கண்டியில் இடம்பெற்ற துயரச் சம்பவம்
–ஆர்.மகேஸ்வரி

அம்மா..! நீங்கள் சாப்பிடுங்கள் நான் உறங்கப் போகிறேன்” என, தனது ஹோட்டலில் இருந்து கொண்டுவந்த உணவை, மனைவியைப் பெற்றவளிடம் கொடுத்துவிட்டு, தனது மனைவியுடனும் குழந்தையுடனும் நித்திரைக்குச் சென்ற ஷமிலவுக்கும் அவரது அன்பான குடும்பத்துக்கும் மாத்திரம், மறுநாள் பொழுது புலராமலே சென்றுவிட்டது.
இம்மாதம் 20ஆம் திகதி, கண்டியில் இடம்பெற்ற இந்தத் துயரச் சம்பவம், மனிதம் நிறைந்த அனைத்து உள்ளங்களையும் ஒரு கணம் உலுக்கியது.
தனது மகளைப் பறிகொடுத்த 59 வயதுடைய ஜயந்தி குமாரி, இவ்வாறு தெரிவிக்கின்றார். “ வெலிமடை பிரதேசத்தைச் சேர்ந்த நாங்கள், விவசாயிகள். இரண்டு பிள்ளைகளைக் கொண்ட குடும்பத்தில் மூத்தவளாக அச்சலா பிறந்தாள். அவள், படிப்பு உள்ளிட்ட அனைத்து விடயங்களிலும் கெட்டிக்காரி. 5ஆம் தரம் வரை வெலிமடை பிரதேச பாடசாலையிலும், புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்து பண்டாரவளை பிரதேச பாடசாலைக்கும் சென்றாள். சாதாரண தரத்தில் சிறப்புச் சித்தி பெற்று உயர்தரத்தில் கணிதப் பிரிவில் ஒரு வருடம் கற்றார். பின்னர், கலைப்பிரிவில் தனது கல்வியைத் தொடர்ந்து, உயர்தரத்தில் 2 ஏ, 1 பி சித்திகளைப் பெற்று, பல்கலைக்கழகத்துக்குத் தெரிவானாள்.பின்னர், நுவரெலியா நீதவான் நீதிமன்றில் சட்டத்தரணியாகவும் பொல்கொல்ல திறந்த பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகவும் கடமையாற்றி வந்தார். இந்தநிலையிலேயே, கடந்த வருடம் நவம்பர் மாதம், சமிலவுடன் திருமணம் நடைபெற்று, இந்த வருடம் ஓகஸ்ட் மாதம் ஒரு பெண் குழந்தையைப் பெற்றெடுத்தார். தனது கணவருடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த தனது மகளின் மகிழ்ச்சியும் எங்களது மகிழ்ச்சியும் கடவுளுக்கே பொறுக்கவில்லை” எனக்கூறி, துக்கத்தால் வார்த்தைகளை வௌிப்படுத்த முடியாது விம்மித் தவித்தார்.
உண்மைதான்! அண்மைய சில நாள்களாக, மலையகம் உள்ளிட்ட நாட்டின் பெரும்பாலான இடங்களில் மழையுடனான வானிலை நிலவி வந்தாலும், மழையின் தாக்கம், மணிசரிவு, குடியிருப்புகள் சேதமடைதல் உள்ளிட்ட அனர்த்தங்களுக்கு மலையகத்தில் குறைவிருக்கவில்லை.
இத்தகைய வானிலை நிலவிய ஒரு நாளிலேயே, யாரும் எதிர்பாராத விதமாய், 5 மாடி கட்டடமானது, கீழிருந்த வீடொன்றின் மீது விழுந்து, மூன்று உயிர்கள் காவுகொள்ளப்பட்டன.
விலை மதிப்பற்ற மூன்று உயிர்கள் கண் மூடித் திறப்பதற்குள் மண்ணுக்குள் புதையுண்டதற்கு யார் காரணம்? நிச்சயம், அந்த 5 மாடி வீட்டுச் சொந்தக்காரனை நோக்கி மாத்திரமே, எல்லோரும் விரல் நீட்டுகிறார்கள். “அவர்தான் காரணம்; அவர் மட்டுமே காரணம்” என, ஆவேசிக்கின்றார்கள். ஆனால், குறித்த ஒருவரை நோக்கி விரல் நீட்டும் ‘நாம் அனைவரும்’, ஏதோ ஒரு விதத்தில் இவ்வாறான அனர்த்தங்களுக்கு காரணமாகின்றோம் என்பதை உணர்வதில்லை. ‘நாம் அனைவரும்’ என்ற சொற்களுக்குள் முக்கியமாக இடம்பிடிப்பது அரச நிறுவனங்கள், அதிகாரிகளுமேயாவர். இவர்களின் பேராசையும் பணத்திமிரும் இவ்வாறான அனர்த்தங்களுக்குக் காரணமாக அமைகின்றது.

கண்டி- பூவெலிகட பிரதேசம் எதுவெனவும் அதன் தரைத்தோற்ற அமைப்பு எப்படி இருக்கும் என்பதும் தெரிந்தவர்களுக்குத் தெரிந்திருக்கும்; ஆனால், பூவெலிகட பிரதேசம் எங்குள்ளது, அதன் நிலத் தோற்றம் என்ன என்பது குறித்து, 20ஆம் திகதிக்குப் பின்னரே, முழு நாடும் தேடதொடங்கியது. அதற்கு, இங்கு இடம்பெற்ற அகோர அனர்த்தமே, காரணமாகியது.
ஆம்! கண்டி- பூவெலிகட சங்கமித்த மாவத்தையில் முன்னாள் பஸ்நாயக்க நிலமே ஒருவருக்குச் சொந்தமாக, 5 மாடிக் கட்டடமொன்று காணப்பட்டது. அந்தக் கட்டடத்துக்கு கீழ் பகுதியில், இரண்டு வீடுகள் கட்டப்பட்டிருந்தன. இவற்றின் மீதே, 20ஆம் திகதி அதிகாலை, ஐந்து மாடிக் கட்டடம் உடைந்து விழுந்ததன் காரணமாக, ஒன்றரை மாத குழந்தை உள்ளிட்ட மூவர் உயிரிழந்தனர்.
35 வயதுடைய சமில பிரசாத், 32 வயதுடைய அச்சலா ஏக்கநாயக்க, இவர்களின் ஒன்றரை மாத குழந்தை ஆகியோரே உயிரிழந்தனர். அச்சலா ஏக்கநாயக்க சட்டத்தரணி என்பதுடன், திறந்த பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகவும் கடமையாற்றி வந்தார். இவரின் கணவரான சமில, தனது வீட்டுடன் ஹோட்டலொன்றை நடத்தி வந்துள்ளார் என்றும் தெரியவருகிறது.
சம்பவம் இடம்பெற்று சில மணிநேரத்துக்குள் மூவர், மீட்கப்பட்டு, கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது, ஒன்றரை வயதுக் குழந்தை உயிரிழந்திருந்தது. ஏனைய இருவரில், அச்சலாவின் தாயாரும் உள்ளடங்குகிறார். இவர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.
இடிபாடுகளில் சிக்கியிருந்த தம்பதியினரை மீட்பதற்காக பொலிஸாரும் அனர்த்த முகாமைத்துவ மீட்பு பிரிவினரும் இராணுவத்தினரும் இணைந்து மீட்புப் பணிகளில் முழுமூச்சாகச் செயற்பட்ட போதிலும், பிற்பகல் 2 மணியளவிலேயே இடிபாடுகளில் சிக்கிய தம்பதியினரைச் சடலங்களாக மீட்க முடிந்தது.

சம்பவத்தை நேரில் கண்டவர்
இந்தச் சம்பவம் தொடர்பில், உடைந்த கட்டடத்துக்குள் இருந்து மீட்கப்பட்டு, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள உயிரிழந்த பெண்ணின் தாயாரான 59 வயதுடைய ஜயந்தி குமாரி, சம்பவம் தொடர்பில் இவ்வாறு கூறியிருந்தார். “நான், இந்த ஹோட்டலில் வேலைசெய்யும் பெண்ணுடன் அறையில் தூங்கிக்கொண்டிருந்தேன். மறுபக்க அறையில் மகளும் அவரது கணவரும் குழந்தையும் உறங்கிக் கொண்டிருந்தனர். அதிகாலை 5 மணிக்கு, பூமி வெடிப்பது போல் பாரிய சத்தமொன்று கேட்டது. என்ன நடந்தது என்று தெரியவில்லை. சுவரொன்று இடிந்து எமது கட்டிலுக்கு அருகில் கிடந்தது. இருட்டில் ஒன்றுமே தெரியவில்லை. அங்கே இங்கே கையைவிட்டு தேடிய போது, அலைபேசி கையில் கிடைத்தது. அதில் நான் 119 க்கு அழைத்து கட்டடம் உடைந்து விட்டதாகக் கூறினேன். சிறிது நேரத்தில் பொலிஸார் வந்தனர். அங்கிருந்தவர்கள் கயிற்றின் மூலம் எம்மை வெளியே எடுத்தனர். அப்போது எனது மகள், மருமகன் நித்திரை செய்த அறை, முழுமையாகக் காணாமல் போயிருந்தது.சம்பவம் இடம்பெற்ற தினத்தன்று அதிகாலை மூன்று மணியளவில், அந்தக் கட்டடத்தில் வெடிப்பு ஏற்பட்டதாகவும் கட்டடம் உடைந்து விழும் என்பதை முன்கூட்டியே அறிந்துகொண்ட கட்டடத்தின் உரிமையாளரான பஸ்நாயக்க நிலமே, தனது மனைவியையும் இரண்டு பிள்ளைகளையும் அழைத்துக்கொண்டு, வீட்டிலிருந்த பணம், நகைகளை எடுத்துக்கொண்டு பிரதேசத்திலிருந்து ஓடிவிட்டார்” என, கண்களில் வழிந்தோடிய கண்ணீரைத் துடைத்தவாறே அந்தத் தாய் கூறினார்.
இந்த நிலையில், இந்த அனர்த்தம் இடம்பெறுவதை அறிந்திருந்தும் எவருக்கும் தகவல் வழங்காமல் தப்பியோடிய கட்டடத்தின் உரிமையாளரைக் கைதுசெய்வதற்கான விசாரணைகளைக் கண்டி பொலிஸார் ஆரம்பித்திருந்த நிலையில், சம்பந்தப்பட்ட நபரே, அனர்த்தம் இடம்பெற்ற அன்று ஊடகங்களுக்கு இவ்வாறு கருத்துத் தெரிவித்திருந்தார்.
“எனது மகள் இந்த வருடம் உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ளதால், அவர் சம்பவ தினத்துக்கு முதல் நாள் அதிகாலை ஒரு மணி வரை படித்தார். அவர் நித்திரைக்குச் சென்ற பின்னர் தான் நாங்களும் நித்திரைக்குச் சென்றோம். 4.30 தொடக்கம் 5 மணிக்கிடையில் ஏதோ வெடிப்பது போல் சத்தம் கேட்டது. அப்போது நானும் மனைவியும் ‘பல்கனி’க்கு வந்து பார்த்த போது, அயல் வீட்டு நபர், டோர்ச்சை எம் வீட்டுப் பக்கம் அடித்தவாறு, ‘மிஸ்டர் லெவகே! உங்கள் வீட்டின் கொன்கிறீட் தூண்கள் உடைகின்றன; சீக்கிரம் வீட்டை விட்டு வெளியே செல்லுங்கள்’ என்றவுடன், நாம் வீட்டிலிருந்து வெளியேறினோம்.அத்துடன், சகல நிறுவனங்களினதும் அனுமதியைப் பெற்றே கட்டத்தை கட்டினோம்” என்றார்.

இதன்போது குறிக்கிட்டு, ஊடகங்களுக்குக் கருத்து தெரிவித்த அவரது மகன், “அன்று எமது வீட்டில் வித்தியாசமான சத்தங்கள் கேட்டவாறு இருந்தன. எமது நாயும் வித்தியாசமாகக் குரைத்தது. உடனே நான், படுக்கையில் இருந்தவாறே அம்மாவுக்கு அலைபேசி அழைப்பை ஏற்படுத்தி, ‘அம்மா வீட்டுக்குள் திருடர்கள் வந்து விட்டார்களா, நாய் குரைக்கின்றது’ என்றேன். உடனே அம்மா சொன்னார், ‘வீடு வெடிக்கின்றது; வீட்டிலிருந்து செல்வோம்’ என்றார். உடனடியாக நான், பெற்றோர், சகோதரியை அழைத்துக் கொண்டு வாகனத்தில் ஏறி, சிறிது தூரம் வந்த போது எமது வீடு இடிந்து விழுந்ததை உணர்ந்தோம். ஆனால், வாகனத்தில் போகும் போதே, கண்டி பொலிஸாருக்குத் தகவல் சொல்வதற்காக அழைப்பை ஏற்படுத்திக் கொண்டே சென்றோம்.எங்களுக்குக் கீழ் வீட்டில் இருப்பவர்களுக்குச் சொல்லும் அளவுக்கு நேரமிருக்கவில்லை” என்றார்.
வீட்டு உரிமையாளரின் மனைவி, “உண்மையில், எமது வீடு உடைந்ததை விட, எமது அயல்வீட்டுக் குடும்பம் ஒன்று இந்தச் சம்பவத்தில் உயிரிழந்தமை கவலையளிக்கிறது. முறையாக அனுமதி பெற வேண்டியவர்களிடம் அனுமதி பெற்றே இந்த வீட்டை நிர்மாணித்தோம். உரிய தரத்துடனேயே இக்கட்டடத்தை அமைத்தோம். தனியார் கட்டுமான நிறுவனம் ஒன்றிடம் இந்தக் கட்டடத்தை அமைக்கும் பொறுப்பை வழங்கினோம். இது சட்டரீதியாக அமைக்கப்பட்ட கட்டடம்” என்றும் தெரிவித்தார்.

சம்பவத்தின் பின்னரான விசாரணைகள்
கட்டடம் உடைந்து விழுந்துள்ள பிரதேசத்தின் நிலப்பரப்பிலும் வீடுகளிலும் வெடிப்புகள் காணப்படுவதால், இந்தப் பிரதேசத்துக்கு அநாவசியமாகச் செல்வதையும் ஒன்று கூடுவதையும் தவிர்க்குமாறு, பிரிவுக்குப் பொறுப்பான சிரேஸ்ட பொலிஸ் அதிகாரி சுதத் மாசிங்க வேண்டுகோள் விடுத்திருந்தார்.
உடைந்து விழுந்துள்ள வீட்டின் கீழ் பகுதியில் நீர் செல்வதால், அங்கு மண்சரிவு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் முடிந்தளவு அந்தப் பிரதேசத்திலிருந்து விலகியிருக்குமாறும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
விழுந்த ஐந்து மாடிக் கட்டடத்தை அமைப்பதற்கு, அனுமதி வழங்கி விநியோகிக்கப்பட்ட ஆவணங்கள் தொடர்பில் விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டது.
அதற்கமைய, இந்தக் கட்டட அனுமதியை வழங்கிய கண்டி மாநகர சபை, தேசிய கட்டட அமைப்பு மற்றும் கட்டுமானத்துக்கு ஒத்துழைப்பு வழங்கிய பொறியியலாளர்கள் வழங்கிய ஆவணங்கள் உள்ளிட்டவையைப் பரிசோதனை செய்யவும் கண்டி பொலிஸ் தலைமையகம் நடவடிக்கை எடுத்ததாகவும் அறிவித்தது.
இந்தக் கட்டடத்தை அமைப்பதற்காக விசேட அனுமதிப்பத்திரம் மற்றும் அனுமதி வழங்கப்பட்டு உள்ளதாகத் தெரிவிக்கப்படும் நிறுவனங்களில், இது தொடர்பான ஆவணங்கள் வழங்கப்பட்டதா? என்பது தொடர்பிலும் விசாரணைகள் முன்னெடுக்க ப்படவுள்ளதாகவும் கண்டி பொலிஸார் தெரிவித்திருந்தனர்.
சம்பவம் தொடர்பில், புவியியல் ரீதியான ஆய்வுகள் முன்னெடுக்கப்படுவதாகவும் மண்சரிவால் இந்தக் கட்டடம் உடைந்திருக்கலாம் என வெளிவரும் தகவல்களில் உண்மையில்லை எனவும் கட்டுமானத்தில் ஏற்பட்டுள்ள குறைபாடுகளே அனர்த்தத்துக்குக் காரணமெனவும் கண்டி மாவட்டத்துக்குப் பொறுப்பான புவியியலாளர் சமந்த போகஹபிட்டிய தெரிவித்திருந்தார்.
குறித்த கட்டடமானது, உரிய தரத்துடன் நிர்மாணிக்கப்படவில்லை என்பது, கட்டடம் இடிந்து விழுந்ததன் பின்னர் முன்னெடுக்கப்பட்ட ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளதென்றும் நிலையற்ற புவியியல் காரணிகளைக் கொண்ட பிரதேசத்தில் இக்கட்டடம் கட்டப்பட்டுள்ளதென ஆய்வுகளை முன்னெடுத்த புவியியல் ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.
மேலும், கண்டி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் வசந்த யாப்பா பண்டார, சம்பவம் இடம்பெற்ற இடத்துக்குச் சென்று, உயிரிழந்தவர்களின் உறவினர்களைச் சந்தித்ததுடன், “சட்டவிரோத கட்டுமானங்களுக்கு அனுமதி வழங்கினால், பெறுமதியான உயிர்களே இழக்கப்படும். எனவே, மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு என்ற ரீதியில் மாநகர சபை, நகர அபிவிருத்தி அதிகார சபை உள்ளிட்ட ஏனைய அரச நிறுவனங்களைத் தொடர்படுத்தி மலைப்பாங்கான பிரதேசங்களில் நிர்மாணிக்கப்பட்டுள்ள சட்டத்துக்கு புறம்பான கட்டடங்கள் குறித்து, தீவிரமாகச் செயற்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.

குழுக்கள் நியமனம்
சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை முன்னெடுக்க, ஐந்து பேரடங்கிய பொலிஸ் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. அத்துடன், கண்டி நகர எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் ஆபத்தான நிலையிலுள்ள கட்டடங்கள் தொடர்பில் ஆய்வு செய்வதற்கு, 10 பேர் கொண்ட குழுவொன்றை, மத்திய மாகாண ஆளுநர் சட்டத்தரணி லலித் யூ. கமகே நியமித்ததுடன், அக்குழு, நேற்றுமுன்தினம் (23) முதற்றடவையாகக் கூடியது. இதன்போது கண்டி நகரில் கட்டப்பட்டுள்ள சட்டவிரோத மற்றும் சர்ச்சைக்குரிய 256 கட்டடங்கள் தொடர்பில் உடனடி அறிக்கை சமர்ப்பிக்குமாறும் அதன் உரிமையாளர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்குமாறும் ஆளுநர் உத்தரவிட்டுள்ளார்.
ஆனால், எத்தனை குழுக்கள் நியமித்தும் என்ன பயன்? வாழ்க்கை என்னும் சோலைக்குள் நுழைந்து, முழுதாக ஒரு வருடம் கடக்கும் முன்னரே, அநியாயமாக காவுகொள்ளப்பட்ட உயிர்கள் மீள வரப்போவதில்லை. ஆயிரக்கணக்கானவர்களின் கண்ணீருக்கு மத்தியில், நேற்று முன்தினம் (23) இந்த அழகான சிறிய குடும்பத்தின் பூதவுடல்கள் மஹியாவ பொது மயானத்தில் தகனம் செய்யப்பட்டன.
“இது விபத்தால் ஏற்பட்ட மரணம் அல்ல; கொலைக்கு ஒப்பான செயல்” எனத் தனது மகளையும் மருமகனையும் பேரக்குழந்தையையும் பறிகொடுத்த அச்சலாவின் தந்தையின் அழுகுரல், அனைவருக்கும் கண்ணீரை வரவழைத்தது.
“கோடி கோடியாகப் பணத்தைக் கொட்டினாலும் மாண்டவர்கள் மீளப்போவதில்லை. எனவே, இதற்காக எங்களுக்கு எவ்வித நட்டஈடும் வேண்டாம். மேலும் பல உயிர்கள், இவ்வாறு காவு கொள்ளப்படுவதைச் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தடுக்க வேண்டும்” என்பதே, அந்தத் தந்தையின் வேண்டுகோளாக அமைந்திருந்தது.
எனினும், இந்தச் தொடர்பில் உரிய விசாரணை முன்னெடுக்கப்படவில்லை என்று உயிரிழந்தவர்களின் உறவினர்கள் குற்றஞ்சுமத்துவதுடன் பாதுகாப்பு கமெரா காணொளிகள் கூட இன்னும் பொலிஸாரால் பரிசோதிக்கப்படவில்லை என்றும் குற்றம் சுமத்துகின்றனர்.
மொத்தத்தில் பொறுப்புவாய்ந்த அதிகாரிகளின் அசமந்த போக்கு இவ்வாறான அனர்த்தங்களுக்கு காரணமாக அமைந்துள்ளது. எனவே இந்த 3 உயிர்களுடன் இவ்வாறான அனர்த்தங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டியது அதிகாரிகள் மட்டுமல்ல நம் அனைவரது கடமை என்பதை உணர்வோமாக.
–தமிழ்மிரர்
2020.09.25
