இயற்கையின் குரல்

எஸ்.ராமகிருஷ்ணன்

David Attenborough: A Life On Our Planet என்ற புதிய ஆவணப்படம் ஒன்றைப் பார்த்தேன். வாழ்வில் சிலரைத் தான் அதிர்ஷ்டசாலிகள் என்று நான் நினைப்பேன். அவர்களில் ஒருவர் டேவிட் அட்டன்பரோ. உலகில் அவர் கால்படாத இடமேயில்லை. காடுகள் பனிமலைகள் குகைகள் பாலைவனம் என்று இந்தப் பூமியில் அவர் சுற்றித்திரியாத இடமேயில்லை. அவர் தயாரித்த புவிவாழ்க்கை குறித்த ஆவணப்படங்கள் மிகச்சிறப்பானவை.

ஒருவர் தான் வாழ்நாள் முழுவதும் இப்படி அரிய உயிரினங்களைத் தேடி, இயற்கையின் வனப்புகளைத் தேடி பயணம் செய்து கொண்டேயிருக்கிறார் என்றால் அவர் பேரதிருஷ்டம் கொண்டவர் என்றே கருதுவேன். அதிலும் சகலவிதமான வாகனங்களையும் பயன்படுத்தி அவர் பயணித்திருக்கிறார். ஆகாசத்தில் பலூனில் பறந்தபடியே பேசுகிறார். அடர்ந்த காட்டிற்குள் ஆட்கள் அவரை மூங்கில்பல்லக்கு ஒன்றில் தூக்கிச் செல்கிறார்கள். கடலுக்குள் அடியில் நீந்துகிறார். எரிமலை ஒன்றின் மீது இறங்கி நடக்கிறார். துருவப்பிரதேசத்தில் ஒற்றை ஆளாக ஒளிரும் சூரியனைக் காணுகிறார்.  இத்தனையும் அவருக்கு வாழ்வில் சாத்தியமாகியிருக்கிறது.

அவருக்குத் தற்போது 93 வயதாகிறது. மூன்று விஷயங்களை நாம் அவரிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டும். ஒன்று இவ்வளவு பயணம் செய்தும் ஆரோக்கியமாக உடலை வைத்திருப்பது. அவரது இளவயது புகைப்படங்களைக் காணும் போது இதே உற்சாகமான முகமும் மெலிந்த உடலுமே காணப்படுகிறது. முதுமையின் உடல் சோர்வுகளைத் தாண்டி ஆரோக்கியமான மனிதராக இருக்கிறார். இரண்டாவது அச்சமற்ற அவரது பயணங்கள். ஆபத்து அதிகம் எனப் பயந்த இடங்களுக்குத் தைரியமாகப் போய் வந்திருக்கிறார். வன உயிர்கள் குறித்தோ, மனிதர்களால் ஏற்படும் ஆபத்து குறித்தோ அவர் அஞ்சவேயில்லை. ஒவ்வொரு பயணத்தைப் பற்றியும் ஆயிரம் பக்கம் எழுதலாம் அவ்வளவு அனுபவங்கள்.

மூன்றாவது இயற்கையின் மீது அவர் கொண்டுள்ள ஈடுபாடு. இயற்கைக்கு எதிராக மனிதன் வாழக்கூடாது. இயற்கையோடு இணைந்து வாழ வேண்டும். சுற்றுச்சூழல் சீர்கேடுகளால் இந்தப் பிரபஞ்சத்திற்கு ஏற்பட்டுள்ள ஆபத்துகள் மிக அபாயகரமானவை. நாம் பிரபஞ்சத்தைக் காப்பாற்றுவதன் மூலம் நம் எதிர்காலத்தைக் காப்பாற்றிக் கொள்கிறோம் என்கிறார்.

இந்த ஆவணப்படத்தை அவரது வாக்குமூலம் என்றே சொல்கிறார்கள். உண்மை தான். அவரைத் தவிர யாரால் இப்படி ஒரு வாக்குமூலத்தைத் தர இயலும்

தான் பிறந்த போது உலகம் எப்படியிருந்தது என்று துவங்கும் அட்டன்பரோ இன்றைய உலகம் எப்படியிருக்கிறது. நாளை எப்படியிருக்கும் என்பதை மிக அழகாக விவரிக்கிறார்.. அவர் சுட்டிக்காட்டும் ஆபத்துகள் எளிதானவையில்லை. அவை ஒட்டுமொத்த மனித குலத்திற்கே அழிவை உருவாக்குபவை. அதிலிருந்து மனிதர்கள் எப்படி உலகைக் காப்பாற்றப் போகிறார்கள் என்ற கேள்வியை எழுப்புகிறார் அட்டன்பரோ

அட்டன்பரோ பிறந்த 1926 ஆம் ஆண்டில், சராசரி வெப்பநிலை இன்றைய அளவை விட ஒரு டிகிரி குளிராக இருந்தது – ஆனால் வேகமான வாழ்க்கை வளர்ச்சியின் காரணமாக இயற்கையின் சமநிலை குலைந்து இன்று சராசரி வெப்பநிலை அதிகமாகியிருக்கிறது.

மழைக்காடுகளைக் கொஞ்சம் கொஞ்சமாக நாம் அழித்துவருவதை மிகச்சிறப்பான காட்சிகளுடன் பதிவு செய்திருக்கிறார். மரங்கள் அழிக்கப்படுவதுடன் காட்டை நம்பி வாழும் உயிரினங்களின் வாழ்க்கையும் சேர்த்து அழிக்கப்படுகிறது என்கிறார். ஒரு பெருமரத்தை இயந்திரம் கொண்டு வெட்டி எறியும் காட்சி இந்த ஆவணப்படத்திலுள்ளது. பார்க்கவே கண்ணீர் வருகிறது. இன்னொரு காட்சியில் மரங்களை முற்றிலும் அழித்துவிட்ட நிலையில் உராங்குட்டான் ஒன்று போக்கிடமின்றித் தவிப்பதைப் படம்பிடித்திருக்கிறார்கள்

கடந்த 40 ஆண்டுகளில் நமது துருவப்பிரதேசத்தில் உறைந்துள்ள பனியில் 40 சதவீதத்தை இழந்துவிட்டோம். மீன்பிடி இயந்திரப்படகுகள் கடலின் ஆழமான நீரில் இறங்கத் தொடங்கிய 50 ஆண்டுகளில், அவை பெரிய மீன்களில் 90 சதவீதத்தை அழித்து ஒழித்துவிட்டன. ஒரு காலத்தில் ஒராங்குட்டான்கள் மற்றும் அரிய வகைப் பறவைகள் இருந்த காடுகள் இன்று மறைந்து போய்விட்டன

இது போலவே ஆழ்கடலின் வண்ணமீன்கள் மற்றும் கடற்பாசிகள் ஒரு காலத்தில் மனிதர்களின் கைப்படாத இடமாக இருந்தன. இன்று சூழல் சீர்கேடு காரணமாகவும் இயந்திரப்படகுகள் மூலம் திமிங்கலவேட்டை நடப்பதாலும் கடல் வளமும் அழிந்து வருவதை விரிவாகப் பதிவு செய்திருக்கிறார்.

வியக்க வைக்கும் இயற்கைக்காட்சிகளை நாம் ரசித்துக் கொண்டிருக்கும் போது நாம் அதன் அழிவிற்குக் காரணமான குற்றவாளிகள் என்ற உண்மையையும் எடுத்துச் சொல்கிறார் அட்டன்பரோ.

வருங்காலத்தில் மனித இனம் எதிர்கொள்ள இருக்கும் பேரழிவுகளை அட்டன்பரோ பட்டியலிடுவதைக் காணும் போது பயமாகவே இருக்கிறது.

இந்த அழிவிலிருந்து புவியைக் காப்பாற்ற மனிதர்கள் மேற்கொள்ள வேண்டிய முயற்சிகளையும் அதற்கு முன்னுதாரணமாக நடைபெற்றுவரும் மாற்றங்களையும் அட்டன்பரோ படமாக்கியுள்ளார்.

இயற்கையோடு இணைந்து வாழுவது தான் மனிதன் மேற்கொள்ள வேண்டிய முக்கியப்பணி. சுயலாபங்களுக்காக இயற்கையை அழித்துக் கொண்டேயிருந்தால் இயற்கை மனிதனைச் சூறையாடுவதைத் தவிர்க்கவே முடியாது.

இந்தப் பூமியில் மனிதர்கள் இல்லாவிட்டாலும் இயற்கை இருக்கும். இயற்கையோடு இணைந்த உயிரினங்கள் இருப்பார்கள் என்பதன் அடையாளமாக அவர் செர்னோபிலின் கைவிடப்பட்ட பிராந்தியத்தை இயற்கை செழித்து வளர்ந்து நிரம்பியிருப்பதைக் காட்டுகிறார்

இயற்கை வரலாற்று அறிஞரான டேவிட் ஃபிரடெரிக் அட்டன்பரோ பிபிசியுடன் இணைந்து, ஒன்பது இயற்கை வரலாற்று ஆவணப்படத் தொடர்களை உருவாக்கியுள்ளார். பிபிசியின் இயக்குநர் உள்ளிட்ட முக்கியப் பொறுப்புகளை வகித்தவர் அட்டன்பரோ

இவரது சகோதரர் தான் காந்தி திரைப்படத்தை இயக்கிய ரிச்சர்ட் அட்டன்பரோ.

அட்டன்பரோ சிறுவயதிலிருந்தே இயற்கையை ஆராய்வதில் ஈடுபாடு கொண்டிருந்தார். புதைபடிவங்களைத் தேடி தனியே சுற்றியலைந்தார் அட்டன்பரோ 1945 இல் கேம்பிரிட்ஜ் கிளேர் கல்லூரியில் புவியியல் மற்றும் இயற்கை அறிவியலில் பட்டம் பெற்றார். பின்பு கடற்படையில் சிலகாலம் பணியாற்றினார்

கடற்படையை விட்டு வெளியேறிய பிறகு குழந்தைகளுக்கான அறிவியல் பாடப்புத்தகங்களைத் திருத்தும் பணியில் சிலகாலம் வேலை செய்தார். பின்பு 1952 இல் அவர் பிபிசியில் முழுநேர ஊழியராக வேலைக்குச் சேர்ந்தார். அப்போது தான் இயற்கை வரலாறு குறித்த நிகழ்ச்சிகளை உருவாக்கத் துவங்கினார். அதற்குக் கிடைத்த வரவேற்பினைத் தொடர்ந்து இயற்கை வரலாறு மற்றும் கலைவரலாறு சார்ந்த நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து தயாரித்து வந்தார்.

இன்று உலக அளவில் இயற்கை வரலாறு குறித்த ஆய்வுகளில் முன்னோடி மனிதராகக் கொண்டாடப்படுகிறார் அட்டன்பரோ.

இந்த ஆவணப்படம் அவரது வாழ்க்கை அனுபவம் மற்றும் சுற்றுச்சூழல் ஆய்வுகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்டிருக்கிறது. விண்வெளியிலிருந்து பூமியைப் பார்க்கும் ஒற்றைக்கோளமாகவே தெரிகிறது. நாடுகள் மொழிகள் இனங்கள் யாவும் கடந்து மனித குலம் ஒன்றானது என்ற உண்மையைத் தான் உணர்வதாகக் கூறுகிறார். அந்த மனிதக்குலத்தின் முக்கியக் கடமை இந்தப் புவியைக் காப்பாற்ற வேண்டியது. அதற்கு இயற்கையை அழிப்பதை உடனே நிறுத்தவேண்டும். இதற்காகக் கடுமையான சட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும். எளிய, சுயதேவைகளுக்கான உற்பத்தியைத் தானே உருவாக்கிக் கொள்ளும் வாழ்க்கை முறைக்கு மாறவேண்டும். சுற்றுச்சூழல் சீர்கேட்டிற்கு காரணமான விஷயங்களை தடுத்து நிறுத்தவேண்டும் என்கிறார்

டேவிட் அட்டன்பரோவின் வாக்குமூலம் என்பது மனிதகுலத்திற்கு விடப்படும் எச்சரிக்கையாகும்

Tags: