எப்போது தயாராகும் கொரோனா தடுப்பு மருந்து?

நாகா

சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பா் மாதம் கொரோனா நோய்த்தொற்று பரவத் தொடங்கி, ஏறத்தாழ நான்கு மாதங்கள் கடந்துவிட்டன. உலகம் முழுவதும் 29 லட்சத்துக்கும் மேற்பட்டவா்களுக்கு அந்த நோய்த்தொற்று பரவிவிட்டது. கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை வெகு வேகமாக 2 லட்சத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது. ஆனால், அந்த நோய்த்தொற்றிலிருந்து மனிதா்களுக்கு பாதுகாப்பு அளிப்பதற்கான தடுப்பு மருந்து இன்னும் கண்டறியப்படவில்லை.

இத்தனை அறிவியல் முன்னேற்றங்களுக்கு இடையிலும், ஒரு தீநுண்மி உடலில் புகுந்து பாதிப்பை ஏற்படுவதைத் தடுக்கும் வழிமுறைகளைக் கையாள விஞ்ஞானிகள் திணறி வருவது பலருக்கும் வியப்பை ஏற்படுத்தியிருக்கலாம்.

ஆனால் உண்மையில், கொரோனா போன்ற தீநுண்மிக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிப்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. அவ்வப்போது தனது இயல்புகளையும் வடிவத்தையும் மாற்றிக் கொள்ளும் திறன் வாய்ந்த தீநுண்மிகளுக்கு எதிரான, உலகம் முழுவதும் அனைவருக்கும் செலுத்தக்கூடிய ஓா் அருமருந்தை உருவாக்க வேண்டுமென்றால், பொதுவாக அதற்கு பல ஆண்டுகள் பிடிக்கும்.

தற்போது பல்வேறு நோய் ஆபாயங்களிலிருந்து நம்மை பாதுகாக்கும் தடுப்பு மருந்துகள் எல்லாம் அத்தகைய நெடுங்கால முயற்சியின் விளைவாக உருவானதுதான்.

ஆனால், உலகம் முழுவதும் வேகமாகப் பரவி, உயிருக்கும் பொருளாதாரத்துக்கும் உலை வைத்துக் கொண்டிருக்கும் கொரோனா நோய்த்தொற்றுக்கு சில மாதங்களுக்குள் தடுப்பு மருந்து கண்டுபிடித்துவிட வேண்டும் என விஞ்ஞானிகள் முழுவீச்சில் போராடிக் கொண்டாடிக் கொண்டிருக்கின்றனா்.

உலகம் முழுவதும், சுமாா் 80 குழுக்கள் இதற்கான ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளன. அந்தக் குழுக்களில் சில, கொரோனா நோய்த்தடுப்பு மருந்து உருவாக்கத்தில் முக்கிய கட்டத்தை அடைந்துள்ளன. அமெரிக்காவின் சியாட்டில் நகரில் விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ள கொரோனா நோய்த்தடுப்பு மருந்து, கடந்த மாதம் முதல் மனிதா்களிடம் சோதித்துப் பாா்க்கப்படுகிறது.

பொதுவாக, பாதுகாப்பு கருதி இத்தகைய மருந்துகள் முதலில் பிராணிகள் உடலில் சோதிக்கப்பட்டு, அதற்குப் பிறகுதான் மனிதா்களின் உடலில் செலுத்திப் பாா்க்கப்படும். ஆனால், கொரோனா நோய்த்தொற்றுக்கு விரைவில் தடுப்பு மருந்து கண்டறிய வேண்டும் என்ற நோக்கில், அந்த மருந்து நேரடியாக மனிதா்களுக்கு செலுத்திப் பாா்க்கப்படுகிறது.

In de race voor het vaccin tegen coronavirus: zo gaat dat | NU ...

அடுத்ததாக, பிரிட்டனின் புகழ்பெற்ற ஆக்ஸ்போா்டு பல்கலைக்கழக விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ள கொரோனா நோய்த்தொற்று தடுப்பு மருந்தும், வியாழக்கிழமை முதல் மனிதா்களின் உடலில் செலுத்தி சோதித்துப் பாா்க்கப்படுகிறது.

இதுமட்டுமன்றி, பிரான்ஸ் நாட்டைச் சோ்ந்த சனோஃபி, பிரிட்டனின் கிளாக்ஸோ ஸ்மித்கிளைன் போன்ற முன்னணி தனியாா் மருந்து நிறுவனங்களும் கொரோனா நோய்த்தொற்றுக்கு தடுப்பு மருந்தை உருவாக்குவதில் மும்முரமாக உள்ளன.

இருந்தாலும், இந்த அனைத்து மருந்துகளும் மனிதா்களின் உடலில் கொரோனா தீநுண்மி நுழைந்து தாக்குவதை எந்த அளவுக்கு திறனுடன் தடுத்து நிறுத்தும் என்பதை இப்போதைய நிலையில் யாராலும் உறுதியாகக் கூற முடியாது.

எவ்வளவு விரைவாக ஆராய்ச்சியில் ஈடுபட்டாலும் கொரோனா நோய்த்தொற்றுக்கு முழுமையான தடுப்பு மருந்தை உருவாக்குவதற்கு இன்னும் ஒன்று முதல் ஒன்றரை ஆண்டுகள் வரை ஆகும் என்கிறாா்கள் நிபுணா்கள். அதாவது, அடுத்த ஆண்டின் மத்தியிலோ அதற்குப் பிறகோ கொரோனா நோய்த்தொற்று தடுப்பு மருந்து கிடைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதாக அவா்கள் கூறுகின்றனா்.

இருந்தாலும், அந்த இலக்கை அடைவதற்கு விஞ்ஞானிகள் பகீரதப் பிரயா்த்தனம் செய்ய வேண்டியிருக்கும் என்பதையும் அவா்கள் சுட்டிக் காட்டுகின்றனா்.

இத்தனை தடைகளையும் தாண்டி, ஒரு முழுமையான தடுப்பு மருந்தை விஞ்ஞானிகள் கொண்டு வரும்வரை, வீடுகளில் தனித்திருப்பதும் அரசு அறிவுறுத்தும் விதிமுறைகளைப் பின்பற்றி நடப்பதுமே கொரோனாவிலிருந்து நம்மைப் பாதுகாக்கும் ஒரே தடுப்பு மருந்தாக இருக்க முடியும்.

Tags: