இதயம் திறந்து பேசுகிறேன்…..
–கவிதாயினி அமுதா பொற்கொடி
எத்தனையோ தொற்று நோய் உள்ளவர்களை தொட்டு சிகிச்சை அளிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளவர்கள் தான் மருத்துவர்கள்….,அது அவர்களின் கடமையும் கூட….
இருபத்துரெண்டு ஆண்டுகளுக்கு முன்……
ஒருமுறை அவசர சிகிச்சையில் கையுறை அணியாமல் ஹெப்படைடீஸ் B (Hepatitis B) நோயால் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணிற்கு இக்கட்டான சூழலில் பிரசவம் பார்த்ததில் …நோய் தொற்றி… அதனால் வாழ்வின் விளிம்பிற்கு சென்று வந்தவர் என் கணவர்…. அப்போது நானும் நிறைமாத கர்ப்பிணி… என் மகனை சுமந்துக் கொண்டிருந்தேன்….அப்போது ஹெப்படைட்டீஸ் B க்கு மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை…. சோதனைக் கட்டத்தில் தான் இருந்தது….
என் கணவரே என்னை அழைத்து , நான் பிழைப்பது கடினம்…. இரண்டு குழந்தைகளை நல்லபடியாக காப்பாற்று…. இப்படி உன்னை இடையில் விட்டுச் செல்வேன் என்று கனவிலும் நினைக்கவில்லை என்று கதறி அழுதார்…. அந்த நோயின் தாக்கம் பற்றி முழுதாய் எனக்குத் தெரியாது…. சில உறவுகள் என்னை அழைத்து அப்போதே துக்கம் விசாரிக்கத் தொடங்கிவிட்டார்கள்…. சில உறவுகள் வந்து பார்த்தால் தொற்றிவிடுமோ என்று வரவே இல்லை…..
கணவரின் இரத்தப் பரிசோதனைக்காக ஒரு சோதனை கூடத்திற்கு அழைத்துச் சென்றேன்…. பணியில் இருந்த எவரும் அருகில் வந்து இரத்தம் எடுக்க மறுத்துவிட்டார்கள்… உடன் வந்த என் அண்ணன் டாக்டர் கலைவாணன் தான் சோதனை குழாய் சிரஜ்ஜி எல்லாவற்றையும் வாங்கி வந்து, அவனே இரத்தம் எடுத்து சோதனைக்குக் கொடுத்தான்…..
ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காய் சேர்க்கப்பட்டார் …. தனியறை ஒன்று கொடுத்தார்கள்…. அறை மிகவும் அசுத்தமாக இருந்தது….. கணவரை வீல் சேரில் வைத்துவிட்டு… அறையை சுத்தம் செய்ய அங்கிருந்த பணியாட்களை அழைத்தேன்… கடைசியில் ஒரு வார்டு பாய் உதவி செய்ய முன் வந்தான்….
உள்ளே நுழைந்தவுடனேயே… சார்க்கு என்ன உடம்பிற்கு என்று கேட்டான்…ஹெப்பட்டைடீஸ் B என்றேன்…. உடனே அவன், அம்மா ஆறு மாதத்து முன் ஒரு மருத்துவர் இங்கு அட்மிட் ஆனார்… அவர் இறந்துவிட்டார் என்று சொன்னான்… இதயம் வெடித்துவிடும் போல் இருந்தது… அறை முழுவதையும் அடிவயிற்றை ஒரு கையால் தாங்கிய வண்ணம் தேய்த்து நானே கழுவினேன்…..அங்கிருந்த ஒரு தேவதை வடிவில் வந்த செவிலியர் மட்டுமே அனைத்து சோதனைகளையும் அருகில் நின்று செய்தார்….
கணவர் மருத்துவர் என்பதால் மருத்துவமனை டீன் தினமும் வந்து எட்ட நின்று எட்டிப் பார்த்துச் செல்வார்…. பெரியப்பா ஆலடி அருணா அப்போது சட்ட அமைச்சராக இருந்ததால்…. அப்போது தராமணியில் சோதனைக் கட்டத்தில் இருந்த ஹெப்பட்டைடீஸ் B க்கான கேப்ஸ்யூல் முதல் முறையாக என் கணவருக்கு கொடுக்கப்பட்டது …..
கிட்டத்தட்ட ஒரு மாதம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்…. தினமும் காலை அப்பா கீழாநெல்லி கரிசிலாங்கன்னி வாங்கி வருவார்… அம்மா அதை அரைத்துக் கொடுப்பார்…. காலை ஏழு மணிக்கு ஒரு கூடையில் கரும்புச்சாறு, சாத்துக்குடி சாறு ,இளநீர் இடியாப்பம், அரைத்த கீழாநெல்லி விழுது , மசித்த மஞ்சள் கரிசலாங்கண்ணி , மாற்று உடை, போர்வை என சுமந்து செல்வேன்…. எப்போதும் லிஃப்ட் வேலை செய்யாது… வயிற்றில் சுமையுடன் கனத்த இதயத்துடன் இதையும் சுமந்து தினமும் படியேறிச் செல்வேன் …..
என் வாழ்க்கையில் இருண்ட காலம் அது….நான் மட்டுமே உடனிருந்தேன்…. மகளைக்கூட அருகில் அழைத்துச்செல்ல என் கணவரே அனுமதிக்கவில்லை…..
நான் இருக்கிறேன் உனக்கு, மருமகனுக்கு ஒன்றும் ஆகாது என்று இறுதிவரை துணைநின்று எனக்கு கைக்கொடுத்த தெய்வம் என் பெரியப்பா ஆலடி அருணா அவர்கள் தான்…
உங்கள் கணவருக்கு எந்தத் தீயப்பழக்கங்களும் இல்லை …. நிச்சயம் குணமாக்கிவிடலாம் என்று நம்பிக்கை கொடுத்து சிகிச்சை செய்த Dr.பழனிச்சாமி அவர்களையும் என்னால் மறக்க முடியாது…..
குணமாகி கணவர் வீடு திரும்பிதோடு நின்றுவிடவில்லை எனது சோதனைக் காலம்.. எனக்கு பிரசவத்திற்கு இரண்டு நாட்கள் தான் இருந்தது… வழக்கமாக எனக்கு மாத பரிசோதனை செய்யும் தனியார் மருத்துவமனைக்கு பிரசவத்திற்காக அட்மிட் ஆகச் சென்றேன் …..கணவர் பாதிக்கப்பட்ட நோயை காரணம் காட்டி எனக்கு பிரசவம் பார்க்க மறுத்துவிட்டார் அந்த மருத்துவமனையின் சொந்தக்காரரான பிரபல மகப்பேறு மருத்துவர்….. மிகவும் துடித்துப்போனேன்….. எங்கு செல்வது என்று தெரியாமல் அழுது வண்ணம் எனது பெரிய அத்தையின் மருமகனும், எனக்கு சகோதர உறவுமான , என்மீது மிகுந்த அன்புகொண்ட Dr.தனபால் அவர்களை சென்று சந்தித்தேன்…. அவரை பார்த்தவுடன் , துக்கம் தாங்காமல் தேம்பித் தேம்பி அழுதேன்…. அண்ணாச்சி எனக்கு பிரசவம் பார்க்கமாட்டேன் என்று திரும்பி அனுப்பிவிட்டார்கள் அண்ணாச்சி…. இப்போது நான் என்ன செய்வது….. எனக்கு இப்போத வலி தொடங்கிவிட்டதே என்று பதறினேன்… வீட்டில் இத்தனை மருத்துவர்கள் இருக்கிறோம், நீ இப்படி பயப்படலாமா…? நான் நாளை காலை உன்னை எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் ஸ்பெஷல் வார்டு வாங்கி…சகல வசதியுடன் உனக்கு பிரசவம் பார்க்க வைக்கிறேன் என்று தைரியம் சொல்லி அனுப்பினார்…. ஆனால் அன்று இரவே அந்த தனியார் மருத்துவமனைக்கு தொடர்பு கொண்டு கடுமையாக அவர் ஏசியதன் பலன், அந்த பிரபல மகப்பேறு மருத்துவர் என்னிடம் மன்னிப்புக் கேட்டு, மீண்டும் எனக்கு அனைத்து சோதனைகளும் செய்து…. நோய் தொற்று இல்லை என்று உறுதி செய்தபின் பிரசவம் பார்த்தார்….. ஏதோ ஒரு குற்ற உணர்வு, பிரசவத்திற்கு பணம் வாங்க மறுத்துவிட்டார் …..
இதை ஏன் இந்த சந்தர்ப்பத்தில் பதிவிடுகிறேன் என்றால், ஒரு மருத்துவருக்கு தொற்று நோய் ஏற்பட்டால் ,அவர் குடும்பமே பாதிக்கப்படும்….
இந்த கொரோனா தொற்றுக் காலத்தில் பணி செய்யும் மருத்துவர்களின் குடும்பத்தை யோசிப்புப் பார்க்கிறேன்…. அவர்களுக்கு வயதான பெற்றோர்கள் இருக்கலாம் , இளம் மனைவி இருக்கலாம், அவள் கர்ப்பவதியாக இருக்கலாம், சிறு குழந்தைகள் இருக்கலாம்…. அவரை நம்பி எத்தனையோ கடமைகள் காத்திருக்கலாம்…. இருந்தாலும் அவர்கள் கடமை ஆற்றுகிறார்கள்…. அவருக்கு தொற்று ஏற்பட்டால் என்ன நேரிடும் என்பதை சமீபத்திய நிகழ்வுகள் மூலம் கண்கூடாகப் பார்த்தோம்…..
அன்புத் தோழமைகளே ஒரு மருத்துவரின் மனைவியாய், ஒரு மருத்துவரின் சகோதரியாய்
ஒரு மருத்துவரின் அத்தையாய்
ஒரு மருத்துவரின் தாயாய்….
கரம் கூப்பிக் கேட்டுக் கொள்கிறேன்…… இந்த கடுமையான காலக்கட்டத்தை நஷ்டமின்றி கடக்க…..தயவுசெய்து வீட்டிலேயே இருங்கள்…. மிகவும் அவசர அவசியம் என்றால் முகக் கவசம் அணிந்து செல்லுங்கள் !
(சென்னையைச் சேர்ந்த கவிதாயினி அமுதா என்பவர் முகநூலில் எழுதியது)