ஒரு புரட்சியாளரின் நூறாண்டுகள்…
இந்தியாவின் மகத்தான சுதந்திரப் போராட்ட வீரர்களில் நம்மோடு வாழ்ந்து கொண்டிருக்கிற வெகுசிலரில் ஒருவர் தோழர் என்.சங்கரய்யா. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அவரை நேர்காணல் நிகழ்வுக்காக சந்திக்கச் சென்ற போது, பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக பொதுவெளியிலும் சிறையிலும் தலைமறைவாக இருந்தும் நடத்திய மாபெரும் போராட்டங்களை உணர்ச்சிமிகு கதை போன்று அவர் கூறக் கூற வியப்போடு கேட்டுக் கொண்டிருந்தோம்.
தூத்துக்குடி நகரின் வீதிகளில் மக்கள் வெள்ளம் போல் திரண்டு அணிவகுத்துச் சென்று கொண்டிருந்தார்கள். தமிழகத்தின் பல பகுதிகளில் இத்தகைய பேரணி நடந்து கொண்டிருந்தது. தூத்துக்குடியில் ஒரு சின்னஞ்சிறிய பையன் ஓடோடி வந்து அந்தப் பேரணியோடு இணைந்து கொண்டான். அவர்களோடு சேர்ந்து உணர்ச்சிமிகு முழக்கங்கள் எழுப்பினான்.அந்த நிகழ்வைப் பற்றி எங்களிடம் விவரிக்கையில் அவரது கண்கள் பளிச்சிட்டன.
“அந்தப் போராட்டத்தைப் பற்றி உங்களுக்கு தெரிந்திருக்காது. அல்லது இன்றைக்கு அதை உணர முடியாது” என்று எங்களிடம் கூறிய அவர், “ஆனால், மாவீரன் பகத்சிங்கை தூக்கிலேற்றிய அந்த கொடிய நிகழ்வுக்கு எதிராக உணர்ச்சிப் பிழம்பாக எழுந்த கோபாவேச அலை, தமிழகத்தில் சுதந்திரப் போராட்டத்தின் ஒரு முக்கிய திருப்புமுனையாக அமைந்தது. பகத்சிங்கிற்காக, அவரது தோழர்களுக்காக தமிழக மக்கள் ஆவேசத்தோடு கிளர்ந்தெழுந்தார்கள். அவர்களது துயர முடிவுக்காக கண்ணீர் வடித்தார்கள்” என்று விவரித்தார்.
“அந்தப் பேரணியில் பங்கேற்ற போது எனக்கு 9 வயது” என்றார் அவர்.
இன்றைக்கு, 2020 ஜூலை 15 அன்று, 99வது வயதை அவர் எட்டியிருக்கிறார். ஆனாலும் இந்த வயதிலும் கூட, அவரை சுதந்திரப் போராட்ட வீரராக மாற்றிய நாட்களின் அதே உத்வேகமும் உணர்ச்சிப்பூர்வமான ஆவேசமும் கொண்டவராகத் திகழ்கிறார்; தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்த ஒரு புரட்சியாளர், ஒரு எழுத்தாளர், ஒரு பேச்சாளர் மற்றும் ஒரு பகுத்தறிவுச் சிந்தனையாளர் என்ற அத்துனை அம்சங்களும் இன்றளவும் சற்றும் குறையாமல் அவரிடம் குடிகொண்டிருக்கின்றன.
1947 ஆகஸ்ட் 14 அன்று தான் பிரிட்டிஷ் சிறைக்கூடத்திலிருந்து அந்த மனிதர் விடுவிக்கப்பட்டார். “அன்றைய தினம் மத்திய சிறைச்சாலைக்கு வந்து நீதிபதி எங்களை விடுதலை செய்வதற்கான உத்தரவினைப் பிறப்பித்தார். மதுரை சதி வழக்கிலிருந்து நாங்கள் விடுவிக்கப்பட்டோம். நான் மதுரை மத்திய சிறைச்சாலையிலிருந்து வெளியில் வந்து, அப்படியே சுதந்திரப் பேரணியில் கலந்து கொண்டேன்”.
நூற்றாண்டை எட்டிக் கொண்டிருக்கும் தோழர் என்.சங்கரய்யா இப்போதும் அறிவுத்தளத்தில் உற்சாகமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். இப்போதும் உரைகளையும், உரையாடல்களையும் நிகழ்த்திக் கொண்டிருக்கிறார். 2018ஆம் ஆண்டில் நாங்கள் அவரை நேர்காணலுக்காகச் சந்திக்கச் சென்ற போது, சென்னை புறநகர் பகுதியான குரோம்பேட்டையில் உள்ள அவரது இல்லத்திலிருந்து, மதுரையில் நடைபெறும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் – கலைஞர்கள் சங்கத்தின் மாநாட்டில் உரையாற்றுவதற்காக புறப்பட்டுக் கொண்டிருந்தார். இந்திய விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்ற காரணத்தால் தனது பட்டப்படிப்பை முழுமையாக முடிக்க முடியாமல் போன அந்த மனிதர், பல்வேறு அரசியல் நிகழ்வுகள், பல்வேறு புத்தகங்கள், பிரசுரங்கள் மற்றும் செறிவுமிக்க கட்டுரைகளின் ஆசிரியரும், வழிகாட்டியும் ஆவார்.
நரசிம்மலு சங்கரய்யா, மதுரை அமெரிக்கன் கல்லூரியில் பி.ஏ. வரலாறு பாடம் படித்துக் கொண்டிருந்தார். படிப்பை முடிக்கும் தருவாயில் அவர் இருந்த போது, 1941ஆம் ஆண்டு கல்லூரி இறுதி ஆண்டு தேர்வுகள் நடப்பதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்பு திடீரென கல்லூரிக்கு வரவில்லை. “நான் அப்போது கல்லூரி மாணவர் பேரவையின் இணைச் செயலாளராக இருந்தேன்” என்கிறார். கல்லூரி மாணவர்களில் ஒரு தலைசிறந்த மாணவர் இவர், கல்லூரி வளாகத்தில் ஒரு கவிதை மன்றத்தை உருவாக்கியவர். அதுமட்டுமல்ல, கல்லூரி கால்பந்தாட்ட குழுவிலும் இடம்பெற்றிருந்தார். அந்த காலக்கட்டத்தில் பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிரான சுதந்திரப் போராட்ட இயக்கங்களில் மிகத் தீவிரமாக செயல்பட்டார்.
“எனது கல்லூரி நாட்களில் நான் இடதுசாரி சார்புள்ள சித்தாந்தத்தை பேசுகிற பலருடன் நட்பு கொண்டிருந்தேன். இந்தியாவுக்கு விடுதலை கிடைக்காமல் சமூக சீர்திருத்தம் என்பது முழுமைபெறாது என்பதை நான் புரிந்து கொண்டிருந்தேன்” என்று தமது உறுதிப்பாட்டை விளக்கினார். 17 வயதில் அவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினராக ஆனார். (பின்னர் கட்சி தடை செய்யப்பட்டது. அதன் விளைவாக தலைமறைவு வாழ்க்கைக்குள் சென்றார்.)
அமெரிக்கன் கல்லூரி தோழர்கள் மற்றும் நிர்வாகத்தின் அணுகுமுறை சாதகமான முறையில் இருந்ததை அவர் நினைவுகூர்கிறார். “அமெரிக்கன் கல்லூரி நிர்வாகத்தின் இயக்குநரும், சில பேராசிரியர்களும் அமெரிக்கர்கள்; மற்றவர்கள் தமிழர்கள். அவர்கள் நடுநிலை வகித்தனர் என்றாலும், பிரிட்டிசாருக்கு ஆதரவாக இருக்கவில்லை. மாணவ செயல்பாட்டாளர்கள் செயல்படுவதற்கு அவர்கள் அனுமதித்தார்கள்”. “1941 இல் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழக மாணவர் மீனாட்சியை, அவர் பிரிட்டிஷ் எதிர்ப்பு போராட்டங்களில் பங்கேற்றார் என்பதற்காக போலீசார் கைது செய்ததை எதிர்த்து மதுரையில் நாங்கள் பெரும் போராட்டத்தில் ஈடுபட்டோம். அப்போது ஒரு பிரசுரத்தை வெளியிட்டோம். இதையறிந்து போலீசார் எங்களது விடுதி அறைகளை சோதனையிட்டனர். பிரசுரம் ஒன்றை வைத்திருந்ததற்காக எனது நண்பர் நாராயணசாமியை கைது செய்தனர். இதை எதிர்த்தும் பெரும் போராட்டம் நடத்தினோம்” என்று மாணவ போராட்ட வாழ்க்கையை அசைபோடுகிறார் சங்கரய்யா.
“அதற்குப் பிறகு, 1941 பிப்ரவரி 28 அன்று பிரிட்டிஷ் அரசு என்னை கைது செய்தது. கல்லூரி இறுதியாண்டு தேர்வு நடப்பதற்கு 15 நாட்களுக்கு முன்பு இந்த சம்பவம் நடந்தது. நான் அதற்குப் பிறகு கல்லூரிக்கு திரும்ப முடியவில்லை. எனது பி.ஏ.படிப்பை முடிக்கவே முடியவில்லை”.
தான் கைது செய்யப்பட்ட அந்த நினைவுகளைப் பற்றி கூறுகிற போது, பல்லாண்டுகளுக்குப் பிறகு, தனது முதல் கைதை நினைத்து பார்த்ததாக பெருமிதத்தோடு குறிப்பிட்ட அவர், “இந்தியாவின் சுதந்திரத்திற்காக சிறைக்கு செல்வதை நினைத்து நான் பெருமைபட்டேன். விடுதலைப் போராட்டத்தில் நாம் கட்டாயம் பங்கேற்க வேண்டும் என்பது மட்டும்தான் எனது உணர்வாக இருந்தது” என்கிறார். சிறைக்கு செல்வது எதிர்கால வேலைவாய்ப்பை கெடுத்துவிடும் என்ற கவலையெல்லாம் இல்லை. அந்த காலகட்டத்தில் புரட்சிகர இளைஞர்களின் விருப்பத்திற்குரிய முழக்கம் ஒன்று இருந்தது என்கிறார். “நாங்கள் தேடுபவர்கள் அல்ல. சுதந்திரத்தின் வீரர்கள்”. “மதுரை சிறையில் 15 நாட்கள் அடைத்து வைக்கப்பட்டிருந்தேன். பின்னர் வேலூர் சிறைக்கு மாற்றப்பட்டேன். அந்த சமயம் தமிழ்நாடு, ஆந்திரப்பிரதேசம், கேரளா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த பலர் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்கள்”.
“தோழர் ஏ.கே.கோபாலன் (கேரளத்தின் மகத்தான கம்யூனிஸ்ட் தலைவர்) திருச்சியில் ஒரு நிகழ்ச்சியை நடத்தியதற்காக கைது செய்யப்பட்டிருந்தார். கேரளாவைச் சேர்ந்த தோழர் இம்பிச்சி பாவா, புதுச்சேரி தோழர் வ.சுப்பையா, தோழர் ஜீவானந்தம் ஆகியோரும் அந்த நிகழ்சசியில் பங்கேற்றதற்காக கைது செய்யப்பட்டிருந்தார்கள். இவர்கள் அனைவரும் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார்கள். சிறைக்குள், சென்னை மாகாண அரசு எங்களை இரண்டு குழுக்களாக பிரிக்கும் நோக்கத்துடன் சூழ்ச்சி செய்தது. அதில் ஒரு குழுவிற்கு, சிறையில் கிரிமினல் குற்றம் புரிந்து அடைக்கப்பட்டிருப்பவர்களுக்கு மட்டும் அளிக்கப்படக்கூடிய ‘சி’ பிரிவு ரேசன் அளிப்பது என முடிவு செய்தது. இந்த நடைமுறைக்கு எதிராக 19 நாட்கள் சிறையில் நாங்கள் பட்டினிப் போராட்டம் நடத்தினோம். போராட்டத்தின் 10வது நாளில் அரசு நிர்வாகம் எங்களை இரண்டு குழுக்களாகப் பிரித்தது. அப்போது நான் ஒரு இளம் மாணவனாக இருந்தேன்”.
சிறைக்கு ஆய்வு செய்ய வந்த சிறைத்துறை இன்ஸ்பெக்டர் ஜெனரல், சங்கரய்யா அடைக்கப்பட்டிருந்த அறையைப் பார்த்து ஆச்சரியமடைந்தார். ஒரு இளம் மாணவன், மக்சிம் கார்க்கியின் தாய் நாவலைப் படித்துக் கொண்டிருந்ததது தான் அவரது ஆச்சரியத்திற்கு காரணம். “உண்ணாவிரதப் போராட்டத்தின் 10வது நாளில் இருக்கிறாய், இந்த தருணத்திலும் கூட இலக்கியம் படித்துக் கொண்டிருக்கிறாய். அதுவும் கார்க்கியின் தாய் நாவல் என்று அவர் ஆச்சரியத்தோடு கேட்டார்” என தனது கண்கள் விரிய, மெல்லிய புன்னகையோடு தனது நினைவுகளை ஆர்வத்தோடு கூறிக்கொண்டிருந்தார் தோழர் என்.சங்கரய்யா.
அதேவேளையில் மற்றொரு தனிச்சிறையில் இதர புகழ்பெற்ற தலைவர்களும் அடைக்கப்பட்டிருந்தார்கள். “காமராஜர், பட்டாபி சீத்தாராமையா மற்றும் பலர். எனினும் அந்த காங்கிரஸ் தலைவர்கள், நாங்கள் நடத்திய உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்கவில்லை. அவர்கள் சொன்னார்கள், நாங்கள் மகாத்மா காந்தியின் அறிவுரையின்படியே செயல்படுவோம் என்று; மகாத்மா காந்தியின் அறிவுரை என்னவென்றால் சிறைக்குள் எந்தப் போராட்டமும் நடத்தக்கூடாது என்பதுதான். எனினும் எங்களது போராட்டம் காரணமாக அரசு சில சலுகைகளை அறிவித்தது. 19வது நாளில் எங்களது உண்ணாவிரதப் போராட்டத்தை நிறுத்திக் கொண்டோம்.” “சில நாட்கள் கழித்து எங்களில் 8 பேர் மட்டும் ராஜமந்திரி சிறைக்கு மாற்றப்பட்டு அங்கே தனிவளாகத்தில் அடைக்கப்பட்டோம்”. “1942 ஏப்ரல்வாக்கில் அரசு, சிறையிலிருந்த அனைத்து மாணவர்களையும் விடுதலை செய்தது – என்னை தவிர. தலைமை சிறை வார்டன் வந்து, சங்கரய்யா யார் என்று கேட்டார். பிறகு, உன்னை தவிர அனைவரையும் விடுதலை செய்ய உத்தரவு என்று தெரிவித்தார். ஒரு மாதகாலம் என்னை தனிமைச் சிறையில் அடைத்தார்கள். 8 பேர் இருந்த அந்த சிறை வளாகத்தில் நான் மட்டும் இருந்தேன்!”
இவ்வளவு கடுமையான தண்டனை கிடைக்கும் அளவிற்கு என்ன குற்றச்சாட்டு?
“முறையான குற்றச்சாட்டு எதுவும் இல்லை. வெறுமனே சிறையில் அடைத்தார்கள். ஆனால் அவர்கள் சொன்ன காரணங்கள், தேசவிரோதகாரியம், கம்யூனிஸ்ட் கட்சி நடவடிக்கைகளில் பங்கேற்றது என்பதுதான். 6 மாதத்திற்கு ஒருமுறை இதை சொல்லி நோட்டீஸ் அளிப்பார்கள். சம்பந்தப்பட்ட கமிட்டிக்கு நாங்கள் பதில் அளிப்போம். ஒவ்வொருமுறையும் அந்த கமிட்டி அதை நிராகரித்துவிடும்” என்று சிரிக்கிறார் சங்கரய்யா. இந்த இடத்தில் ஒன்று சொல்ல வேண்டும்: “ராஜமுந்திரி சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்ட எனது நண்பர்கள், கல்கத்தாவிலிருந்து அந்த சமயத்தில் திரும்பிக் கொண்டிருந்த காமராஜரை ராஜமுந்திரி ரயில்நிலையத்தில் சந்தித்தார்கள். அவர், நான் விடுதலை செய்யப்படவில்லை என்பதை அறிந்து உடனடியாக சென்னை மாகாண முதன்மை செயலாளருக்கு ஒரு கடிதம் எழுதினார். என்னை வேலூர் சிறைக்கு மாற்றுமாறு அவர் கேட்டுக் கொண்டிருந்தார். இதுதொடர்பாக எனக்கு அவர் ஒரு கடிதம் எழுதியிருந்தார். ஒரு மாதம் கழித்து வேலூர் சிறைக்கு மாற்றப்பட்டேன். அங்கு 200 தோழர்களுடன் இருப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது”.சிறையிலிருந்த போது ஒருமுறை, பின்னாட்களில் இந்தியாவின் குடியரசுத் தலைவரான ஆர்.வெங்கட்ராமனை சங்கரய்யா சந்தித்தார். அதைப் பற்றியும் நினைவுகூர்கிறார். “வெங்கட்ராமனும் சிறையிலிருந்தபோது, 1943 இல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்தார். பின்னாளில் அவர், காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். எப்படியிருப்பினும் நாங்கள் பல்லாண்டுகள் ஒன்றுபட்டு பணியாற்றினோம்”.
பல்வேறு பிரச்சனைகளில் அவர்களுக்கு கடுமையான வேறுபாடுகள் இருந்தபோதிலும், “காமராஜர் கம்யூனிஸ்ட்டுகளின் ஒரு சிறந்த நண்பராக இருந்தார். மதுரையிலும் சரி, திருநெல்வேலியிலும் சரி, அவருடன் சிறையில் ஒரே அறையில் இருந்தவர்கள் பலரும் கம்யூனிஸ்ட்டுகள். நான் காமராஜரோடு மிக நெருக்கமாக இருந்தேன். சிறையில் எங்களுக்கு நேர்ந்த அநீதியை முடிவுக்கு கொண்டு வர அவர் ஓரிரு முறை தலையிடவும் செய்தார். ஆனால் சிறையில் காங்கிரசாருக்கும் கம்யூனிஸ்ட்டுகளுக்கும் இடையே கடுமையாக வாதம் நடக்கும். குறிப்பாக ஜெர்மனிக்கும் சோவியத்துக்கும் இடையே போர் வெடித்த போது இந்த வாதப் பிரதிவாதங்கள் தீவிரமடைந்தன “என நினைவு கூர்கிறார் சங்கரய்யா.
அமெரிக்கன் கல்லூரியில் சங்கரய்யாவுடன் படித்தவர்கள் மற்றும் மாணவர் இயக்கத்தில் செயலாற்றியவர்கள் பட்டப்படிப்புக்கு பிறகு மிகப் பெரிய அதிகாரிகளாக, பிரபலமானவர்களாக பதவிகளுக்கு வந்தார்கள். ஒருவர் தமிழக அரசின் முதன்மைச் செயலாளராக ஆனார். மற்றொருவர் நீதிபதியானார். மற்றொருவர் பல பத்தாண்டுகளுக்கு முன்பு ஒரு முதலமைச்சரின் செயலாளராக பணியாற்றிய ஐஏஎஸ் அதிகாரி. நாடு விடுதலையடைந்த பிறகும் சங்கரய்யா அடிக்கடி சிறைக்குச் சென்றார். 1947க்கு முன்பு மதுரை, வேலூர், ராஜமுந்திரி, கண்ணூர், சேலம், தஞ்சாவூர் என எல்லா சிறைகளிலும் அடைக்கப்பட்டவர் அவர்.
1949 ல் கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்டவுடன் அவர் மீண்டும் தலைமறைவு வாழ்க்கைக்கு சென்றார். 1950ல் கைது செய்யப்பட்டு ஓராண்டு காலம் சிறையில் அடைக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார். 1962ல் இந்தியா – சீனா யுத்தம் நடந்தபோது, மற்ற கம்யூனிஸ்ட்டுகளோடு சங்கரய்யாவும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். ஏழு மாத காலம் சிறையிலிருந்தார். 1965ல் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மீது மீண்டும் ஒரு அடக்குமுறை ஏவப்பட்டது. இந்த சமயம் கைது செய்யப்பட்டு 17 மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டார். விடுதலைக்குப் பிறகு அவரைக் குறி வைத்து கைது செய்த ஆட்சியாளர்கள் மீது அவருக்கு தனிப்பட்ட கசப்புணர்வு ஏதுமில்லை. அவரைப் பொருத்தவரை இவை அனைத்தும் அரசியல் போராட்டங்களே தவிர தனிப்பட்ட பிரச்சனையல்ல. அவரது போராட்டம் இன்றும் இந்த பூமியில் அவலங்களுக்கு எதிரானதாக தொடர்கிறது. சற்றும் தனிப்பட்ட பலனுக்கானதாக அல்ல.
இத்தகைய உந்துசக்தியை, தமது வாழ்வின் திருப்பு முனையை, விடுதலைப் போராட்டத்தின் ஈர்ப்புமிக்க நினைவுகளை அவர் எங்கிருந்து பெற்றார்? “1931 மார்ச் 21 அன்று பிரிட்டிஷ் அரசு பகத்சிங்கை தூக்கிலிட்டது. 1945ஆம் ஆண்டு இந்திய தேசிய ராணுவத்தின் போராட்டம் துவங்கியது. 1946ஆம் ஆண்டு பிரிட்டிஷ் ராயல் இந்திய கப்பற்படையின் சிப்பாய்கள், மாலுமிகள் மாபெரும் எழுச்சியில் ஈடுபட்டனர். இவைதான் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டத்திற்குள் ஈர்த்த மாபெரும் நிகழ்வுகள்.” இதில் துவங்கி பல பத்தாண்டுகள் இடதுசாரி இயக்கத்துடனான ஈடுபாடும், உறுதிப்பாடும் ஆழமாக வளர்ந்தது. தனது வாழ்வையே மக்களுக்காக அர்ப்பணித்தார். கட்சியின் முழுநேர ஊழியரானார்.“1944ல் தஞ்சாவூர் சிறையிலிருந்து நான் விடுவிக்கப்பட்டேன். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை மாவட்டச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டேன்.சங்கரய்யா, மதுரையில் வெகு மக்களை அணிதிரட்டுவதில் மிக முக்கியமான தலைவராக திகழ்ந்தார். 1940களின் பாதியில் மதுரை, இடதுசாரிகளின் மிகப் பெரிய தளமாக விளங்கியது என நினைவுகளில் மூழ்கினார்.
“1946ல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் பி.சி.ஜோஷி மதுரைக்கு வருகை தந்தார். அப்போது ஒரு லட்சம் மக்கள் பங்கேற்ற மாபெரும் கூட்டம் நடத்தினோம். அதில் அவர் உரையாற்றினார். மதுரையில் இதுபோல பல பொதுக்கூட்டங்களில் பெரும் எண்ணிக்கையிலான மக்கள் திரண்டு வந்தார்கள்.” இப்படி கம்யூனிஸ்ட் கட்சியின் செல்வாக்கு மக்களிடையே மதுரையில் தொடர்ந்து அதிகரித்து வந்ததால் ஆத்திரமடைந்த பிரிட்டிஷ் அரசு இதற்கு முடிவு கட்டும் நோக்கத்துடன், மதுரை சதி வழக்கை புனைந்தது. மதுரை சதி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முதல் நபராக தமிழகத்தின் மகத்தான கம்யூனிஸ்ட் தலைவர் பி.ராமமூர்த்தி பெயரையும், இரண்டாவது நபராக என்.சங்கரய்யா பெயரையும் அடுத்து பல்வேறு கம்யூனிஸ்ட் தலைவர்கள் மற்றும் செயல் வீரர்களின் பெயர்களையும் பிரிட்டிஷ் அரசு சேர்த்தது. அவர்கள், இதர தொழிற்சங்க தலைவர்களை கொலை செய்வதற்காக தங்களது அலுவலகத்தில் வைத்து சதி செய்தார்கள் என்று குற்றச்சாட்டு புனையப்பட்டது. இதை நேரில் பார்த்த சாட்சியம் என்று போலீசார், ஒரு நபரைக் கொண்டு வந்து நிறுத்தினர். இவர்கள் சதி செய்து கொண்டிருந்தபோது, அதை அருகிலிருந்து கேட்டதாக அவர் சாட்சியம் அளித்திருக்கிறார் என்று காவல்துறை அதிகாரிகள் வழக்கை ஜோடித்தனர்.
இதுபற்றி எழுத்தாளர் என்.ராமகிருஷ்ணன், (சங்கரய்யாவின் இளைய சகோதரர்), 2008ஆம் ஆண்டு வெளியிட்ட வாழ்க்கை வரலாற்று நூலான பி.ராமமூர்த்தி ஒரு நூற்றாண்டு நினைவுகள் என்ற நூலில் விவரிக்கிறார்: “அந்த வழக்கு விசாரணையின் போது, தோழர் ராமமூர்த்தி, தனக்குத் தானே ஆஜராகி வாதாடினார். அப்போது, போலீசார் முன்னிறுத்திய முதன்மை சாட்சியமாக வந்தவர் ஒரு ஏமாற்றுப் பேர்வழி என்றும், பல்வேறு திருட்டு வழக்குகளில் பலமுறை சிறைக்குச் சென்று வந்த நபர் என்றும் அவர் நிரூபித்தார்.”
இந்த வழக்கை விசாரித்த சிறப்பு நீதிபதி, 1947 ஆகஸ்ட் 14 அன்று சிறை வளாகத்திற்கு நேரில் வந்தார்… மதுரை சதி வழக்கில் தண்டனை பெற்றிருந்த அனைவரையும் விடுவித்தார்; தொழிலாளர்களின் பெரும் மரியாதையைப் பெற்ற தலைவர்களுக்கெதிராக இத்தகைய வழக்கினை புனைந்த அரசை அவர் கடுமையாக விமர்சித்தார்.” சமீப ஆண்டுகளில் கடந்த காலத்தின் இத்தகைய பிரதிபலிப்புகள் வெளிப்படுவதை நாம் பார்க்கிறோம் – எனினும் நமது காலத்தில், ஒரு சிறப்பு நீதிபதி நேரடியாக சிறைக்கு சென்று, வழக்கில் புனையப்பட்டுள்ள அப்பாவிகளை விடுதலை செய்வதையும், அரசாங்கத்தை விமர்சிப்பதையும் பார்ப்பது அரிது.
1948ல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்ட பிறகு தோழர் பி.ராமமூர்த்தியும், இதர தோழர்களும், மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டனர். ஆனால் இது சுதந்திர இந்தியாவில். தேர்தல்கள் நடைபெற இருந்தன. சென்னை மாகாணத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு ஒரு அச்சுறுத்தலாக இடதுசாரிகளின் செல்வாக்கு அதிகரித்துக் கொண்டே இருந்தது.
சங்கரய்யா சொல்கிறார்:
“எனவே தோழர் ராமமூர்த்தி சிறையில் இருந்தவாறே மத்திய சிறைச்சாலை கண்காணிப்பாளரிடம் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். 1952 சென்னை மாகாண சட்டமன்ற தேர்தலில் மதுரை வடக்கு தொகுதியில் அவர் போட்டியிட்டார். நான் அந்த பிரச்சாரத்திற்கு பொறுப்பாளராக இருந்தேன். பி.ராமமூர்த்தியை எதிர்த்து போட்டியிட்ட இதர இரண்டு வேட்பாளர்கள், மூத்த காங்கிரஸ் தலைவரான சிதம்பர பாரதி, நீதிக்கட்சியிலிருந்து பி.டி.ராஜன். தோழர் ராமமூர்த்தி கணிசமான வாக்குகளுடன் வெற்றி பெற்றார். தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்டபோது அவர் சிறையில் தான் இருந்தார். சிதம்பர பாரதி இரண்டாவதாக வந்தார். ராஜன் டெபாசிட் இழந்தார். இந்த மாபெரும் வெற்றியைக் கொண்டாடுவதற்காக கூடிய கூட்டத்தில் 3 லட்சதிற்கும் அதிகமான மக்கள் குவிந்தார்கள்.”
விடுதலை பெற்ற பிறகு தமிழ்நாடு சட்டமன்றத்தில் முதல் எதிர்க்கட்சி தலைவராக தோழர் பி.ராமமூர்த்தி பொறுப்பேற்றார்.
1964ல் கம்யூனிஸ்ட் கட்சி பிரிந்தபோது, புதிதாக உதயமான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன் தோழர் சங்கரய்யா தம்மை பிணைத்துக் கொண்டார். “1964ல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய கவுன்சிலிலிருந்து வெளியேறிய 32 உறுப்பினர்களில் நானும் தோழர் வி.எஸ். அச்சுதானந்தனும் மட்டும்தான் இப்போது உங்களுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்” என ஆர்வத்துடன் எங்களுடன் பேசினார். தோழர் சங்கரய்யா இந்தியாவில் 1.5 கோடி பேரை உறுப்பினர்களாக கொண்டிருக்கிற மிகப் பெரிய விவசாயிகள் இயக்கமான அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளராகவும், பின்னர் அகில இந்திய தலைவராகவும் செயலாற்றினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளராக ஏழு ஆண்டு காலம் பணியாற்றினார். கட்சியின் மத்தியக்குழு உறுப்பினராக 20 ஆண்டுகளுக்கும் மேலாக செயலாற்றினார்.
அவர் பெருமிதத்துடன் சொல்கிறார்: “தமிழ்நாடு சட்டமன்றத்தில் தமிழை முதலில் அறிமுகப்படுத்தியவர்கள் நாங்கள்தான். 1952ல் தமிழ்நாடு சட்டமன்றத்தில் தமிழில் பேச அனுமதி இருக்கவில்லை. ஆங்கிலத்தில் தான் பேச வேண்டும். ஆனால் எங்களது சட்டமன்ற உறுப்பினர்கள் ஜீவானந்தமும். ராமமூர்த்தியும் தமிழில் பேசினார்கள். அதற்கு பிறகு 6 அல்லது 7 ஆண்டுகள் கழித்துதான் தமிழில் பேசலாம் என்ற விதி உருவாக்கப்பட்டது”. தொழிலாளி, விவசாயி வர்க்கத்திற்கான சங்கரய்யாவின் போராட்ட உறுதி சற்றும் குறையாமல் தொடர்கிறது. கம்யூனிஸ்ட்டுகள் தேர்தல் அரசியலுக்கு சரியான விடைகளை கண்டறிவார்கள் என்றும் நிச்சயம் மிக பிரம்மாண்டமான வெகு மக்களின் இயக்கமாக கட்டுவார்கள் என்றும் அவர் உறுதியாக நம்புகிறார். ஒன்றரை மணி நேரத்திற்கும் மேலாக இந்த நேர்காணலுக்காக அவருடன் உரையாடிக் கொண்டிருந்தேன். 99 வயதிலும், அவர் அரசியல் வாழ்வைத் துவக்கிய காலத்தின் அதே உத்வேகம், அதே உணர்ச்சிப் பெருக்கு.
பகத்சிங்கின் தியாகத்தால் ஈர்க்கப்பட்டு தூத்துக்குடி நகரின் வீதிகளில் முழக்கமிட்ட அந்த 9 வயதுச் சிறுவனின் துள்ளலும், ஆவேசமும், உணர்ச்சிப் பெருக்கும் இப்போதும் சங்கரய்யாவின் முகத்தில் ஜொலிக்கிறது.
தொகுப்பு : பி.சாய்நாத், மூத்த பத்திரிகையாளர்
தமிழில்: எஸ்.பி.ராஜேந்திரன்
–தீக்கதிர்
2020.07.16