ஒக்ரோபர் 9 சே குவேரா நினைவுநாள்: அநீதியைக் கண்டு பொங்கினால் நீயும் “சே குவேரா”
–ஆரோன்
‘‘கோழையே, சுடு! நீ சுடுவது ‘சே’வை அல்ல ஒரு சாதாரண மனிதனைத்தான்!’’.
‘சாவைப் பற்றி நான் ஒருபோதும் கவலைப்பட்டதில்லை. நான் இறந்துபோனால் எனது கைத்துப்பாக்கியை தோழர்கள் எடுத்துக்கொள்வார்கள். அப்போதும், அதிலிருந்து தோட்டாக்கள் சீறிப்பாயும்’ என்று முழங்கியவர் “சே-குவேரா”. அப்போது ‘சே’வுக்கு 27 வயதுதான்.
பூர்வகுடிகளாக செவ்விந்தியர்கள் வாழ்ந்த மண்ணில், வந்து விழுந்தான் கொலம்பஸ். புதிதாக ஒரு நாட்டைக் கண்டு பிடித்துவிட்ட உற்சாக வெறி அவனுக்குள். ஆயிரக்கணக்கான ஸ்பானிய வீரர்கள், பூர்வகுடிகளை கூட்டம் கூட்டமாக வெட்டிச் சாய்த்தனர். எஞ்சியவர்களை அடிமையாக்கினர். பின்னர், ஸ்பானியர்கள் அனைவரும் கியூபாவில் குடியேறினர்.
உலகின் சக்கரைக் கிண்ணம் என்று வர்ணிக்கப்படும் நாடு கியூபா. கிட்டத்தட்ட தென் அமெரிக்கக் கண்டம் முழுவதும் ஸ்பானிய அமெரிக்கா எனக் குறிப்பிடும் அளவுக்கு அங்கு குடியேற்றம் நிகழ்ந்தது. கியூபாவின் வளத்தை ஸ்பானிய அரசு அட்டை போல் உறிஞ்சத் தொடங்கியது.
பின்னர் 1890ல் ‘ஹொஸே மார்த்தி’ எனும் கவிஞனின் தலைமையில் பூர்வகுடிகள் அணி திரண்டனர்.ஆனால் புரட்சி துவங்கிய வேகத்திலேயே, ஸ்பானிய அரசு ஹொஸேவைச் சுட்டுக்கொன்று, புரட்சியை வலுவிழக்கச் செய்தது. எனவே மக்களின் நெஞ்சங்களில் அந்த நெருப்பு மட்டும் அணையாமல் இருந்தது.அப்போது புரட்சியாளர்களுக்கு அமெரிக்கா உதவிசெய்தது. எனவே,ஸ்பானிஷ் அரசு அமெரிக்காவிடம் யுத்தத்தை தொடங்கியது.
இந்த போராட்டத்தில், 1902 ஆம் ஆண்டு ஸ்பானிய அரசு விரட்டியடிக்கப்பட்டது. பின்னர் வந்த அமெரிக்காவோ, கியூபாவை தன்வசப்படுத்தி அதன் பொருளாதாரத்தை உறிஞ்சத் தொடங்கியது. கடைசியாக கியூபாவை ஆண்ட ஃபெலன்சியா பாடிஸ்டா ஆட்சியில், இது உச்சக்கட்டமாக நிகழ்ந்தது. மக்கள் மீண்டும் கிளர்ந்தெழுந்தனர். அப்போது ஃபிடல் காஸ்ட்ரோ பிரதிநிதியாக உருவெடுத்தார். அதே வேகத்தில், காஸ்ட்ரோ கைது செய்யப்பட்டார். இது புரட்சிக் கனவுகளுக்குப் பேரிடியாக இருந்தது. ஆயினும், பாடிஸ்டா அரசின் மீதான எதிர்ப்பு காட்டுத்தீயாகப் பரவியது. எங்கே மக்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்து புரட்சி நிகழ்ந்துவிடுமோ என்ற அச்சம்கொண்ட பாடிஸ்டா அரசு, ஒரு மன்னிப்பின் பேரில் காஸ்ட்ரோவை விடுதலை செய்தது. பலமிழந்த சிங்கமாக காஸ்ட்ரோ வெளியே வந்தார்.
பின்னர், கியூபா வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட்ட மாவீரன் 1928 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 14 ஆம் நாள் அர்ஜென்டீனாவில் உள்ள ரொசாரியோ என்னும் இடத்தில் ஏர்னெஸ்டோ குவேரா லின்ஞ், சிசிலியா டெ ல செர்னா என்ற தம்பதியர்களுக்கு முதல் மகன் பிறக்கின்றான்.அளவற்ற மகிழ்ச்சிக்கு அடையாளமாக தங்களது பெயர்களின் பாதியை இணைத்து “ஏர்னெஸ்டோ குவேரா டி ல செர்னா” என பெயர் சூட்டினர்.
சொந்தமாக மூலிகை தேயிலை பண்ணையிருக்கும் அளவு வளமானது ஏர்னெஸ்டோவின் குடும்பம். ‘சே’வுக்கு இரண்டு வயது இருக்கும். அவருடைய தாய்க்கு நீச்சல் ஈடுபாடு அதிகம். எனவே ஒரு நாள் காலைப்பொழுதில் தன் குழந்தையை நதிக்கு அழைத்துச் சென்றார். குளிர்ந்த நீரில் தன் குழந்தையை அவர் நீராடவைத்ததால், குழந்தையின் நுரையீரலை நிமோனியா நோய் தாக்கி, அதனுடன் ஆஸ்துமாவும் அவருக்கு வந்துவிட்டது.
இந்த நோய் அவரை வாழ்நாள் முழுவதும் பாதித்தது. இருந்தும் இவர் ஒரு சிறந்த “ரக்பி” விளையாட்டு வீரர். இவர் இந்த விளையாட்டில் சிறந்து விளங்கியதால் இவரை அனைவரும் “பூசெர்” என்று பட்டப் பெயர் இட்டு அழைத்தனர்.அதேபோல், இவர் அதிகமாக குளிக்க மாட்டார். எனவே இவருக்கு “பன்றி” என்னும் பொருளுடைய “சாங்கோ” என்ற பட்டப்பெயரும் உண்டு.
இவர் தனது தந்தையிடமிருந்து சதுரங்கம் விளையாட்டை கற்றுக் கொண்டு 12 வயதில் பல்வேறு போட்டிகளில் கலந்துக் கொண்டு பரிசுகளை பெற்றார். அதேபோல் இவர் கவிதை எழுதுவதில் ஆர்வமுடையவராக இருந்தார். வளரிளம் பருவத்தில் பாப்லோ நெருடாவின் வார்த்தைகள், ‘சே’வின் இதயத்தை மிகவும் பரவசப்படுத்தின. நெருடாவின் பெரும்பாலான கவிதைகளை மனப்பாடமாக ஒப்பிக்கும் அளவுக்கு அதன்மீது ஈடுபாடு. இதனால் இவர் அதிக நூல்களை வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டார். எனவே குவேராவின் வீட்டில் 3000 நூல்களுக்கு மேல் இருந்தன. இவற்றுள், கார்ல் மார்க்ஸ்,போல்க்னர், வேர்னே போன்றவர்கள் எழுதிய நூல்களில் அவருக்கு அதிக ஈடுபாடு இருந்தது. இவை தவிர ஜவஹர்லால் நேரு , லெனின் போன்றவர்களது நூல்களையும், பிரான்ஸ், ஏங்கெல்ஸ், வெல்ஸ், புரொஸ்ட் ஆகியோருடைய நூல்களையும் அவர் விரும்பி வாசித்தார். வசிப்பதோடு மட்டும் நின்று விடாமல் எழுத்தாளராக வேண்டும் என்ற கனவும் அவருக்கு இருந்தது. எனவே அவர் தன்னைச் சுற்றியுள்ள அனைத்தையும் தொகுப்பாக்கினார்.
1948 ஆம் ஆண்டில் மருத்துவம் படிப்பதற்காக சேகுவேரா, புவனஸ் அயர்ஸ் என்ற பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். ஆனால் 1951 ஆம் ஆண்டில் படிப்பில் இருந்து ஓராண்டு விடுமுறை எடுத்துக்கொண்டு, அவரது நண்பர் ஆல்பர்ட்டோ கிரெனாடோவுடன் சேர்ந்து, தென்னமெரிக்கா முழுவதும் மோட்டார் ஈருருளியில் பயணம் செய்தார்.
அவர் சுற்றுப்பயணம் மேற்கொண்ட காலத்தில் தென் அமெரிக்கா முழுக்கத் தொழுநோய் பரவியிருந்தது. எனவே அது குறித்து ஆய்வு செய்து, அதற்குத் தன்னால் மருந்து கண்டுபிடிக்க முடியுமா என்றும் அவர் நினைத்தார். எனவே, தொழுநோயாளிகளின் தங்குமிடங்களைத் தேடித் தேடிச்சென்று, அவர்களின் தோளில் கை போட்டு அவர்களுடன் உணவு உண்டு, அவர்களுடனேயே உறங்கினார். அப்போது ‘சே’வின் உள்ளத்தில் பல்வேறு போராட்டங்கள் ஏற்பட்டன. எனவே அவர் இப்பயணத்தின் போது எடுத்த குறிப்புக்களைப் பயன்படுத்தி “மோட்டார் ஈருருளிக் குறிப்புக்கள்” என்னும் தலைப்பில் புத்தகம் எழுதினார். இந்த புத்தகம் உலக அளவில் மிகவும் பிரபலமானது. அதேபோல், இந்த புத்தகத்தை அடிப்படையாக வைத்து 2004 இல், இதே பெயரில் எடுக்கப்பட்ட திரைப்படம் பல்வேறு விருதுகளையும் பெற்றது.
இறுதியாக,1952 ஆம் ஆண்டு ஜூலை மாதம் அவருடைய பயணத்தை முடித்துவிட்டு, இலத்தீன் அமெரிக்காவைத் தனித்தனி நாடுகளாகப் பார்க்காமல், ஒட்டு மொத்தமான கண்டம் தழுவிய விடுதலைப் போர் முறை தேவைப்படும் ஒரே பகுதியாகப் பார்த்தார். எல்லைகளற்ற ஹிஸ்பானிய அமெரிக்கா என்னும் சே குவேராவின் கருத்துரு அவரது பிற்காலப் புரட்சி நடவடிக்கைகளில் தெளிவாக வெளிப்பட்டது. அர்ஜென்டீனாவுக்குத் திரும்பிய சேகுவேரா தனது படிப்பை முடித்து 1953 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் மருத்துவ டிப்ளோமாவில் பட்டம் பெற்றார்.
1953 ஜூலையில் ஆண்டு மருத்துவப் பட்டம் பெற்றதும் அங்கிருக்கப் பிடிக்காமல், மீண்டும் பயணத்தை தொடங்கிய சே-குவேரா, இம்முறை பொலீவியா, பெரு, ஈக்குவடோர், பனாமா, கொஸ்தாரிக்கா, நிக்கராகுவா, ஹொண்டூராஸ்,எல் சல்வடோர் ஆகிய நாடுகளுக்குச் சென்றார். அதே ஆண்டு டிசம்பரில் சே-குவேரா குவாதமாலாவுக்குச் சென்றார். அங்கே மக்களாட்சி அடிப்படையில் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கம் ஒன்றுக்குத் தலைமை தாங்கிய குடியரசுத் தலைவர் ஜாக்கோபோ ஆர்பென்ஸ் குஸ்மான் என்பவர் பெருந்தோட்ட முறையை ஒழிப்பதற்கு முயன்று கொண்டிருந்தார். எனவே உண்மையான புரட்சியாளனாக ஆவதற்குத் தேவையான அனுபவங்களைப் பெற்றுக்கொள்வதற்காக சே-குவேரா, குவாத்தமாலாவிலேயே தங்கிவிட முடிவு செய்தார்.
குவாத்தாமாலா நகரில், ஹில்டா கடேயா அக்கொஸ்தா என்னும் பெண்ணின் பழக்கம் கிடைத்தது.பின்னர் இவரையே சே திருமணம் செய்துக்கொண்டார். இவர் பெரு நாட்டைச் சேர்ந்த ஒரு பொருளியலாளரும், இடதுசாரிச் சார்புள்ள அமெரிக்க மக்கள் புரட்சிகர கூட்டமைப்பு என்னும் இயக்கத்தின் உறுப்பினராகவும் இருந்தார். இதனால் அவருக்கு அரசியலில் அதிக தொடர்புகள் இருந்தன. எனவே இவர் ஆர்பென்சின் அரசாங்கத்தின் பல உயரதிகாரிகளைச் சே-குவேராவுக்கு அறிமுகப்படுத்தினார். அத்துடன் பிடல் காஸ்ட்ரோவுடன் தொடர்புகளைக் கொண்டிருந்தவர்களும், கியூபாவைவிட்டு வெளியேறி வாழ்ந்துவந்தவர்களிடமும் இவர் தொடர்பு வைத்துக்கொண்டார். அவர்கள் அனைவரும் இவர் “சே” என்று அழைப்பர். “சே” என்பது நண்பர் அல்லது தோழர் என்னும் பொருளைக் கொண்ட அர்ஜென்டீனச் சொல்லாகும்.
அவர், அங்கிருந்த கம்யூனிஸ்ட்களுடன் தன்னை இணைத்துக்கொண்டார். 1954ம் ஆண்டு ஜூன் நாடு கடத்தப்பட்ட கியூபா மக்களைச் சந்தித்தார். இக்காலகட்டங்களில் கம்யூனிஸ்ட்களிடம் நெருங்கிப் பழகிய ‘சே’, மார்க்ஸிய லெனினியப் பாதை தான் தனது பாதை என்பதை உணர்ந்தார்.
இச்சமயத்தில், நிக்கோ லோபஸ் என்ற கியூபா போராளியை அவர் பின்பற்றினார். வரலாற்றுச் சிறப்புமிக்க சில யோசனைகள் அவரது எண்ணத்தில் பளிச்சிட்டன. சித்தாந்தங்களில் தேர்ச்சி பெற்றிருந்த சே குவேரா மட்டும் கியூபா புரட்சியில் பங்கெடுத்தால், போராட்டத்துக்கு ஒரு புது வடிவம் கிடைக்கும் என்று லோபஸ் நம்பினார். இது குறித்து பிடல் காஸ்ட்ரோவின் சகோதரர் ரால் காஸ்ட்ரோவுடன் பேசினார்.
காஸ்ட்ரோவுக்கு போர்க்குணமும் போராட வேண்டிய அவசியமும் இருந்தது. ஆனால், போராட்டத்துக்கு வேண்டிய தத்துவப் பின்புலன் இல்லை. ‘சே’வுக்கு தத்துவமாக கம்யூனிஸம் உறைந்திருந்தது. ஆனால் போராடக் களம் இல்லை
அப்போது ‘சே’வுக்கு வயது 27. காஸ்ட்ரோவுக்கு 32. காஸ்ட்ரோவுக்காவது கியூபா தன் சொந்த நாடு. போராடிய வேண்டிய அவசியம் இருக்கும். ஆனால் ‘சே’வுக்கு அப்படி அல்ல. தனக்கு முற்றிலும் தொடர்பற்ற மற்றொரு தேசத்தில், அம்மக்களின் விடுதலைக்காகத் தன் உயிரைப் பணயம் வைப்பது, உலக வரலாற்றில் எப்போதும் எங்கும் நிகழ்ந்திராத ஒன்று. இதனால்தான் ‘சே’ மனிதருள் மாமனிதராக அடையாளம் காணப்பட்டார். பின்னர், புரட்சிக்கான திட்டங்கள் தீட்டப்பட்டன. ஏறக்குறைய ஒன்றரை வருட கடுமையான ஆயுதப் பயிற்சிக்குப் பிறகு 1956, நவம்பர் 26-ம் தேதி இரவு மெக்ஸிகோ கடற்கரையில், 82 போராளிகள் ஒருவர் பின் ஒருவராக ஏறிக்கொண்டபின், விடுதலையின் பாடலை முழங்கியபடி, கிரான்மா எனும் படகில் கியூபாவை நோக்கிப் பயணித்தனர்.
இந்தப் புரட்சியில், 1957 ஆம் ஆண்டு ஜனவரி 17 ஆம் தேதி, தளபதி லா பிளாட்டோ கொல்லப்பட்டார். இதுவே புரட்சியாளர்களின் முதல் வெற்றி. இவர்களின் வெற்றி கியூபா முழுவதும் எதிரொலித்தது.
‘‘சாவைப் பற்றி எனக்குக் கவலை இல்லை. என் பின்னால் வரும் தோழர்கள் என் துப்பாக்கியை எடுத்துக் கொள்வார்கள். தோட்டாக்கள் தொடர்ந்து சீறும்’’ போன்ற வசனங்களை அவர் கியூபா முழுவதும் பரப்பினார். 1958ம் வருடம் ஸாண்டா கிளாராவைக் கைப்பற்றினார். 1958 ஆகஸ்ட் மாதத்தில், புரட்சிப் படை தலைநகர் ஹவானாவை கைப்பற்றிய வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றி, உலகின் அனைத்து நாடுகளையும் வியப்பில் ஆழ்த்தியது.
1959, பிப்ரவரி 16-ல் கியூபாவின் பிரதமராக காஸ்ட்ரோ பதவியேற்றவுடன் குவேரா தேசிய வங்கியின் அதிபராகவும் விவசாயத் துறையில் தேசியத் தலைவராகவும் நியமிக்கப்பட்டார். தேசிய வங்கியின் தலைவராக கியூபா ரூபாய் நோட்டுகளில் ‘சே’ என கையெழுத்திடும் அளவுக்கு முக்கியத்துவம் பெற்றார்.
பின் 1961ம் ஆண்டு தேசிய வங்கியின் பதவியைத் துறந்து தொழிற்துறை அமைச்சர் பதவியேற்றார். இருந்தாலும் ‘சே’ தன்னை ஒரு சாதாரணக் குடிமகனாகவே அடையாளம் காட்டிக் கொண்டார்.விவசாயக் கூலிகளுடன் சேர்ந்து பணியாற்றினார்.
அமெரிக்காவின் சி.பி.என்.தொலைக்காட்சி, ஒரு நேர்காணலுக்காக சேகுவேராவை நியூயார்க்குக்கு அழைத்தது. ‘‘அமெரிக்கா ஒரு கழுதைப் புலி. அதன் ஏகாதிபத்தியத்தை நான் வேரறுப்பேன்’’ என அமெரிக்காவிலேயே துணிச்சலாகப் பேட்டி கொடுத்தார் ‘சே’.
1966ம் ஆண்டு மார்ச் மாதம் காங்கோவை விட்டு வெளியேறி போலி பாஸ்போர்ட்டுடன் பொலிவியா நாட்டுக்குள் நுழைந்தார். அங்கு ஆடு மேய்க்கும் பெண்ணின் மேல் பரிதாபப்பட்டு ஐம்பது பெஸோக்களைப் பரிசாகத் தருகிறார். ஆனால் அந்தப்பெண் பொலிவிய ராணுவத்துக்கு ‘சே’ பற்றி சொல்ல பொலிவிய ராணுவம் அவரை சுற்றி வளைத்துச் சரமாரியாகச் சுடத் தொடங்குகிறது.
அவர் காலில் குண்டடிபட்ட நிலையில், தன்னைச் சுற்றித் துப்பாக்கியுடன் சூழ்ந்த பொலிவிய ராணுவத்திடம். நான் இறப்பதைக் காட்டிலும், உயிருடன் பிடிப்பது உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும்’’ என்கிறார். அருகிலிருந்த லா ஹிகுவேராவுக்கு வீரர்கள் கைத்தாங்கலாக ‘சே’வை அழைத்து வருகின்றனர். அங்கிருக்கும் பழைய பள்ளிக்கூடம் ஒன்றில் ‘சே’ கைகால்கள் கட்டப்பட்ட நிலையில் சிறைவைக்கப்படுகிறார்.
அந்தப் பள்ளிக்கூடத்தில் உணவுகொடுத்துப் பேசிக்கொண்டிருந்த ஆசிரியை ஜூலியஸ் கோர்ட்டஸ் என்னும் 19 வயது பெண்மணியிடம், பள்ளிக்கூடச் சூழலைப் பார்த்துவிட்டு இவ்வாறாகச் சொன்னார். ‘‘இதுபோன்றச் சூழலில் எப்படிக் குழந்தைகள் இங்கு படிப்பார்கள்? ஒருவேளை நான் பிழைத்தால்,உங்களுக்கு நல்ல பள்ளிக்கூடம் கட்டித் தருவேன்.’’ ‘சே’ எப்போதும் ஒரு புரட்சியாளர்தான். ஆம், மக்களுக்கான புரட்சியாளர் அவர்.
‘சே பிடிபட்டார்’ என சி.ஐ.ஏ-வுக்குத் தகவல் செல்கிறது. அதே சமயம், ‘சே’ உயிருடன் இருக்கும் போதே இறந்துவிட்டதாகப் பொய்யான தகவலும் பொலிவிய ராணுவத்தால் பரப்பப்படுகிறது.
‘சே’வை உயிருடன் வைத்துக்கொண்டு விசாரணை நடத்தினால்,அது புரட்சியை ஏற்படுத்தும் எனவே அவரை கொன்று விடுங்கள் சி.ஐ.ஏ-விடம் இருந்து தகவல் வருகிறது. எனவே, காலை 11.00 ‘சே’வைச் சுட்டுக் கொல்வது என முடிவெடுக்கப்படுகிறது. ஆனால் அதை யார் செய்வது என அனைவருக்கும் குழப்பம். ‘மரியோ ஜேமி’ என்னும் பொலிவிய ராணுவ சர்ஜன் அப்பொறுப்பினை ஏற்றுக்கொள்கிறார். சரியாக நண்பகல் 1.00 மணியளவில், கைகள் கட்டப்பட்ட நிலையில், தனிமையான இடத்துக்கு மரியோ சே-குவேரா-வை அழைத்துச் செல்கிறார்.
‘‘முட்டி போட்டு உயிர் வாழ்வதைவிட நின்று கொண்டே சாவது எவ்வளவோ மேல்!’’ என்பார் ‘சே’. ஆனால், மரியோ அவரை ஒரு கோழையைப் போலக் கொல்லத் தயாராகிறார். தன்னை நிற்க வைத்துச் சுடுமாறு ‘சே’ கேட்க, அதை அலட்சியப்படுத்துகிறார். எனவே,இதயம் கிழிக்கும் விழிகள் மின்ன, உலகம் புகழும் மனிதன் கோபத்துடன் சொன்ன கடைசி வாசகம் இதுதான் ‘‘கோழையே, சுடு! நீ சுடுவது ‘சே’வை அல்ல ஒரு சாதாரண மனிதனைத்தான்!’’.
ஒன்பது தோட்டாக்களில் ஒன்று, அவரது இதயத்துக்குள் ஊடுருவியது. இனம், மொழி, தேசம் என எல்லைகள் கடந்து பாடுபட்ட உலகின் ஒரே வீரன் இந்த உலகை விட்டு விடை பெறுகிறான்.
‘சே’ இறந்த தகவல் உலகத்தை உலுக்கியது.
அக்டோபர் 18 கியூபா மற்றும் ஹவானா-வில் வரலாறு காணாத கூட்டம் ‘சே’வின் அஞ்சலிக்காக காஸ்ட்ரோவின் தலைமையில் கூடியிருந்தது. அவர்கள் முன் தலைமை உரையாற்றுகிறார் காஸ்ட்ரோ. ‘‘வரலாற்றின் மகத்தான பக்கங்களில் இடம்பெற்றுவிட்ட ‘சே’ நம் காலத்தின் ஒப்பற்ற தலைவர். கியூபா மக்கள் அந்த மகத்தான தலைவனை முன்மாதிரியாகக் கொண்டு செயல்பட வேண்டும்’’ என வேண்டுகோள் விடுக்கிறார்.
குவேராவுக்கு மரணதண்டனை நிறைவேற்றிய ‘லா ஹிகுஏரா‘என்ற இடத்தில் மக்கள் எழுப்பிய குவேராவின் சிலையை ராணுவத்தினர் உடைப்பதும் மக்கள் மீண்டும் சிலையை நிறுவுவதுமாக தொடர்ந்து நிகழ்ந்து கொண்டிருந்தது.
அர்ஜென்டைனாவின் அதிபர் ஃபிடெல் காஸ்ட்ரோவை கடுமையாக எதிர்த்தாலும் சே குவேராவின் உருவம் பதித்த தபால்தலையை வெளியிட்டார். அப்போது அவர் குவேராவை ஒரு உலகத்திற்கே உரிய நபர் என்று புகழ்ந்தார்.
ஒருவன் தன் வாழ்க்கையாலும் மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்து காட்டியதாலும் பல்லாயிரக் கணக்கானவர்களை தன் வழிப்படுத்தினால் அவன் என்றைக்குமே சாவதில்லை.“சே”தான் இந்த யுகத்தின் மனித வடிவமாகத் திகழ்கின்றார். தற்போது ‘சே’ எனும் சொல்லாக ஒவ்வொருவரிடமும் வாழ்ந்துக்கொண்டிருக்கிறார்.