முதலாளித்துவம், சோசலிசம் மற்றும் கொரோனா வைரஸ்

Coronavirus in Argentina: capitalism at odds with workers' health ...

பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம்

மிக நுண்ணிய ஆனால் ஆபத்தான கொரானா வைரஸ் தொற்று, 21ஆம் நூற்றாண்டில், முதலாளித்துவ அமைப்பு, சோசலிச அமைப்பு ஆகிய இரு சமூக அமைப்புகளுக்கும் இடையே உள்ள வித்தியாசத்தை, மீண்டும் ஒருமுறை தெளிவாக முன்னுக்குக் கொண்டு வந்திருக்கிறது. உலகம் முழுதும் பீடித்திருக்கிற கொரானா வைரஸ் தொற்றை ஒவ்வொரு நாடும் எதிர்கொள்ளும் விதம், இந்த வித்தியாசத்தை நன்கு வெளிப்படுத்தி இருக்கிறது.

கொள்ளை லாபத் தொழில்

ஒரு பக்கத்தில் உலகில், மிகவும் அதிகாரத்திமிர் கொண்ட ஏகாதிபத்திய-முதலாளித்துவ நாடான அமெரிக்கா, மிகவும் அதிதீவிர வடிவத்தில் தனியார் சுகாதார முறையைப் பெற்றிருக்கிறது. இங்கே சுகாதாரத் துறை என்பது கொள்ளை லாபம் ஈட்டக்கூடிய விதத்தில் முழுக்க முழுக்க கார்ப்பரேட்டுகளால்தான் நடத்தப்பட்டு வருகிறது. இத்தகைய அமைப்பின்கீழ், இப்போது ஏற்பட்டுள்ள கொரானா வைரஸ் தொற்றுக்கு எதிராக, பொது சுகாதார அவசரத்துடன் நடவடிக்கை எடுப்பதற்குப் போதுமான அளவிற்கு மருத்துவப் படுக்கைகள், அவசர சிகிச்சைப் பிரிவுகள், வென்ட்டிலேடர்கள் இல்லாதிருக்கும் பரிதாபநிலையைக் காண்கிறோம். அங்கே பணியாற்றும் சுகாதார ஊழியர்களுக்குக்கூட, பாதுகாப்பு உபகரணங்களை அதனால் வழங்க முடியவில்லை.

இயல்பான காலங்களில்கூட, அங்கே சுகாதாரப் பாதுகாப்புக்கு மிகப்பெரிய விலை கொடுக்க வேண்டும். தனியார் இன்சூரன்ஸ் முறை இதனை பல லட்சக்கணக்கான மக்களுக்கு எட்டாக்கனியாகவே வைத்திருக்கிறது. அமெரிக்காவின் இத்தகைய அதீத சமத்துவமின்மைச் சமூகத்தின் பிரதிபலிப்பு, இப்போது கொரோனா வைரஸ் நெருக்கடி ஏற்பட்டிருக்கும் காலத்திலும் பிரதிபலிக்கிறது. பணக்காரர்கள் சிறந்த சிகிச்சையைப் பெற முடியும். கொழுத்த கட்டணம் செலுத்தினார்கள் என்றால், ஓடோடிவந்து சேவை செய்திடும் மருத்துவ ஆலோசனை முகவர்களின், வசதிகளைப் பெற முடியும்.

கியூபாவின் அற்புதம்

சின்னஞ்சிறு கியூபாவின் உள்ள நிலைமையோ இதற்கு முற்றிலும் மாறுபட்டதாகும். ஒரு சோசலிச சமுதாயத்தைக் கட்டி எழுப்புவதற்கான அதன் முயற்சிகளின் வெளிப்பாடாக, அது மற்றவர்கள் பொறாமைப்படக்கூடிய விதத்தில் ஓர் அற்புதமான சமூகமயமாக்கப்பட்ட சுகாதார முறையைப் பெற்றிருக்கிறது. அமெரிக்காவின் பொருளாதாரத் தடையை அது எதிர்கொண்டுள்ள போதிலும், கியூபா தன் சொந்தக்கால்களில் நின்று, ஒரு முன்மாதிரி சுகாதாரப் பாதுகாப்பு அமைப்புமுறையைக் கட்டி எழுப்பிடும் முயற்சிகளில் ஈடுபட்டிருக்கிறது. நோயாளிகளைப் பதிவு செய்வதற்காக பெயரளவில் ஒரு கட்டணத்தைப் பெற்றுக்கொள்வதைத் தவிர மருத்துவ சிகிச்சை கியூபாவில் முற்றிலும் இலவசம். மேலும் கியூபா, உயிரிதொழில்நுட்பவியலின் (biotechnology) அடிப்படையில் நன்கு முன்னேறிய ஒரு மருந்து தொழிற்சாலையை வளர்த்து எடுத்திருக்கிறது. லத்தீன் அமெரிக்கா – கரீபியன் மற்றும் ஆப்பிரிக்காவின் பல்வேறு நாடுகளுக்கும் அங்கேயுள்ள ஏழை மக்களுக்குச் சேவை செய்வதற்காக, கியூபா, தன்னுடைய மருத்துவப் பணிக்குழுக்களை அனுப்பிக் கொண்டிருக்கிறது. கோவிட்-19 தொற்றுப் பாதிப்பு ஏற்பட்டுள்ள நாடுகளான இத்தாலி, வெனிசுலா மற்றும் இதர நான்கு கரீபியன் நாடுகளுக்கும் தன்னுடைய மருத்துவர்களையும், மருத்துவம் சார்ந்த இதர ஊழியர்களையும் அனுப்பி இருக்கிறது.

கியூபாவில் மட்டும் இத்தகைய மருத்துவ மற்றும் சுகாதாரப் பாதுகாப்பு அமைப்பு முறை எப்படிச் சாத்தியமானது? எப்படியெனில், அங்கே ஒரு சோசலிச அமைப்பு முறை இருக்கிறது. அது அனைத்து மக்களுக்கும் கல்வி, உணவுப்பொருள்கள் மற்றும் வீட்டுவசதியை இலவசமாக வழங்கி வருகிறது. பெண்களின் முன்னேற்றத்திலும் குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தி இருக்கிறது.

இதர வளர்ந்த முதலாளித்துவ நாடுகளிலும், அமெரிக்கா போன்று இல்லாமல், பொது சுகாதார அமைப்பு கிட்டத்தட்ட சிறந்த முறையிலேயே இருந்தன. எனினும் இவை நவீன தாராளமயக் கொள்கைகளாலும், சமீப காலங்களில் மேற்கொள்ளப்பட்ட சிக்கன நடவடிக்கைகளாலும் பலவீனமாகி இருக்கின்றன, பொது சுகாதார வசதிகளை அரித்திருக்கின்றன.

கிரேட் பிரிட்டனில் செயல்பட்டு வந்த தேசிய சுகாதாரப் பணி (NHS-National Health Service)க்கு, போதிய அளவிற்கு நிதி ஒதுக்காததாலும், சுகாதாரத் துறையைத் தனியார்மயப்படுத்தியதாலும் அது, பின்தங்க ஆரம்பித்துவிட்டது. இதேபோன்றே இத்தாலி பொது சுகாதார அமைப்பும் பாதிப்புக்கு உள்ளானது. இன்றைய நெருக்கடியில், பொது சுகாதாரப் பாதுகாப்பை உதாசீனம் செய்த முட்டாள்தனமானது அந் நாட்டு மக்களை அவலநிலைக்குத் தள்ளியிருக்கிறது. ஸ்பெயின் தற்போது தனியார் மருத்துவமனைகளை தேசியமயமாக்கி இருக்கிறது.

Silver Linings Amidst the Capitalist Coronavirus Crisis ...

சீனாவின் வரலாறு காணாத சாதனை

கோவிட்-19 வைரஸ் தொற்றுக்கு முதலில் ஆளாகிய சீனா, வுஹான் நகரம் மற்றும் ஹூபே மாகாணத்தில் இத்தொற்று பரவாமல் தடுப்பதற்காக கடும் முயற்சிகளில் ஈடுபட்டது. இந்த வைரஸ் மேலும் பரவாமல் தடுப்பதற்காக, தன்னுடைய வளங்கள் அனைத்தையும் மருத்துவத்துறைக்குத் திருப்பிவிட்டது. இத் தொற்று தொடர்பாக உலக சுகாதார ஸ்தாபனமும், சீனாவும் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தத் தொற்று குறித்து, மிகவும் அதீத ஆசையுள்ள, விரைவுத் திறனுடைய, மூர்க்கத்தனமான இந்நோயைக் கட்டுப்படுத்திட வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும், என்று கூறியிருக்கிறது. சீனாவினால் இதனைச் செய்ய முடியும். ஏனெனில் அது ஒரு வலுவான பொது சுகாதார அமைப்பு முறையைப் பெற்றிருக்கிறது.

2009-இல், சீன அரசாங்கம், “சுகாதார அமைப்பு முறை சீர்திருத்தத்தை மேலும் தீவிரப்படுத்த அதிகாரபூர்வமான ஆவணத்தை வெளியிட்டது. அது, “2020 வாக்கில் அனைத்து மக்களும் அணுகக்கூடிய விதத்தில், சமத்துவப்படுத்தப்பட்ட, மலிவான மற்றும் திறமையான சுகாதார அமைப்பு முறையை நிறுவவதற்கு அரசியல் உறுதி பூண்டிருக்கிறது,” என்று குறிப்பிட்டது. இந்தத் திசை வழியில் அங்கே ஏற்பட்டுள்ள முன்னேற்றம் இன்றைய தினம் தெளிவாகத் தெரிகிறது.

மொத்த சுகாதார செலவினம் மொத்த உள்நாட்டு உற்பத்தி(GDP)யில், 5 சதவீதமாக இருந்தது, 2017இல் 6.4 சதவீதமாக அதிகரித்தது. மொத்த சுகாதார செலவினத்தில் மக்கள் தன் சொந்த பையிலிருந்து செலவு செய்வது (pocket expenditure) என்பது 29 சதவீதத்திற்கு வீழ்ச்சி அடைந்தது. உள்நோயாளிகளில் 82 சதவீதத்தினருக்கு பொது மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டது. சீனா, ஒரு மாபெரும் மருந்துத் தொழிற்சாலை கட்டமைப்பை (giant pharmaceutical industry) அமைத்திருக்கிறது. இது, உலகம் முழுதும் உள்ள மருந்துக் கம்பெனிகளுக்குத் தேவையான ரசாயன சோதனைப் பொருள்களை அளித்து வருகிறது. லாபத்தைக் குறியாகக் கொள்ளாமல் சோசலிச அமைப்புமுறையின் கீழ் திட்டமிட்ட காரணத்தினாலேயே இவை அனைத்தும் சாத்தியமானது.

The Dow Jones Industrial Average is displayed after the closing bell on the floor of the New York Stock Exchange in New York City on March 10, 2020 [Andrew Kelly/Reuters]

இந்திய நிலைமை என்ன?

இவற்றுடன் ஒப்பிடும்போது இந்தியாவின் நிலைமை மிகவும் மோசமாக இருக்கிறது. உலகில் மிகவும் அதிக அளவில் தனியார்மயப்படுத்தப்பட்ட சுகாதார அமைப்பு முறையைக் கொண்டுள்ள நாடுகளில் இந்தியாவும் ஒன்று. மோடி அரசாங்கத்தால் நிறைவேற்றப்பட்டுள்ள தேசிய சுகாதாரக் கொள்கை தனியார்மயத்தை ஊக்குவிக்கிறது. சுகாதாரத்திற்கான பொது செலவினம் என்பது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வெறும் 1 சதவீதமேயாகும். சுகாதாரத்தின் மீதான பொது செலவினத்தில் மக்கள் தங்கள் பைகளிலிருந்து செலவிடும் தொகை என்பது மொத்த செலவினத்தில் சுமார் 70 சதவீதமாகும். உள் நோயாளிகளில் 44 சதவீதத்தினர் மட்டுமே பொது மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுகிறார்கள். இந்தியாவில், பொது சுகாதார அமைப்புமுறை மக்களின் இயல்பான சுகாதாரத் தேவைகளைக்கூடத் தீர்த்துவைக்க இயலாத நிலையில் இருந்துவருகிறபோது, பொது சுகாதார அவசரகாலத்தில் அதனால் எப்படி இயங்கிட முடியும்?

கேரளம் விதி விலக்கு

தேசிய அளவில் இருந்திடும் நிலைமைகளிலிருந்து கேரளம் விதிவிலக்காக இருக்கிறது என்பது உண்மைதான். ஏற்கனவே, கேரளம், கொரானா வைரஸ் தொற்றை சமாளிப்பதில், உடனடியாகவும், திறமையாகவும் செயல்பட்டிருக்கிறது என்று பலரது பாராட்டுதல்களை வென்றெடுத்திருக்கிறது. அங்கே பல பத்தாண்டுகளாக பொது சுகாதார அமைப்புமுறை சிறப்பானமுறையில் வளர்த்தெடுக்கப்பட்டிருப்பதே இதற்குக் காரணமாகும். இந்த அமைப்புமுறை இப்போதைய இடது ஜனநாயக முன்னணி அரசாங்கத்தின்கீழ் மேலும் மேம்படுத்தப்பட்டு, சீர்படுத்தப்பட்டிருக்கிறது. இது 2017இல் ஆர்த்ரம் (Aardram) என்னும் சுகாதாரப் பணிக்குழுவை அமைத்திருக்கிறது. 

ஆரம்ப சுகாதார நிலையங்கள் அனைத்தும், கூடுதலான ஊழியர்கள் மற்றும் வசதிகளுடன் குடும்ப சுகாதார மையங்களாக மாற்றி அமைக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. வட்ட அளவில் மற்றும் மாவட்ட அளவில் உள்ள மருத்துவமனைகளும் மேம்படுத்தப்பட்டு, சுகாதார ஊழியர்கள் பயிற்சியும் மேம்படுத்தப்பட்டிருக்கிறது. மேலும், கேரளாவில் உணவுப் பாதுகாப்பு, கல்வி, வீட்டு வசதி, துப்புரவு வசதி, பாலின உறவுகளில் சமத்துவம் போன்ற தீர்மானகரமான சமூகக் காரணிகளும், கேரளாவில் சிறந்த சுகாதார அமைப்பு ஏற்பட்டிருப்பதற்கு முக்கியக் காரணங்களாகும். இந்தக் ‘கேரளா மாதிரி’ (‘Kerala model’), சோசலிச லட்சியத்தால் உத்வேகம் பெற்றுள்ள இடதுசாரிகளின் பங்களிப்பால் கொள்கைகளை வகுப்பதிலும், பொது செயல்களில் ஈடுபடுவதிலும் செல்வாக்கு பெற்றிருக்கிறது. 

முதலாளித்துவ அமைப்பின் தீய விளைவுகளின் காரணமாக அதனால் இன்றையதினம் கொரானா வைரஸ் தொற்றால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளிலிருந்து மக்களைப் பாதுகாக்கமுடியாமல் திண்டாடுவது அப்பட்டமாகத் தெரிகிறது. மாறாக அதேசமயத்தில், சோசலிசத்திற்கான அமைப்புமுறை வலுப்படுத்தப்பட்டிருக்கிறது. கோவிட்-19 தொற்று பிரச்சனை முடிவடைந்தபின்னர், இந்த அனுபவத்தைப் பயன்படுத்தப் போகிறோமா, இல்லையா என்பது நம்முடைய படைக்கொட்டடியில் சோசலிச மாற்றத்திற்கான போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வதைப் பொறுத்து அமைந்திருக்கிறது.

தமிழில்: ச. வீரமணி

தீக்கதிர்
2020.04.15

Tags: