தூக்கி எறியும் முகக்கவசங்கள் கொரோனாவை பரப்பும்: எச்சரிக்கும் ஆய்வு
கொரோனாவில் இருந்து நம்மை தற்காத்துக் கொள்ள முகக்கவசம் எந்த அளவுக்கு உதவுகிறதோ, அதேப்போல பயன்படுத்தப்பட்டு தூக்கி எறியும் முகக்கவசங்களால் கொரோனா பரவும் அபாயமும் இருப்பதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
பயன்படுத்திய முகக்கவசங்களை பொதுமக்கள் சாதாண குப்பைகளில் அப்படியே தூக்கி எறிந்து விடுகிறார்கள். சிலர் தெருக்களிலேயே வீசி விடுகிறார்கள் என்கிறார் துப்புரவுப் பணியாளர்.
சிலர், கார், இருசக்கர வாகனங்களில் செல்லும் போது, வாகனத்தின் வேகத்தை சற்று குறைத்துவிட்டு, தங்களது முகக்கவசங்களை தெருவோரத்தில் இருக்கும் குப்பைத் தொட்டிகளில் வீசுகிறார்கள். ஆனால் அது குப்பைத் தொட்டிக்குள் விழுவதில்லை. தெருவில்தான் விழுகின்றன என்கிறார் மற்றொரு துப்புரவு பணியாளர்.
இவ்வாறு பாதுகாப்பற்ற முறையில் தூக்கி எறியும் முகக்கவசங்கள், நிச்சயம் கொரோனாவைப் பரப்பும் காரணிகளாக மாறும் என்று எச்சரிக்கிறார்கள் நிபுணர்கள். இவ்வாறு தெருவில் வீசும் ஒரு முகக்கவசத்தில் கொரோனா தொற்று இருந்தால் அதன் மூலம் சுமார் 10 பேருக்கு கொரோனா பரவும் அபாயம் இருப்பதாகவும், ஒரு கொரோனா தொற்று இருக்கும் நபர் மூலம் சுமார் 416 பேருக்கு கொரோனா தொற்று பரவும் அபராம் இருப்பதாகவும் தெரிய வந்துள்ளது.
இவ்வாறு, கொரோனா பாதித்த ஒருவர் வீசும் ஒரு முகக்கவசத்தால் 10 பேருக்கு கொரோனா பரவும் என்றால்.. ஒவ்வொரு நாளும் பயன்படுத்தும் முகக்கவசங்கள், ஒவ்வொரு கொரோனா நோயாளி பயன்படுத்திய முகக்கவசங்களும் எத்தனை பேருக்கு கொரோனாவைப் பரப்பும் என்று கணக்கிட்டால் அது நிச்சயம் நிலைமையை மேலும் விபரீதமாக்கும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்படுகிறது.
ஒருவருக்கு கொரோனா இல்லை, பாதுகாப்புக்காகத்தான் முகக்கவசம் அணிகிறார், அவர் தூக்கி எறியும் முகக்கவசத்தால் எப்படி கொரோனா பரவும் என்று கேட்கலாம்..
அதாவது, அவர் அருகில் நின்றவர் இருமியோ அல்லது தும்மியோ இருந்தால், இந்த நீர்த்திவலை மூலம் முகக்கவசத்தில் கொரோனா தொற்றிக் கொண்டிருக்கலாம். அதைத் தூக்கி எறிந்தால் கொரோனா பரவும்.
அவ்வாறு இல்லாமல், சமீபத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட பலருக்கும், அதற்கான எந்த அறிகுறியும் இல்லை என்பதுதான்.
எனவே, ஒருவர் பாதிக்கப்பட்டவரோ இல்லையோ, முகக்கவசங்களை நாம் பாதுகாப்பான முறையில் அப்புறப்படுத்த வேண்டும், நமக்காக சுகாதாரப் பணியில் ஈடுபடும் துப்புரவுப் பணியாளர்களுக்கு நம்மால் நிச்சயம் கொரோனா பரவி விடக் கூடாது என்பதில் உறுதியாக இருக்க வேண்டும், நம்மையும் காப்போம், நமது சுற்றுப்புரத்தை சுத்தமாக வைத்திருக்க உதவும் துப்புரவுப் பணியாளர்களையும் காப்போம்.
அது மட்டுமல்ல, பயன்படுத்திய முகக்கவசங்களை இரண்டு துண்டாக துண்டித்து பாதுகாப்பாக தூக்கி எறிவதும் நல்லது. ஏன் என்றால் பயன்படுத்திய முகக்கவசங்களை சுத்தம் செய்து விற்பனை செய்யும் சில விஷமிகளும் இருக்கத்தான் செய்கிறார்கள்.