வாசிக்கும் சமூகமே வளரும்!

த. ஸ்டாலின் குணசேகரன்

Afbeeldingsresultaat voor reading is essential

லக வரலாற்றை வரிதவறாமல் ஆழமாக வாசித்துப் பார்த்தால் மனித அறிவும் ஆற்றலும்தான் உலகை வளர்த்துள்ளன என்பது தெளிவாகிறது. அத்தகைய வீரியம் மிக்க அறிவுக்கு அடித்தளமிடுபவை புத்தகங்கள் தான்.

ராபர்ட் பி. டான்ஸ் என்ற அமெரிக்க எழுத்தாளர் ‘உலகை மாற்றிய புத்தகங்கள்’ (BOOKS THAT CHANGED THE WORLD) என்ற நூலை எழுதினார். அமெரிக்க நூலகம் ஒன்றில் பணிசெய்யத் தொடங்கிய இவர் வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் புத்தக வாசிப்பில் மூழ்கினார்.

வாசிப்பின் மூலம் அறிவை விசாலப்படுத்திக் கொண்ட இவர் பல சிறந்த நூல்களை எழுதினார். நூலகப் பணியிலும் தனது ஈடுபாட்டுடன் கூடிய உழைப்பால் பல்கலைக்கழகங்களின் நூலக இயக்குனராகப் பதவி உயர்வு பெற்றார். இவர் எழுதிய பல நூல்களில் ஒன்றுதான் ‘உலகை மாற்றிய புத்தகங்கள்’ என்பது. இந்நூல் முதல் பதிப்பாக 1956-இல் வெளியானது.

இதன் இரண்டாம் பதிப்பு 1978-இல் வெளிவந்தது. இது, சுமார் ஐந்து லட்சம் பிரதிகளுக்கும் மேல் விற்றுத்தீர்ந்த உலகப் பிரசித்தி பெற்றநூலாகும். இதன் தமிழ் மொழிபெயர்ப்பு நூலும் பல்லாண்டுகளுக்கு முன்பே வெளிவந்துவிட்டது.

அப்போதே புத்தகங்கள் எப்படி உலகின் போக்கை மாற்றியமைத்துள்ளன என்பதை அழுத்தமான ஆதாரங்களோடு இந்நூல் விளக்கியுள்ளது. உலக உருண்டையின் நெம்பு கோல்களாக இருந்த பதினாறு அரிய புத்தகங்களைப் பற்றியான தனித்தனி ஆய்வுக் கட்டுரைகளை உள்ளடக்கியது இந்நூல்.

இந்நூலின் முன்னுரையில் ‘வெடிமருந்தின் வீரியம் வாய்ந்த இந்தப் பதினாறு புத்தகங்களையும் திறனாய்வு செய்கிறபோது புத்தகத்தைக் காலம் உருவாக்கியதா காலத்தைப் புத்தகம் உருவாக்கியதா என்ற கேள்வி எழுகிறது’ என்று நூலாசிரியர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ‘மெதுவாக எரிந்து வெடியைக் கிளப்பும் திரிபோல சில புத்தகங்கள், வெளியான சில ஆண்டுகளுக்குப் பிறகு முழுச் செல்வாக்குடன் விளங்கியதுண்டு. ஆடம் ஸ்மித், கார்ல் மார்க்ஸ் ஆகியோரின் நூல்கள் இதற்குப் பொருத்தமான உதாரணங்களாகும். தமது நூல்களின் முக்கியத்துவத்தை உலகம் உணரத் தொடங்கியபோது அவர்கள் உயிருடன் இருக்கவில்லை’ என்று தனது முன்னுரையில் தெரிவித்துள்ளார்.

சமூக மாற்றத்திற்கும் முன்னேற்றதிற்கும் சில புத்தகங்கள் வலுவான அடித்தளமிட்டுள்ளன என்பதற்கான ஆதாரங்கள் இவைபோல் ஏராளமாக உள்ளன.

சில மாவீரர்களின் ஆளுமைக்கு புத்தகங்கள் மூலகாரணமாக இருந்திருகின்றன. உலக வரலாற்றில் முக்கியமான ஒரு இடத்தைப் பிடித்தவர் மாவீரன் அலெக்சாண்டர். வெற்றிமேல் வெற்றி பெற்றுக் கொண்டுவந்த அலெக்சாண்டரைப் பாராட்டி பாரசீக மன்னன் ஒரு அழகான வேலைப்பாடுகளுடன் கூடிய தங்கப் பேழையைப் பரிசளித்தான்.

பேழையைப் பெற்றுக் கொண்ட அலெக்சாண்டர் தன் நண்பர்களிடம் ‘இவ்வளவு அழகான தங்கப் பேழையில் எந்தப் பொருளை வைத்தால் பொருத்தமாக இருக்கும்’ என்று கேட்டார். நண்பர்கள் யோசித்து யோசித்து ஒவ்வொரு பொருளாகச் சொன்னார்கள்.

கடைசியில் அலெக்சாண்டர் ‘இந்தப் பேழையில் வைப்பதற்கு மிகவும் பொருத்தமானதும் தகுதியானதும் ஒன்றே ஒன்று தான் அது ஹோமர் எழுதிய ‘எலியட்’ எனும் காப்பியநூல்’ என்று சொல்லி முடித்தான்.

அவ்வாறு சொன்னது மட்டுமல்ல – அலெக்சாண்டர் கடைசியாக இறக்கும் தறுவாயில் அவனது தலைக்குப் பக்கத்தில் அவன் வைத்திருந்தது ‘எலியட்’ நூல்தான் என்பதை அறியும்போது புத்தகத்தின் வலிமையைப் புரிந்துகொள்ள முடிகிறது.

பொதுவுடமை இயக்கத் தலைவர்கள் சிலர் மீது திருநெல்வேலி காவல்துறையினர் 1950-இல் ஒரு சதிவழக்குத் தொடுத்தனர். காவல்துறையினரின் கடுமையான முயற்சிக்குப் பிறகு சிலர் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டனர். பல முக்கியத் தலைவர்களைக் கைதுசெய்ய எவ்வளவோ முயன்றும் இயலவில்லை.

இவ்வழக்கு தொடர்பாக ஆர்.எஸ். ஜேக்கப் என்ற ஆசிரியர் அவர் பணியாற்றிய பள்ளியிலேயே மாணவர்கள் முன்னிலையில் கைது செய்யப்பட்டார். அவர் அக்கிராமத்தின் கிறித்துவ தேவாலயப் பாரதியாராகவும் விளங்கினார். அவருக்கு அப்போது வயது 24 மட்டுமே.

கைதுசெய்யப்பட்டு விசாரணைக் கைதியாகவே மூன்றரையாண்டுகள் அடைக்கப்பட்டிருந்த இவர் காவல்துறையினரின் கடுமையான சித்ரவதைகளுக்கு ஆட்பட்டார். காவல் நிலையத்தின் ஒரு அறையில் நரம்புகளால் செய்யப்பட்ட நீளமான சவுக்கால் காவலர்கள் தங்களது முழுசக்தியைத் திரட்டி சிறிய இடைவெளி விட்டுவிட்டு அடித்தனர்.

பெயரளவிற்கு மட்டும் ஆடையணிய அனுமதிக்கப்பட்டிருந்த ஜேக்கப்பை ஓங்கி அடித்தபோது உடலின் சதைபிய்ந்து அந்தச்சவுக்கின் நுணியில் ஒட்டிக்கொண்டது. சவுக்கை வேகமாக எடுத்தபோது பிய்ந்துபோன சதைப்பகுதி சுவற்றில்பட்டு ஒட்டிக் கொண்டது. அதிலிருந்து சுவற்றில் வடியும் ரத்தத்தை அடிபட்டவரையே காவல்துறையினர் பார்க்க வைத்தனர்.

மேசையின் மீது இரண்டு கால்களையும் நேராக நீட்டி அமரவைத்து முழங்காலுக்குக்கீழ் பாதம் வரையிலுள்ள மேல்பகுதியில் இரும்புபோல் உள்ள உருட்டுத் தடியை வைத்து அழுத்தி உருட்டிக்கொண்டே அந்தத் தலைவர் எங்கே பதுங்கியிருக்கிறார், இந்தத் தலைவர் எங்கே ஒளிந்திருக்கிறார் என்று போலீஸார் கேள்விகள் கேட்டனர்.

ஆர்.எஸ். ஜேக்கப்

புள்ளப்பூச்சிகளைப் பிடித்துவந்து தொப்புள் பகுதியில்வைத்து துணியால் கட்டிவிட்டனர். புள்ளப்பூச்சி கிடைக்கிற துவாரத்திற்குள் குடைந்து செல்லத் தீவிரமாக முயற்சிக்கும் இயல்புள்ளது. இது எத்தகைய சித்ரவதையாக இருந்திருக்கும் என்பதை இப்போது கற்பனைகூட செய்து பார்க்க முடியாது.

அத்தனை துன்பதுயரங்களையும் தாங்கிக் கொண்டு ‘தலைவர்கள் இருக்கிற இடங்கள் எனக்குத் தெரியாது’ என்ற ஒரே பதிலைத்தான் திரும்பத்திரும்பச் சொல்லியிருக்கிறார் ஜேக்கப்.

120 புத்தங்களை எழுதிமுடித்து தற்போது 94 வயதைத் தாண்டிய நிலையில் நம்மோடு வாழ்ந்து கொண்டிருக்கும் எழுத்தாளர் ஆர்.எஸ். ஜேக்கப்தான் அக்காலத்தில் அத்தகைய சித்ரவதையை எதிர்கொண்ட இளைஞன்.

சமீபத்தில் ஈரோடு புத்தகத் திருவிழாவில் அவருக்கு நடத்தப்பட்ட பாராட்டு நிகழ்வின்போது அவரிடம் ‘ஐயா, நீங்கள் தெரியாது, தெரியாது என்று காவல்துறையிடம் கிளிப்பிள்ளையப்போல் பதில் சொன்னீர்களே உண்மையிலேயே உங்களுக்குத் தெரியாதா’ என்ற ஒருகேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு அவர் ‘எனக்கு எப்படித் தெரியாமல் இருக்கும்? நான்தான் அத்தனை தலைவர்களுக்கும் ரகசியமாக தபால் கொண்டுபோய் கொடுக்கும் நபராக அப்போது செயல்பட்டேன். காவல்துறையினர் எப்படியோ அதை மோப்பம்பிடித்துவிட்டனர். என் மூலமாக அவர்கள் பல முக்கியத் தலைவர்களைக் கைது செய்துவிடலாம் என்று உறுதியாக நம்பினர்’ என்று பதிலளித்தார்.

‘பிறகு எப்படி அத்தனை கொடுமைகளையும் தாங்கிக் கொண்டு தெரியாது என்று பதிலளித்தீர்கள்’ என்று அவரிடம் கேட்கப்பட்டது.

‘அது வேறொன்றுமில்லை. அப்போது நான் கட்டுறுதி கொண்ட துணிச்சலான இளைஞன் என்பது உண்மைதான். நான் அத்தனையும் தாங்கிக் கொண்டதற்கு அதுமட்டும் காரணமல்ல. கைது செய்யப்படுவதற்கு சில நாட்கள் முன்புதான் ஜெர்மன் பத்திரிகையாளன் ஜூலியஸ் பூசிக் எழுதிய  NOTES FROM THE GALLOWS என்ற ஆங்கிலப் புத்தகத்தைத் திரும்பத் திரும்ப வாசித்திருந்தேன்.

சாகவே நேர்ந்தாலும் சக போராட்ட வீரர்களைக் காட்டிக் கொடுக்கக் கூடாது என்ற கருத்தை என்னுள் ஆழப்பதித்தது அந்தப் புத்தகம்தான். நான் அப்போதே பல புத்தகங்களைப் படித்துள்ளேன். எனது மன உறுதிக்கு புத்தக வாசிப்புதான் மூலகாரணம் என்றாலும் அந்தப் புத்தகம் என்னுள் அப்படி ஒரு வலுவான தாக்கத்தை உண்டாக்கியிருந்தது’ என்று பதிலளித்தார்.

ஜெர்மன் சிறையில் ஹிட்லரால் தூக்கிலிடப்பட்ட எழுத்தாளரும் பத்திரிகையாளருமான ஜூலியஸ் பூசிக் தூக்குத்தேதி நிர்ணயக்கப்பட்ட பிறகு சிறைக்குள்ளிருந்தவாறே ரகசியமாக எழுதி ஒரு நம்பகமான வார்டர் மூலம் வெளியே கொடுத்தனுப்பட்ட காகிதங்கள்தான் NOTES FROM THE GALLOWS என்ற புகழ்மிக்க புத்தகமாகப் பின்னர் வெளிவந்தது.

பூசிக் இறந்த பிறகு இந்நூல் அவரது மனைவியால் அச்சிட்டு வெளியிடப்பட்டது. இது தமிழில் ‘தூக்கு மேடைக்குறிப்புகள்’ என்ற தலைப்பில் அப்போதே வெளியாகி விட்டது.

எழுத்தாளர் ஆர். எஸ். ஜேக்கப் சிறையிலிருந்து வெளியேவந்த பிறகு தனது சிறை அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டு ‘வாத்தியார்’, ‘மரணவாயில்’ என்ற இரண்டு நாவல்களை எழுதினார். இந்த நாவல்கள் இரண்டும் சிறை இலக்கியங்களாகத் திகழ்கின்றன.

புத்தகவாசிப்பு சமூகத்திற்குப் புத்தெழுச்சியையும் தனிமனிதர் களுக்குப் புத்துணர்ச்சியையும் ஏற்படுத்துவதாகும். வாசிப்புக்கு வசப்பட்ட சமூகம் வளர்ச்சியின் திசையில் முன்னோக்கி நகரும்.

வாசிக்கும் மனிதர்கள் சமூகத்தின் வளர்ச்சி பற்றி யோசிக்கும் மனிதர்களாகவும் விளங்குவர் என்பதில் ஐயமில்லை!

Tags: