அமெரிக்காவிடத்தில் வெள்ளை மேலாதிக்கவாதம்
அமெரிக்கா உட்பட மேற்குலகத்திடம் ‘வெள்ளை மேலதிக்கவாதம்’ காணப்படுகின்றது. அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளின் ‘குரல்களை ஒடுக்கி’ தமது ‘பிடி’க்குள் வைத்திருப்பதே அவர்களின் நோக்கமாகவுள்ளது என்று மக்கள் சீனக் குடியரசின் இலங்கைக்கான தூதரகத்தின் அரசியல் பிரிவுத் தலைவரும், ஊடகப்பேச்சாளருமான லூ சொங் (Luo Chong) வீரகேசரி பத்திரிகைக்கு வழங்கிய விசேட செவ்வியின்போது தெரிவித்தார்.
அந்தச் செவ்வியின் முதற்பாகம் வருமாறு,
கேள்வி:- இலங்கையில் ஆட்சிக்கு வந்திருக்கும் புதிய அரசாங்கத்துடனான உறவுகள் எப்படியிருக்கின்றன?
பதில்:- இலங்கைக்கும், சீனாவுக்கும் இடையிலான உறவுகள் 2ஆயிரம் வருடங்களுக்கும் அதிகமான பாரம்பரியம் மிக்கவை. அந்த நீண்டவரலாற்றை நாங்கள் மீண்டும் பேசாது விட்டாலும், அதனைக் கருத்திற்கொள்ள வேண்டும்.
அண்மைய காலங்களில் சீன அரசாங்கம் ராஜபக்ஷ குடும்பத்தினருடன் மிக நெருக்கமாக செயற்படுவதாக பிரசாரம் செய்யப்படுகின்றது. பொதுஜன பெரமுனவுக்கு பின்னணியில் இருப்பதாக கூறப்படுகின்றது. அவை முற்றிலும் உண்மைக்கு புறம்பான விடயங்களாகும்.
இலங்கையில் ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் ஆட்சியில் இருக்கும்போதே சீனாவுடன் இறப்பர், அரசி ஒப்பந்தம் கைச்சாதாகியுள்ளது. பல்வேறு கூட்டுச் செயற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
ஆகவே சீனா அரசியல் கட்சிகளை மையப்படுத்தி இருதரப்பு உறவுகளை பேணவில்லை. மாறாக, அரசாங்கங்களுடனேயே இருதரப்பு உறவுகளை பேணிவருகின்றது. பலதரப்பட்ட தேசிய இனங்களுடன், மதக்குழுவினருடன் உறவுகளை மேம்படுத்தி வருகின்றது.
கடந்த சில வருடங்களாக இலங்கையின் அரசியல், பொருளாதாரம், தேசிய பாதுகாப்பு உள்ளிட்ட முக்கிய பரப்புக்கள் கொந்தளிப்பாகவே இருந்தன. விசேடமாக உயிர்த்த ஞாயிறு தாக்குதலால் முதலீட்டாளர்கள், சுற்றுலாப் பயணிகள் உட்பட அனைவருமே அச்சமடைந்திருந்தனர். அதனால் ஸ்திரமான, வலுவான அரசாங்கம் ஒன்றிற்கான எதிர்பார்ப்பு ஏற்பட்டது.
இலங்கை மக்களின் ஆணையுடன் தற்போதைய அரசாங்கம் ஸ்திரமானதாக இருப்பதை இட்டு மகிழ்வடைகின்றோம். ஸ்திரமான, வலுவான அரசாங்கம் ஆட்சியில் இருப்பதானது நாட்டுக்கு மட்டுமல்ல வெளிநாடுகளுடனான இருதரப்பு உறவுகளையும் ஒத்துழைப்புக்களையும் மேம்படுத்துவதற்கு பெரிதும் உதவுகிறது.
கேள்வி:- ஒப்பீட்டளவில் கடந்த அரசுடனா அல்லது தற்போதைய அரசுடனா சுமூகமாக பயணிக்க கூடியதாக உள்ளது?
பதில்:- அவ்வாறான வேறுபாடுகளை சீனா உணரவில்லை. இரண்டு அரசாங்கங்களுடனும் சுமூகமானதும் சமமானதுமான உறவுகளையே கொண்டிருக்கிறது. இருதரப்பினதும் கூட்டுப்பணிகளை சுமூகமாகவே முன்னெடுத்திருந்தோம். தற்போதும் முன்னெடுத்துக்கொண்டிருக்கின்றோம்.
கேள்வி:- கொரோனா வைரஸ் விடயத்தில் உங்களுடைய நாடு வெளிப்படைத் தன்மையுடன் செயற்படவில்லை என்ற குற்றச்சாட்டுக்கள் தற்போதும் நீடித்துக் கொண்டிருக்கின்றதே?
பதில்:- அவை மேற்குலக நாடுகளின் திட்டமிட்ட அரசியல் காழ்புணர்ச்சியிலான குற்றச்சாட்டுக்களே. ட்ரம்ப் நிருவாகமும், அதனுடன் நெருங்கிய தொடர்புடைய சில மேற்குலக சக்திகளுமே இந்தக் குற்றச்சாட்டை சுமத்திக்கொண்டிருகின்றன.
உலக சுகாதார ஸ்தாபனம், மற்றும் மருத்துவத்துறை நிபுணர்கள் யதார்த்தத்தினை புரிந்துகொண்டுள்ளனர். அவர்கள் உண்மைகளையும் வெளிப்படுத்தியுள்ளனர். கொரோனா வைரஸ் வுஹானில் அடையாளம் காண்பதற்கு முன்னதாகவே ஸ்பெயினில் கழிவு நீரில் கண்டறியப்பட்டிருந்தது. வேறுநாடுகளிலும் கண்டறியப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தனியொரு இடத்தினை மட்டும் பூர்வீகமாக கொண்டதல்ல. கொரோனா விடயத்தில் சீனா வெளிப்படைத்தன்மையுடன் செயற்பட்டது.
கடந்த ஜனவரி முதலாம் திகதி முதல் ஓகஸ்ட் 31 வரையிலான எட்டுமாதங்களில் 60ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையில் பயணித்துள்ளார்கள். சீனாவிலிருந்து வந்த யாராவது ஒருவர் வைரஸ் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டார் என்று கேள்விப்பட்டிருக்கின்றீர்களா? இல்லையே.
ஆனால் சீனா தவிர்ந்து ஐரோப்பிய, இந்திய, மத்திய கிழக்கு உள்ளிட்ட ஏனைய நாடுகளிலிருந்து இலங்கைக்கு வந்தவர்களுக்கே வைரஸ் தொற்று இருப்பது அடையாளம் காணப்பட்டிருக்கின்றது. அவ்வாறிருக்கையில் சீனா மீது எவ்வாறு தொடர்ந்தும் குற்றச்சாட்டுக்களை சுமத்த முடியும்.
கேள்வி:- சீன அரசு இலங்கைக்கு வழங்கியுள்ள நன்கொடை நிதி மற்றும் மொத்தக்கடன் பற்றி விபரிக்க முடியுமா?
பதில்:- 2017ஆம் ஆண்டு இலங்கையின் மொத்த வெளிநாட்டுக் கடனில் சீனாவின் கடனானது 11சதவீதமாகவே இருந்தது. இது 2018இல் 12சதவீதமாகவும் 2019இல் 10சதவீதமாகவும் உள்ளது. சீனா கடன்கள் வழங்குவதன் மூலம் இலங்கையின் கடன் சுமையை அதிகரிக்கவில்லை. இலங்கையுடனான இருதரப்பு உறவுகளின் அடிப்படையிலேயே நன்கொடை நிதிகளை வழங்குகின்றோம். அதனை வெளிப்படுத்த வேண்டியதில்லை என்று கருதுகின்றேன்.
கேள்வி:- சீனா அதிகளவு நிதியை வழங்குவதன் மூலம் ஏனைய நாடுகளை கடன்பொறிக்குள் சிக்கவைக்கிறது என்ற குற்றச்சாட்டுக்கள் உள்ள நிலையில் இலங்கையையும் அவ்வாறு கையாள முயற்சிக்கின்றதா?
பதில்:- சீனா, கடன்பொறியை ஏற்படுத்துகின்றது என்ற குற்றச்சாட்டை முழுமையாக நிராகரிக்கின்றேன். கடன்பொறியை ஏற்படுத்தி அதற்குள் நாடுகளை சிக்க வைக்க வேண்டிய எந்த தேவையும் சீனாவுக்கு கிடையாது. சீனாவுக்கு காலனித்துவ நிருவாகம் செய்யும் எண்ணமில்லை. அதனை விரும்பவுமில்லை.
நாம் இலங்கைக்கு வழங்கும் கடன்கள் நிபந்தனைகளுடனான இலகு கடன்களாகும். அவை நீண்டகாலத்தினையும், குறைந்த வட்டியையும் கொண்டிருக்கின்றன. அத்தோடு சீனா, உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவதற்காகவே அதிகளவு முதலீடுகளைச் செய்கிறது. அவ்வாறான நிலையில் சீனாவினுடைய நிதி மீள் திரும்பலானது நீண்டகாலத்தினை அடிப்படையாகக் கொண்டதாகவே உள்ளது. இந்தப்பின்னணியுடன் தான் இலங்கையின் உட்கட்டமைப்பு மேம்பாட்டுக்காக சீனா அதிகளவு ஒத்துழைப்புக்களை தொடர்ச்சியாக வழங்குகிறது.
மேற்குல நாடுகளும் , யப்பானும், இந்தியாவும் வழங்கப்பட்ட நிதியை மீளப்பெறுவதற்கு கூடிய காலம் தேவைப்படும் என்ற காரணத்தினாலேயே உட்கட்டமைப்பை மையப்படுத்திய பாரிய திட்டங்களில் முதலிடுவதில்லை. இந்தவிடயத்தினை உலகின் முன்னணி பொருளாதார நிதி கையாளுகை நிறுவனங்கள் உறுதிப்படுத்தியிருக்கின்றன. மேலும் ஜனாதிபதி கோட்டாபய கூட கடன்பொறி விடயத்தினை தெளிவாக வெளிப்படுத்தியுள்ளார்.
கேள்வி:- அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மைக்பொம்பியோ இலங்கைக்கு வருகை தர முன்பே ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டு கடுமையான விமர்சனத்தினை முன்வைத்து விட்டீர்களே?
பதில்:- அமெரிக்க இராஜாங்க செயலாளரினது விஜயம் இராஜதந்திர ரீதியில் நடைபெறுகின்ற சாதாரணமான நிகழ்வென்றாகும். இலங்கையும் இறைமையுள்ள நாடாகும். ஆகவே அது சர்வதேச நாடுகளுடன் இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது மகிழ்ச்சியளிக்கும் விடயமாகும்.
அவ்வாறான செயற்பாடுகளுக்கு முழுமையான ஆதரவை வழங்குவதே எமது கொள்கையுமாகும். இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் நல்லுறவுகளை ஏற்படுத்துவதற்கு கூட நாம் ஒத்துழைப்புக்களை வழங்க தயாராகவே உள்ளோம்.
அப்படியிருக்க, இராஜாங்க செயலாளர் இலங்கைக்கு வருகை தருவதற்கு முன்னதாகவே பிரதி செயலாளர் ஊடகவியலாளர் மாநாடொன்றில் இறைமையுள்ள சீனா மற்றும் இலங்கை ஆகியவற்றின் உறவுகளை விமர்சித்து தலையீடுகளைச் செய்திருந்தார். அதன் காரணமாகவே நாம் பதிலளிக்க வேண்டி ஏற்பட்டது.
சீனா சுயாதீனமானதும் இறைமையுள்ளதுமான நாடு என்ற வகையில் எந்தவொரு சர்வதேச நாடும் எதைச் செய்ய வேண்டும் எப்படிச் செய்ய வேண்டும் என்று எமக்கு பாடம்புகட்ட வேண்டிய அவசிமில்லை. அதனை நாம் விரும்புவதுமில்லை.
கேள்வி:- இராஜாங்க செயலர் பொம்பியோ இலங்கையில் வைத்து சீனாவை விமர்சித்துள்ளாரே?
பதில்:- அவரது கூற்றுக்கு பதிலளித்துவிட்டோம். இரண்டு பாத்திரங்களில் நடிக்க கூடிய நாடு அமெரிக்கா மட்டுமேயாகும். மேலும், நாடொன்றுக்கான இராஜதந்திர விஜயமொன்றின்போது அந்த நாடு பிறிதொரு நாட்டுடன் கொண்டிருக்கும் இருதரப்பு உறவுகள் பற்றி கருத்துவெளியிடுவது அபத்தமாகும்.
எங்களுடைய நாட்டின் உயர்மட்டப் பிரதிநிதியான யங் யிச்சி (yang jiechi) தலைமயிலான குழு இலங்கைக்கு வந்து சென்றிருந்தது. இந்த விஜத்தின் முன்பும் சரி, பின்பும் சரி இலங்கை இருதரப்பு உறவுகளைக் கொண்டிருக்கும் அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட எந்தவொரு நாடு பற்றியோ அல்லது உறவு நிலைகள் பற்றியோ சீனா கருத்துக்களை வெளியிடவில்லை.
அவ்வாறு கருத்துவெளியிட வேண்டிய அவசியமும் கிடையாது. ஏனென்றால் நாங்கள் எந்தவொரு நாட்டினதும் இறைமையை மதிக்கின்றோம். அது இராஜதந்திரப் பண்புகளின் அடிப்படையுமாகும். அந்த அடிப்படைகளை பேணுவதற்கு சீனாவே முன்னுதாரணமாகும்.
கேள்வி:- பிரதமர் மோடி, பிரதமர் மஹிந்தவை மெய்நிகர் வழியில் சந்தித்தார். சீனாவின் உயர் மட்டக்குழு வந்தது. தற்போது அமெரிக்கவின் இராஜாங்கச் செயலாளர் வந்து சென்றுள்ளார். இத்தகைய தொடர்தேச்சியான நிகழ்வுகள் இலங்கை மீதான ‘பிடி’யை வைத்திருப்பதற்குரிய போட்டியாக இடம்பெறுகின்றதா?
பதில்:- இது ‘மிகைப்படுத்தப்பட்ட எதிர்வினை’ என்பதே எமது நிலைப்பாடாகும். இலங்கை சுதந்திரமானதும், சுயாதீனமானதுமான நாடு என்ற வகையில் சமத்துவத்துடன் எந்தவொரு தரப்பினையும் அணுகுவதற்கு முழு உரித்தையும் கொண்டுள்ளது. நாடுகளின் அளவுகளில் சர்வதேச உறவுகள் தங்கியிருப்பதில்லை.
கேள்வி:- அண்மைக்காலமாக அமெரிக்காவும், சீனாவும் இலங்கையின் அனைத்து விவகாரங்களிலும் ஏட்டிக்குப்போட்டியாக கரிசனை கொள்கின்ற நிலைமையொன்று நீடித்துக்கொண்டிருக்கின்றதே?
பதில்:- சீனாவைப் பொறுத்தவரையில் பல நாடுகளுடன் நெருங்கிய இருதரப்பு உறவுகளையும் ஒத்துழைப்புக்களையும் கொண்டிருக்கின்றது. சீனா இலங்கையில் மட்டும் முதலீடுகளைச் செய்யவில்லை. உதவிகளை வழங்கவில்லை. சீனா ‘அனைத்து நிதியையும் ஒரு கூடைக்குள் போடவில்லை’. சீனா தெற்காசிய பிராந்திய நாடுகளுடன் பல விடயங்களில் ஒத்துழைப்புக்களை வழங்கி கூட்டுச் செயற்பாடுகளில் ஈடுபடுகின்றது.
கேள்வி:- எம்.சி.சி. உட்பட அமெரிக்காவின் உடன்படிக்கைகளில் இலங்கை பங்குதாரர்களாக மாறுகின்றபோது சீனாவுக்கான முன்னுரிமை பாதிப்படையும் என்று கருதுகின்றீர்களா?
பதில்:- இந்த உடன்படிக்கையில் உள்ள விடயங்கள் பற்றிய தகவல்களை நாம் முழுமையாக அறியவில்லை. அத்துடன் மூன்றாம் தரப்பாக சீனா இருக்கையில் நாம் அவைபற்றி கருத்துக்கூறவும் முடியாது. இந்த உடன்படிக்கையில் ஈடுபடுவதா இல்லையா என்பதை இலங்கை அரசாங்கமே தீர்மானிக்க வேண்டியுள்ளது. பொதுப்படையாக, சர்ச்சைக்குரிய உடன்படிக்கைகளை சாதாரண பொதுமக்கள் அங்கீகரிப்பதில்லை. ஆகவே உடன்படிக்கைகள் போதுமான அளவு வெளிப்படைத்தன்மையானதாக இருக்க வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாக உள்ளது.
கேள்வி:- அண்மைக் காலமாக சீனா ‘ wolf warrior’ இராஜதந்திரத்தினை பின்பற்றுகின்றதா?
பதில்:- இது மேற்குலகத்தின் கட்டமைக்கப்பட்ட மற்றொரு குற்றச்சாட்டும் விமர்சனமுமாகும். அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலத்தினர், அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகள் அனைத்தும் தமது கற்பிதங்களின் படியும் அறிவுத்தல்களுக்கு அமைவாகவும் அவர்களை பின்பற்றியும் நடக்க வேண்டும் என்றே கருதுகின்றார்கள். அந்த நாடுகளுக்கு உள்ள சுயாதீன உரித்துக்களின் அடிப்படையில் பிரிதிபலிப்புக்களை, வெளிப்பாடுகளைச் செய்கின்றபோதுஇராஜதந்திர ரீதியாக விமர்சனங்களை முன்வைத்து பிரசாரம் செய்கின்றார்கள்.
‘அவர்களுக்கு’ எந்தவொரு நாட்டுக்குள்ளும் ஆயுதங்களுடன் செல்ல முடியும். எந்தவொரு நாடு பற்றியும் எவ்விதமான கருத்துக்களையும் முன்வைக்க முடியும். அப்படியிருக்கையில் இராஜதந்திர ரீதியாக எமது நிலைப்பாட்டை வெளிப்படுத்துவதற்கான அடிப்படை உரித்து காணப்படக்கூடாதா? ‘அவர்கள்’ அவ்வாறு சிந்திப்பதே அபத்தமானது.
சீனா, ‘அவர்களின்’ உள்ளக விடயங்களில் தலையீடு செய்வதில்லை. அதுபற்றி பேசுவதுகூட இல்லை. நாங்கள் ‘அவர்களுக்கு’ கற்பிதங்களைச் செய்வதில்லை. ஆனால் ‘அவர்களே’ தலையீடுகளைச் செய்கின்றார்கள். அவர்களிடத்தில் ‘வெள்ளை மேலதிக்கவாதம்’ காணப்படுகின்றது. ஏனைய தரப்புக்களின் ‘குரல்களை ஒடுக்கி’ தமது ‘பிடி’க்குள் வைத்திருப்பதே அவர்களின் நோக்கமாகவுள்ளது.
கேள்வி:- அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் பற்றிய சீனாவின் கரிசனை எவ்வாறுள்ளது?
பதில்:- அது அமெரிக்காவின் உள்ளக விவகாரம். யார் ஆட்சியில் இருக்க வேண்டும் இருக்ககூடாது என்பது அந்நாட்டு மக்களைப் பொறுத்தது. அதுபற்றி நாங்கள் அக்கறை கொள்ளவில்லை. ஏனைய உலக நாடுகளைப் போலவே நாங்களும் அமெரிக்க தேர்தல் அத்தியாயத்தின் முடிவுகளை எதிர்பார்க்கின்றோம். யார் ஆட்சியில் அமர்ந்தாலும் எமக்குப் பிரச்சினை இல்லை.
ஆனால் வாஷிங்டன் நிருவாகம் கடந்த காலங்களைப்போன்று ‘அரசியல் விளையாட்டுக்களில்’ ஈடுபடுவதை நிறுத்த வேண்டும். புதிய ஆட்சியின் கீழ் வாஷிங்டன் நிருவாகம் ‘தனது இரட்டை வேட அரசியல் விளையாட்டுக்களுக்கு முற்றுப்புள்ளி’ வைக்க வேண்டும்.
தமது நாட்டில் கொரோனாவால் இலட்சக்கணக்கான மனித உயிர்கள் பலியாகின்றபோது சீனாவை விமர்சித்துக்கொண்டும் பிறநாடுகளில் உள்நாட்டுப் போர்களை ஊக்கப்படுத்தி வளங்களை விரயம் செய்வதும் வெட்கக்கேடான விடயமாக உள்ளது.
கொரோனா விமர்சனங்கள், நிறவெறி தூண்டல்கள், போருக்கு ஊக்கமளித்தல், முரண்பாடுகளுக்கு வழிகோலுதல், பொருளாதார முடக்கங்களைச் செய்தல், சீனாவை விமர்சித்தல், என்று அனைத்தையும் அமெரிக்கா நிறுத்த வேண்டும்.
அதேநேரம் புதிய அமெரிக்க ஆட்சியாளர்களுடன் இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவதற்கான முயற்சிகளையும் சீனா நிச்சயம் முன்னெடுக்கும்.
நேர்காணல்:- ஆர்.ராம்
2020.11.01