இலங்கையுடனான உறவை வலுப்படுத்துவது அவசியம்!
இலங்கையுடனான இந்தியாவின் உறவு மீண்டும் புதுப்பிக்கப்படும், வலுப்படுத்தப்படும் என்ற நம்பிக்கையை இலங்கைப் பிரதமர் மகிந்த ராஜபக்சவின் இந்திய சுற்றுப்பயணம் ஏற்படுத்தியிருக்கிறது. புதிய அதிபராகப் பதவியேற்ற உடனேயே கோத்தபய ராஜபக்ச கடந்த நவம்பரில் இந்தியா வந்திருந்தார். இலங்கையுடனான உறவை வலுப்படுத்த வளர்ச்சிப் பணிகளில் ஈடுபடத் தயார் என்று இந்தியாவும் அறிவித்துள்ளது. கொழும்பில் கிழக்கு சரக்குப்பெட்டக முனையத்தை இந்தியா, ஜப்பான், இலங்கை மூன்றும் கூட்டாக நிறுவ உள்ளன. இலங்கைக்கு ரூ.2,870 கோடி கடன் வழங்குவது, வீடமைப்புத் திட்டங்களைப் பூர்த்திசெய்வது ஆகியவை தொடர்பாக இந்தியாவுடன் பேசியதாக மகிந்த தெரிவித்துள்ளார். இரு நாடுகளின் பாதுகாப்பு தொடர்பாக மகிந்தவும் பிரதமர் நரேந்திர மோடியும் விவாதித்துள்ளனர். இந்தியா எங்களுக்கு ‘நட்பு நாடு’ மட்டுமல்ல; வரலாறு, கலாச்சாரரீதியாக ‘உறவு நாடு’ என்று குறிப்பிட்டிருக்கிறார் மகிந்த.
இரு தலைவர்களுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை சுமுகமாக நடந்திருந்தாலும் இரு நாடுகளுக்கும் இடையில் இன்னமும் அவநம்பிக்கைகளும் கருத்து வேறுபாடுகளும் நிலவுகின்றன என்பதும் உண்மை. சமத்துவம், நீதி, சமாதானம், கண்ணியம் ஆகியவை தொடர்பாகத் தமிழர்களின் எதிர்பார்ப்பைப் புதிய அரசு பூர்த்திசெய்ய வேண்டும் என்று பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார். இரு நாடுகளுக்கும் இடையில் ஏற்பட்ட உடன்படிக்கையின் 13-வது கூறை அமல்படுத்துவதன் மூலம் இலங்கையின் வடக்கு, கிழக்கு மாநிலங்களுக்கு அதிகாரப் பகிர்வு வழங்குவதை மேற்கொள்ள முடியும் என்றார். இது தொடர்பாக மகிந்த எந்த உறுதிமொழியையும் அளிக்கவில்லை. பிறகு அளித்த பேட்டியில், 13ஏ பிரிவின்படியான தீர்வுக்குத் தயார், இலங்கையின் பெரும்பான்மைச் சமூகத்தவரால் ஏற்கப்பட முடியாத தீர்வுகளைத் தன்னால் நிறைவேற்ற முடியாது என்று கூறிவிட்டார்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்குச் சிறப்பு அந்தஸ்தை நீக்கிய பிறகு, இலங்கையின் வடக்கு, கிழக்கு மாநிலங்களுக்கு அப்படிப்பட்ட அந்தஸ்து தர வேண்டும் என்று இலங்கையை வலியுறுத்துவது நகைமுரணாகவே இருக்கும். திரிகோணமலையில் மின்சார உற்பத்தி, அடித்தளக் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவது தொடர்பாக ரணில் விக்ரமசிங்கே பிரதமராக இருந்தபோது இந்தியா செய்துகொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களையும் தன்னால் அமல்படுத்த முடியாது என்று கூறிவிட்டார் மகிந்த.
சுமார் ரூ.4,30,000 கோடி உள்நாட்டு, வெளிநாட்டுக் கடன்களில் இருக்கிறது இலங்கை. இதற்கு ஆண்டுதோறும் சுமார் ரூ.36,000 கோடி திருப்பித் தர வேண்டியிருக்கிறது. கடுமையான நிதிப் பற்றாக்குறையில் சிக்கியிருப்பதாலும், வளர்ச்சிப் பணிகளுக்கு நிதி தேவைப்படுவதாலும் மூன்று ஆண்டுகளுக்கு கடனையும் அசலையும் திருப்பிச் செலுத்த வேண்டாம் என்று அது கடன் பெற்றிருக்கும் நாடுகளில் ஒன்றான இந்தியா சலுகை காட்ட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்திருக்கிறார் மகிந்த. இந்தியா இந்தக் கோரிக்கையை உடனே ஏற்பது நல்லது.
கடந்த காலத்தில் அம்பாந்தோட்டை துறைமுகத்தை மேம்படுத்தும் பணியை மேற்கொள்ளுமாறு முதலில் இந்தியாவைத்தான் இலங்கை அணுகியது. இந்தியா பதிலேதும் கூறாமல் தாமதப்படுத்தியதால், அந்த வாய்ப்பை சீனாவுக்கு வழங்கியது இலங்கை. இலங்கையை மீண்டும் சீனாவை நாடும்படி விட்டுவிடக் கூடாது.
-இந்து தமிழ் தலையங்கம்
2020.02.19