முல்லைத்தீவு மாவட்ட காடுகளில் அழிக்கப்படும் இயற்கை வளங்கள்
–சண்முகம் தவசீலன்

முல்லைத்தீவு மாவட்டம் இயற்கை வளங்கள் நிறைந்த ஒரு அழகிய பிரதேசம். இங்கே அதிகளவு மக்கள் விவசாயத் தொழிலை பிரதான ஜீவனோபாய தொழிலாகக் கொண்டிருக்கின்றனர். ஒரு பகுதி மக்கள் மீன்பிடித் தொழிலை ஜீவனோபாய தொழிலாக கொண்டு வாழ்ந்து வருகின்றனர். இங்குள்ள விவசாயிகளுக்கு உரிய மழைவீழ்ச்சியை வழங்கக் கூடிய வகையிலே முல்லைத்தீவு மாவட்டம் இலங்கையில் அதிக வனப்பரப்பு கொண்ட ஒரு மாவட்டமாகக் காணப்படுகின்றது.
இயற்கை வளங்கள் நிறைந்த முல்லைத்தீவு மாவட்டத்தில் காணப்படுகின்ற இயற்கை வளங்கள் படிப்படியாக அழிக்கப்பட்டு வருகின்றன. கிரவல் மண் அகழ்வு, கருங்கல் அகழ்வு, மணல் அகழ்வு ,சட்டவிரோத மரக் கடத்தல் போன்று பல்வேறு வகைகளிலும் இங்குள்ள வளங்கள் அழிக்கப்பட்டு வருகின்றன. காடுகள் அழிக்கப்படுவதால் முல்லைத்தீவு மாவட்டத்தில் காடுகளின் அளவு வேகமாகக் குறைந்து கொண்டு வருகின்றது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் 2009 ஆம் ஆண்டிற்கு முற்பட்ட காலப் பகுதியில் நடப்பட்ட தேக்கு மரங்கள் தற்போது படிப்படியாக அழிக்கப்பட்டு வருகின்றன. கடந்த 4 ஆண்டுகளாக பல நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலப்பரப்பில் தேக்கு மரங்கள் வெட்டி அழிக்கப்பட்டுள்ளன.
இங்கே நடப்பட்டிருந்த தேக்கு மரங்கள் வெட்டப்பட்டு வேறு மாவட்டங்களுக்கு கொண்டு செல்லப்படுகின்றன. இவ்வாறு தேக்கு மரங்கள் வெட்டப்படுவது தொடர்பாக கடந்த வருடம் பாராளுமன்றத்தில் சிவஞானம் சிறிதரன் கருத்துத் தெரிவித்திருந்தார். கடந்த வருடம் இடம்பெற்ற மாவட்ட அபிவிருத்தி குழுக் கூட்டத்தில், இவ்வாறான தேக்கு மரங்கள் இனிவரும் காலங்களில் வெட்டப்படுவதாக இருந்தால் மாவட்ட அபிவிருத்தி குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் மாவட்ட அபிவிருத்தி குழுக் கூட்டத்தின் தீர்மானம் இல்லாமல் வனவள பாதுகாப்பு திணைக்களத்தினால் மீள்வனமாக்கல் என்னும் பேரில் அரசமர கூட்டுத்தாபனத்திற்கென வழங்கப்பட்டிருந்த நிலங்களில் வளர்ந்திருந்த தேக்கு மரங்கள் அழிக்கப்பட்டு வருகின்றன. முல்லைத்தீவு மாவட்டத்தின் முறிப்பு பகுதியில் 40 ஹெக்டேர் நிலப்பரப்பில் தேக்கு மரங்கள் வெட்டப்படுகின்றன.

சிறிய தேக்கு மரங்களும் மீள்வனமாக்கல் என்ற பெயரிலே அழிக்கப்பட்டு வருவது சூழலியலாளர்களின் விசனங்களுக்கு உள்ளாகியுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்த 4 ஆண்டுகளில் மீள்வனமாக்கல் என்ற பெயரில் அழிக்கப்பட்ட எந்தக் காட்டிலும் மீள்வனமாக்கல் நடவடிக்கைகள் நடைபெறவில்லை.
ஒரு புறம் மணல் அகழ்வின் ஊடாக காடுகள் அழிக்கப்பட்டு கொண்டு வருகின்ற அதேவேளை இன்னொரு புறத்தில் கிரவல் அகழ்வின் ஊடாக காடுகள் அழிக்கப்பட்டு வருகின்றன. அதேபோன்று சட்டவிரோதமாக மரங்கள் வெட்டப்பட்டு கடத்தப்படுகின்றன.
ஒழுங்கான மழைவீழ்ச்சி கிடைத்த முல்லைத்தீவு மாவட்டத்தில் காடுகள் அழிக்கப்படுவதால் மழைவீழ்ச்சி தற்போது ஒழுங்காகக் கிடைப்பதில்லை. முல்லைத்தீவு மாவட்டத்தின் பிரதான ஜீவனோபாய தொழிலாக காணப்படுகின்ற விவசாயத்துக்கு பாதிப்பு ஏற்படுமென விவசாயிகள் அஞ்சுகின்றனர்.
எனவே இவ்வாறான நிலைமையைக் கருத்திற் கொண்டு முல்லைத்தீவில் இடம்பெறுகின்ற காடழிப்பை நிறுத்த வேண்டுமென விவசாயிகள் கோருகின்றனர்.
–தினகரன்
03.11.2020