ஐக்கிய தேசியக் கட்சியின் உள் முரண்பாட்டின் வரலாறு
-கே.மாணிக்கவாசகர்

ஐக்கிய தேசியக் கட்சிக்குள் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் இடையில் நிகழ்ந்துவரும் மோதல் தீவிரமடைந்து வருவதைப்பற்றிப் பற்றிப் பலர் பேசுவதையும், கட்சிக்கு விசுவாசமானவர்கள் அதையிட்டுக் கவலையடைவதையும் காண முடிகிறது. ஆனால் ஐ.தே.கவைப் பொறுத்தவரை இது ஒன்றும் புதுமையான விடயமல்ல.
ஐ.தே.கவின் உள் முரண்பாட்டிற்கு ஏறத்தாழ 50 வருட வரலாறு உண்டு.
இலங்கை பிரித்தானியரிடமிருந்து 1948 பெப்ருவரி 04ஆம் திகதி சுதந்திரமடைந்த பொழுது ஐ.தே.கவே இலங்கையின் ஆட்சிப் பொறுப்பில் இருந்தது. அப்பொழுது அதன் தலைவர் டி.எஸ்.சேனநாயக்க. அவரே சுதந்திர இலங்கையின் முதல் பிரதமராகவும் இருந்தார்.
டி.எஸ்.சேனநாயக்க 1952இல் காலமானார். அவர் காமானதைத் தொடர்ந்து கட்சியின் தலைமைப் பதவிக்கும், பிரதமர் பதவிக்கும் வருவதற்குப் பலர் முயன்றனர். அவர்களில் ஒருவர் ஜே.ஆர்.ஜெயவர்த்தன. பிரித்தமானியர் காலத்தில் அமைக்கப்பட்ட இலங்கைச் சட்டப்பேரவை உறுப்பினராக இருந்து வந்த ஜே.ஆர். எப்பொழுதும் ஐ.தே.கவின் தலைமைப் பதவியில் குறியாக இருந்து வந்துள்ளார்.
குள்ளத்தனமும், அரசியல் தூரநோக்கும் கொண்ட ஜே.ஆர்., மற்றைய அரசியல் தலைவர்களை விட முன்யோசனையுடன் நடந்து வந்த ஒருவராவார். அதில் ஒன்று ஆரம்பம் முதலே இரண்டாம் உலக யுத்தத்தின் பின் உலகின் முதல் தர ஏகாதிபத்திய வல்லரசாக வளர்ந்து வந்த அமெரிக்காவின் முதல்தர விசுவாசியாக ஜே.ஆர். தன்னை மாற்றிக்கொண்டது. இரண்டாவது விடயம் சிங்களப் பேரினவாத தேசியம் மேலெழும் என்பதை உணர்ந்து சட்டசபைக் காலத்திலேயே இலங்கையின் ஆட்சி மொழியாக சிங்களம் மட்டும் இருக்க வேண்டும் என ஜே.ஆர். கொண்டுவந்த பிரேரணை.
ஆனால் இந்த இரண்டு ஆயுதங்களும் ஜே.ஆருக்கு கைகொடுக்கவில்லை. டி.எஸ். சேனநாயக்கவின் மறைவுக்குப் பின்னர் அவரது மகன் டட்லி சேனநாயக்க கட்சியின் தலைவராகவும் நாட்டின் பிரதமராகவும் பதவி ஏற்றார். இது தற்செயலாக நடைபெற்ற ஒன்றல்ல. டட்லி திட்டமிட்டே தந்தையார் டி.எஸ்சினால் இந்தப் பதவிகளுக்கு வளர்க்கப்பட்டார். இதற்குப் பின்னால் சுவாரசியமான கதையொன்று உண்டு.

