நவம்பர் 25 – இன்று பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு நாள்

Afbeeldingsresultaat voor violence against women

ன்று பெண்களுக்கு எதிரான அனைத்து வன்முறை ஒழிப்பு நாள் ஆகும். உலகில் ஆண்களுக்கு நிகராக நாங்களும் முன்னேற்றமடைய வேண்டும் எனும் லட்சியப் போக்குடன் பல நாடுகளில் பெண்கள் தங்கள் வாழ்வாதாரத்தையும் தங்களின் தன்னம்பிக்கையும் வளர்த்து சாதித்து வருகின்றனர். புதிய துறைகளில் இன்று சாதனைகளை நிலைநாட்டிவருகின்றனர்.

பெண்கள் நாட்டின் கண்கள் என சொல்லுமளவிற்கு முக்கியமானவர்கள். இறைவனின் படைப்பின் உன்னத படைப்பான பெண்கள் இந்த உலகில் ஆக்கத்திற்கு அடித்தளம் அமைத்தவர்கள். அவ்வாறிருக்கும் பெண்கள் பல வன்முறைகளுக்கும் துஷ்பிரயோகங்களுக்கும் உட்படுத்தப்படுவது உலகில் சாதாரண விஷயமாக மாறிவந்துள்ளது.

இந்நிலையில் ஒவ்வொரு வருடமும் நவம்பர் 25ம் தேதி உலகளாவிய ரீதியில் ஒரு சிறப்பு நாளாக பெண்களுக்கு எதிரான வன்முறையை ஒழிக்கும் நோக்கில் கொண்டாடப்பட்டு வருகின்றது. பெண்கள் உலகளாவிய ரீதியில் இன்று பல விதமான வன்முறைகளுக்கு உட்படுத்தப்படுவதை தவிர்க்கும் முகமாக பெண்களுக்கு எதிரான வன்முறைகளை வெளி உலகிற்கு காட்டி அதற்கான நியாயமான தீர்க்கமான முடிவுகளை எடுப்பதற்காக சர்வதேச மகளிர் தினம் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு நாள் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

டொமினிக்கன் குடியரசில் 1960 நவம்பர் 25ல் மிராபெல் சகோதரிகள் என அழைக்கப்படும் மூன்று சகோதரிகள் அவர்களின் அரசியல் செயற்பாடுகளுக்காக அந்நாட்டின் அன்றைய ஆட்சியாளர் ரபாயெல் டுருஜிலியோவின் (1930-1961) உத்தரவின் பேரில் படுகொலை செய்யப்பட்டனர். பாதிக்கப்படும் பெண்களுக்கெதிராகவே இவர்கள் குரல் கொடுத்தவர்கள். ‘மறக்கமுடியாத வண்ணத்துப் பூச்சிகள்’ என்று பின்னர் உலகில் பெயர் பெற்ற இந்த மிராபெல் சகோதரிகள் லத்தீன் அமெரிக்காவில் பெண்களுக்கு எதிரான வன்முறைக் கொடுமையின் சின்னமாக மாறினார்கள்.

1980ம் ஆண்டு முதல் அந்த நாள் அவர்களின் படுகொலையை நினைவு கூர்வதற்காகவும், பால்நிலை வன்முறைகளுக்கு எதிராக விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துவதற்காகவும் தேர்வுசெய்யப்பட்டது. அன்றைய தினத்தைத் தொடர்ந்து 16 நாட்களுக்கு பால்நிலை வன்முறைகளுக்கு எதிரான விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துவதற்கு உலகளாவிய ரீதியில் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன. இந்தச் செயற்பாடுகள் சர்வதேச மனித உரிமைகள் தினமான டிசம்பர் 10ம் தேதி முடிவடைகின்றது.

Afbeeldingsresultaat voor in the times of the butterflies

இந்த சகோதரிகளின் நினைவாகவே 1999 டிசம்பர் 17ம் தேதி ஐக்கிய நாடுகள் பொதுச்சபையினால் வருடம்தோறும் நவம்பர் 25ம் தேதி பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு சர்வதேச தினமாகப் கொண்டாடுவதற்கு அதிகாரப்பூர்வமாக தீர்மானத்தை நிறைவேற்றியது. மிராபெல் சகோதரிகளின் கதை ‘இன் தி டைம்ஸ் ஆப் பட்டபிளை’ (In the Time of the Butterflies) என்ற பெயரில் நாவலாகவும் திரைப்படமாகவும் உருவாகியது.

இன்றைய சமுதாயத்தில் பெண்கள் மீதான வன்முறைகள் பல விதங்களில் இடம்பெறுகின்றன. தொழிற்சாலைகளில் அலுவலகங்களில் மருத்துவமனைகளில் பாடசாலைகளில் என பல இடங்களில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் இடம்பெறுகின்றன. இதேவேளை குடும்ப உறுப்பினர்களாலும் வேலியே பயிரை மேய்ந்த கதையாக பல்வேறு சந்தர்ப்பங்களில் பெண்கள் வன்முறைக்கு உட்படுத்தப்படுகின்றனர். பெண்களை சக உயிராக கருதாமல் உடைமையாக கருதும் ஆண் ஆதிக்க மனப்பான்மை உடைத்தெறியப்படவேண்டும். ‘மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையை கொளுத்துவோம்’ என பாரதியார் சொன்ன கூற்றுக்கு அமைய பெண்களுக்கு எதிரான வன்முறைகளை இல்லாதொழிக்க உலக வாழ் மனிதர்கள் நாம் ஒன்று சேர்வோம் இந்நாளில்.

-தினகரன்
2019.11.25

Tags: