ஆபத்தான கட்டத்தில் உலகம்

img

“உலகம் ஒரு புதிய ஆபத்தான கட்டத்திற்குள் நுழைந்திருக்கிறது. நீண்ட நாட்களுக்கு வீட்டிற்குள்ளேயே மக்களால் முடங்கியிருக்க வும் முடியாது என்ற உண்மை நம்மை துரத்துகிறது; அரசாங்கங்கள் தங்களது பொருளாதாரங்களை தொடர்ந்து முடக்கி வைத்திருக்க முடியாது என்பதை புரிந்துகொள்ள முடிகிறது; ஆனால் அதே நேரத்தில் வைரஸ் மிக வேகமாக பரவுகிறது” என்று அபாய ஒலி எழுப்பியிருக்கிறார் உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் டெட்ரோஸ் அதனோன். உலகின் பாதிக்கும் குறைவான நாடுகளே கொரோனா பாதிப்பு விகிதம் குறைந்து கொண்டி ருக்கிறது என்று கூறியுள்ளன; மறுபுறத்தில் 80க்கும் அதிகமான நாடுகள் – குறிப்பாக இந்தியா, சிலி, துருக்கி, மெக்ஸிகோ, பாகிஸ்தான், வங்க தேசம் உள்ளிட்ட – மக்கள் தொகை அதிகம் உள்ள நாடுகள் தொடர்ந்து கடந்த இரண்டு வாரங்களு க்கும் மேலாக கடும் பாதிப்பை சந்தித்து வருகின்றன.  உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள விவரங்களின்படி ஒரே நாளில் உலகம் முழுவதும் 1.5லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்படுவது முதல் முறையாக கடந்த வாரம் நிகழ்ந்துள்ளது.

உலக அளவிலான கொரோனா பாதிப்பை துல்லியமாக பதிவு செய்து வரும் வேர்ல்டோ மீட்டர், கடந்த வெள்ளி வரையிலான  ஒரு வாரத்தில் கொரோனா பரவல் பதிவான தன் அடிப்படையில் கடைசியாக ஒரே நாளில் அதிகபட்சம் 1.81லட்சம் பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கிறது. மே மாத துவக்கத்துடன் ஒப்பிடும்போது இது 70 சதவீதம் அதிகமாகும். மே மாத துவக்கத்தில் நாளொன்றுக்கு சுமார் 80ஆயிரம் பேர் முதல் சுமார் 70லட்சம் பேர் வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டு வந்தனர். அது படிப்படியாக அதிகரித்து உச்சக்கட்டத்தை எட்டிவருகிறது. மரண விகிதமும் நாளொன்றுக்கு 5ஆயிரம் பேருக்கு மேல் என்ற எண்ணிக்கையை எட்டியுள்ளது. கடந்த மாத துவக்கத்தில் இது சற்று வீழ்ச்சி அடைவது போல் தெரிந்தது. எனினும் அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளில் பாதிப்பும், மரணமும் வீச்சாக அதிகரித்து வருவதால் உலக அளவிலான மரண விகிதம் ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருகிறது.

கொரோனா பரவல் காரணமாக பெரும் பாலான நாடுகளில் இரண்டாவது முறையாக ஊரடங்கை நோக்கிச் செல்லும் அபாயம் எழுந்துள்ளது. இது கோடிக்கணக்கான மக்களின் அன்றாட வாழ்வில் வரலாறு காணாத துயரத்தை  ஏற்படுத்தியுள்ளது. மனிதகுலத்தின் இந்த மிகப் பெரிய சுகாதார நெருக்கடியை எதிர்கொள்ளும் திராணியின்றி முதலாளித்துவ உலகம் திணறித் தவித்துக் கொண்டிருக்கிறது. உலக முதலாளித்துவ பொருளாதாரம் நெருக்கடியின் உச்சத்தில் நிற்கிறது. வரலாறு காணாத வீழ்ச்சியின் விளிம்பில் தள்ளாடுகிறது. அதேவேளை, எப்படியேனும் லாபத்தை தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என்ற முயற்சியில், கொரோனா தொடர்பான விதிமுறைகளை காற்றில் பறக்கவிடுகிறது. இதன்மூலம் ஒரே நேரத்தில் கோடானுகோடி எளிய மக்களின் ஆரோக்கியத்தையும் வாழ் வாதாரங்களையும் அடித்துப் பறிக்கிறது. இதற்கு எதிரான கோப அலையும் வெடிக்கக் காத்திருக்கிறது.

-தீக்கதிர்
ஜுன் 22, 2020

Tags: