ஜனாதிபதி தேர்தல் களம்: தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முடிவை மக்கள் ஏற்பார்களா? (3)

பிரதீபன்

(பகுதி – 3)

1958இல் எஸ்.டபிளயு.ஆர்.டி.பண்டாரநாயக்க கொலை செய்யப்பட்ட பின்னர், 1960 யூலையில் நடைபெற்ற பொதுத்தேர்தலில் வெற்றி பெற்றதின் மூலம் அவரது மனைவி சிறீமாவோ பண்டாரநாயக்க நாட்டின் பிரதமரானார்.

அவர் பிரதமரான பின்னர் தமிழரசு கட்சி தனது இனவாத செயற்பாடுகளை மேலும் தீவிரப்படுத்தத் தொடங்கியது. இருந்தும் சிறீமாவோ, தமிழரசு கட்சி முன்வைத்த கோரிக்கைகள் பற்றி பேச்சுவார்த்தை நடத்துவதற்கு அழைப்பு விடுத்தார். தமிழரசுக் கட்சியினர் அவரது அழைப்பை நிராகரித்துவிட்டு வடக்கு கிழக்கு மாகாணங்களிலிருந்த அரச செயலகங்களின் முன்னால் ‘சத்தியாக்கிரகம்’ என்ற மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு அங்கு அரச சேவையை முடங்கச் செய்தனர்.

இந்தச் சூழ்நிலையில் பிரதமர் சிறீமாவோ தனது பிரதிநிதியாக கம்பஹா நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.டி.பண்டாரநாயக்க அவர்களை யாழ்ப்பாணம் அனுப்பி தமிழரசுக் கட்சித் தலைவர்களுடன் சமரசப் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் தமிழரசு தலைவர்களோ எந்தவிதமான சமரசத்துக்கும் உடன்பட மறுத்துவிட்டனர்.

தமிழரசுக் கட்சியின் செயற்பாடுகள் கட்டுமீறிச் சென்ற நிலையில் அக்கட்சியின் தலைவர்களை கைது செய்து தடுப்புக் காவலில் வைக்கும் சூழ்நிலைக்கு அரசாங்கம் தள்ளப்பட்டது. அத்துடன் சத்தியாக்கிரகம் ஒரு முடிவுக்கு வந்தது.

இந்த சத்தியாக்கிரகம் நடைபெற்ற காலத்தில் அது பற்றி ஆராய்ந்து வருவதற்காக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தனது தலைவர்களில் ஒருவரான தமிழ்நாடடைச் சேர்ந்த பி.ராமமூர்த்தியை யாழ்ப்பாணம் அனுப்பி வைத்தது.

அவர் யாழ்ப்பாணம் வந்து பல தரப்பினரையும் சந்தித்து நிலைமையை ஆராய்ந்த பின்னர் இந்தியா திரும்பி தனது ஆய்வு சம்பந்தமான அறிக்கையை தமது கட்சி தலைமைக்கு அளித்தார். அந்த அறிக்கை பின்னர் “இலங்கை தமிழர் பிரச்சினை என்ன?” என்ற தலைப்பில் பிரசுரமாகவும் வந்தது. அந்த அறிக்கையில் அவர், தமிழரசுக் கட்சியின் சத்தியாக்கிரகம் தமிழ் மக்களின் நலன்களுக்கானது என்பதை விட சிறீமாவோ பண்டாரநாயக்கவின் ஏகாதிபத்திய எதிர்ப்பு அரசாங்கத்தை நெருக்கடிக்கு உள்ளாக்கும் நோக்கத்தோடு வெளிநாட்டு சக்திகளின் தூண்டுதலால் நடத்தப்பட்டது என்பதை தக்க நியாயங்களுடன் சுட்டிக்காட்டியிருந்தார்.

அதேநேரத்தில சிறீமாவோ பண்டாரநாயக்க தனது கணவர் பண்டாரநாயக்கவின் வழியில் தொடர்ந்து பல ஏகாதிபத்திய எதிர்ப்பு நடவடிக்கைகளை எடுத்ததினால் அந்த அந்நிய சக்திகள் அவரது அரசைக் கவிழ்க்கும் முயற்சியில் தமக்கு விசுவாசமான ஐக்கிய தேசியக் கட்சி மூலமும், தமிழரசுக் கட்சி மூலமும் பல நடவடிக்கைகளை முடுக்கிவிட்டிருந்தன.

அதன் ஒரு அம்சமாக 1962இல் சிறீமாவோ அரசை இராணுவச் சதி மூலம் கவிழ்ப்பதற்கான முயற்சியில் இராணுவத்தில் இருந்த சில வலதுசாரி அதிகாரிகளால் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால் அரசாங்கத்திற்கு முன்கூட்டியே இந்த சதி பற்றித் தகவல் கிடைத்ததால் அவர்களது முயற்சி முறியடிக்கப்பட்டு, அதில் சம்பந்தப்பட்டவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்கள் மீதான வழக்கு நீதிமன்ற விசாரணைக்கு வந்தபோது தமிழ் காங்கிரஸ் தலைவர் ஜீ.ஜீ.பொன்னம்பலம்தான் சதிகாரர்களுக்காக ஆஜராகி வாதாடினார்! தமிழ் தலைவர்களில் ஒருவரான அவர் நாட்டுப்பற்றை விட சதிகாரர்களைப் பாதுகாப்பதிலேயே கண்ணும் கருத்துமாக இருந்தார்.

அந்தக் காலகட்டத்தில் இலங்கை அரசியலைத் தீர்மானிப்பதில் ஐ.தே.கவைச் சேர்ந்தவரும், ஜே.ஆர்.ஜெயவர்த்தனவின் நெருங்கிய உறவினருமான டி.ஆர்.விஜயவர்த்தனவுக்கு சொந்தமான ‘லேக்ஹவுஸ்’ பத்திரிகை நிறுவனம் ஒரு முக்கிய சக்தியாக இருந்தது. எனவே இந்த நிறுவனத்தை அரசாங்கம் பொறுப்பெடுக்க வேண்டும் என்ற கோரிக்கை இலங்கையின் இடதுசாரிக் கட்சிகளால் நீண்டகாலமாக முன்வைக்கப்பட்டு வந்தது.

எனவே சிறீமாவோ அரசாங்கம் இந்த நிறுவனத்தை அரசாங்கம் சவீகரிக்கும் நோக்குடன் 1964 ஒரு சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தது. இந்தச் சட்ட மூலத்தை நிறைவேற்றவிடாமல் தடுப்பதற்காக ஐ.தே.கவும், லேக்ஹவுஸ் நிறுவன உரிமையாளரும் பகீரதப் பிரயத்தனங்களில் ஈடுபட்டனர். அதற்காக அவர்கள் சிறீமாவோ அரசில் சிரேஸ்ட அமைச்சராக இருந்த சி.பி.டி.சில்வா தலைமையில் 17 அரசாங்க எம்.பிக்களை வலை கொடுத்து வாங்கி எதிரணியின் பக்கம் கொண்டு வந்தனர். அத்துடன் அரசின் பங்காளியாகவிருந்த லங்கா சமசமாஜக் கட்சியைச் சேர்ந்த இரு எம்பிக்களும் (எட்மன் சமரக்கொடி, மெரில் பெர்னாண்டோ) அரசுக்கு எதிராக வாக்களித்தனர். இந்தச் சூழ்நிலையில் சட்டமூலம் ஒரு வாக்கால் தோற்றதின் மூலம் சிறீமாவோ அரசு பதவி துறக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.

இந்த பத்திரிகை மசோதா விடயத்தில் தமிழ் கட்சிகளான தமிழரசும், தமிழ் காங்கிரசும் அரசுக்கு எதிராக ஐ.தே.கவுடனேயே சேர்ந்து நின்றன.

சிறீமாவோ அரசு கவிழ்ந்ததைத் தொடர்ந்து 1965இல் நாடு பொதுத்தேர்தல் ஒன்றுக்குச் சென்றது. இந்தத் தேர்தலில் தென்னிலங்கையின் பிரதான கட்சிகள் இரண்டுக்கும் ஆட்சி அமைப்பதற்கான அறுதிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை.

இந்தச் சூழ்நிலையில் இரு கட்சிகளும் தமிழரசு மற்றும் தமிழ் காங்கிரஸ் கட்சிகளின் உதவியை நாடின. இந்தச் சூழ்நிலை தமிழ் கட்சிகளுக்கு குறிப்பாக தமிழரசு கட்சிக்கு ஒரு பொன்னான வாய்ப்பாக அமைந்தது. ஏனெனில், தென்னிலங்கையின் பிரதான கட்சிகளில் ஏதாவதொன்றுக்கு பெரும்பான்மை கிட்டாதபோது அந்தக் கட்சியுடன் பேரம்பேசி தமது கோரிக்கைகளை ஏற்கவைத்து அதன் மூலம் அந்தக் கட்சி ஆட்சி அமைக்க உதவுவது என்ற தந்திரோபாயத்தையே தமிழரசுக் கட்சி தனது கொள்கையாகக் கொண்டிருந்தது.

எனவே, இந்த சூழலை நான்கு பயன்படுத்தும் ஒரு வாய்ப்பு தமிழரசுக் கட்சிக்கு கிடைத்தது. இந்தத் தேர்தலில் சிறீலங்கா சுதந்திரக் கட்சியை விட ஐ.தே.க. சற்றுக் கூடுதலான ஆசனங்களைப் பெற்றிருந்தது. எனவே அந்தக் கட்சி தமிழரசு கட்சி ஆதரவு வழங்காவிட்டாலும் வேறு சில சிறிய கட்சிகளை இணைத்துக்கொண்டு ஆட்சி அமைக்க முடியும். ஆனால் அரசாங்கம் ஏதாவதொரு மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யும்போதோ அல்லது வரவு செலவுத்திட்ட வாக்கெடுப்பின் போதோ, சுதந்திரக் கட்சியும் தமிழரசுக் கட்சியும் அதற்கெதிராக இணைந்து வாக்களித்தால் ஐ.தே.க. அரசாங்கம் தோற்றுவிடும்.

ஆனால் சி.றீ.ல.சுதந்திரக் கட்சியின் நிலை அப்படியானதல்ல. தமிழரசுக் கட்சி ஆதரித்தால் மட்டும்தான் அக்கட்சியால் அரசாங்கம் அமைக்க முடியும் என்ற இக்கட்டான நிலையில் அது இருந்தது.

எனவே, இந்தச் சந்தர்ப்பத்தில் ஐ.தே.கவை விட சுதந்திரக் கட்சியுடன் பேரம் பேசி தமிழ் மக்களின் உரிமைகள் சிலவற்றையேனும் பெறக்கூடிய ஒரு பொன்னான வாய்ப்பு தமிழரசுக் கட்சிக்கு இருந்தது. ஒருவேளை சுதந்திரக் கட்சி வாக்குறுதி கொடுத்தபடி செய்யாதுவிட்டால் அக்கட்சி அரசுக்கு கொடுத்த ஆதரவை விலக்குவதன் மூலம் ஆட்சியை கவிழ்க்கும் வாய்ப்பும் தமிழரசுக் கட்சிக்கு இருந்தது.

ஆனால் தமிழரசுக் கட்சி என்ன செய்தது? இந்தப் பொன்னான வாய்ப்பைப் பயன்படுத்தியதா? இல்லவே இல்லை!

தமிழரசுக் கட்சி சுதந்திரக் கட்சியின் அழைப்பை நிராகரித்துவிட்டு பிற்போக்கு இனவாத ஐ.தே.க. அரசாங்கத்தில் வேறு ஆறு கட்சிகளுடன் சேர்ந்து இணைந்து கொண்டது. தமிழ் காங்கிரசும் அவ்வாறே நடந்து கொண்டது. இதிலுள்ள சுவாரசியமான விடயம் என்னவெனில், அரசாங்கத்தில் இணைந்திருந்த ஏனைய கட்சிகளில் இரண்டு தீவிரமான சிங்கள இனவாத கட்சிகளான கே.எம்.பி.ராஜரத்தினவின் கட்சியும், ஆர்.ஜீ.சேனநாயக்கவின் கட்சியுமாகும்.

தாம் ஐ.தே.க. அரசாங்கத்தில் சேர்ந்ததிற்கு தமிழரசுக் கட்சி சொன்ன காரணம், மாவட்ட சபைகள் அமைத்து தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு காண்பதாக பிரதமர் டட்லி சேனநாயக்க தமக்கு வாக்குறுதி அளித்ததினாலேயே என்பதாகும். ஆனால் ஐ.தே.க. அரசாங்கம் அந்த அதிகாரம் ஏதுமற்ற மாவட்ட சபைகளை கூட ஒருபோதும் அமைக்கவே இல்லை. (தமிழரசுக் கட்சியின் இந்தப் போக்கை எதிர்த்துத்தான் ‘தமிழரசுக் கட்சியின் மூளை’ என வர்ணிக்கட்டு வந்த ஊர்காவற்துறை நாடாளுமன்ற உறுப்பினர் வி.நவரத்தினம் கட்சியிலிருந்து விலகி தமிழர் சுயாட்சிக் கழகம் என்ற கட்சியை உருவக்கினார்)

‘இலவு காத்த கிளி போல’ என்ற நிலைக்குத் தள்ளப்பட்ட தமிழரசுக் கட்சி, இப்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பு செய்து கொண்டிருப்பது போல, நான்கரை வருடங்கள் ஐ.தே.க. அரசுக்கு முண்டுக் கொடுத்து இருந்துவிட்டு, 1970 பொதுத் தேர்தலுக்கு சில மாதங்கள் இருக்கையில் ‘அரசாங்கம் எம்மை ஏமாற்றிவிட்டது’ எனப் புலம்பிக் கொண்டு அந்த அரசை விட்டு விலகியது. விலகியதற்கு அது சொன்ன காரணமும் வேடிக்கையானது. அதாவது தமக்கு வாக்குறுதி அளித்தபடி மாவட்ட சபைகளை ஐ.தே.க. அரசு அமைக்காததால்தான் விலகினோம் என்று சொல்லவில்லை. திரிகோணமலையை புனிதப் பிரதேசமாக (அங்கு கோணேசர் கோயில் அமைந்திருப்பதால்) பிரகடனம் செய்யுமாறு தாம் விடுத்த கோரிக்கையை பிரதமர் டட்லி செய்யாதபடியால்தான் அரசாங்கத்தைவிட்டு விலகியதாக அறிவித்தார்கள்!

தமிழரசுக் கட்சியின் ‘புரு}டா’ தமிழ் பொதுமக்கள் நம்பி ஏற்றார்களா என்ற விபரத்தை அடுத்த தொடரில் பார்ப்போம்.
தொடரும்…

Tags: