இந்தியாவின் முதல் கம்யூனிஸ்ட் சிங்கார வேலரைத் தெரியுமா உங்களுக்கு?!
–கார்த்திகா வாசுதேவன்
சிங்கார வேலர் யார் தெரியுமா?
ம. சிங்காரவேலர், தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு பொதுவுடமைவாதி, தொழிற்சங்கவாதி, விடுதலைப் போராட்ட வீரர் எனும் பல பரிமாணங்களைக் கொண்டவர். மயிலாப்பூர் சிங்காரவேலு எனும் வழங்குபெயரானது தமது பொதுவுடைமைச் சிந்தனைகளை தமிழ்நாட்டில் பரப்ப இவர் ஆற்றிய பணிகளுக்காக “சிந்தனைச் சிற்பி” சிங்காரவேலர் எனும் சிறப்புப் பெயராக மாறியது.
சிங்கார வேலரின் பிறப்பு…
சிங்காரவேலர் 1860 ஆம் ஆண்டு பிப்ரவரி 18 ஆம் தேதி பிறந்தார். இவரது குடும்பம் பிற்படுத்தப்பட்ட மீனவர் சமூகத்தைச் சேர்ந்தது. தனது பள்ளிக்கல்வியை முடித்த பின் மாநிலக் கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்தார். அதன்பின் சென்னை சட்டக்கல்லூரியில் சட்டம் பயின்று வழக்குரைஞர் ஆனார். ஆங்கிலம், தமிழ் மொழிகளைத் தவிர, இந்தி, உருது, பிரெஞ்சு, ஜெர்மன் ஆகிய மொழிகளிலும் அவருக்குப் பட்டறிவு இருந்தது. வெலிங்டன் சீமாட்டி கல்வி வளாகத்தில்தான் அவர் வீடு இருந்தது. அங்கு 20,000 நூல்களுக்கும் மேல் அவர் சேகரித்து வைத்திருந்தார். வசதியான குடும்பத்திலிருந்து வந்து அவர் வழக்கறிஞர் தொழில் செய்தபோதும் ஏழைகள் பற்றியே அவரது மனம் சிந்தித்துக்கொண்டிருந்தது.
அவர் இருந்த குடியிருப்பு வளாகத்தை அவரது கைதுக்குப் பிறகு அன்றைய ஆளுநர் வெலிங்டன் பிரபு கைப்பற்றி, அந்த இடத்தில் கல்வி நிலையத்தை நிறுவி, தனது மனைவியின் பெயரை வைத்துக்கொண்டார்.
சிங்காரவேலர் சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சபையில் வழக்கறிஞராக 1907 ஆம் ஆண்டு தன்னைப் பதிவுசெய்துகொண்டார். வழக்கறிஞர் தொழிலில் இறங்கிய சிங்காரவேலர் எந்தச் சூழ்நிலையிலும் அடக்குமுறையாளர்கள், பேராசைக்காரர்கள் ஆகியோரின் சார்பாக வழக்காடியதில்லை என்பது குறிப்பிடத் தக்கது. 1921 ஆம் ஆண்டில் ஒத்துழையாமை இயக்கத்தின்பால் ஈர்க்கப்பட்டு தனது வழக்கறிஞர் தொழிலை அவர் புறக்கணித்தார்.
கம்யூனிஸ ஆர்வம்…
1922 ல் பம்பாயைச் சேர்ந்த எஸ்.ஏ. டாங்கேயுடன் சிங்காரவேலருக்குத் தொடர்பு ஏற்பட்டது. 1922 ல் எம். என். ராய் வெளிப்படுத்திய திட்டத்தால் கவரப்பட்டு, அவருடன் தொடர்ந்து கடிதப் போக்குவரத்து வைத்துக்கொண்டிருந்தார். 1923 ல் அவர் ‘மே தினம்’ கொண்டாட இந்துஸ்தான் உழவர் உழைப்பாளர் கட்சி (லேபர் கிசான் பார்ட்டி ஆஃப் இந்துஸ்தான், எல்.கே.பி.எச்.) என்கிற கட்சியைப் புரட்சிகரத் திட்டத்துடன் ஆரம்பித்தார். ‘லேபர் கிசான் கெஜட்’ என்ற பெயரில் ஆங்கிலத்தில் வார இதழையும், ‘தொழிலாளன்’ என்ற தமிழ் வார இதழையும் ஆசிரியராக இருந்து பதிப்பித்து வெளியிட்டார். மார்ச் 1924 ல் ‘கான்பூர் போல்ஷ்விக் சதி வழக்கில்’ சிங்காரவேலர் குற்றம்சாட்டப்பட்டார். அவர் நீண்ட காலம் நோய்வாய்ப்பட்டிருந்ததால், அவருக்கு எதிரான நடவடிக்கை கைவிடப்பட்டது.
இவ்வழக்கே இந்திய மண்ணில் பொதுவுடைமை இயக்கம், மக்கள் இயக்கமாக மாற காரணமாக இருந்தது. கான்பூர் பத்திரிகையாளரான சத்திய பக்த் என்பவர் சட்டபூர்வமான ‘இந்திய பொதுவுடைமைக் கட்சி’ அமைக்கப்பட்டிருப்பதாக 1924, செப்டம்பர் மாதம் அறிவித்தார். இந்திய கம்யூனிஸ்ட்டுகளின் முதல் மாநாடு 1925-ம் ஆண்டு, டிசம்பர் 28 முதல் 30 வரை கான்பூரில் சென்னைக் கம்யூனிஸ்ட் எம். சிங்காரவேரின் தலைமையில் நடந்தது. 1927-ல் பிரிட்டிஷ் கம்யூனிஸ்ட்டும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஷாபூர்ஜி சக்லத்வாலா சென்னைக்கு வருகைதந்தபோது சிங்காரவேலர் கேட்டுக்கொண்டதால், சென்னை மாநகராட்சி அவருக்கு வரவேற்பு விழா ஏற்பாடு செய்தது. சக்லத்வாலா பேசிய கூட்டங்களில் அவரது உரையை சிங்காரவேலர் மொழிபெயர்த்தார்.
சிங்காரவேலர் ஆற்றிய சமூகப் பணிகள்…
- இந்தியாவில் முதன்முதலாக மே நாளைக் கொண்டாடியவர். (தொழிலாளர் நாள்)
- ரஷ்யாவின் கம்யூனிசப் புரட்சியால் கவரப்பட்டு, இந்தியாவின் முதல் தொழிற்சங்கமான சென்னை தொழிலாளர் சங்கத்தை 1918இல் தொடங்கினார். சென்னை பக்கிங்காம் கர்னாடிக் ஆலையில் தொடங்கப்பட்ட இச்சங்கத்தின் முதல் தலைவராகவும் பணியாற்றினார்.
- தொழிலாளர் நலனுக்காக மே 1, 1923 ல் தொழிலாளர் விவசாயக் கட்சியைத் தொடங்கினார்.
- 1925ல் இந்தியப் பொதுவுடைமைக் கட்சியைத் தொடங்கிய தலைவர்களுள் இவரும் ஒருவர்.
- இவர் சென்னை மாநகராட்சி உறுப்பினராக இருந்த போது பள்ளிகளில் மதிய உணவுத் திட்டத்தை வெற்றிகரமாக நடத்திக் காட்டினார். அதன் பின்னர் இத்திட்டம் இடையிலேயே கைவிடப்பட்டது. எனவே இவரே காமராஜர் தமிழகம் முழுவதும் தொடங்கிய மதிய உணவுத் திட்டத்தின் முன்னோடி ஆவார்.
- தமிழ் மொழிக்காகப் பெரிதும் பாடுபட்டார். தமிழை ஆட்சி மொழியாக்கும் கோரிக்கையை வலியுறுத்தினார்.
- பல நூல்களை எழுதியுள்ளார். மேலும் பல நூல்களை வேறு மொழிகளிலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்துள்ளார். இவர் எழுதிய சிந்தனை நூல்கள் மாஸ்கோ நகர் லெனின் நூலகத்தில் இடம் பெற்றுள்ளன. இவருடைய நூல்கள் தமிழக அரசால் நாட்டுடைமையாக்கப்பட்டுள்ளன.
- பெரியார் ஈ. வே. ராமசாமியின் சுயமரியாதை இயக்கம் 1930களின் ஆரம்பத்தில் பொதுவுடைமைக் கொள்கையின் பக்கம் சாய சிங்காரவேலரின் தூண்டுதல் காரணமாக இருந்தது.
சிங்கார வேலர் ஈடுபட்ட போராட்டங்கள்…
- சிங்காரவேலர் 1918ஆம் ஆண்டு மகாத்மா காந்தியைத் தன் தலைவராக ஏற்றார். இவர் ஆங்கிலேய ஆட்சியின் ரெளலட் சட்டத்தினை எதிர்த்தார்.
- மேலும் 1919ஆம் ஆண்டு நடைபெற்ற ஜாலியன் வாலாபாக் படுகொலை நிகழ்வைத் தொடர்ந்து காந்தி ஒத்துழையாமை இயக்கப் போராட்டத்திற்கு அனைத்து வழக்குரைஞர்களுக்கும் அழைப்பு விடுத்தார். அதன் காரணமாக இவர் தனது வழக்குரைஞர் ஆடையை எரித்தும் “இனி எப்போதும் வக்கீல் தொழில் பார்க்க மாட்டேன். என் மக்களுக்காகப் பாடுபடுவேன்!” என்று கூறியும் ஆங்கில அரசுக்குத் தனது எதிர்ப்பையும் காந்திக்குத் தனது ஆதரவையும் காட்டினார்.
- ஜாலியன் வாலாபாக் படுகொலை நிகழ்வைத் தொடர்ந்து ஏற்பட்ட பதற்ற நிலையைச் சமாளிக்கும் விதமாக இங்கிலாந்தின் வேல்ஸ் இளவரசர் இந்தியாவுக்கு வந்தார். அவரது வருகையை எதிர்க்கும் விதமாக சிங்காரவேலர் சென்னையில் பெரிய போராட்டம் ஒன்றை முன்னின்று நடத்தினார். இப்போராட்டம் ஆங்கிலேய அரசையே உலுக்கியது என்று அறிஞர் அண்ணா கூறியுள்ளார்.
- 1927 ல் பெங்காள் – நாக்பூர் ரயில்வே வேலைநிறுத்தத்தில் தீவிரமாக ஈடுபட்டார்.
- ஆகஸ்ட் 1927-ல் சாக்கோ மற்றும் வான்செட்டி ஆகியோரின் மரண தண்டனையை எதிர்த்துக் கூட்டங்களும் நடத்தினார்.
- 1928-ல் வரலாற்றுப் பெருமை வாய்ந்த தென்னிந்திய ரயில்வே வேலைநிறுத்தத்தை நடத்திய தலைவர்கள்மீது தொடரப்பட்ட சதி வழக்கில், அவருக்குப் 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. பின்னர், அந்தத் தண்டனை குறைக்கப்பட்டு ஆகஸ்ட் 1930-ல் விடுதலை செய்யப்பட்டார்.
சிங்கார வேலரின் சிறப்புகள்…
ம. சிங்காரவேலர் மீனவச் சமூகத்தைச் சேர்ந்தவராதலால், தமிழக அரசு மீனவர் வீட்டு வசதித் திட்டத்திற்கு இவரது பெயரைச் சூட்டியுள்ளது. மேலும் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சிங்காரவேலர் மாளிகை என்று பெயர் சூட்டியது. பேரறிஞர் அண்ணா இவரை, “வெட்டுக்கிளிகளும் பச்சோந்திகளும் புகழப்படும் ஒரு நேரத்தில் ஒரு புரட்சிப் புலியை மக்கள் மறந்தனர்!” என்று கூறியுள்ளார். “போர்க்குணம் மிகுந்தநல் செயல் முன்னோடி பொதுவுடைமைக் கேகுக அவன் பின்னாடி!” என்று பாவேந்தர் பாரதிதாசன் பாடியுள்ளார்
அரசு விழா…
சிங்காரவேலர் பிறந்து 150 வருடங்கள் நிறைவுறுவதை நினைவுகூரும் விதமாக தமிழக அரசு சிங்கார வேலர் பிறந்த நாளை அரசு விழாவாக கொண்டாடியது. அதன்படி ஃபிப்ரவரி 18, 2011 அன்று அனைத்து அரசு பள்ளிகளிலும் சிங்காரவேலர் பிறந்த நாள் விழா கொண்டாட ஆணை பிறப்பிக்கப்பட்டது.. அவரது சிந்தனைகள், வாழ்க்கை வரலாறு, ஆகியவற்றைக் குறித்து மாணவ மாணவிகளுக்கு கட்டுரைப் போட்டிகள், கருத்தரங்குகள் நடத்தப்பட்டன.
தேசபக்தரும், ‘சிந்தனைச் சிற்பி’ என்று போற்றப்பட்டவரும், தொழிற்சங்கவாதியும் மீனவர் வாழ்வில் விடிவெள்ளியாகத் திகழ்ந்து அவர்கள் வாழ்வை வளம்பெறச் செய்தவருமான ம.சிங்காரவேலர் 1946-ம் ஆண்டு ஃபிப்ரவரி 11ந் திகதி, 86-வது வயதில் மறைந்தார்
சிங்காரவேலரின் படைப்புகள்…
- உலகம் சுழன்று கொண்டே போகிறது
- கடவுளும் பிரபஞ்சமும்; 1934; குடிஅரசு புத்தகாலயம், ஈரோடு.
- கல்மழை உண்டாகும் விதம்
- கோழிமுட்டை வந்ததும் காணாமல் போனதும்
- சமதர்ம உபன்யாசம்: தமிழ்மாகாண சமதர்ம மாநாட்டின் சமதர்ம உபன்யாசம்; 1934; குடிஅரசு புத்தகாலயம், ஈரோடு. [9]
- சுயராஜ்யம் யாருக்கு? பாகம் 1
- சுயராஜ்யம் யாருக்கு? பாகம் 2
- சுயராஜ்யம் யாருக்கு? பாகம் 3: எது வேண்டும்? சுயராஜ்யமா? சமதர்ம ராஜ்யமா?; 1934; சமதர்ம பிரசுராலயம், 22 சவுத்பீச் ரோடு, திருவல்லிக்கேணி, சென்னை.[10]
- தத்துவஞான விஞ்ஞானக் குறிப்புகள் -பல பகுதிகள்
- தத்துவ, விஞ்ஞான, பொருளாதாரக் குறிப்புகள்
- நடத்தை என்ற நவீன ஆராய்ச்சி
- பகுத்தறிவென்றால் என்ன?
- பிரகிருத ஞானம்
- பிரபஞ்சத் தற்காலப் பிரச்சினை
- பிரபஞ்சத்தில் தற்காலப் பிரச்சினை
- பிரபஞ்சப் பிரச்சினைகள்
- பிரபஞ்சமும் நாமும்
- பேய், பிசாசு
- மனித உற்பவம்; 1934; சமதர்ம பிரசுராலயம், 22 சவுத்பீச் ரோடு, திருவல்லிக்கேணி, சென்னை.
- மனிதனும் பிரபஞ்சமும்
- மனோ ஆலய உலகங்கள்
- மெய்ஞ்ஞான முறையும் மூடநம்பிக்கையும் – பாகம் 1; 1934; பகுத்தறிவு நூற்பதிப்புக் கழகம், ஈரோடு.
- மெய்ஞ்ஞான முறையும் மூடநம்பிக்கையும் – பாகம் 2; 1934; பகுத்தறிவு நூற்பதிப்புக் கழகம், ஈரோடு.
- விஞ்ஞான முறையும் மூட நம்பிக்கையும்
- விஞ்ஞானமும் மூடநம்பிக்கையும்
- விஞ்ஞானத்தின் அவசியம்
- ஜோதிட ஆபாசம்
இன்று (2020.02.11 இல்) அவரது 74வது நினைவு தினம். இந்நாளில் அவரை நினைவு கூர்வது நமது கடமை. 2020.02.18 இல்அவரது 161 ஆவது பிறந்த தினம்.