காலனித்துவ இலங்கையில் சிங்களவர் – தமிழர் முரண்பாடு பெரிதாகத் தலைதூக்கியிருக்கவில்லை. அதுமட்டுமில்லாமல் பிரித்தானியர் இன முரண்பாட்டை வளர்ப்பதற்காகத் திட்டமிட்டுச் செய்த செயற்பாடுகளால் தமிழ் பிரதேசங்களில், குறிப்பாக யாழ்ப்பாணத்தில் செய்த அதிக கல்வி வாய்ப்புகளால் தமிழர்கள் பலர் அரசாங்க உயர் பதவிகளில் கோலோச்சியும் வந்தனர். அதன் காரணமாக தமிழ் – சிங்கள மேட்டுக்குடியினரிடையே நெருக்கமான உறவுகளும் நிலவி வந்தன.
இந்தச் சூழ்நிலையில் டட்லி சேனநாயக்கவுக்கும் பிரசித்தமான தமிழ் குடும்பம் ஒன்றைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் காதல் ஏற்பட்டிருந்தது. இது தந்தை டி.எஸ்சுக்கு மிகுந்த கவலையை அளித்தது. இந்தக் காதலைத் துண்டிக்க நினைத்த டி.எஸ். இறுதி ஆயுதமாக மகன் டட்லியை அழைத்து, ‘உனக்கு தமிழ் பொம்பிளை வேண்டுமா அல்லது இலங்கையின் பிரதமர் பதவி வேண்டுமா? இரண்டையும் ஏககாலத்தில் நீ அனுபவிக்க முடியாது. எனவே எது வேண்டும் என்பதை விரைவில் முடிவு செய்து கொள்’ என்று சொன்னதாகவும், டட்லி பிரதமர் பதவிக்காக தமிழ் காதலியைக் கைவிட்டதாகவும் ஒரு கதை உண்டு.
இந்த இடத்தில் ஒரு விடயத்தைக் குறிப்பிடுவது அவசியமானது. அதாவது, சிறீலங்கா சுதந்திரக் கட்சிதான் இலங்கையில் சிங்கள இனவாதத்தைத் தூண்டியது என்றும், பண்டாரநாயக்கதான் தனிச்சிங்களச் சட்டத்தின் பிதாமகர் என்றும், ராஜபக்ச சகோதரர்கள்தான் குடும்ப ஆட்சியைக் கொண்டு வந்தவர்கள் என்றும் சொல்பவர்களுக்கு ஐ.தே.கவின் ஆரம்பகால வரலாற்றை அறிந்தால் உண்மை விளங்கும்.
தந்தை டி.எஸ்சின் மறைவுக்குப் பின்னர் குடும்ப வாரிசாக ஆட்சிப் பொறுப்பை ஏற்ற டட்லியின் அரசில் ஜே.ஆர். நிதியமைச்சராக நியமிக்கப்பட்டார். அப்பொழுது உலக ரீதியாக ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால் இலங்கையிலும் பெரும் நெருக்கடி ஏற்பட்டது. அதைச் சமாளிக்க முடியாது டட்லி அரசு திணறியது. அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் இருந்த உலக வங்கி பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க சில வழிவகைகளைக் கூறியது. அதை அமெரிக்க அடிவருடியான நிதியமைச்சர் ஜே.ஆர். பணிவுடன் ஏற்று சில நடவடிக்கைகளை எடுத்தார்.
அதன்படி, மக்களுக்கு இரண்டாம் உலக யுத்த காலத்தில் இருந்து வழங்கப்பட்டு வந்த இலவச அரிசி நிறுத்தப்பட்டது. போக்குவரத்து மற்றும் தபால் தந்திக் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டன. பாடசாலைப் பிள்ளைகளுக்கு இலவச மதிய போசனமாக வழங்கப்பட்டு வந்த பணிஸ் நிறுத்தப்பட்டது. இன்னும் பல மக்களுக்கான சமூக நலத்திட்டங்கள் நிறுத்தப்பட்டன.

இந்த நடவடிக்கைகள் மக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதற்கு எதிராக இடதுசாரிக் கட்சிகள் 1953 ஓகஸ்ட் 12இல் மாபெரும் ஹர்த்தால் போராட்டம் ஒன்றுக்கு அழைப்பு விடுத்தன. அதன் காரணமாக டட்லியின் அரசு செயற்பட முடியாத நிலை தோன்றியது. அவர் பிரதமர் பதவியில் இருந்து விலகினார். தான் இனிமேல் ஒருபோதும் அரசியலுக்கு வரப்போவதில்லை என அறிவித்தார். இந்தக் கட்டத்தில் ஜே.ஆர். அடுத்த பிரதமராகப் பதவியேற்பதற்குத் தயாராக இருந்தார். ஆனால் ஜே.ஆரின் கனவு பலிக்கவில்லை. சேர்.ஜோன் கொத்தலாவல பிரதமரானார். ஆனாலும் ஜே.ஆர்தான் டட்லி இல்லாத ஐ.தே.கவைக் கட்டிக்காத்தார்.
அரசியலுக்கு இனிமேல் வரமாட்டேன் எனக்கூறிச் சென்ற டட்லி 1965 பொதுத்தேர்தலில் மீண்டும் போட்டியிட்டு பெரும்பான்மை பலம் பெறாததால் ஏழு கட்சி கூட்டணி அரசொன்றை நிறுவி அற்குத் தலைமைதாங்கினார். இந்தச் சமயத்திலும் ஜே.ஆர். பிரதமராக வருவதற்கு ஆசைப்பட்டார். ஆனால் டட்லி அதற்கு இடம் கொடுக்கவில்லை. அதனால் டட்லி அரசில் வழமையான அமைச்சர் பதவி எதனையும் ஏற்க மறுத்தார் ஜே.ஆர். அதனால் அமெரிக்காவில் இருப்பது போன்று இராஜாங்க அமைச்சர் என்ற புதிய அமைச்சு பதவி ஒன்று உருவாக்கப்பட்டு ஜே.ஆருக்கு வழங்கப்பட்டது.
அதன் பின்னரும் ஜே.ஆருக்கும் டட்லிக்கும் இடையிலான மோதல் தீர்ந்தபாடில்லை. 1970 – 77 காலகட்டத்தில் சிறீமாவோ பண்டாரநாயக்க தலைமையிலான அரசு ஆட்சியில் இருந்தது. இந்தக் காலகட்டத்தில் ஒருமுறை டட்லி சேனநாயக்க கூட்டிய ஐ.தே.க. செயற்குழுக் கூட்டம் செல்லாது என அறிவிக்கக் கோரி ஜே.ஆர். நீதிமன்றத்தில் வழக்குக்கூடத் தொடுத்தார்.
1973 ஏப்ரல் 13ஆம் திகதி டட்லி சேனநாயக்க காலமானார். அதன் பின்னரே ஜே.ஆரால் ஐக்கிய தேசியக் கட்சித் தலைவராக வர முடிந்தது. இந்தப் பதவியை அடைவதற்கு 20 வருடங்களுககு மேல் ஜே.ஆர். காத்திருக்க வேண்டி இருந்தது. டட்லி திருமணம் செய்யாதபடியால் அவருக்கு வாரிசுகள் என்று எவரும் இல்லாத நிலையும் ஜே.ஆர். தலைவராக வருவதற்கு சாதகமாக அமைந்துவிட்டது.
சிறீமாவோ பண்டாரநாயக்க ஆட்சிக்காலத்தில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஜே.ஆர். அரசுக்கு எதிராக சத்தியாக்கிரகம் உட்பட பல போராட்டங்களை நடத்தி 1977 பொதுத்தேர்தலில் ஆறில் ஐந்து பெரும்பான்மையைப் பெற்று ஆட்சியைக் கைப்பற்றினார். முதலில் பிரதமராகத் தெரிவான அவர், பின்னர் 1978இல் புதிய அரசியல் அமைப்பொன்றைக் கொண்டு வந்து இலங்கையின் முதலாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாகத் தன்னை முடி சூடிக்கொண்டார். இந்தச் சந்தர்ப்பத்தில் ஆணைப் பெண்ணாக்குவதைத் தவிர மற்றெல்லா சாதனைகளையும் தனது நிறைவேற்று அதிகாரத்தால்; செய்ய முடியும் என பெருமையும் பேசிக்கொண்டார்.

ஜே.ஆரின் 13 வருட ஆட்சிக்காலத்தில் சேனநாயக்க குடும்ப வாரிசாக டட்லியின் பெறாமகன் ருக்மன் சேனநாயக்க (எம்.பி) தலையெடுக்க முயன்றார். அவரது முயற்சிகள் எல்லாவற்றையும் ஜே.ஆர். முளையிலேயே கிள்ளி எறிந்துவிட்டார்.
ஆனால் ஜே.ஆருக்குப் போட்டி வேறு வடிவத்தில் வந்தது. ஜே.ஆர். அரசில் பிரதமராக நியமிக்கப்பட்டிருந்த ஆர்.பிரேமதாச ஜே.ஆருக்கு ஒரு சவாலாக மேலெழுந்து வரத் தொடங்கினார். அதற்கு ஏற்ற வகையில் கட்சிக்குள்ளும் மக்கள் மத்தியிலும் பிரேமதாச தனது செல்வாக்கைப் படிப்படியாகக் கட்டியெழுப்பி வந்தார்.
ஜே.ஆருக்கு இருந்த ஒரேயொரு மகனான ரவி ஜெயவர்த்தன ஒரு தமிழ் பெண்ணைத் திருமணம் செய்திருந்தபடியாலும், அரசியலில் அக்கறையற்று இருந்ததாலும், அவரை தனது வாரிசாக ஜே.ஆரால் வளர்த்து எடுக்க முடியாமல் போய்விட்டது. இருந்தாலும் ஐ.தே.க. தலைமை தமது குடும்பத்தை விட்டு கைநழுவிப் போய்விடக்கூடாது என்பதற்காக தனது சொந்த மருமகனான ரணில் விக்கிரமசிங்கவை தனது அரசில் ஒரு அமைச்சராக்கி தனது வாரிசாக வளர்த்தெடுக்க முயன்றார். ஆனால் சிரேஸ்ட நிலை, அனுபவம், ஆற்றல் என்பன நிறைந்த பிரேமதாசவை பின்தள்ளி ரணிலால் முன்னுக்கு வர முடியவில்லை.
பிரேமதாசவுக்கு ஐ.தே.க. தலைவராக வருவதற்கு இன்னொரு அனுகூலமும் இருந்தது. ஜே.ஆர். அரசு தமிழ் ஆயுதப்போராட்ட இயக்கங்களுடன் மேற்கொண்டு வந்த யுதத்தின் விளைவாக 1987இல் இந்தியாவுடன் ஒரு சமாதான ஒப்பந்தம் செய்ய வேண்டி ஏற்பட்டது. இந்த ஒப்பந்தத்தை சிங்கள தேசியவாத சக்திகள் கடுமையாக எதிர்த்தன. இந்தச் சந்தர்ப்பத்தை நன்கு பயன்படுத்திய பிரேமதாச தானும் ஒப்பந்தத்தை எதிர்த்து சிங்கள மக்களின் கதாநாயகனாக மாறிக்கொண்டார்.

இந்த நிலைமை ஜே.ஆரை மேலும் தனிமைப்படுத்தியது. அதன் காரணமாக இரு தடவைகளுக்கு மேல் ஜனாதிபதியாக இருக்க முடியாது எனத் தானே வகுத்த சட்டத்தை ஏற்று ஜே.ஆர். பிரேமதாசவுக்கு கட்சித் தலைவர் பதவியையும், ஜனாதிபதிப் பதவியையும் வழங்கி அரசியலிலிருந்து விடைபெற வேண்டியதாயிற்று. அதன் மூலம் பிரேமதாச தனிப்பெரும் தலைவராக உருவானார். இனிமேல் பல வருடங்களுக்கு அவரது அதிகாரத்தை கட்சிக்குள்ளும் நாட்டிலேயும் யாரும் அசைக்க முடியாது என்ற நிலை உருவானது. ஆனால் விதி வேறு வடிவத்தில் வந்து, அதாவது புலிகளின் வடிவத்தில் வந்து அவரது உயிரைப் பறித்துச் சென்றது.
பிரேமதாசவை புலிகள் கொலை செய்யாவிடின் அவரது மகன் சஜித் பிரேமதாச அதிகாரத்துக்காக ரணிலுடன் இன்று மல்லுக்கட்ட வேண்டிய நிலை தோன்றியிருக்காது. ஏனெனில் பிரேமதாச உயிருடன் இருந்திருந்தால் தனக்கு எதிராக வரக்கூடிய எல்லா கட்சிகளையும் அழித்து தனது மகன் சஜித்துக்கு எப்பொழுதோ முடி சூடியிருப்பார்.
அதற்கொரு உதாரணம், ஜே.ஆர். ஜனாதிபதிப் பதவியில் இருந்து ஓய்வுபெற்ற பின்னர் பதவிக்கு வந்த பிரேமதாசவின் அமைச்சரவையில் ஜே.ஆருக்கு விசுவாசமான லலித் அத்துலத்முதலியும், காமினி திசாநாயக்கவும் தொடர்ந்தும் அமைச்சர்களாகப் பதவி வகித்தனர். ஆனால் அவர்களுக்கும் பிரேமதாசவுக்கும் இடையே முரண்பாடுகள் தீவிரமடைந்து கொண்டிருந்தது. அதற்கொரு காரணம் ஜே.ஆருக்குப் பின்னர் ஜனாதிபதித் தேர்தலில் லலித்தும் போட்டியிட விரும்பியிருந்ததும் அந்த வாய்ப்பு பிரேமதாச மூலம் கைநழுவிப்போனதும்தான். ஜே.ஆரும் அதை விரும்பியிருந்த போதிலும் பிரேமதாசவை அவரால் புறந்தள்ள முடியாமல் போய்விட்டது.
இந்தச் சூழ்நிலையில் பிரேமதாச லலித்தையும் காமினியையும் தனது அமைச்சரவையிலிருந்து நீக்கினார். அதன் காரணமாக அவர்கள் இருவரும் கட்சியிலிருந்த வேறு சிலரையும் சேர்த்துக்கொண்டு 1991இல் ஜனநாயக தேசிய முன்னணி என்ற புதிய கட்சியொன்றை அமைத்தனர். அதுமாத்திரமில்லாமல் ஐ.தே.கவினதும், எதிர்க்கட்சிகளினதும் பல நாடாளுமன்ற உறுப்பினர்களின் கையெழுத்தைப் பெற்று பிரேமதாசவை ஜனாதிபதி பதவியிலிருந்து தகுதி நீக்கம் ( Impeachment) செய்யும் தீர்மானமொன்றையும் கொண்டுவர முயன்றனர். அப்போதைய சபாநாயகர் எம்.எச்.மொகமட்டும் அதற்கு உடந்தையாக இருந்தார். நிலைமை கட்டுமீறிப் போய்விட்டதை உணர்ந்த பிரேமதாச நாடாளுமன்றத்தை ஒத்தி வைத்து, நாடாளுமன்ற உறுப்பிர்களுக்கு பலகோடி ரூபா இலஞ்சம் கொடுத்து தனது பதவியைக் காப்பாற்றிக் கொண்டர்.

இந்தச் சம்பவங்கள் நடைபெற்று சில மாதங்களின் பின்னர் 1993 ஏப்ரல் 13ஆம் திகதி கிருலப்பனவில் ஒரு பொதுக்கூட்டத்தில் பேசிக்கொண்டிருக்கும் போது லலித் அத்துலத்முதலி புலிகளின் துப்பாக்கிதாரி ஒருவனால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். இந்தக் கொலையின் பின்னணியில் பிரேமதாசவின் கரங்கள் இருந்ததாக பலத்த சந்தேகங்கள் அப்போது நிலவின.
லலித்தின் கொலை நடந்து ஒரு வாரத்தின் பின்னர் 1993 மே 01ஆம் திகதி ஒரு மேதின ஊரவலத்தில் வைத்து பிரேமதாசவையும் புலிகள் தற்கொலைக் குண்டுதாரி மூலம் கொலை செய்தனர். பின்னர் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட காமினி திசாநாயக்கவையும் ஒரு பிரச்சார மேடையில் வைத்து புலிகள் குண்டு வெடிப்பின் மூலம் கொலை செய்தனர்.
இந்தச் சம்பவங்களின் பின்னரே ஐ.தே.கவின் தலைமைப் பொறுப்பு ரணிலின் கைகளுக்கு வந்து சேர்ந்தது. அதை அடைவதற்கு ரணில் பல வருடங்கள் காத்திருக்க வேண்டியிருந்தது.
ரணில் தலைவராக வந்த பின்னரும் கட்சிக்குள் அதிகாரப்போட்டி ஓய்ந்துவிடவில்லை. கரு ஜெயசூரிய ரணிலுக்கு எதிரான போட்டியாளராக மாறினார். ரணிலுக்கும் அவருக்குமிடையிலான தலைமைத்துவப் போட்டி பல ஆண்டுகள் நீடித்தது. 2015 பொதுத்தேர்தலில் ஐ.தே.க. வெற்றி பெற்று ரணில் தலைமையில் ஆட்சியமைந்தபொழுது, கரு ஜெயசூரியவை சபாநாயகர் ஆக்கியதன் மூலமே அந்தப் போட்டி ஓரளவுக்குத் தணிய வைக்கப்பட்டது. (தற்பொழுது சஜித்துக்கு எதிரான ‘போரில்’ மேட்டுக்குழாமைச் சேர்ந்த கரு ரணில் பக்கம் நிற்கின்றார்)
அதுவரையும் திரைமறையில் இருந்த சஜித் பிரேமதாச அதன் பின்னரே முன்னுக்கு வந்து ரணிலுக்கு எதிராகத் தீவிரமாகச் செயற்படத் தொடங்கினார். கருவைப் போலல்லாது சஜித்துக்கு தகப்பன் பிரேமதாச விட்டுச்சென்ற பிம்பம் ஒரு செல்வாக்கைத் தேடிக்கொடுத்தது. சஜித்துக்கு இப்பொழுது உள்ள பலம், கட்சிக்குள் ஒரு குறிப்பிடத்தக்க பகுதியினரின் ஆதரவு, பங்காளிக் கட்சிகளின் அனுசரணை, ஓரளவு மக்கள் செல்வாக்கு என்பனவாகும். இவை எல்லாம் இருந்தாலும் அவை சஜித் ஐ.தே.க. தலைமைப் பதவியைப் பெறுவதற்கு உதவுமேயொழிய, நாட்டின் ஜனாதிபதியாகவோ அல்லது பிரதமராகவோ வர உதவப்போவதில்லை. அதற்கு காரணம் மக்கள் ஐ.தே.கவை ஆதரிக்காததிற்குக் காரணம் அதன் தலைவர்கள் யார் என்பதல்ல பிரச்சினை, அதன் கொள்கைகள் மக்கள் விரோதமானவை என்பதுதான் பிரச்சினை.
ரணில் எவ்வளவோ முயன்றும் ஐ.தே.க. தலைமைப்பதவியை விட்டுக்கொடுக்காததிற்குக் காரணம், அதன் தலைமை ஜெயவர்த்தன குடும்பத்திடமிருந்தும், சிங்கள மேட்டுக்குழாமிடமிருந்தும் கைநழுவிப் போய்விடக்கூடாது என்பதுதான். இதைத்தவிர, ரணிலுக்கும் சஜித்துக்கும் இடையிலான முரண்பாடு மற்றும் முட்டிமோதலில் கொள்கை சம்பந்தமான எதுவுமில்லை. எல்லாமே தனிநபர் அல்லது குழு அதிகாரம் சம்பந்தப்பட்டதுதான்.
ஆனால் ரணிலின் இந்தப் பிடிவாதம் எவ்வளவு காலத்துக்கு நின்று பிடிககும் என்ற கேள்வி இருக்கிறது. ஏனெனில், டட்லி, ஜே.ஆர். போன்றவர்களைப் போல ரணிலுக்கும் அரசியல் வாரிசுகளாக வர எவரும் இல்லை. ஏனெனில் அவருக்கு குழந்கைள் இல்லை. எனவே ரணிலுக்குப் பின்னர் ஐ.தே.க. தலைமைப் பதவி பகிரங்க ஏலத்துக்கு வரக்கூடும்.