அயோத்திதாசர் – 175வது பிறந்த தினம்
அயோத்திதாசர் 1845-ம் ஆண்டு மே 20-ம் நாள் அன்றைய சென்னை மாகாணத்தில் உள்ள தேனாம்பேட்டை ஆயிரம் விளக்கு பகுதியில் பிறந்தார். காத்தவராயன் எனும் இயற்பெயர் கொண்ட இவர், தனக்கு தமிழ் கற்பித்த வல்லகாலத்தி அயோத்திதாசர் எனும் தன் ஆசிரியர் பெயரையே தன் பெயராக மாற்றிக்கொண்டார். இவரின் தந்தை சித்த மருத்துவராகவும் ஹாரிங்டன் துரையிடம் சமையல்காரராகவும் இருந்தார். அயோத்திதாசர் இரட்டைமலை சீனிவாசனின் தங்கை தனலட்சுமி என்பவரை மணந்தார். ஏற்றத்தாழ்வுமிக்க சமூகத்தைக் கண்டு வெகுண்டெழுந்து சமூகச் சீர்திருத்தப் பாதையில் தனது பயணத்தைத் தொடங்கினார். சாதி ஒழிப்பையும் சமூக விடுதலையையும் தனது லட்சியமாக கொண்டிருந்தார். 1914-ம் ஆண்டு மே 5-ம் நாள் அயோத்திதாசர் மறைந்தார்.
அயோத்திதாசர், மிக முக்கியமான தமிழகச் சிந்தனையாளர்களுள் ஒருவர். நவீன தமிழ் வரலாற்றை அறிந்துகொள்ள விரும்பும் எவருக்கும் இன்றியமையாதவர். 1999-ம் ஆண்டில் அயோத்திதாசர் எழுத்துகள் கண்டுபிடிக்கப்பட்டு, தொகுத்து வெளியிடப்பட்டன. அதற்குப் பிறகே அவரின் பெயரும் சிந்தனைகளும் இங்கு படிப்படியாகப் பரவின.
அவரைப் பற்றியும் அவர் சிந்தனைகளைப் பற்றியும் அன்பு பொன்னோவியம், ஞான.அலாய்சியஸ், டி.தருமராஜன், ரவிக்குமார், ராஜ்கௌதமன், ப.மருதநாயகம், பிரேம் ஆகிய சிந்தனையாளர்கள் எழுதியுள்ளனர். தமிழ்ப் புனைகதை பரப்பில் ஜெயமோகனின் ‘வெள்ளையானை’ நாவலிலும், விநாயகமுருகனின் `வலம்’ நாவலிலும் அவரொரு பாத்திரம். திரைப்பட இயக்குநர் பா.இரஞ்சித் இயக்கிய மெட்ராஸ், கபாலி, காலா படங்களில் அவர் உருவம் பின்புலப் பிம்பமாகியிருக்கின்றன. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கொள்கை முன்னோடிகளில் ஒருவராக, கட்சி சுவரொட்டிகளில் இடம்பெற்று அவர் உருவம் வெகுஜனமயமாகியிருக்கிறது.
அயோத்திதாசரை, சமூக அரசியல் போராளியாகக் கருதியே, அவர் பற்றிய பேச்சுகள் அதிகமிருந்து வருகின்றன. அதில் தவறில்லை. அதற்கிணையாக அவரின் பங்கு பண்பாட்டுரீதியிலும் இருக்கிறது. அவர் தமிழ்ச் சமூகத்தின் வரலாற்றை மாற்றி எழுத முற்பட்டார். வேறுவழிகளில் கிடைத்திராத சான்றுகளையும் ஆய்வுக் கண்ணோட்டத்தையும் கொண்டிருந்தார். ஏட்டுச் சுவடிகளைப் படிக்கத் தெரிந்திருந்த அவர், அவை அச்சுக்கு மாறியபோது நடந்த மாற்றங்களைக் கண்டு தலையீடு நடத்திவந்தார். 19-ம் நூற்றாண்டின் இறுதியில் சென்னையில் எழுச்சிபெற்ற பௌத்த மறுமலர்ச்சியின் முன்னோடிகளுள் ஒருவரானார்.
அயோத்திதாசர் இரண்டு அடையாளங்களில் இங்கு நினைவுகூரப்படுகிறார். ஒரு தளத்தில், அவர் ஒரு பௌத்தச் சிந்தனையாளர். மற்றொரு தளத்தில், அவர் ஒரு தமிழ்த்தேசிய அல்லது தமிழ் அடையாள முன்னோடியாவார். அவர், 1907 முதல் 1914 வரை நடத்திய வார ஏட்டின் பெயர் `தமிழன்’. திராவிடன், தமிழன் போன்ற சொற்களை அரசியல் அடையாளங்களாகக் கையாண்ட முன்னோடிகளுள் ஒருவர். இவ்வாறு பௌத்தர், தமிழன் என்ற இரண்டு அடையாளங்களையும் அவர்மீது வைத்து புரிந்துகொள்கிறோம். ஆனால் இங்கு இவ்விரண்டும் நிலவிவரும் வரலாற்றில் ஒன்றுக்கொன்று முரணானவை. ஆனால், இரண்டு அடையாளங்களையும் ஒருசேரப் பெற்று விளங்கமுடிவது சாத்தியம்தானா என்ற கேள்வியே இங்கு சுவாரஸ்யமானதாகிவிடுகிறது.
ஏனெனில், தற்காலத்தில் நிலவிவரும் தமிழ் வரலாறு என்பது பௌத்த சமண சமயங்களை வெளியிலிருந்து வந்த புறச்சமயங்களாகப் பார்க்கவே சொல்லித் தந்திருக்கிறது. இன்னும் சொல்லப்போனால், பௌத்த சமண சமயங்களால் கறைபட்டிருந்த தமிழை, சைவ – வைணவ பக்திப் பாடல்களே மீட்டெடுத்தன என்பதாகவே அந்த வரலாறு சொல்லியிருக்கிறது. ஆனால், அத்தகைய வரலாற்றை அவர் நம்பவில்லை. இந்த வரலாறு நன்கு தேர்ந்தெடுக்கப்பட்ட தகவல்களை வைத்து அறைகுறையாகப் புனையப்பட்டது என்றார். இது தத்துவரீதியான முரண்பாடு என்று கூறினார். இங்கு, தமிழ் மொழி பெயரால் இம்முரண்பாடு சொல்லித் தரப்படுகிறதே ஒழிய, அது மொழிக்கான போராட்டமல்ல என்றார்.
மதத்துவேசத்தையும் சாதியாசாரத்தையும் வைத்துக்கொண்டு மொழியின் பெயரால் மட்டுமே நடத்தப்படுகிற மீட்புவாதங்கள் பயனற்றவை என்பது அவர் பார்வை. இருபதாம் நூற்றாண்டில் அறிமுகமான நவீன சமத்துவக் கருத்துகளுக்கான இந்தியத் தொன்மையாகப் பௌத்தத்தை பல்வேறு சிந்தனையாளர்களும் தலைவர்களும் புரிந்திருந்தனர். சுவாமி விவேகானந்தர், மகாகவி பாரதியார், லட்சுமிநரசு, கோசாம்பி, சிங்காரவேலர், ராகுலசாங்கிருத்தியாயன், பெரியார் ஆகியோர் பௌத்தம் குறித்த சாதகமான பார்வைகளைப் பகிர்ந்து வந்தனர். நவீன இந்தியா பற்றிய நேருவின் கனவுகளைக் கட்டமைத்த விதத்தில் புத்தரைக் குறிக்கும் ஆசிய ஜோதி என்ற பெயராலேயே மறைந்த முன்னாள் பிரதமர் நேருவும் குறிப்பிடப்பட்டார். எல்லாவற்றுக்கும் மேலாக சட்ட மாமேதை அண்ணல் அம்பேத்கர் பௌத்தத்தை தழுவவே செய்தார்.
இவ்வாறு பௌத்தத்தின் சமத்துவப் பண்பை எடுத்துக்கொண்ட அயோத்திதாசர், அதை உள்ளூர்ப் பண்பாட்டிலும் தமிழ் வரலாற்றிலும் தேட ஆரம்பித்தார். அவ்வாறு அவர் தேடியபோது கண்டடைந்த கருத்து, அறம். தமிழ் இலக்கியத்தில் அறம் என்ற கருத்தும், அற இலக்கியங்களும் பெருமளவு பௌத்த – சமண தத்துவங்கள் சார்ந்ததாகவே இருப்பதை விளக்கினார். இத்தகைய அறக்கருத்துகளை வழங்கிய தத்துவங்களை அந்நியமாகப் பார்க்கும் நிலை ஏன் வந்தது என்பதே அவர்மூலம் நமக்கு எழும் கேள்வி. பௌத்த – சமண அடையாளங்களை உள்வாங்கவும் வீழ்த்தவும் செய்த பிற அடையாளத்தினர் தங்களைத் தக்கவைக்கவும் பௌத்த சமண மரபினர் மீண்டும் தலையெடுக்காமல் செய்யவும் மொழி என்ற உணர்ச்சிபூர்வக் கருவியைக் காட்டி எழுதிக்கொண்ட வரலாறே இன்றைய வரலாறு என்றார். எனவே, தமிழ்ச்சமூக வரலாற்றை பௌத்தக் கண்ணோட்டத்தில் மாற்றி எழுத முற்பட்டார். தமிழ்மொழியும் தமிழர் ஒற்றுமையும் வீழ்ந்துபோனதற்கு சாதிபேதமும், அதை மறுக்கிற வரலாற்றை கேள்வியின்றி ஏற்றுக்கொண்டதும்தான் காரணம் என்று குற்றம்சாட்டினார்.
பௌத்த தத்துவத்துக்கும் தமிழ்மொழி அமைப்புக்கும் இடையே தொடர்பிருக்கிறது என்று கூறிய அவர், தமிழறியாத ஒருவர் பௌத்த மெய்யியலை அறிந்து கொள்ளமுடியாது என்றார். குறிப்பிட்ட மதம், குறிப்பிட்ட மொழி சார்ந்து தேசியவாத கருத்துகள் தோன்றி பிறரை ஒதுக்கும் இன்றைய அரசியல் புரிதல் அல்ல, அவருடையது. குறிப்பிட்ட தத்துவம், பண்பாடு சார்ந்தே மக்கள் குழுவை அவர் யோசித்தார். மொழி தனியானது அல்ல; அது பரந்த அப்பண்பாட்டின் அங்கம்.
பௌத்தம் மட்டுமல்ல, பல்வேறு பண்பாட்டைக் கொண்ட இந்தியச் சமூகத்தில் எதுவும் எல்லா இடத்திலும் ஒரே மாதிரியானதாக மாறாமல் இயங்கியிருக்க வாய்ப்பில்லை. எந்தவொன்றும் அவை இயங்கும் பகுதிகளின் பின்னணிக்கேற்பவே இயங்கும். பௌத்தமும் தமிழ்ப் பகுதிக்குரிய அம்சங்களோடு இயங்கியிருக்கும். அவ்வாறு தமிழ்ப்பகுதி சான்றுகளைவைத்து உள்ளூர்ப் பின்புலத்தோடு அயோத்திதாசர் விளக்கினார். இந்த உள்ளூர் தொடர்பு பௌத்தத்தை வெளியிலிருந்து வந்ததாகக் காட்டாமல் அது உள்ளிக்குள்ளிருந்து இயங்குவதாகவே காட்டியது. பௌத்தம் பற்றிய இந்தப் புரிதலே மற்ற சிந்தனையாளர்களிடமிருந்து அவரைத் தனித்துவமாக்கியது. அதனாலேயே அயோத்திதாசரின் பௌத்தம், ஆய்வாளர்களால் `தமிழ் பௌத்தம்’ அல்லது `உள்ளூர் பௌத்தம்’ என்றழைக்கப்படுகிறது.
அவருடைய பௌத்தம் பற்றிய விளக்கங்களில் குறள், மணிமேகலை, ஔவைப் பாடல்கள், சித்தர் பாடல்கள், கல்வெட்டுத் தகவல்கள், உள்ளூர் வழக்காறுகள் எனப் பலவும் கலந்த எழுதுமுறையே இருக்கும். தமிழ்ப்பகுதி சார்ந்த இந்தச் சான்றுகளை நீக்கிவிட்டால், அவரின் பௌத்தம் இல்லை. அதேபோல இந்தச் சான்றுகளை எடுத்துச் சென்று தமிழ்ப்பகுதிக்கு வெளியே இருந்த பௌத்தத்துக்குப் பொருத்தமுடியாது. இவ்வாறு தமிழும் பௌத்தமும் கலந்த வரலாற்றை அவர் எழுதினார். குறளுக்கும், ஔவைப் பாடல்களுக்கும் உரை எழுதினார்.
தமிழிலக்கிய மரபில் பௌத்த சமணம் பெற்றிருந்த தொடர்பை தொடர்ந்து விளக்கி வந்தார். சங்கம் என்ற அமைப்பு, பௌத்த சமணர்களுடையதாக இருந்ததைச் சுட்டிக்காட்டினார். சங்கப் பாடல்களைச் சமய மரபு சாராததாக இப்போது பார்த்தாலும் அவற்றிலேயே பௌத்த – சமணப் புலவர்களும் அவர்தம் கருத்துகளும் கலந்திருப்பதைப் பார்க்கிறோம். சங்கப் பாடல்களை சமணப் புலவர்களே தொகுத்தனர் என்பது ஆய்வாளர்கள் பலரின் கருத்து. சங்கம் மருவிய அறநூல்கள் 18, ஐம்பெருங்காப்பியங்கள், ஐஞ்சிறுங்காப்பியங்கள், தொல்காப்பியத்தைத் தவிர்த்தாலும் மற்ற இலக்கண நூல்கள், நிகண்டுகள், உரையாசிரியர்கள் என்று பௌத்த சமணத்தொடர்பில் நூல்கள் பிறந்துள்ளன. இப்பங்களிப்புகளைத் தவிர்த்துவிட்டால், தமிழில் மிஞ்சப்போவது பக்திப் பாடல்களும் சில பிற்கால புராணங்களும் மட்டுமே. அவ்வாறு பார்த்தால், தமிழின் நெடிய இலக்கிய பாரம்பர்யமே கேள்விக்குள்ளாகும். எனவே, தமிழின் நெடிய இலக்கியத் தொடர்ச்சியைச் சமண – பௌத்த தொடர்பிலிருந்து நீக்கிவிட்டு பார்க்க முடியாது. இவ்வளவு பங்களிப்புகள் வழங்கிய மரபை கடந்த 100 ஆண்டு காலத்துக்குள் எழுதப்பட்ட நவீன இலக்கிய வரலாற்று நூல்கள் அந்நியமானதாகக் கூறி நம்மை நம்பவைத்திருப்பதில் ஏதோ ஒரு விடுபடல் நேர்ந்திருக்கிறது. எனவே, நம் வரலாற்றைத் தொடர்ந்து மறுவாசிப்பு செய்துகொண்டே இருக்கவேண்டும். அந்தத் திசையில் அயோத்திதாசரின் வரலாறு எழுதும்முறை முக்கியத் தூண்டுகோலாக அமைந்திருக்கிறது.
எனவே, அயோத்திதாசரைப் பேசும்போது தமிழைவிடுத்து பௌத்தத்தை மட்டும் பேசுவதோ… பௌத்தத்தை மறைத்துவிட்டு மொழிநோக்கில் மட்டும் பேசுவதோ சாத்தியமில்லை. ஒரே நேரத்தில் ஒருவர் தமிழ் அடையாளத்தோடும், பௌத்த நோக்கோடும் இருப்பது சாத்தியம் என்பதையே அயோத்திதாசரின் வாழ்வும் சிந்தனைகளும் கூறுகின்றன. அவருடைய பிறந்த நாள் இன்று.
-ஸ்டாலின் ராஜாங்கம்
விகடன்