கொரோனாவைவிட கொடிய ஸ்பானிஷ் ஃபுளூ (Spanish influenza)
கொரோனா வைரஸ் தொற்றை கண்டு இன்று உலகம் மிரண்டு போயுள்ள நிலையில், கடந்த 1918ம் ஆண்டில் ஸ்பானிஷ் ஃபுளூ என்ற காய்ச்சல், பல கோடி உயிர்களை காவு வாங்கியதாக கூறப்படுகிறது.
சீனாவில் கடந்தாண்டு இறுதியில் தோன்றி, 2020ம் ஆண்டில் தொடக்கத்தில் இருந்து உலகையே மிரளச் செய்து வருகிறது, கொரோனா எனப்படும் கோவிட்-19 வைரஸ். தோன்றிய சீனாவிட, அது பரவிய பிற நாடுகளில் தான் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.
குறிப்பாக, இத்தாலி, ஸ்பெயின், அமெரிக்கா போன்ற நாடுகளில் கடும் தாக்கத்தை கொரொனா வைரஸ் ஏற்படுத்தி இருக்கிறது. இந்தியாவிலும் கொரோனா தாக்கம் படிப்படியாக அதிகரித்து வருகிறது. இரண்டாம் உலகப் போருக்கு பிறகு இந்த உலகம் சந்தித்துள்ள மிகப் பெரிய நெருக்கடியாக, கொரொனா வைரஸ் கருதப்படுகிறது.
இந்நிலையில், 100 ஆண்டுகளுக்கு முன்பாக அதாவது 1918ம் ஆண்டு, தற்போதைய கொரோனாவை பல மடங்கு கொடூரமான ஸ்பானிஷ் ஃபுளூ உலகை அச்சுறுத்தி, பல கோடி உயிர்களை பலி கொண்டிருக்கின்றது.
பிரான்ஸ், ரஷியா, இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய நாடுகள் ஒரு பக்கமும், மைய நாடுகள் என அழைக்கப்பட்ட ஆஸ்திரியா, ஹங்கேரி, ஜெர்மனி, இத்தாலி ஆகிய நாடுகள் மற்றொரு பக்கமும் நின்று போரிட்ட முதல் உலகப்போர் நடந்த கால கட்டத்தில் தோன்றி பரவியதுதான் இந்த ஸ்பானிஷ் ஃபுளூ.
இன்புளூவென்சா (influenza) தொற்று நோய் என்று அழைக்கப்படக்கூடிய ஸ்பானிஷ் ஃபுளூ காய்ச்சல், உண்மையில் ஸ்பெயினில் உருவாகவில்லை. ஆனால், அந்த நாடு தான், இதன் தாக்கத்தையும் உயிரிழப்புகளையும் வெளிப்படையாக அறிவித்தது. இதனால், அந்த நாட்டின் பெயரால் ஸ்பானிஷ் ஃபுளூ என்று அழைக்கப்படுகிறது. ஸ்பானிஷ் ஃபுளூ முதலில் ஐரோப்பாவில் ஆரம்பித்து, பின்னர் அமெரிக்கா மற்று ஆசிய நாடுகளுக்கு பரவியிருக்கின்றது.
இன்று காணப்படும் சூழலை போலவே அந்த காலத்திலும், முகக்கவசம் அணிந்தவாரே மக்கள் வீதிகளில் நடமாடியுள்ளனர். நகரங்களில் கொத்து கொத்தாக பலர் இறந்து மடிந்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவமனைகளில் இடவசதியில்லாதது போன்ற சூழலும் காணப்பட்டுள்ளது.
கனடாவில் உள்ள கெலோனா (Kelowna) நகரில், இந்த வைரஸ் குறித்து 1918ம் ஆண்டு மேயர் பெயரில் பொது அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதில் ஸ்பானிஷ் வைரஸ் பரவலை தடுக்க பள்ளி, வணிக நிறுவனங்கள், தியேட்டர்கள் , தேவாலயங்கள் மூடப்படுவதாக மேயர் டி. டபிள்யூ. சுதெர்லாந்த் என்பவர் பெயரில் பொது அறிவிப்பை, வெளியிடப்பட்டுள்ளது.
இந்த ஸ்பானிஷ் ஃபுளூவுக்கு உலகம் முழுவதும் பலியானவர்களின் எண்ணிக்கை, 5 கோடியில் இருந்து 10 கோடி வரை என்று கூறுகிறார்கள். இந்தியாவில் மட்டும் அப்போது, 2 கோடி பேர் வரை இறந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது. குழந்தைகள், வயதானவர்கள் மட்டுமின்றி, ஆரோக்கியமானவர்களையும் இது விட்டுவைக்கவில்லை என்று கூறப்படுகிறது.
ஆனால், இன்று போல அன்று ஊடகங்கள் அதிகமில்லை. அவற்றுக்கு சுதந்திரமும் இருந்தது இல்லை. அதனால், அப்போதிருந்த அரசுகள் இதுபற்றிய செய்திகளை வெளியிடாமல் பார்த்துக்கொண்டன. எனவே, இதை உறுதிப்படுத்த போதுமான ஆதாரங்களும் கிடையாது என்பது தான் இதில் சோகமான விஷயம்.
எது எப்படியானாலும், கொரோனா வைரஸ் கலக்கத்தை ஏற்படுத்தி வரும் சூழலில் ஸ்பானிஷ் வைரஸ் குறித்த தகவல் மற்றும் புகைப்படங்கள், சமூக வலைதளங்களில் அதிகளவில் விரும்பி பகிரப்பட்டு வருகிறது.