தப்பிப் பிழைப்பார்களா, குடிசைப் பகுதி மக்கள்?
–ததாகத்
கொரோனா நோய்த் தொற்றின் வேகத்திலிருந்து உலகிலுள்ள எண்ணற்ற குடிசைப் பகுதிகளின் மக்கள் தப்பிப் பிழைப்பார்களா?
உலகின் மிகப் பெரிய குடிசைப் பகுதிகளில் ஒன்றான மும்பை தாராவியில் மூன்றாவதாக ஒரு பெண் உயிரிழந்திருக்கிறார். தாராவியில் பரவும் கொரோனோ நோய்த் தொற்று பேரச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதேபோல உலகெங்கும் தாராவியைப் போல சிறிதும் பெரிதுமான குடிசைப் பகுதிகளில் மட்டும் நூறு கோடி மக்கள் வசிக்கின்றனர்.
இதுவரையிலும் பெரும்பாலும் வெளிநாடுகளுக்குச் சென்றுவந்தவர்கள், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள், புதுடெல்லி மாநாட்டுக்குச் சென்று வந்தவர்கள், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என ஏதோவொரு தொடர்பின் மூலமாகத்தான் கொரோனா நோய் தொற்றியிருப்பது அறிய வந்திருக்கிறது.
ஆனால், இப்போது தாராவியில் யாரோ சிலர் வந்து தங்கிவிட்டுச் செல்ல, கொத்துக் கொத்தாகப் பரவிக் கொண்டிருக்கிறது கொரோனா தொற்று.
மும்பை குடிசைப் பகுதிகளில் பொதுக் கழிப்பிடத்திலுள்ள ஒரு கழிப்பறையை ஒரு நாளில் சுமார் 200 பேர் பயன்படுத்துகிறார்கள். இவற்றின் சுத்தப் பராமரிப்புதான் சவாலாக இருக்கிறது. தீயணைப்புப் படை வீர்ர்களை நிறுத்தி ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை ஜெட் பம்ப்களின் உதவியால் சுத்தப்படுத்திக் கொண்டிருக்கிறோம் என்று மகாராஷ்டிர அமைச்சரே தெரிவித்துள்ளார். இதைப்போன்ற அல்லது இதைவிட மோசமான நிலைமைகளில்தான் உலகின் குடிசைப் பகுதிகள் இருக்கின்றன.
இவ்வளவு காலமாகக் கண்டுகொள்ளாமல் விடப்பட்டுவிட்ட உலகம் முழுவதுமுள்ள இதுபோன்ற குடிசைப் பகுதிகளில் கொரோனா பரவாமல் தடுக்க என்ன செய்யப் போகிறார்கள், என்ன செய்ய முடியும்?
ஐக்கிய நாடுகள் அவையின் வரையறைப்படி, பாதுகாப்பற்ற குடிநீர் மற்றும் துப்புரவு வசதிகள் இன்மை, மோசமான வசிப்பிடங்கள், கடும் நெரிசல் உள்ள குடிசைப் பகுதிகளில் சுமார் நூறு கோடி மக்கள் வசிக்கின்றனர்.
கொரோனா நோய்த் தொற்று இப்போது குடிசைப் பகுதிகளிலும் பரவத் தொடங்கியுள்ளது. ஏற்கெனவே, மும்பையில் தாராவி, பாகிஸ்தான்- கராச்சியில் ஒராங்கி, பிலிப்பைன்ஸின் மணிலாவில் பயாடாஸ் ஆகிய இடங்களுக்குள் கொரோனா புகுந்து பரவத் தொடங்கிவிட்டது.
2014 – 2016 காலகட்டத்தில் பரவிய எபோலா தொற்று நோய் மக்கள் நெருக்கமாக வாழ்ந்த லைபீரியா, கினியா, லியோன் ஆகிய இடங்களில் பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்தியது.
மக்கள் நெரிசலான இடங்களில் என்னதான் முயன்றாலும் சுவாசம் சார்ந்த தொற்றுகள் எளிதாகப் பரவி விடுகின்றன. வீடுகளிலேயே இருந்து, பள்ளிகளை மூடி, பாதிக்கப்பட்டவர்களைத் தனித்திருக்கச் செய்தாலும் குடிசைப் பகுதிகள் அல்லாதவர்களைவிட குடிசைப்பகுதிகளில் இருப்போருக்கு நோய் தொற்றுவதற்கான ஆபத்து 44 சதவிகிதம் அதிகம் என்று 2018 புதுடெல்லி அறிக்கை தெரிவிக்கிறது.
குடிசைப் பகுதிகளில் தொற்று நோய் விரைந்து பரவக் காரணம் மக்கள் நெரிசலே. புதுடெல்லியில் பிற பகுதிகளைவிட குடிசைப் பகுதிகளில் 10 முதல் 100 மடங்கு அதிகமாக மக்கள் வசிக்கிறார்கள். சத்துணவில்லாத சத்துக் குறைவான குழந்தைகளும் எண்ணற்ற அல்லது ஏதாவதொரு நோயுடன் வாழ்ந்து கொண்டிருக்கும் முதியோர்களும் எளிதில் தொற்று நோயின் தாக்குதலுக்கு ஆளாகிறார்கள்.
மகாராஷ்டிர அமைச்சர் சொன்னதைப் போல, சுத்தப்படுத்துவதே சாத்தியப்படாத பொதுக் கழிப்பறைகள் மிகப் பெரிய சவால். நல்ல தண்ணீரும் மற்றொரு சவால். வசிக்கும் சூழலும் குடிசைப் பகுதி மக்களை எளிதில் நோய்க்குள் தள்ளிவிடும்.
நகர்ப் பகுதிகளிலேயே இன்னமும் முழு வீச்சில் கொரோனா நோய்த் தொற்றுப் பரிசோதனைகளைச் செய்ய இயலாத நிலையில் இந்தக் குடிசைப் பகுதிகளை, இத்தனை ஆயிரமாயிரம் மக்களின் நிலை என்ன?
ஒரு குடிசைப் பகுதிக்குள் கொரோனா நோய்த் தொற்று நுழைந்துவிட்டால் அதன் பரவலைக் கட்டுப்படுத்துவதென்பது மிக மிகக் கடினமான சவாலாகவே இருக்கும். குடிசைப் பகுதிகளைப் புறக்கணித்துக் கணக்கிட்டால் நம்முடைய கணக்குகள் யாவும் 10 முதல் 50 சதவிகிதம் வரை தவறாகத்தான் போய் முடியும் என்கிறார்கள் புதுடெல்லியிலுள்ள ஆய்வாளர்கள்.
குடிசைப் பகுதிகளில் பரவினால் எந்த வேகத்தில் பரவும், எவ்வளவு காலத்தில் எவ்வளவு பேர் பாதிக்கப்படுவார்கள், எத்தகைய சிக்கலான சூழலை எதிர்கொள்ள நேரிடும் என்பதையெல்லாம் சரியாக மதிப்பிடாவிட்டால், இந்த மக்களுக்கு வென்டிலேட்டர், உயிர்க்காப்பு சாதன உதவிகள் கிடைப்பதெல்லாம்கூட குதிரைக் கொம்புதான் (உலகம் முழுவதிலும்).
குடிசைப் பகுதி மக்களின் பொருளாதார நிலைமை மிகப் பெரிய சிக்கல். இவர்களில் பெரும்பான்மையானவர்கள் முறைசாரா தொழில்களைச் செய்பவர்களே. ஊரடங்கு காலத்தில் இவர்களில் யாருக்குமே வேலையில்லாமல் போய்விட்டது. வாரக் கணக்கிலும் மாதக் கணக்கிலும் உழைக்காமல் வீட்டிலிருந்தபடியே உட்கார்ந்து சாப்பிடக் கூடிய அளவுக்கு எவ்வளவு பேரிடம் பணம் இருக்கும்? சேமிப்பு இருக்கும்? வாய்ப்பே இல்லை.
அன்றாடக் கூலித் தொழிலாளர்களால் நிரப்பப்பட்ட புது தில்லி, மும்பை, கேப் டவுன், மணிலா, கராச்சி, ரியோ டி ஜெனிரோ ஆகிய நகர்களின் குடிசைப் பகுதிகள், நைரோபி, கென்யா போன்ற நாடுகளில் ஏற்கெனவே வருவாயின்றித் தட்டுப்பாடு தொடங்கிவிட்டது.
நாள் கூலித் தொழிலாளர்களை மனதில்கொண்டு பிரேசில் சில முன்னேற்பாடுகளைச் செய்திருக்கிறது. யாரையும் வேலையைவிட்டு நீக்கிவிடாதீர்கள், அனைவருக்கும் ஊதியம் கொடுங்கள் என்று புதுடெல்லி மாநில அரசு கேட்டுக்கொண்டிருக்கிறது. இந்தியாவில் தமிழகம் போன்ற சில மாநிலங்களில் உதவிகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. ஆனால், இவை எதுவுமே போதுமானவையல்ல என்பதில் யாருக்கும், அரசியல் தலைவர்கள், அரசு அலுவலர்கள் உள்பட, எவ்வித சந்தேகமும் இருக்க முடியாது.
இத்தகைய குடிசைப் பகுதிகள் வளரும் நாடுகளில் மட்டுமல்ல. மிக உயர் வருவாயுள்ள லொஸ் ஏஞ்சலஸ், சியாட்டில், நியுயோர்க், ஆக்லாந்து, கலிபோர்னியா, லண்டன், பாரிஸ் போன்ற நகர்களிலும் வீடற்றவர்கள் ஏராளமாக இருக்கின்றனர்.
வங்கதேசம், லெபனான், கென்யா, கிரீஸ் போன்ற நாடுகளிலுள்ள அகதி முகாம்களும் இவற்றிலிருந்து தப்ப முடியாது. இப்போதே ஆங்காங்கே அகதி முகாம்களில் தொற்று தெரியத் தொடங்கியிருக்கிறது.
குடிசைப் பகுதிகள், வீடற்று வீதிகள், அகதிகள் முகாம்கள் போன்றவற்றில் இருப்பவர்களும் மனிதர்களே. இவர்களில் யாரும் கொரோனா நோய்த் தொற்றுக்கு அப்பாற்பட்டவர்களல்ல. இவர்களுக்கும் தொற்று சென்றடையும் (ஏற்கெனவே பல இடங்களில் செல்லத் தொடங்கிவிட்டது) என்பதையும் கருத்தில்கொண்டு கரோனா எதிர்கொள்ளல் வகுக்கப்பட வேண்டும் என்பதில் யாருக்கும் இருவேறு கருத்து இருக்க முடியாது.