மருத்துவ மாணவர்களின் தற்கொலையும் எதிர்காலமும்
– Dr. கனகசபாபதி வாசுதேவா
முதலில் குறித்த மருத்துவ மாணவன் ஏற்கனவே மன நிலை குழம்பியவனாக இருந்து இருப்பனா? என்று ஆராய வேண்டும். அவனது இந்த நிலை விரிவுரையாளர்களினால் அடையாளம் காணப்பட்டதா? அல்லது அடையாளம் காணப்படவில்லையா? என்பது பற்றியும் ஆராயவேண்டும். எற்கனவே மன அழுத்தத்தில் உள்ள மாணவருக்கு குறித்த பாடம் ஒன்றுக்குக்கான பரீட்சையில் தோற்ற அனுமதி கிடைக்காமல் போதல் போன்ற சம்பவங்கள் அவரின் மன நிலையில் தீடீரென்று மிகப்பெரிய தாக்கத்தினை கொடுத்து இருக்கும். முக்கியமாக அவர் குறித்த பாடம் ஒன்றுக்கும் ஆகக்குறைந்த 80 சதவீத வரவினை கொண்டிருக்காமை காரணமாகவே அம்மாணவன் பரீட்சைக்கு அனுமதிக்கப்படவில்லையென தெரிய வருகின்றது. அவ்வாறாயின் என்ன காரணத்திற்காக அவன் குறித்த பாட விரிவுரைகளுக்கு சமூகம் அளிக்கவில்லை என்பதினை ஆராய்ந்து பார்க்க வேண்டும். மேலும் அம்மாணவணுக்கு இவ்விடயத்தினை உரிய முறையில் தெரிவித்து, அம்முடிவானது அவனின் மனநிலையில் ஏற்படும் தாக்கங்களினை ஆராய்ந்திருக்க வேண்டும். ஒரு வைத்தியரான விரிவுரையாளரினால் மாணவனில் மனநிலையில் ஏற்படும் தாக்கம் மிக இலகுவாக அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டிருக்கலாம். தவிர்க்க முடியாத குடும்ப. தனிப்பட்ட மற்றும் சமூக காரணங்களினால் அவனால் 80 வீத வரவினை அடையமுடியாமல் இருந்திருந்தால் நிச்சயம் அதற்கு விதிவிலக்கு கொடுக்க வேண்டும்.
எமது இலங்கை பல்கலைக்கழகங்களில் பொதுவாக ஆசிரியரை மையப்படுத்திய கற்கை மற்றும் கற்பித்தல் முறையே காலகாலமாகக் இருக்கின்றது. இதன் பொழுது பல்கலைகழக ஆசிரியர்களுக்கு மாணவர்களின் சமூக பின்னணி, குடும்ப நிலை, நோய் நிலமைகள் முக்கியமாக அவர்களின் மனோ தைரியம் போன்றவற்றினை முற்று முழுதாக தெரிந்திருக்க வாய்ப்பில்லை. மேலும் பல்கலைக்கழக ஆசிரியர்கள் இது பற்றி அறியவும் விரும்புவதில்லை.மேலைத்தேச நாடுகளில் பொதுவாக பல்கலைக்கழகங்களில் அதிகளவு ஆசிரியர்கள் கற்பித்தல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதினாலும், அங்கு மாணவர்களை மையப்படுத்திய கற்கை நெறிகள் இருப்பதினாலும் ஒரு மாணவன் மனஅழுத்தம் அல்லது மனநோய் போன்றவற்கு உள்ளாகும் பொழுது இலகுவில் அடையாளம் காணப்படுவான். மேலும் அவனுக்கு உரிய ஆற்றுப்படுத்தல்கள் மற்றும் ஏனைய சிகிச்சைகள் வழங்கப்படும். இலங்கை பல்கலைக்கழகங்களில் இவ்வாறு நடப்பதில்லை. மேலைத்தேச பல்கலைக்கழகங்களில் பரீட்சையில் தோல்வி அடைந்த மாணவர்களுக்கென விசேடமாக ஆற்றுப்படுத்தல்கள் உள்ளன. இலங்கையில் இவ்வாறான முறை தற்பொழுதே அறிமுகமாகி வருகின்றது.
எமது சமூகத்தவரிடம் ஒரு பழக்கம் யாதெனில் ஒருவர் மன அழுத்தத்தில் அல்லது மனநோயின் தாக்கத்தில் உள்ள பொழுது அவரினை இனம் காணாமை மற்றும் உரிய மருத்துவ ரீதியான தீர்வுகளை பெற்று கொடுக்க முயலாமை என்பனவும் இவ்வகையான தற்கொலைகளில் பங்களிக்கின்றன. சாதாரணமாக வைத்தியர் ஒருவருக்கு காச்சல் போன்ற ஏதாவது நோய்கள் வந்துவிட்டால், பொதுவாக எல்லோரும் கேட்கும் கேள்வி டொக்ரர் உங்களுக்கே வருத்தமா? பலரும் மருத்துவ மாணவர்களும் வைத்தியர்களும் மனிதர்களே என்பதினை மறந்து விடுகின்றனர். அதுவும் மருத்தவ பீட மாணவன் ஒருவனுக்கு மன அழுத்தம் அல்லது depression என்று சொல்வதில் உள்ள வெட்கம் மற்றும் சமூகத்தின் எதிர்பார்ப்புகளை எதிர்கொள்ள முடியாத நிலை என்பன இவ்வாறான மரணங்களினை தூண்டுகின்றன.
தற்போதைய ஆராய்ச்சிகளின் படி மருத்துவ துறையில் வேலை பார்க்கும் மருத்துவர்கள், மருத்துவ மாணவர்கள் ஆகியோர் அதிகளவு மன உளைச்சலுக்கு உள்ளாகி வருகின்றனர் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஒட்டு மொத்தத்தில் இவ்வாறான தற்கொலைகள் பல்வேறுபட்ட காரணிகளின் தாக்கத்தின் விளைவாகவே (multi factor) ஏற்படுகின்றது. இவ்வாறான நிலையில் நாம் ஒரு தரப்பினை மட்டும் முற்றுமுழுதாக குற்றம் சாட்டுவதில் இருந்து நாம் ஏனைய தற்கொலைக்கு ஏதுவான மற்றைய காரணிகளை ஆராய்ந்து பார்க்க விரும்புவதில்லை. இதன்காரணமாக நாம் இவ்வாறான தற்கொலைகளை தடுப்பதில் தோல்வி அடைகின்றோம். ஒட்டு மொத்த காரணங்களினையும் அடையாளம் கண்டு அவற்றினை தீர்வு கண்டாலே இவ்வாறான தற்கொலைகளை தடுக்கலாம்.