“வீரம் விளைந்தது”
நிக்கொலாய் ஒஸ்திரோவ்ஸ்க்கின்ய்
தமிழில்: எஸ்.ராமகிருஷ்ணன்
பலதரப்பட்ட வாசகர்களின் பாராட்டுகளை வெகுசிறப்பாக பெற்ற ஒரு உலகத்தரம் வாய்ந்த இலக்கிய படைப்பு “வீரம் விளைந்தது”.
புதியதாக இந்நூலை அறிமுகப்படுத்தியதற்கு எதுவும் இல்லை என்றே கருதுகிறேன். எனினும் இந்நூல் என்னுள் ஏற்படுத்திய தாக்கங்கள் அளவிடமுடியாதது.
ஓராண்டிற்கு முன்னர் வாங்கிய நூலாக இருந்தபோதிலும் தற்போதைய ஊரடங்கு காலமே இந்நூலை படிப்பதற்கு வாய்ப்பளித்தது எனலாம். புத்தகத்தின் கனமே அதற்கான காரணமாக இருந்தது என்பதே உண்மை.
624 பக்கங்களில் அமைந்த இந்நூல் அளவில் மட்டும் கணமல்ல; மனதில் உண்டாக்கும் பலதரப்பட்ட உணர்வுகளின் கணமும் அலாதியானது தான்.
இரண்டு பாகங்களாக உள்ள இந்நூலைப் பற்றி இரண்டு பக்கங்களில் கூறுவது என்பது பெருங்கடலின் வளங்களை ஒரு தண்ணீர் பாட்டிலில் நிரப்புவதற்கு சமமானதாகவே இருக்கும் என்றே எண்ணுகிறேன்.
1915 ஆம் ஆண்டு முதல் 1932 ஆம் ஆண்டு வரையிலான சோவியத் இளைஞர்களின் வாழ்வை தனது வாழ்வின் வழியாக படம்பிடித்து காட்சிப்படுத்தி உள்ளார் நாவலாசிரியர். அதனை அழகுத் தமிழில் எளிய நடையில் மொழிபெயர்ப்பு செய்துள்ளார் எஸ்.ராமகிருஷ்ணன் அவர்கள்.
இந்நூலின் ஆசிரியரான நிக்கொலாய் ஒஸ்திரோவ்ஸ்க்கிய் தான் இந்நாவலின் கதாநாயகனான பாவம் கர்ச்சாகின். அவர் இளவயது முதல் தொடங்கும் வாழ்வின் சுய வரலாறாகவே இந்நாவல் பரந்து விரிந்து காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
1917-ஆம் ஆண்டு நடைபெற்ற ரஷ்யப் புரட்சியை மையமாக கொண்டு செஞ்சட்டை இயக்கத்தின் எழுச்சியை மிக தத்ரூபமாக உணர்ச்சிபொங்க இந்நூலில் வடிவமைத்துள்ளார் நூலாசிரியர்.
இளவயதில் பாவெலின் எண்ண ஓட்டத்தை பிரதிபலிக்கும் காட்சியில் தொடங்கி இறுதியில் இந்நூலை எழுதும் வரையிலான வாழ்வின் ஒவ்வொரு அங்குலத்தையும் இன்றைய காலகட்டத்தில் ஒவ்வொரு இளைஞரும் கட்டாயம் அறிந்து கொள்ள வேண்டிய மாபெரும் வரலாறு என்றே கூறலாம்.
சிறுவயதில் செய்யப்படும் சேட்டை பள்ளிப்படிப்பை முறியடித்து விடுகிறது. அதன் பிறகு கவனக்குறைவாக தூக்க கலக்கத்தில் செய்யக்கூடிய சிறு தவறு (?) இளவயது வேலையை விட்டு நீக்கியது என்று ஆரம்பமாகும் அத்தியாயத்திலேயே முதலாளித்துவ வர்க்கத்தின் அவலத்தை படம்பிடித்து காட்ட முனைகிறார்.
தொழிலாளி வர்க்கத்தின் அவலத்தினூடையே அவர்களின் சோம்பேறித்தனத்தையும் சூதாட்டக் கேளிக்கைகளையும் சுட்டிக் காட்டவும் தவறவில்லை எனலாம். அதிலும் குறிப்பாக பேக்கரி பணியிலுள்ள அபலை பெண்களின் வாழ்வைச் சூறையாடும் கயவர்களின் காம களியாட்டங்கள் வேதனையையும் விரக்தியையும் அளிப்பதாக இருந்தது எனலாம்.
இளம் வயதில் ஒரு அடங்காப்பிடாரியாகவே காட்சியளிக்கும் ஒரு இளைஞன், புரட்சியின் பால் உந்தப்பட்டு மாபெரும் இயக்கத்தை வழிநடத்தக் கூடிய முக்கிய பொறுப்பு வகிக்கும் வகையில் உயரும் வாழ்வோட்டத்தை தெள்ளத்தெளிவாக தெளிவுபடுத்துகிறது இந்நாவல்.
வளர் இளம் பருவத்தில் உண்டாகக்கூடிய காதல் வாழ்வு நிகழ்வுகள் இன்றைய திரைப்படத்திற்கு எல்லாம் ஒரு முன்னுதாரணமாக உள்ளது எனலாம். முதலாளி வர்க்கத்தை சேர்ந்த காதலியின் மனதை கவர்வதற்காக தனது நடை உடை பாவனைகளை மாற்ற துணியும் பாங்கு காதல் ரசத்தை சிந்துவதாகவே உள்ளது.
தனக்கு சண்டைப்பயிற்சி கற்றுத்தந்த ஆசானை காப்பாற்றுவதற்காக அவன் எடுக்கும் துணிவு, அதனால் அவன் அடையும் சிறைவாசம் என ஒவ்வொரு காட்சியும் திரைப்படக் காட்சியை பார்ப்பது போன்று பிரமிப்பை அளிக்கும் வண்ணம் இந்நூலில் அமைந்துள்ளது.
இளம் வயதில் புரட்சியின் பால் உண்டான ஈடுபாடு காரணமாக ஆளும் மன்னராட்சிக்கு எதிராக முதலாளி வர்க்கத்திற்கு எதிராக
வர்க்கப் போராட்டத்தில் ஈடுபட்டு போராடத் துணியும் இளைஞர்களின் வாழ்வியல் எதார்த்தங்களை தோலுரித்து காட்டும் வண்ணம் இந்நாவலில் காட்சிகள் விரவிக்கிடக்கின்றன எனலாம்.
சிறைச்சாலையில் பாலியல் துன்புறுத்தலுக்காக அடைக்கப்பட்டுள்ள பெண்ணின் கதையும் அப்பெண் பாவெல்மீது மோகங்கொண்டு காம வயப்படும் நிகழ்வும் அதனை அவன் நிராகரிக்கும் நிகழ்வும் ஒரு சிறுகதை வடிவில் அமைந்துள்ளது. அந்நிகழ்வு நம் மனதில் ஆழ்ந்த அனுதாபத்தைத் தூண்டி உள்ளார்ந்த அன்பையும் உயர்ந்த சிந்தனையையும் விதைக்கும் வண்ணம் அமைந்துள்ளது. தன் காதலி மேல் கொண்ட நேசமே இங்கே பிரதானப்படுத்தப்படுகிறது என எண்ணும்போது உண்டாகும் காதல் மயக்கம் பரவசத்தைத் தூண்டுகிறது.
சிறையிலிருந்து பாவெல் மீளும் காட்சி நகைச்சுவை வடிவிலமைந்த ஒரு வித்தியாசமான அதிர்ஷ்டக் காற்று அவன் வாழ்வில் வீசிய நிகழ்வாகவே அமைந்துள்ளது எனலாம்.
இதன்பின்னர் பாவெல் கம்சமோலில் ஓர் அங்கத்தினராகி இளம் கம்யூனிஸ்ட் செம்படையில் இணைந்து புரட்சியில் பங்கெடுக்கும் காட்சிகள் யாவும் திரைப்படங்களில் நாம் காணும் சண்டைக் காட்சிகளுக்கு நிகரானதாகவே இந்நாவலில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
இங்ஙனம் முதல்பாகம் முழுவதிலும் பாவெலின் இளமைப்பருவம், அவனது காதல் வாழ்க்கை, தாயுடனான அந்நியோன்யம், சகோதரனான ஆர்த்தியோமின் நட்பு, தாய் மண்ணின் பாசம் என இந்நாவல் தொடங்கி புரட்சியின் பால் அவன் கொண்டுள்ள ஈடுபாடு என பரந்து விரிந்து செல்கிறது. அதிலும் குறிப்பாக பாவெல் “அக்கார்டியன்” இசைக்கருவி வாசிப்பதில் நிபுணத்துவம் பெற்றுள்ளதாக விவரிக்கும் காட்சி கண்களினாலே இசையை பருகும் அனுபவத்தை தரும் துள்ளலோடு அமைந்துள்ளது எனலாம்.
புரட்சிக்குப் பின் உக்ரைனிய பகுதியானது செம்படை இயக்கமான கம்யூனிஸ்ட் பக்கம் வருகிறது. இப்பொழுது தான் நாட்டை நிர்வகிக்கக் கூடிய மாபெரும் பொறுப்பு உள்ளது என்பதை உணர்ந்து மேற்கொள்ளும் முயற்சிகளும் அடையும் சிரமங்களுமாக நாவல் பயணிக்கத் தொடங்குகிறது. ஒரு ஆட்சியை சிறப்பாக நடத்தக்கூடிய உன்னத முறைகளை மிக மிக எதார்த்தமான நடையில் உள்ளது உள்ளபடி தெளிவுபடுத்தும் முறையில் காட்சிகள் பரந்து விரிந்து செல்கின்றன.
சிங்கிஸ் ஐத்மாத்தவ் எழுதிய “முதல் ஆசிரியர்” என்ற நாவலில் படிக்கும்போது புதிய வார்த்தையாக தோன்றிய “கம்சமோல் உறுப்பினர்” என்பதற்கு மிகச்சிறந்த விளக்கமாக இந்நூல் அத்தாட்சியாக உள்ளது எனலாம்.
“கம்யூன் அமைப்பு” அங்கத்தினராக செம்படை இயக்கத்தினர் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் யாவும் அளப்பரிய இயலா வண்ணம் மிக மிக பிரம்மாண்டமான முறையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது எனலாம். அதிலும் குறிப்பாக வருங்காலத்தில் வரக்கூடிய குளிர்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அதிகப்படியான விறகு தேவைப்படுகிறது. அதனை விரைந்து கொண்டு வருவதற்காக புதிய ரயில்பாதை அமைக்கும் பணி முடுக்கிவிடப்படுகிறது.
ரயில் பாதை அமைத்து அதன்வழியே காட்டிலிருந்து விறகு வெட்டி வந்து குளிர் காய நகர மக்களுக்கும் ரயில்களை இயக்க ரயில்வே துறைக்கும் பயன்படுத்துவதற்கு இளம் கம்யூனிஸ்ட் படையினர் மேற்கொள்ளும் முயற்சிகள் கண்களில் ரத்தம் சிந்த வைக்கக் கூடிய வகையில் அமைந்துள்ளது. சிந்தும் ரத்தமும் உறைபனியில் உறையும் வண்ணம் மனத்தை ரணமாக்கி ஒருவித விரக்தியை உண்டாக்கும் வண்ணம் அமைந்துள்ளது.
ஜனவரி 1 க்குள் விறகு வெட்டும் அந்த மகத்தான பணியை முடிக்கும் பொறுப்பை மிக மிக கடும் சிரத்தையோடு போரில் ஈடுபடும் உச்சக்கட்ட உத்வேகத்துடன் இயற்கை உபாதைகளான கடும் குளிரையும் மழையையும் தாங்கி இளைஞர்கள் பாடுபடுகின்றனர். இந்நிலையில் கொள்ளைக்கூட்டத்தார் அச்சுறுத்தல் போன்ற பல்வேறு செயற்கை உபாதை நிலைகளையும் தாண்டி வெறும் ரொட்டிகளையும் பழங்களையும் மட்டுமே உண்டு அவர்கள் மேற்கொள்ளும் முயற்சி நம்மை மயிர் கூச்செறிய செய்யும் வண்ணம் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிகழ்வினால் நோய்வாய்ப்பட்டு இறந்ததாக கருதப்படும் பாவெல் மீண்டும் குணமாகி தெளிவு பெற்று கம்ஸமோல் உறுப்பினராகி நாட்டின் வளர்ச்சிக்கு மேற்கொள்ளும் முயற்சிகள் யாவும் இன்றைய இளைஞர்கள் நாட்டின் மீது செலுத்த வேண்டிய அக்கறையை பறைசாற்றும் வண்ணம் மிக நேர்த்தியாக இந்நாவலில் பின்னப்பட்டுள்ளது எனலாம்.
முன்னதாக நடைபெற்ற போரினால் உண்டான முதுகு தண்டுவட விபத்தின் காரணமாக தனது கால் செயலிழக்கும் நிலையை எட்டும் வரையில் அதைப் பற்றித் துளியும் கவலைப்படாமல் இளைஞர்களுக்கான பயிற்சி வகுப்புகளை நடத்துதல், பல்தரப்பட்ட நூல்களைப் படித்தல், இயக்கப் பணிகளை மேற்கொள்வது என இரவு பகல் பாராது உழைக்கும் பாவெலின் கடும் சிரத்தை நம் கண்ணீரை துளிர்க்கச் செய்யும் வண்ணமே உள்ளது எனலாம்.
ஒரு குறிப்பிட்ட அளவிற்கு மேல் வளர்ந்து புகழ் எய்தும் இளைஞர்களுக்கு எண்ணற்ற காதலிகள் கைகூடுவது உலக இயல்பு. பாவெல் மட்டும் அதில் என்ன விதிவிலக்கா??? ஆனால் அவ்வாறு வரும் காதல் வேண்டுகோள்கள் யாவற்றையும் தேசத்தின் நலன் கருதி நிராகரிக்கும் துணிச்சல் இன்றைய இளைஞர்களுக்கு எல்லாம் ஒரு அவசியமான பாடம் என்று உறுதியாகக் கூறலாம்.
அதிலும் குறிப்பாக இளம் கம்யூனிஸ்டுகள் மற்றும் கம்யூன் அமைப்பில் உறுப்பினராக இருக்கக்கூடியவர்கள் “பெண்களிடத்தில் கண்ணியம் காக்க வேண்டும்” என்பதில் கடும் சிரத்தையாக கவனம் மேற்கொண்டு செயல்பட வேண்டும் என்பதை உறுதிப்படுத்துகிறது இந்நாவல்.
பெண்ணியத்திற்காக பாவெல் எடுக்கும் நடவடிக்கைகள் யாவும் நமக்கு கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மீது இனம்புரியாத ஒருவித பற்றுதலையும் மெய்யன்பையும் ஊட்டுவதாக உள்ளது எனலாம்.
தனது தாயின் சினேகிதியின் குடும்பத்திற்காக பாவல் எடுக்கக்கூடிய முயற்சிகளும் பின்னர் அதுவே அவனுடைய வாழ்வில் ஒரு வித தாக்கத்தை ஏற்படுத்தும் அத்தியாயம் சோகம் நிரம்பிய சுவையுடன் தொடங்கி காதல் ரசம் சொட்டும் நிலையை அடைந்து இறுதியில் கம்யூனிச சித்தாந்தத்தை விதைத்து பிரமிக்கத்தக்க வகையில் அமைந்துள்ளது.
மாபெரும் வீரனாகவும் காரிய கமிட்டி உறுப்பினராகவும் திகழும் பாவெல் கடைசிவரை நாட்டிற்காகவும் அமைப்பிற்காகவும் சேவை செய்யும் துணிச்சலுடன் போராடும் பாங்கு போற்றுதலுக்குரியதே. இத்தகு மேன்மைமிகு பாவெல், “முழுவதும் உடல் பலவீனப்பட்டு இனி எந்த வித பணிக்கும் லாயக்கில்லை என முத்திரை குத்தப்பட்டு ஓய்வூதியம் பெரும் அவலம்”, நம் கண்களை ரணமாக்க காரணமாகவே உள்ளது எனலாம்.
இதனால் மனம் வெதும்பி தற்கொலை செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டு பின்னர் படித்த நூல்களின் வாயிலாக பெற்ற அறிவினைப் புதுப்பித்து மீண்டும் புதிய வழியில் வாழ்வைத் தேடத் துணியும் பாவெலின் அசாத்திய துணிச்சல் போற்றத்தக்கது. அதிலும் படிக்கும் வாசகர்கள் நினைப்பதற்கு மாறாக தமக்கைகளில் ஒருவரை தனது மனைவியாக தேர்ந்தெடுக்கும் முடிவு மர்மமானதே.
உச்சகட்டமாக, முதுகு தண்டுவடத்தில் உண்டான சிறு விபத்து கால்களையும் கைகளையும் மட்டும் முடமாக்காமல் கண்களையும் பறிக்கும் கோரத்தாண்டவ நிலை நம் நெஞ்சுறுதியையே குலைக்கும் வண்ணமே உள்ளது.
இந்நிலையிலும் பாவெல் இயக்கப் பணி ஆற்ற வேண்டும் என்ற எண்ணத்துடன் கண்பார்வை அற்ற நிலையிலும் எழுத்துக்களை நேராக எழுதவும் “ஸ்டென்ஸில்” அமைப்பை பயன்படுத்தி தனது வாழ்நாள் சரித்திரத்தை நாவலாக படைக்கத் துணிந்துள்ளார் என்று அறியும் பொழுது நம்மால் கண்ணீர் சிந்தாமல் நிச்சயமாக இருக்க இயலாது எனலாம்.
பக்கத்துவீட்டு பதின்பருவ மங்கையின் வாயிலாகவே இந்நூல் பாவெல் (நிக்கொலாய்) சொல்லசொல்ல கேட்டு எழுதுப்பட்டுள்ளது
நாவலின் இறுதியில் வரும், “எனக்குப் பொறி தகர்ந்து விட்டது; இப்பொழுது ஒரு புதிய ஆயுதத்தை தரித்துக்கொண்டு அவன் போரணிக்கும் வாழ்வுக்கும் திரும்பி விட்டான்” என்ற வரியானது நிதர்சனமான உண்மையாகவே கருத வேண்டிய வாய்ப்பு உள்ளது எனலாம்.
லெனின் அவர்களின் மரணத்தை காட்சிப்படுத்திய விதம் மிகமிக ரசிக்கத்தக்க வகையில் அமைந்திருந்தது எனலாம். ஒரு தந்தி அடிக்கும் ஊழியர் வாயிலாக லெனினின் மறைவை வெளிப்படுத்திய பாங்கு இனம்புரியாத உன்மத்த நிலையை தூண்டி சோகம் இழையோடும் வண்ணம் நேர்த்தியாக தந்தியடிப்பதாக அமைந்திருந்தது எனலாம்.
இவ்விதமாக இந்நாவல், இளமைத் துள்ளலுடன் தொடங்கி அன்பு, பாசம், காதல், பரிவு, அழுகை, வீரம், விவேகம், பெண்ணியம், துரோகம், ஆணாதிக்கம், துணிச்சல், தைரியம், சேவை, இரக்கம் என பண்பட்ட உணர்ச்சிகளை பிரதிபலிக்கும் வண்ணம் பலதரப்பட்ட பாத்திரப்படைப்புகளுடன் மிகமிக உன்மத்த நிலையில் எழுதப்பட்ட மாபெரும் படைப்பாகவே உள்ளது எனலாம்.
பொதுவாக எந்த ஒரு நாவலையும் அதிகபட்சம் 5 நாட்களுக்குள் வாசிக்க முயல்வது எனது வழக்கமாக இருந்துள்ளது. இந்நாவலின் ஒவ்வொரு அத்தியாயத்தை படித்து முடித்த போதும் மனம் இனம்புரியாத ஒருவித பாரத்தையும் துக்க மனநிலையையும் அடையும் வண்ணம் இருந்தது என்பதே உண்மை. நாவலைத் தொடர்ந்து படிப்போமா? வேண்டாமா? என்று எண்ணக்கூடிய ஒரு அசாத்திய மனநிலையை உண்டாக்கியது என்றும் கூறலாம்.
எவ்வளவுக்கு எவ்வளவு வீரத்தையும் துணிவையும் போதித்து இருக்கிறதோ அவ்வளவுக்கவ்வளவு கண்ணீர் சிந்த வைக்கும் காட்சிகளும் இருந்ததாகவே எனக்குள் ஒரு பிரமிப்பை உண்டாகிவிட்டது எனலாம். கண்ணீரினூடே துளிர்ப்பதுதானே வீரமும் துணிவும்.
இத்தகு சிறப்புமிகு நாவல் எனக்கு மட்டும் படிப்பதற்கு மேலும் ஒருவித சிரமத்தையும் உண்டாக்கிய அம்சம் ஒன்று இந்நூலில் உண்டு. அது என்னவென்றால் “ரஷ்ய மொழி பெயர்கள்”.
“பெயரில் என்ன இருக்கிறது?” என்று நினைக்கலாம். பொதுவாக இந்நாவலில் பெயர்கள் யாவும் குடும்ப பெயர்களுடன் சொல்லப்பட்டுள்ளன. ஒரு இடத்தில் முதல் பெயரும் (பாவெல்) மற்றோரிடத்தில் துணை பெயரும் (கர்ச்சாகின்) சொல்லப்பட்டுள்ளதால் அவற்றை நினைவு கூறுவதில் சற்று சிரமம் இருப்பதால் ஒருவித அயற்சி உண்டாவதை தவிர்க்க இயலவில்லை.
பல்வேறுபட்ட பாத்திரப்படைப்புகள் நிரம்பிய நாவல் என்பதால், இதற்காக திரும்பத்திரும்ப, “யார் அந்த கதாபாத்திரம்?” என்று புரிந்து கொள்வதற்காக புத்தகத்தை திரும்ப திரும்ப திருப்பிப் பார்க்கும் ஒரு சூழல் இருந்தது என்பதை ஒரு குறையாக நான் கருதுகிறேன். மன்னிக்கவும்.
நல்லதொரு படைப்பு. நிச்சயம் வாசியுங்கள். குறிப்பாக இளைஞர்கள் ஒவ்வொருவரும் வாசிக்க வேண்டிய அற்புதமான படைப்பு. “என்னடா வாழ்க்கை இது?” என்று சலிப்புடன் ஒவ்வொருவரும் வாழ்வதாகவே தோன்றுகிறது. “நமது வாழ்வில் வருவதெல்லாம் பிரச்சனையே இல்லை. எந்தவித சலிப்பும் தேவையில்லை” என்று எண்ணத்தை விதைக்கக் கூடிய மாபெரும் படைப்பே இந்த “வீரம் விளைந்தது”.
மீண்டும் ஒரு முறை வாசிக்க வேண்டும் என்ற எண்ணத்தை விதைத்து உள்ளது இந்நாவல். காலம் கனியும் என நம்புகின்றேன்.
வாய்ப்புள்ளோர் வாசிக்க முயலுங்கள்.
நன்றி.
“வீரம் விளைந்தது”
நிக்கொலாய் ஒஸ்திரோவ்ஸ்க்கின்ய்
தமிழில்: எஸ்.ராமகிருஷ்ணன்
கார்முகில் பதிப்பகம்
பக்கங்கள்: 624