கோத்தாவின் முதல்கட்ட வெற்றி முழுமையான வெற்றியாகுமா?

பிரதீபன்

சிறீலங்கா பொதுஜன பெரமுனவின் (இலங்கை பொதுமக்கள் முன்னணி) ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ச எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதைத் தடுக்க ஐக்கிய தேசியக் கட்சிக்கு (ஏகாதிபத்தியத்துக்கு) சார்பாபன சக்திகள் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றன.

இந்த முயற்சிகளில் ஒன்றாக போத்தாவின் இலங்கை பிரஜாவுரிமை செல்லுபடியற்றது எனக்கோரி இருவர் மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். அதை விசாரித்த மூன்று நீதிபதிகள் அடங்கிய குழு அந்த இருவருடைய மனுக்களையும் தள்ளுபடி செய்து தீர்ப்பு வழங்கியுள்ளது.

இதன்மூலம் கோத்தபாய ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு எதிராக இருந்த சட்ட ரீதியிலான ஒரு தடை நீக்கப்பட்டுள்ளது. ஆனால் இதன் அர்த்தம் அவருக்கு எதிரான எல்லாத்தடைகளும் நீக்கப்பட்டுவிட்டன என அர்த்தமாகாது.

ஏனெனில், கோத்தா தேர்தலில் வென்றுவிடுவார் என்ற அச்சத்திலேயே அவருக்கு எதிரான இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. ஆனால் எதிர்ச் சக்திகள் இந்த ஒரு நீதிமன்ற தீர்ப்பை வைத்துக்கொண்டு பின்வாங்கிவிடப் போவதில்லை. அவர்கள் இறுதிவரை பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபடவே செய்வர்.

அவர்கள் இப்பொழுது ஒரு ஆயுதத்தையே பயன்படுத்தியுள்ளனர். சாம, பேத, தான, தண்டம் என்று பார்க்கையில் இன்னும் பல ஆயுதங்கள் இருக்கின்றன. எனவே அவர்களது ஆட்டம் இத்துடன் முடிந்துவிடப் போவதில்லை.

கோத்தபாய முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் சகோதரர். அவர்களுக்கு என்று ஒரு வரலாறு இருக்கின்றது. அது இரண்டு வகைப்பட்டது.

அதில் ஒன்று, மகிந்த சிறீலங்கா சுதந்திரக் கட்சி பாரம்பரியத்திலிருந்து வந்த ஒருவர். இன்று அவர் சிறீலங்கா பொதுஜன பெரமுன தலைவராக இருந்தாலும், சுதந்திரக் கட்சியின் கொள்கைகளுக்கு எதிராக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகவும், இன்றைய ஜனாதிபதி மைத்திரியும் துரோகமிழைத்து ஐக்கிய தேசியக் கட்சியுடன் கூட்டுச் சேர்ந்ததாலேயே பெரமுன உருவானது என்ற வகையில் மகிந்த தரப்பே சுதந்திரக் கட்சியின் உண்மையான வாரிசுகளாவர்.

அந்த வகையில் சுதந்திரக் கட்சியின் ஏகாதிபத்திய எதிர்ப்புக் கொள்கைகளையே மகிந்த அணியினர் தொடர்ந்து முனனெடுப்பர் என நம்பலாம். எனவே இந்த நிலைப்பாட்டை சில சக்திகள் விரும்பப் போவதில்லை.

Afbeeldingsresultaat voor gotabaya rajapaksa cartoon

இரண்டாவது, சுதந்திரக் கட்சியின் வெளியுறவுக் கொள்கைகளின் மூலைக்கல் சீனாவுடனான நட்புறவாகும். இது வரலாற்று ரீதியிலானதும், அரசியல் ரீதியிலானதும் ஆகும். இதையும் சில சக்திகள் விரும்பப் போவதில்லை.

அத்துடன் தமிழ் மக்கள் உட்பட இலங்கையில் வாழ்கின்ற அனைத்து சிறுபான்மை தேசிய இனங்களையும் அங்கீகரிக்கின்ற அதேநேரத்தில், சுதந்திரக் கட்சி அனைத்துவிதமான இன, மத, மொழி பிரிவினைவாதங்களை உறுதியுடன் எதிர்த்து வந்துள்ளது. அதனால்தான் பிராந்திய ஆதிக்க சக்திகளினதும், உலக ஆதிக்க சக்திகளினதும் வளர்ப்புப் பிராணியான புலிகளை அது திடமுடன் செயல்பட்டு ஒழித்துக்கட்டியது. எனவே இந்த விடயங்களை வைத்து அரசியல் செய்து வரும் சக்திகள் சுதந்திரக் கட்சியின் கொள்கைகளை முன்னெடுப்பவர்களை ஆதரிக்கப் போவதில்லை.

அதுமாத்திரமல்லாமல், இலங்கையின் தேசிய சுதந்திரம், இறையாண்மை, பிரதேச ஒருமைப்பாடு என்பனவற்றை விட்டுக்கொடுக்கும் எந்தவொரு நடவடிக்கையையும் சுதந்திரக் கட்சியின் வாரிசுகள் ஏற்று எந்தவொரு நாட்டுடனும் ஒப்பந்தங்கள் செய்யப் போவதில்லை. இதையும் சில சக்திகள் விரும்பப் போவதில்லை.

இப்படியாக சில சக்திகள் விரும்பாத விடயங்களை சுதந்திரக் கட்சியின் உண்மையான இன்றைய வாரிசான சிறீலங்கா பெரமுன கொண்டிருக்கிறது. அதனால்தான் கோத்தபாய ராஜபக்சவை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடாமல் தடுப்பதற்கு அவை முயற்சியில் இறங்கின. இது அவர்கள் சட்டரீதியாக முயற்சி செய்த ஒரு வழிமுறை.

இந்த வழிமுறையை அவர்கள் நாடியதற்கு ஒரு காரணம் உள்ளது. அதாவது, கடந்த வருடம் ஒக்ரோபர் மாதம் ஜனாதிபதி மைத்திரி ரணில் விக்கிரமசிங்கவை பிரதமர் பதவியில் இருந்து நீக்கிவிட்டு மகிந்தவை அந்த இடத்துக்கு நியமித்ததில் இருந்து, அரசியல் ரீதியிலான சதி முயற்சிகளும், சட்ட ரீதியிலான சதி முயற்சிகளும் ஆரம்பித்துவிட்டன.

அந்த நேரத்தில் தேசத்துக்கு எதிரான சக்திகள் நாடாளுமன்றத்தை தமது கருவியாகப் பயன்படுத்தின. அரசாங்கத்தை தமது கருவியாகப் பயன்படுத்தின. நீதித்துறையை தமது கருவியாகப் பயன்படுத்தின. வெளிநாட்டு சக்திகளை தமது கருவியாகப் பயன்படுத்தின. உள்ளுரிலிருந்த ‘சிவில் சமூகம்’, அரச சார்பற்ற நிறுவனங்கள் போன்ற இத்தியாதிகளையும் பயன்படுத்தின.

இவ்வாறுதான் ஐ.தே.க. தலைமையிலிருந்த தேசத்துரோக ஆட்சி மீண்டும் நிலைநிறுதப்பட்டது.

கோத்தாவுக்கு எதிரான தற்போதைய மனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட பொழுது, அது சம்பந்தமான தீர்ப்பில் (நீதித்துறையில்) நம்பிக்கையிழந்த, அதாவது வழமைப்பிரகாரம் தீர்ப்பு கோத்தாவுக்கு எதிராக அமையலாம் எனக் கருதிய மகிந்த தரப்பினர், ஒரு மாற்று ஏற்பாடாக கோத்தாவின் மூத்த சகோதரரான சமல் ராஜபக்சவின் பெயரிலும் ஜனாதிபதி தேர்தலுக்கு கட்டுப்பணம் செலுத்தியிருந்தனர்.

ஆனால் ஒரு அதிசயமாக தீர்ப்பு கோத்தாவுக்கு ஆதரவாக அமைந்து அவர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு இருந்த தடை நீங்கியுள்ளது.

எனவே இந்த சக்திகள் தமக்கு எதிரான மகிந்த ராஜபக்ச அணியின் ஜனாதிபதி வேட்பாளரை எப்படியும் தோற்கடிக்கவே முயல்வர். தேர்தலில் தோற்கடிக்க முடியாது என்ற நிலை தோன்றினால், பண்டாரநாயக்கவுக்கு செய்ததுபோல ஆளையே இல்லாமல் செய்யும் நடவடிக்கையிலும் அவை இறங்கத் தயங்கா என்பதே உண்மையான நிலவரமாகும்.

எனவே, எதிரணியினரும், தேசப்பற்றுள்ள நாட்டு மக்களும் விழிப்புடன் இருந்து செயல்பட வேண்டிய நேரமிது.

Tags: