மீண்டும் இணைந்த மஹிந்த, மைத்திரி தரப்பு – உடன்படிக்கை கையெழுத்து
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆகியன இன்று புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றில் கைச்சாத்திட்டன.
கொழும்பிலுள்ள இலங்கை மன்றக் கல்லூரியில் இன்று (வியாழக்கிழமை) காலை இடம்பெற்ற நிகழ்வின் போதே இந்த புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி அதன் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி அதன் செயலாளர் சாகர காரியவசம் ஆகியோர் இந்த உடன்படிக்கையில் கைச்சாத்திட்டிருந்தனர்.
மைத்திரி – மஹிந்த பிளவு
2015ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில், அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை தோற்கடிக்கும் நோக்குடன், மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியிலிருந்து, மைத்திரிபால சிறிசேன பிரிந்தார்.
2014ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 21ஆம் தேதி ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியிலிருந்து வெளியேறிய மைத்திரிபால சிறிசேனவை, ஐக்கிய தேசியக் கட்சி, மக்கள் விடுதலை முன்னணி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட பல கட்சிகள் ஒன்றிணைந்து ஜனாதிபதித் தேர்தலுக்கான பொது வேட்பாளராக அறிவித்திருந்தனர்.
குடும்ப ஆட்சி, ஊழல், மோசடி உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தி, மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியிலிருந்து மைத்திரிபால சிறிசேன மற்றும் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க உள்ளிட்ட பலர் வெளியேறினர்.
கடும் மோதலுக்கு மத்தியில் 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8ஆம் தேதி நடைபெற்ற தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தை வீழ்த்தி, மைத்திரிபால சிறிசேன ஆட்சியை தன்வசப்படுத்தினார்.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைமை மைத்திரிபால சிறிசேனவிற்கு எப்படி வந்தது?
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தலைமையிலான அரசாங்கம் ஜனாதிபதித் தேர்தலில் தோல்வி அடைந்த போதிலும், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் அங்கம் வகித்த ஒருவரே ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளமையினால் கட்சியின் தலைமைத்துவம் மைத்திரிபால சிறிசேனவிற்கு வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
கட்சியின் யாப்பின் பிரகாரம், தமது கட்சியில் ஒருவர் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டால், அவரே கட்சியின் தலைவராகவும் செயற்பட வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாக கூறப்பட்டது.
எனினும், கட்சியிலிருந்து வெளியேறிய ஒருவருக்கு கட்சியின் தலைமைத்துவத்தை வழங்க முடியாது என மஹிந்த ராஜபக்ஷ தரப்பினர் வலியுறுத்தினர்.
இந்த நிலையில், கட்சியிலிருந்து தற்காலிகமாகவே வெளியேறியதாகவும், ராஜினாமா செய்யவில்லை எனவும் மைத்திரிபால சிறிசேன தரப்பினர் சுட்டிக்காட்டியிருந்தனர்.
இவ்வாறு எழுந்த சர்ச்சைக்கு மத்தியில் கட்சியின் தலைமைத்துவத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு வழங்க இறுதியாக இணக்கம் எட்டப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, கட்சியின் ஆலோசகர்களாக சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க மற்றும் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உருவாக்கம்
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தமது எதிர் தரப்பான ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து செயற்படுகின்றமைக்கு எதிராக மஹிந்த ராஜபக்ஷ சார்ந்த சிலர் குரல் எழுப்பியிருந்தனர்.
இந்த நிலையில், கடந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியை மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான சிலர் உருவாக்கி, அந்த கட்சியின் சின்னமாக தாமரை மொட்டு சின்னத்தில் போட்டியிட்டு பாரிய வெற்றியை தன்வசப்படுத்தினர்.
அந்த தேர்தலுக்கு பின்னர், இலங்கை வரலாற்றில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி ஆகிய பிரதான கட்சிகளை பின்தள்ளி, முதலாவது தடவையாக கட்சியொன்று பெரும்பான்மை வெற்றிபெற்ற சந்தர்ப்பமாக பதிவானது.
இந்த நிலையில், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி, பொதுஜன பெரமுனவுடன் கைக்கோர்க்க வேண்டும் என்ற நிலைப்பாடு கட்சிக்குள் தோற்றம் பெற ஆரம்பித்தது.
இதன்படி, ஐக்கிய தேசியக் கட்சி நாட்டை வீழ்ச்சி பாதைக்கு கொண்டு செல்வதாக தெரிவித்து, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 26ஆம் தேதி பிரதமர் ரணில் விக்ரமசிங்க வசம் காணப்பட்ட அதிகாரங்களை பறித்து, அவற்றை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மஹிந்த ராஜபக்ஷவிற்கு வழங்கினார்.
எனினும், 52 நாள் போராட்டத்திற்கு பின்னர் நீதிமன்ற உத்தரவிற்கு அமைய, ரணில் விக்ரமசிங்க மீண்டும் பிரதமர் பதவிக்கு தெரிவாகினார்.
அதன் பின்னர், ரணில் விக்ரமசிங்க மற்றும் மைத்திரிபால சிறிசேன ஆகியோருக்கு இடையிலான மோதல் அதிகரித்த நிலையிலேயே. ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் இன்று கைக்கோர்த்துள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் இன்றைய நிலைப்பாடு
இரண்டு கட்சிகள் என்றாலும், இந்த இரண்டு கட்சிகளுக்கும் இடையில் பாரிய வேறுபாடு கிடையாது என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவிக்கின்றார்.
நாட்டை முன்னோக்கி கொண்டு செல்லும் ஒரே தலைவர் கோட்டாபய ராஜபக்ஷ என்ற நிலையிலேயே தாம் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் உடன்படிக்கையில் கைச்சாத்திட்டதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.
தமது கட்சியின் கொள்கைக்கும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கொள்கைக்கும் இடையில் மாற்றங்கள் கிடையாது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
ஒரே கொள்கைகளை கொண்ட இரண்டு கட்சிகளும் ஒன்றிணைந்து நாட்டை முன்னோக்கி கொண்டு செல்லும் என கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவிக்கின்றார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நிலைப்பாடு
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அடிப்படை காரணிகளை கொண்டே, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உருவாகியுள்ளதாக அந்த கட்சியின் தேசிய அமைப்பாளரும், முன்னாள் அமைச்சருமான பஷில் ராஜபக்ஷ தெரிவிக்கின்றார்.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியிலுள்ள உறுப்பினர்களுக்கு புதிய பாதையொன்று தேவைப்பட்டதாகவும், அதனால் அதே கட்சியின் அரசியல் அடிப்படை காரணிகளை கொண்டு உருவான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் கைக்கோர்க்க இணங்கியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
மஹிந்த ராஜபக்ஷ, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியிலிருந்து பிரிந்துள்ள போதிலும், மனதளவில் இன்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் நினைப்பிலேயே வாழ்ந்து வருவதாக பஷில் ராஜபக்ஷ குறிப்பிட்டார்.
”மஹிந்த ராஜபக்ஷவின் முதலாவது காதலி, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி” என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பஷில் ராஜபக்ஷ சுட்டிக்காட்டினார்.
-பிபிசி தமிழ்
2019/10/10