இனப் பிரச்சினைக்கு கோத்தபாயவின் தீர்வு என்ன?

பரிபூரணன்

லங்கையின் புதிய ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச தனது முதல் வெளிநாட்டுப் பயணமாக அண்டை நாடான இந்தியாவுக்கு சென்று திரும்பியுள்ளார். அவர் ஜனாதிபதியாகத் தெரிவானதும் முதல் ஆளாக இலங்கைக்கு பறந்து வந்தவர் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அவர்களே. அவர் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சார்பாக விடுத்த அழைப்பை ஏற்றே கோத்த அங்கு சென்று வந்துள்ளார்.

அதுவுமல்லாமல் இந்தியா இலங்கைக்கு மிக அருகில் உள்ள ஒரு நாடு. (ஒரு சிகரட் பற்றி முடிப்பதற்கிடையில் இந்திய விமானங்கள் இலங்கைக்குள் வந்துவிட முடியும் என காலஞ்சென்ற அனுரா பண்டாரநாயக்க ஒருமுறை நாடாளுமன்றத்தில் கூறியதை இங்கு நினைவு கூரலாம்)

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே ஒரு காலத்தில் நிலத்தொடர்பு இருந்திருக்கலாம் என இப்பொழுது ஆய்வுகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. அதன் காரணமாக இந்தியாவிலிருந்து சிங்களவர்களும், தமிழர்களும், இஸ்லாமியர்களும் இலங்கையில் வந்து குடியேறினார்கள் என்பதும் உறுதியான கருத்தாக நிலைநாட்டப்பட்டுள்ளது.

எனவே இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே சுமார் மூவாயிரம் வருடங்கள் பழமையான கலாச்சார, பண்பாட்டு, மத உறவுகள் இருந்து வருகின்றன.

இவற்றைவிட, இலங்கையில் வாழும் சிறுபான்மை தேசிய இனமான தமிழர்களின் இரத்த உறவுகள் என வர்ணிக்கப்படும் சுமார் 8 கோடி தமிழர்கள் இலங்கையின் வட பகுதிக்கு மிக அண்மையில் தென்னிந்தியாவில் வாழ்ந்து வருகின்றனர். இதன் காரணமாக பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் தென்னிந்திய மன்னர்கள் இலங்கை மீது படையெடுத்து இலங்கையின் சில பகுதிகளை ஆட்சி செய்த வரலாறுகளும் உள்ளன.

இந்த வரலாற்று நிகழ்வுகள் இலங்கையின் பெரும்பான்மை இனமான சிங்கள மக்களிடையே ஒரு அச்சமாக காலாதிகாலமாக இருந்து வருகின்றது. இலங்கைத் தமிழர்கள் தாங்கள் இலங்கையில் சிறுபான்மை இனமாக இருப்பதால் பெரும்பான்மை சிங்கள இனத்தால் புறக்கணிக்கப்பட்டு ஒடுக்கப்படுகிறோம் எனக் கருதுகையில், சிங்கள இனமோ தாம் உலகில் தமிழர்களுடன் ஒப்பிடுகையில் மிகச் சிறுபான்மையினர் என்ற அச்சத்தில் இருக்கின்றனர்.

இந்த வரலாற்றுப் பின்புலத்தில்தான், இலங்கைத் தமிழர்களின் தலைமை இலங்கையின் வடக்கு கிழக்கு பகுதிகளில் தமிழர்களுக்கென்று தனிநாடு ஒன்று அமைப்பது என்ற தவறான புத்திசாதுரியமற்ற தீர்மானம் ஒன்றை 1976இல் எடுத்தது. அன்று இருந்த அந்த தலைமை தேர்தலில் வெற்றி பெறுவதற்கான ஒரு தந்திரோபாயமாக அந்தத் தீர்மானத்தை எடுத்திருந்தாலும், அந்தத் தீர்மானத்தால் உந்தப்பட்ட தமிழ் இளைஞர்கள் அமைப்புகளை உருவாக்கி அந்த இலக்கை அடைவதற்காக ஆயுதப் போராட்டத்தில் குதித்தனர்.

இந்தச் சந்தர்ப்பத்தில்தான் சிங்கள மக்களின் இன்றைய தலைமுறைக்கு இந்தியா மீது மீண்டும் சந்தேகம் ஏற்பட வழிபிறந்தது. அதாவது, ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ் இயக்கங்களுக்கும், இலங்கை அரசுக்கும் இடையே பொறுப்பு வாய்ந்த ஒரு மத்தியஸ்தராகச் செயல்படுவதற்குப் பதிலாக இந்திராகாந்தி தலைமையில் இருந்த அன்றைய இந்திய அரசு, தமிழ் இயக்கங்களுக்கு ஆயுதமும், பயிற்சியும், பின்தளமும் வழங்கி இலங்கையின் இறையாண்மையை கேள்விக்கு உள்படுத்தியது.

இந்தியாவின் இந்தச் செயல்பாடு இன்றுவரை இலங்கையின் பெரும்பான்மை இனமான சிங்கள மக்களின் மனதில் மாறாத வடுவாக இருக்கின்றது. அவர்களது கேள்வி இதுதான்.

அதாவது, இலங்கையில் 1971இல் ஆட்சியில் இருந்த சிறீமாவோ பண்டாரநாயக்கவின் அரசை ஜே.வி.பி. இயக்கம் ஆயுதக் கிளர்ச்சியின் மூலம் தூக்கியெறிய முயன்ற பொழுது அதை முறியடிக்க ஓடோடி வந்த இந்திராகாந்தியின் இதே இந்திய அரசு, தமிழ் இயக்கங்கள் இலங்கையை இரண்டாகப் பிரிப்பதற்கு ஆயுதம் ஏந்திய பொழுது அதை முறியடிக்க ஏன் ஓடி வரவில்லை என்பதாகும். எனவே, இந்தியா இன அடிப்படையில் – அதாவது தமிழர்களுக்கு ஆதரவாக – செயல்படுகிறது என்ற வலுவான சந்தேகம் சிங்கள மக்கள் மத்தியில் நீறுபூத்த நெருப்பாக இருக்கின்றது.

இத்தகைய ஒரு சூழ்நிலையில்தான், 1987இல் செய்யப்பட்ட இந்திய – இலங்கை ஒப்பந்தம் இலங்கை மீது வலிந்து திணிக்கப்பட்ட ஒரு ஒப்பந்தம் என்ற கருத்து சிங்கள அரசியல் வட்டாரங்களில் நிலவுகின்றது. இதை அந்த ஒப்பந்தம் செய்யப்பட்ட காலத்தில் நிகழ்ந்த சம்பவங்களில் இருந்து அறிந்து கொள்ளலாம்.

1987இல் இந்த ஒப்பந்தம் செய்யப்பட்ட பொழுது அன்றைய பிரதான எதிர்க்கட்சியான சிறீமாவோ பண்டாரநாயக்க தலைமையில் இருந்த சிறீலங்கா சுதந்திரக் கட்சி அதை எதிர்த்தது. அதேபோல ஜே.வி.பியும் அதை எதிர்த்ததுடன், அதை மையமாக வைத்துத்தான் தனது இரண்டாவது ஆயுதக் கிளர்ச்சியையும் ஆரம்பித்தது. இவை எல்லாவற்றையும் விட அந்த ஒப்பந்தத்தில் இலங்கை சார்பாக கையெழுத்திட்ட ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தன அரசின் பிரதம மந்திரி ஆர்.பிரேமதாசவும் வேறு சில அமைச்சர்களும் அதை எதிர்ப்பதற்காக ஒப்பந்த நிகழ்வில் பங்குபற்றாமல் அதைப் புறக்கணித்தனர். ஒப்பந்தத்தில் கையெழுத்திட வந்த அன்றைய இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி (இந்திராகாந்தியின் மகன்) மீது அணிவகுப்பு மரியாதை செலுத்த வந்த ஒரு இலங்கைக் கடற்படை வீரனால் தாக்குதல் முயற்சியும் மேற்கொள்ளப்பட்டது.

இதிலிருந்து தெரிவது என்னவெனில், இலங்கையின் பிரதான கட்சிகள் மூன்றும் இந்த ஒப்பந்தத்தை ஏற்கவில்லை என்பதையே. 1957இல் வெளித்தலையீடு எதுவுமின்றியே அன்றைய பிரதமர் எஸ்.டபிள்யு.ஆர்.டி.பண்டாரநாயக்க இலங்கை தமிழரசுக் கட்சி தலைவர் எஸ்.ஜே.வி.செல்வநாயகத்துடன் செய்த இனப்பிரச்சினை சம்பந்தமான ஒப்பந்தத்தை (பண்டா – செல்லா ஒப்பந்தம்) ஏற்காதவர்கள், இந்தியா என்ற சிங்கள மக்களை வரலாற்று ரீதியாக பயமுறுத்தி வைத்திருக்கும் ஒரு நாட்டால் ‘திணிக்கப்பட்ட’ ஒரு ஒப்பந்தத்தை ஏற்பார்கள் என நினைப்பது தவறாகும்.

அதனால்தான் இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்ட ஜே.ஆர.ஜெயவர்த்தனவினாலேயே ஒப்பந்தத்தை முழுமையாக அமுல்படுத்த முடியவில்லை. அவருக்குப் பின்னர் ஜனாதிபதியாக வந்த ஆர்.பிரேமதாச ஒப்பந்தத்தத்தை தூக்கி வீசியதுடன், இந்த ஒப்பந்தத்தால் தமிழர்களுக்கென உருவாக்கப்பட்ட வடக்கு கிழக்கு மாகாண சபையையும் கலைத்துவிட்டார். பின்னர் ஜனாதிபதிகளாக வந்த சந்திரிக குமாரதுங்க, மகிந்த ராஜபக்ச ஆகியோரும் ஒப்பந்தத்தை முழுமையாக நிறைவேற்றத் துணியவில்லை.

இந்தியாவால் ‘திணிக்கப்பட்ட’ ஒப்பந்தம் என சிங்கள மக்களால் கருதப்பட்ட ஒன்றை நடைமுறைப்படுத்துவதை சிங்கள மக்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் என்று கருதியதினாலோ என்னவோ, சந்திரிக தான் ஜனாதிபதியாக இருந்தபொழுது 2000 ஆண்டில் புதிய, பிராந்திரயங்களுக்கு அதிகாரங்கள் வழங்கும் தீர்வுத்திட்டம் ஒன்றை முன்வைத்தார். ஆனால் வழமைபோல ஐக்கிய தேசியக் கட்சியும், தமிழ் பிற்போக்குத் தலைமையும் சேர்ந்து அதை நிறைவேற்றவிடாமல் தடுத்துவிட்டார்கள்.

இந்திய – இலங்கை ஒப்பந்தத்தை முழுமையாக நிறைவேற்ற கடந்தகால அரசாங்கங்கள் தயங்கியதற்குக் காரணம், மாகாண சபைகளுக்கு பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களை வழங்குவதற்கு விரும்பாமையே. அவற்றை வழங்கினால் தமிழ் பிரதேச மாகாண சபைகள் பிரிவினைப்பாதையில் செல்ல ஆரம்பித்துவிடும் என்ற அச்சமே அவர்கள் அதற்குக் கூறும் காரணம். ஆனால் அவர்கள் அதை வெளிப்படையாகவும், தெளிவாகவும் கூறுவதில்லை.

ஆனால் அண்மையில் இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்ட புதிய ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச அதை தெளிவாகவும், வெளிப்படையாகவும் கூறிவிட்டார். இந்திய ஊடகங்கள் சிலவற்றுக்கு அவர் பேட்டியளித்தபோது, 13ஆவது திருத்தச் சட்டத்தில் மாகாண சபைகளுக்கு பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களை வழங்கும் சில ஏற்க முடியாத விடயங்கள் இருக்கின்றன என்றும், சிங்கள மக்களுக்கு சந்தேகம் வரக்கூடிய நடவடிக்கை எதனையும் செய்ய முடியாது என்றும் கூறிவிட்டார். அவர் இதை வெளிப்படையாகக் கூறியது நல்ல விடயமே. சரி, அப்படியானால் இலங்கையில் நிலவும் தேசிய இனப்பிரச்சினைக்கு அவர் முன்வைக்கப்போகும் தீர்வு என்ன?

வழமைபோல தீவிர சிங்கள இனவாத சக்திகள் சொல்லும் “இலங்கையில் இனப்பிரச்சினை என்று எதுவும் இலவை” என்று சொல்லப் போகிறாரா? அல்லது அவரது சகோதரர் மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்தபொழுது ‘வடக்கு கிழக்கை பொருளாதார ரீதியில் அபிவிருத்தி செய்தால் இனப்பிரச்சினை தானாகத் தீர்ந்துவிடும்’ எனக் கருதிச் செயல்படப் போகிறாரா? அல்லது ரணில் விக்கிரமசிங்க செய்தது போல “செய்கிறோம், செய்கிறோம்” என்று சொல்லிக் காலத்தைக் கடத்தி ஏமாற்றப் போகிறாரா? போகிறாரா? அல்லது சந்திரிக செய்தது போல புதிய அரசியல் அமைப்பு ஒன்றை வரைவதன் மூலம் இலங்கையின் தேசிய இனப்பிரச்சினைக்கு நமது நாட்டின் சொந்த முறையில் தீர்வுகாணப் போகின்றாரா?

தவிர்க்க முடியாத இந்தப் பிரச்சினைக்கு இவற்றில் ஏதாவது ஒன்றை அவர் செய்தே ஆக வேண்டும். சரியானதைச் செய்வாரா அல்லது ‘எல்லோரும் ஏறி விழுந்த குதிரையில் சக்கடத்தாரும் ஏறி விழுந்தார்’ என்ற கதை போல ஆகுமா என்பதற்கு அவரது நடவடிக்கைகள்தான் பதில் சொல்ல வேண்டும்.

Tags: