு உதாரணம். அவரே வாரா வாரம் கலாரசிகன் என்ற பெயரில் நல்ல நூல்களை அறிமுகப்படுத்துவது இன்னொரு உதாரணம். அதில் கூர்மையான கவிதை வரிகளையும் நினைவுகூர்ந்து வருகிறார்.

படைப்பிலக்கியத்திற்கு ஊக்கம் அளிக்கும் வகையில் சிவசங்கரி -தினமணி சிறுகதைப் போட்டி, நெய்வேலி புத்தகக் காட்சி சிறுகதைப் போட்டிகளும் வெளியாகின்றன.

அச்சுப் பரப்பிற்கு அப்பால் இணைய வெளியிலும் தினமணி.காம் இணைய தளத்திலும் இலக்கியப் படைப்புகள் இடம் பெறுகின்றன.

“பிற நாளிதழ்கள் அணுகத் துணியாத துறைகளில் தினமணி நம்பிக்கையுடன் ஈடுபடுவதன் காரணம், தினமணி வாசகர்களின் சிந்தனைத் திறனும், தமிழைப் பிற நவீன மொழிகளுக்கு ஈடாக வளர்க்க வேண்டும் என்பதில் எமக்கும் வாசகர்களுக்கும் உள்ள ஆர்வமுமேயாகும்’ என்று ஒரு முறை தினமணி எழுதியது அந்த ஆர்வம் எண்பத்து ஐந்து ஆண்டுகளாக இன்றும் குன்றாமல் தொடர்கிறது. உண்மையில் இலக்கியத்திற்கும் தமிழுக்கும் தினமணி ஆற்றியுள்ள பங்களிப்பு விரிவாக ஒரு நூலாக எழுதத்தக்க அளவு செறிவானவை. அவற்றைப் பல்கலைக்கழகங்களோ, ஆய்வு மாணவர்களோ மேற்கொள்ள முன்வர வேண்டும்.

அவற்றைச் சுருக்கமாக ஒற்றைவரியில் சொல்வதென்றால் அவை வறளாத வரலாறு. 

-தினமணி
செப்டம்பர் 30, 2019

Tags: