நோயாளி எண் 31
-அ.அன்வர் உசேன்
நோயாளி எண் 31 என்பது தென் கொரியாவில் கோவிட் 19 நோயால் பாதிக்கப்பட்ட 31வது நபர். தென் கொரிய மக்களால் மிகவும் விமர்சிக்கப்படுகிற ஒருவராக இவர் மாறியுள்ளார். உலகம் முழுவதும் பேசும் பொருளாகவும் ஆகிவிட்டார். ஏன்?
ஏனெனில் இவர் ஒருவரால் மட்டும் தென் கொரியாவில் சுமார் 5600 பேருக்கு வைரஸ் பரவியுள்ளது. ஆம்! ஒரே ஒரு நபர் 5600 பேருக்கு நோயும் ஒரு சிலருக்கு மரணத்தையும் அளித்துள்ளார்.
61 வயதான இந்த பெண்மணி பிப்ரவரி 6ம் தேதி ஒரு சிறிய விபத்தில் சிக்கினார். சிராய்ப்புகள் ஏற்பட்டன. எனவே மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்தார். சிகிச்சை முடிந்த பிறகு அவருக்கு காய்ச்சல் அதிகமாக இருந்த காரணத்தால் வைரஸ் பரிசோதனை செய்து கொள்ளுமாறு மருத்துவர்கள் அவருக்கு அறிவுரை வழங்கினர். ஆனால் தனக்கு அதெல்லாம் வராது என மறுத்துவிட்டு வீடு சென்றுவிட்டார்.
பிப்ரவரி 9ம் தேதி ஒரு மாதா கோவிலுக்கு பிரார்த்தனைக்கு சென்றார். அங்கு சுமார் 1000பேர் மத்தியில் இவரும் கலந்து கொண்டார். பிப்ரவரி 10 ம்தேதி மீண்டும் காய்ச்சல் ஏற்பட்டதால் மருத்துவமனைக்கு சென்றார். மருத்துவர்கள் காய்ச்சலுக்கு மருந்து அளித்துவிட்டு வைரஸ் பரிசோதனை செய்யுமாறு மறுபடியும் வலியுறுத்தினர். ஆனால் அந்த பெண்மணி மீண்டும் மறுத்துவிட்டார்.
பிப்ரவரி 15ம் தேதி ஒரு தோழியுடன் மிகப்பெரிய ஓட்டலில் பஃபே விருந்தில் கலந்து கொண்டார். பிப்ரவரி 16ம் தேதி இன்னொரு மாதா கோவிலுக்கு சென்று பிரார்த்தனை செய்தார். அப்பொழுதும் ஆயிரத்துக்கும் அதிகமானோர் இருந்தனர்.
பிப்ரவரி 17ம் தேதி காய்ச்சல் மிக அதிகமாக இருந்ததால் மீண்டும் மருத்துவமனைக்கு வந்தார். இப்பொழுது மருத்துவர்கள் வலுக்கட்டாயமாக வைரஸ் மருத்துவ சோதனை செய்தனர். அவருக்கு கோவிட் 19 இருப்பது உறுதியானது. அவர் 31ம் நோயாளியாக அறிவிக்கப்பட்டார்.
கடந்த 10 நாட்களில் அவர் எங்கெல்லாம் சென்றார் என்பதை கண்டுபிடிக்க முயன்ற அதிகாரிகளுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அவர் உறுப்பினராக உள்ள மாதா கோவில் வினோத நடைமுறைகளை கொண்டிருந்தது. உலகம் அழியும் எல்லைக்கு வந்துவிட்டதாகவும் இவர்கள் நிர்வகிக்கும் மாதா கோவில்களின் உறுப்பினர்கள் மட்டுமே சுவர்க்கம் செல்வார்கள் எனவும் அவர்கள் நம்பினர். எனவே தமது உறுப்பினர்கள் அல்லது பிப்ரவரி 9 மற்றும் 16ம் தேதிகளில் பிரார்த்தனைக்கு வந்தவர்களின் பட்டியலை தர மறுத்தனர். கடும் மிரட்டலுக்கு பிறகுதான் விவரங்கள் அரசு அதிகாரிகளுக்கு கிடைத்தன.
அந்த பட்டியலில் உள்ளவர்களை பரிசோதித்த பொழுது பெரும்பான்மையோருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது தெரிந்தது. பிப்ரவரி 9 முதல் 17 வரை அவர்கள் எங்கெல்லம் சென்றார்கள்; யாரை சந்தித்தனர் என விவரங்களை கண்டுபிடிக்க முயன்ற பொழுது அதிகாரிகளின் தலை சுற்றியது. ஏனென்றால் ஆயிரக்கணக்கில் பரிசோதனை செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டது. இறுதியில் சுமார் 5600 பேருக்கு இந்த பெண்மணி ஒருவரால் மட்டும் வைரஸ் தொற்று உருவாகியிருந்தது. அதாவது தென் கொரியாவில் வைரஸ் தொற்று உருவானதில் 56% பேர் இதில் அடக்கம்.
கேரளா உதாரணம்
இந்த அளவிற்கு இல்லை என்றாலும் கேரளாவில் இதே போல ஒரு சம்பவத்தை அதிகாரிகள் கண்டுபிடித்து உள்ளனர்.
கேரளாவில் உள்ள 5 பேர் பிப்ரவரி 29ம் தேதி ஒரு ஓட்டலுக்கு சென்றனர். மார்ச் 1ம் தேதி இன்னொரு ஓட்டலுக்கு சென்றனர். மார்ச் 2ம் தேதி காலை 9.30முதல் 11.00 மணி வரை ஷாப்பிங் மால்/ பெட்ரோல் நிலையம்/ பேருந்து நிலையம்/ தபால் அலுவலகம் ஆகிய இடங்களுக்கு சென்றனர்.
அதே நாளில் பகல் 12 மணிக்கு சர்ச்சுக்கு சென்றனர். அங்கு நூற்றுக்கணக்கானோர் இருந்துள்ளனர். பின்னர் மாலை 7 மணி வரை சூப்பர்மார்க்கெட்/ பேக்கரி/ புனலூரில் உறவினர்கள் வீடுகளுக்கு சென்றுள்ளனர். மார்ச் 3ம் தேதி காலை 11 மணிக்கு ஒரு வங்கிக்கும் 12.30 மணிக்கு பேக்கரிக்கும் சென்றுள்ளனர். அடுத்த இரண்டு நாட்களில் காய்ச்சல் ஏற்பட்டு சோதித்த பொழுது கோவிட் 19 தொற்றியிருப்பது உறுதியானது.
கடந்த 5 நாட்களில் இவர்கள் சென்ற இடங்களில் இருந்தவர்களை கேரளா அதிகாரிகள் சல்லடை போட்டு தேடியதில் சுமார் 4565 பேர் பட்டியல் இடப்பட்டனர். இவர்கள் அனைவரும் இப்பொழுது பத்தினம்திட்டாவில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். எத்தனை பேருக்கு வைரஸ் தொற்று உள்ளது என்பது இனிமேல்தான் தெரியவரும்.
கேரளா அரசாங்கம் இந்த விவரங்களை வெளிப்படையாக தெரிவித்துள்ளது. வேறு மாநில அரசாங்கம் இந்த நடைமுறையை பின்பற்றுவதாக தெரியவில்லை. தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் நூற்றுக்கணக்கானவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன. கேரளா போல தமிழக அரசாங்கமும் வெளிப்படைத் தன்மையுடன் செயல்படுமா?
தமிழக அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கைகள் குறைத்து மதிப்பிட வேண்டியது இல்லை. எனினும் இத்தகைய வெளிப்படைத் தன்மை இருந்தால் வைரஸ் மூன்றாவது கட்டத்துக்கு சென்றுவிட்டதா என்பதையும் எத்தகைய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்பதையும் அரசாங்கம் மட்டுமல்ல, மக்களும் உணர பயன்படும்.