ஆசிய, பசுபிக் பிராந்தியத்தில் ‘சீன எதிர்ப்பு பொறிமுறையை’ முற்றாக எதிர்க்கின்றோம்!

சீன தூதரக அரசியல் பிரிவுத் தலைவர் விசேட செவ்வியின் கடந்தவார தொடர்ச்சி……
ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் ‘சீன எதிர்ப்பு பொறிமுறையை’ நாம் முற்றாக எதிர்க்கின்றோம். அவ்விதமான செயற்பாடுகளை பார்த்து பொறுத்துக்கொண்டு இருக்க முடியாது என்று மக்கள் சீனக் குடியரசின் இலங்கைக்கான தூதரகத்தின் அரசியல் பிரிவுத் தலைவரும், ஊடகப்பேச்சாளருமான லூ சொங் (Luo Chong) வீரகேசரிக்கு வழங்கிய விசேட செவ்வியின்போது தெரிவித்தார்.
அந்தச் செவ்வியின் இறுதிப்பாகம் வருமாறு,
கேள்வி:- ஒரேபட்டி ஒரே பாதை முன்முயற்சியில் (Belt and Road Initiative) சீனா, அம்பாந்தோட்டையை மையப்படுத்தியமைக்கான காரணம் என்ன?
பதில்:- ஒரேபட்டி ஒரே பதை முன்முயற்சி சம்பந்தமாக தவறான கருதுகோள்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இது, தனியே சீனாவின் நலன்களை மையப்படுத்திய செயற்பாட்டு ரீதியான திட்டமொன்று அல்ல. சீன ஜனாதிபதி ஷி ஜின் பிங் இந்த முன்முயற்சியை முன்மொழிந்துள்ளார் என்பதற்காக அது சீனாவின் திட்டம் என்றாகிவிடாது. இருநாடுகளினது கூட்டில் முன்னெடுக்கப்படும் திட்டமாகும்.
அதனடிப்படையில் தான் அந்தந்த நாட்டு அரசாங்கங்களின் முன்மொழிவுகள் மற்றும் சீனாவின் பங்களிப்புக்கள் ஆகியவற்றுடன் ஒரேபட்டி ஒரேபாதை முன்முயற்சி முன்னெடுக்கப்படுகின்றது. ஏனைய நாடுகள் முன்னெடுக்கும் திட்டங்களிலிருந்து இது முற்றிலும் வேறுபட்டிருக்கின்றது. அந்தவகையில் அம்பாந்தோட்டையை இலங்கை அரசாங்கமே முன்மொழிந்தது. இருப்பினும் மேற்குல சக்திகளால் அது தவறாக மிகைப்படுத்தப்பட்டு பிரசாரம் செய்யப்பட்டுள்ளது.
ஒரே பட்டி ஒரே பாதை முன்முயற்சியின் கீழ் இலங்கை, சீனா பரஸ்பர முன்மொழிவில் பல திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. உதாரணமாக கூறுவதாயின், கொழும்பு துறைமுகத்தினுடைய சர்வதேச கொள்கலன்கள் முனையத்தின் திறனை மேம்படுத்துவதற்காக 90மில்லியன் டொலர்களை சீனா முதலீடு செய்வதற்கு இலங்கையின் அமைச்சரவை அனுமதித்துள்ளது. இவ்விதமான பல திட்டங்கள் இலங்கை அரசாங்கத்தின் முன்மொழிவுடன் நடைபெறுகின்றது. ஆகவே அம்பாந்தோட்டையை மட்டும் குறிப்பிட்டுக் கூறுவது பொருத்தமல்ல.
கேள்வி:- ஒரேபட்டி ஒரே பாதை முன்முயற்சியில் இலங்கையின் வடக்கு கிழக்கு பகுதிகளை இணைத்துக் கொள்வதற்கு சீனா விரும்புகின்றதா?
பதில்:- இலங்கை அரசாங்கம் தான் அதனை தீர்மானிக்க வேண்டும். இலங்கையின் வடக்கு கிழக்கினையும் இந்த முன்முயற்சிக்குள் உட்கொண்டுவருவதற்கு இலங்கை அரசாங்கம் முன்மொழியுமாக இருந்தால் சீனா ஒத்துழைப்புக்களை வழங்குவதற்கு தயாராகவே உள்ளது. விசேடமாக அந்த பகுதிகளின் உட்கட்டமைப்பு அபிவிருத்தி, இணைப்புக்களை மேம்படுத்தல் உள்ளிட்ட விடயங்களை மையப்படுத்தி அது அமையுமாக இருந்தால் வரவேற்கத்தக்கது.
கேள்வி:- ஒரே பட்டி ஒரே பாதை முன்முயற்சியினுள் இந்தியாவை இணைத்துக்கொள்வதில் சீனாவுக்கு உள்ள தடைகள் என்ன?
பதில்:- சீனா வெளிப்படைத் தன்மையுடன் தான் உள்ளது. ஆனால் இந்தியாவுக்கு காஷ்மீர் பிரச்சினை உட்பட மேலும் பல விடயங்கள் தொடர்பில் கரிசனைகள் காணப்படுகின்றன. அதன் காரணத்தினால் இந்தியா ஒரேபட்டி ஒரே பாதை முன்முயற்சியில் பங்குபற்றுவதில் தயங்குகின்றது. ஆனால் தெற்காசிப் பிராந்தியத்தில் இந்தியா தவிர்ந்த ஏனைய அனைத்து நாடுகளும் இந்த முன்முயற்சியின் பங்குதாரர்களாக உள்ளார்கள். வினைத்திறனாக கூட்டுச் செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளார்கள்.
கேள்வி:- சர்ச்சைக்கு உள்ளாகியிருக்கும் கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் தொடர்பில் சீனா கரிசனை கொண்டிருக்கின்றதா?
பதில்:- அது இலங்கையின் உள்ளக விவகாரம். கிழக்கு முனைத்தில் சார்ச்சைகள் இருப்பதாக ஊடகங்கள் வாயிலாகவே அறிகின்றோம். சில வருடங்களுக்கு முன்னதாக கிழக்கு முனைய அபிவிருத்திக்காக ‘இருதரப்பு கூட்டுறவு உடன்படிக்கைக்கான’ பகிரங்க கோரிக்கை விடுக்கப்பட்டபோது சீன நிறுவனமும் ஆவணங்களை சமர்ப்பித்திருந்தது. ஆனால் கடந்த அரசாங்கம் அந்த ஆவணங்களை ஒரு தடவையேனும் திறந்துகூட பார்க்கவில்லை. பின்னர் அந்த அரசாங்கம் பிராந்திய, அயல் நாடுகளுக்கு வழங்கியது. இருப்பினும் அந்த விடயத்தில் தற்போது வரை சர்ச்சைகள் நீடிப்பதாக அறிகின்றோம்.
அதேநேரம், சீனாவிடத்தில் வழங்கப்பட்ட கொழும்புத் துறைமுக தெற்கு முனையத்தின் பணிகள் முறையாக முன்னெடுக்கப்பட்டுள்ளன. அடுத்கட்ட செயற்பாடுகளும் ஆரம்பமாகியுள்ளன. ஆனால் கிழக்கு முனையத்தின் அபிவிருத்திப்பணிகள் எதுவுமே முன்னெடுக்கப்படவில்லை. சீனாவைப் பொறுத்தவரையில் இலங்கை அரசாங்கம் கோரிக்கை விடுக்கும் பட்சத்தில் எந்தவொரு திட்டத்திற்கும் பூரண ஒத்துழைப்புக்களை வழங்கும். கிழக்கு முனையத்திற்கும் அது பொருந்தும்.
கேள்வி:- சீன கட்டுமான கூட்டுத்தாபனம் உட்பட 24 நிறுவனங்களுக்கு அமெரிக்க விதித்துள்ள தடையானது இலங்கையில் முன்னெடுக்கப்பட்டு வரும் துறைமுக நகர அபிவிருத்தி திட்டத்தில் தாக்கம் செலுத்துமா?
பதில்:- அமெரிக்கா தனது நாட்டில் மட்டுமே இந்த நிறுவனங்களுக்கான தடையை அமுலாக்க முடியும். அதற்கு அப்பால் அமெரிக்காவின் தடைவிதிக்கும் தீர்மானத்தினை அமுலாக்க முடியாது. அவ்வாறு சர்வதேச ரீதியாக அமுலாக்குவதற்கு அமெரிக்காவிடம் எவ்விதமான சர்வதேச சட்டங்களும் இல்லை. ஆகவே இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான விடயங்களில் அமெரிக்காவின் தீர்மானம் தாக்கம் செலுத்தாது. இந்த விடயத்தில் இலங்கை அரசாங்கம் தனது நிலைப்பாட்டை தெளிவாக கூறியுள்ளது. அதாவது, துறைமுக நகரம் இலங்கையின் எதிர்காலத்திற்கு மிக முக்கியமானது. அதனை தொடர்வோம் என்பதே அந்நிலைப்பாடாகும்.
கேள்வி:- இந்திய எல்லையான லடாக்கில் பதற்றம் நீடிக்கின்ற நிலையில், இலங்கையுடன் சீனாவின் நெருக்கமான ஊடாட்டம் அந்நாட்டுக்கும், பிராந்தியத்திற்குமான தேசிய பாதுகாப்பு கரிசனையை தோற்றுவிக்கின்றதல்லவா?
பதில்:- அது இந்தியாவினுடைய பிரச்சினை, ஆனால் இந்தியாவின் அந்தக் கரிசனையானது சில சமயங்களில் ‘அதியுச்சமான உணர்பூர்வ’ வெளிப்பாட்டால் ஏற்படுகின்றது.

கேள்வி:- அமெரிக்கா, இந்தியா, ஜப்பான், அவுஸ்ரேலியா ஆகிய நான்கு நாடுகளின் கூட்டில் உருவாகியுள்ள “குவாட்” (Quad) கூட்டு சீனாவுக்கு அச்சுறுத்தலாக காணப்படுகின்றதா?
பதில்:- சீனாவின் வெளிவிவகார அமைச்சர் வங் (Wang Yi), குவாட் தொடர்பிலான நிலைப்பாட்டை பகிரங்கமாக அறிவித்துள்ளர். அந்த வகையில், ‘சீன எதிர்ப்பு பொறிமுறையை’ நாம் முழுமையாக எதிர்க்கின்றோம். சோவியத் யூனியனுக்கு எதிரான பனிப்போர்க்காலத்தில் நேட்டோ உருவாக்கப்பட்டது.
நேட்டோ என்பது நாடுகளுக்கு இடையில் படைகளை மட்டுமே மையப்படுத்திய கூட்டாகும். தற்போது குவாட்டின் ஊடாக ஆசிய நேட்டோவை உருவாக்குவதற்கு முயற்சிக்கப்படுகின்றது. இந்த முயற்சியானது ஆசிய கண்டத்தில் உள்ள தனியொரு நாட்டுக்கு(சீனாவுக்கு) எதிரான நடவடிக்கையாகும்.
ஆகவே ஆசிய நேட்டோவை உருவாக்கும் செயற்பாட்டை பார்த்து பொறுத்துக் கொண்டிருக்க முடியாது. ஆசிய பிராந்தியத்தில் பனிப்போர் ஒன்றை சீனா விரும்பவில்லை. இந்தியாவோ, ஜப்பானோ, அவுஸ்திரேலியாவோ பனிப்போரை விரும்பவில்லை. ஆனால் ஆசியாவில் ஆதிக்கம் செலுத்தி தமது ஏகாதிபத்தியத்தினை உறுதிப்படுத்துவதற்கு அமெரிக்காவே முனைகின்றது. அமெரிக்கா 80களில் சோவியத்தில் முன்னெடுத்த மூலோபாயத்தினை தற்போது ஆசியப்பிராந்தியத்தில் செயற்படுத்த விளைகிறது.
இதனால் ஆசிய நாடுகளுக்கிடையில் முரண்பாடுகளே அதிகரிக்கும். சமதானமும், அபிவிருத்தியும் சிதைந்துபோய்விடும். ஆகவே அவ்விதமான பொறிமுறைகளை ஆசியப்பிராந்தியத்தில் முன்னெடுப்பதற்கு சீனா ஒருபோதும் அனுமதிக்காது. அதேநேரம், இலங்கை குவாட் கூட்டில் இணைந்து கொள்ளமாட்டாது என்ற பெரும் நம்பிக்கையும் சீனாவுக்கு உள்ளது.
கேள்வி:- மலபார் கூட்டுப்பயிற்சி தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் நிலையில் இந்தியா, நிக்கோபாரில் இடமாற்று துறைமுகத்தினை அமைக்கவுள்ளமையை எவ்வாறு பார்க்கின்றீர்கள்?
பதில்:- துறைமுகம் அமைப்பது இந்தியாவினுடைய முன்மொழிவாகும். சீனாவைப் பொறுத்தவரையில் ஆசிய, பசுபிக் பிராந்தியத்தின் கடற்போக்குவரத்து சுதந்திரமானதாக இருக்க வேண்டும் என்பதே இறுதியான நிலைப்பாடாகும். அதேநேரம், ஆசியப் பிராந்தியத்தில் யார் படைத்தளங்களை அமைக்கின்றார்கள். யார் பின்னணியில் இருந்து கொண்டு திட்டங்களை முன்மொழிகின்றார்கள் என்று ஆழ்ந்து அவதானியுங்கள். அனைத்துப் பின்னணிகளையும் நீங்கள் புரிந்துகொள்ள முடியும். நிச்சயமாக அது சீனாவாக இருக்காது.
கேள்வி:- சீனாவின் உயர்மட்டப் பிரதிநிதியான யங் யிச்சி (Yang Jiechi) இலங்கையின் இறைமையை ஜெனீவா மனித உரிமைகள் பேரவை உட்பட அனைத்து இடங்களிலும் பாதுகாப்பதற்கு உதவுவதாக கூறியுள்ளார். இதன்மூலம் இலங்கை அரசாங்கத்தினை எந்தவொரு சூழலிலும் பாதுகாக்க சீனா முனைகிறதா?
பதில்:- சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையில் பல சர்வதேச தளங்களில் காணப்படும் கூட்டுறவுகள் உயர்மட்டத்திலேயே கடந்த பல தசாப்தங்களாக நீடிக்கின்றது. விசேடமாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கையுடனான கூட்டுறவுகளைப் பேணும் நாடுகளில் சீனா பிரதான அங்கம் வகிக்கின்றது. ஒரு நாடு பிறிதொரு நாட்டின் உள்ளக விவகாரங்களில் தலையிடுவதை சீனா விரும்புவதில்லை. அதனடிப்படையில் தான் சீனா சர்வதேச இராஜதந்திர இருதரப்பு உறவுகளை பின்பற்றி வருகின்றது.
கேள்வி:- இலங்கையின் தேசிய இனக்குழுமமான தமிழர்கள் மனித உரிமை, மனிதாபிமாச் சட்ட மீறல்கள் தொடர்பில் பொறுப்புக்கூறலையும், நீதியையும் எதிர்பார்த்து இருக்கையில் சீனா, இலங்கை அரசாங்கத்தினை மையப்படுத்தி அல்லவா செயற்படுகிறது?
பதில்:- சீனாவினுடைய சர்வதேச உறவுகள் அரசாங்கங்கள் மட்டத்திலேயே அமைகின்றது. அதனை மையப்படுத்தி செயற்படுவதானது ஒரு இனக்குழுமத்திற்கு எதிராக செயற்படுவதாகக் கொள்ள முடியாது. அதேநேரம், உள்விவகாரங்கள் அரசியல் மயப்படுத்தப்படக்கூடாது. விசேடமாக மனித உரிமைகள் சார்ந்த விவகாரங்கள் அரசியல் மயப்படுத்தப்படவும் கூடாது. அவை சர்வதேச மயப்படுத்தப்படவும் கூடாது.
மனித உரிமை உள்ளிட்ட விவகாரங்கள் உள்நாட்டிலேயே முன்னுதாரணங்கள், ஆலோசனைகளுடன் கலந்துரையாடல்கள் ஊடாக தீர்க்கப்பட வேண்டியவை. எமது நாட்டிலும் அவ்வாறே நடைபெற்று வருகின்றது. சீனா ‘ஒரே நாடு’ என்ற கொள்கையை பின்பற்றுகிறது. எமது மக்கள் சர்வதேச நாடுகளோ அல்லது நிறுவனங்களோ என்ன செய்ய வேண்டுமென்று குறித்துரைப்பதை ஒருபோதும் விரும்புவதில்லை. இதுதான் சீனாவின் நிலைப்பாடாகும்.

கேள்வி:- இலங்கையின் தமிழ்த் தரப்புக்களுடன் சீனா வரையறுக்கப்பட்ட இடைவெளியொன்றை பேணிவருவதற்கு விசேட காரணங்கள் உண்டா?
பதில்:- இலங்கை வாழ் தமிழர்களுக்கும், சீனாவுக்கும் இடையில் 2ஆயிரம் வருடங்கள் பழைமைவாய்ந்த நல்லுறவுகள் இருக்கின்றன. மதகுருவும், கல்வியாளருமான ‘சுவான்சாங்’ (Yuan Zwang) 618ஆம் ஆண்டுக்கு பின்னர் இந்தியாவின் தமிழ் நாட்டிற்கு விஜயம் செய்துள்ளார்.
அதேநேரம், சீனாவைச் சேர்ந்த கப்பல் தளபதி ‘செங்ஹோ’ திருமலை சீனக் குடாவிற்கு வருகை தந்திருக்கின்றார். அத்துடன் இவரால் கி.பி. 1410ஆம் ஆண்டு பொருத்தப்பட்ட ‘சிலாசனம்’ காலியில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. அந்தச் சிலாசனத்தில் சீனம், பாரசிகம், தமிழ், ஆகிய மொழிகளில் குறிப்புக்கள் காணப்படுகின்றன. அது தற்போது கொழும்பு அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது. தமிழ் மொழி அக்காலத்திலேயே முக்கியத்துவம் அளித்து பயன்படுத்தப்பட்டிருக்கின்றது என்றால் இருதரப்பு உறவுகளின் பிணைப்பினை உணரமுடிகிறது.
வடக்கு மாகாணத்தின் அல்லைப்பிட்டியில் மேற்கொண்ட தொல்பொருள் அகழ்வின்போது 600வருட பழமைவாய்ந்த சீனாவின் மட்பாண்ட பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. இந்த வரலாற்று விடயங்கள் சீனாவுக்கும் இலங்கைக்கும் அதேநேரம் விசேடமாக தமிழர்களுக்கும் இடையில் நீண்ட உறவுகள் இருந்துள்ளன என்பதை பறைசாற்றுகின்றன.
அதன்பின்னர் மூன்று தசாப்தங்களாக இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டுப் போரின் காரணமாக தொடர்தேச்சியான உறவுகளை பேணமுடியாது போய்விட்டது. தற்போது நாம் வடக்கு,கிழக்கு, மலையகம் என்ற வேறுபாடுகளின்றி தமிழ் மக்களுடன் உறவுகளை கட்டியெழுப்பி வருகின்றோம்.
அண்மையகாலத்தில் வர்த்தக ரீதியிலான உறவுகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மன்னாரிலிருந்து தூளாக்கப்பட்ட மீன், கடல் வெள்ளரிகாய் போன்றவை சீனாவுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. அவற்றுக்கு நல்ல கேள்வியும் இருக்கின்றது.
கேள்வி:- ஒப்பீட்டளவில் பார்க்கும்போது போர் நிறைவுக்கு வந்து பத்து ஆண்டுகளில் வடக்கு,கிழக்கு, மலையகம் தொடர்பில் குறைந்தளவான கரிசனைகளையே சீனா வெளிப்படுத்தியுள்ளதே?
பதில்:- போரின் பின்னரான சூழலில் நெடுஞ்சாலைகள் அமைப்பு, பாலங்கள் புனரமைப்பு பணிகளில் சீன நிறுவனங்கள் பங்களிப்புச் செய்துள்ளன. அதனைவிட கடல்சார் விடயங்களிலும் உதவிகளை சீனா வழங்கியுள்ளது. வடக்கு, கிழக்கு, மலையகம் உள்ளிட்ட பகுதிகளில் உட்கட்டமைப்பு மற்றும் வாழ்வாதர செயற்றிட்டங்களை முன்னெடுத்து வருகின்றோம். மேலும் முன்னெடுப்பதற்கு எதிர்பார்த்திருக்கின்றோம்.
இங்கு கவலையளிக்கும் விடயமொன்றை குறிப்பிட வேண்டியிருக்கின்றது. விசேடமாக வடக்கு மாகாணத்தில் சீனா முதலீகளைச் செய்வதற்கு “வெளியாரினால்” திட்டமிட்டு தடைகள் ஏற்படுத்தப்படுகின்றன. வடக்கில் மக்களுக்காக 40ஆயிரம் வீடுகளை அமைக்கும் திட்டமொன்றை சீன நிறுவனம் முன்மொழிந்திருந்தது.
அதற்கான அனைத்து செயற்பாடுகளும் பூர்த்தியாகியிருந்த நிலையில், “அரசியல் நலன்கள்” காரணமாக அத்திட்டம் நிராகரிக்கப்பட்டது. வடமாகாண அரசியல் பிரதிநிதிகளுக்கு “வெளியாரால்” வழங்கப்பட்ட அழுத்தமே அதன் பின்னணியில் காணப்பட்டது. அரசியல் காரணங்களுக்காக மக்களுக்கான நலத் திட்டங்கள் முன்னெடுக்கப்படாது போகின்றமை துரதிஷ்டவசமானது.
கேள்வி:- வடக்கு, கிழக்கு, மலையக அரசியல் பிரதிநிதிகளுடன் தொடர்ந்திருக்க கூடிய சுமுகமான உறவுகளை கட்டியெழுப்புவதற்கு ஏன் முனையவில்லை?
பதில்:- சீனா வெளிப்படைத் தன்மையுடனே நடந்துகொள்கின்றது. அனைத்து மக்களின் வாழ்வியலை மேம்படுத்துவதற்கான ஒத்துழைப்புக்களை வழங்குவதற்கு சீனா தயாராகவே உள்ளது. அதற்காக வடக்கு, கிழக்கு, மலையகம் ஆகியவற்றில் பொருத்தமான சூழல் அமையவேண்டும் என்று எதிர்பார்கின்றது. அரசியல் தரப்புக்களின் பின்னடிப்புக்களுக்கு “வெளியாரின்” தலையீடுகளே காரணம். அது உள்நாட்டு விவகாரத்துடன் தொடர்புடையது. அதுபற்றிய என்னால் கூறமுடியாது. சீனாவைப் பொறுத்தவரையில் இலங்கையின் அனைத்து இன குழுமத்துடன் வரலாற்று ரீதியான நல்லுறவை தொடர்ந்தும் வலுவாக பேணி வருகின்றது. இதில் எவ்விதமான பாரபட்சங்களும் இல்லை.
கேள்வி:- ஷாங்காய் அருங்காட்சியகம் மற்றும் இலங்கையின் மத்திய கலாசார மன்றத்தின் கூட்டிணைவில் 2018இல் அல்லைப்பிட்டியில் மேற்கொள்ளப்பட்ட தொல்பொருள் ஆய்வுகளின் போது சீன மட்பாண்ட பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டிருந்த நிலையில் அதுதொடர்பான அடுத்த கட்டம் என்ன?
பதில்:- இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையில் நாகரீக, கலாசார, பண்பாட்டுத் தொடர்புகள் காணப்படுகின்றன. அவை மேலும் விஸ்தரிக்கப்பட வேண்டியுள்ளன. ஆகவே அவைபற்றிய ஆய்வுகள் அவசியமாகின்றன. உயிர்த்த ஞாயிறு தாக்குதல், உள்நாட்டு தேர்தல்கள், கொரோனா பரவல் போன்றவற்றால் அச்செயற்பாடுகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன. நிலைமைகள் வழமைக்கு திரும்பியதும் நிச்சியமாக அச்செயற்பாடுகள் மீளவும் தொடரப்படும். ‘மக்களுக்கும் மக்களுக்கும் இடையிலான தொடர்புகளை பரிமாற்றும்’ கோட்பாட்டின் அடிப்படையில் அப்பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
நேர்காணல்:- ஆர்.ராம்
2020.11.08
செவ்வியின் முதற்பாகம்: அமெரிக்காவிடத்தில் வெள்ளை மேலாதிக்கவாதம்
YUAN SWANG – CHINESE TAVELLER HISTORY
உலக வரலாற்றை, பயணிகள்தான் தீர்மானித்திருக்கிறார்கள். அவர்களின் சாகசங்களும் அறிவார்ந்த செயல்களும் உலக வரலாற்றின் நீள அகலங்களை மாற்றி அமைத்திருக்கின்றன.
ஆறாம் வகுப்பு, ஏழாம் வகுப்பு வரலாற்றுப் பாடத்தின் மூலம் நமக்கு ஒரு வரியில் அல்லது ஒரு பத்தியில் மட்டுமே அறிமுகமனவர்தான் சீனப் பயணி யுவான் சுவாங்.
நாட்டைவிட்டு இன்னொரு தேசத்துக்குச் செல்வது தேசக் குற்றம் என்று சீனாவில் கருதப்பட்ட காலம். அதையும் மீறி யுவான் சுவாங் இந்தியாவை நோக்கிப் பயணிக்கக் காரணம், தான் ஏற்றுக்கொண்ட புத்த மதம் தோன்றிய பூமியைப் பார்க்கும் ஆவல்.
புத்தர் ஞானம் அடைந்த புத்தகயாவைத் தரிசிக்கவும், போதி மரத்தின் நிழலில்தன் ஆன்மாவை இளைப்பாற்றவும், புத்தர் மூழ்கி எழுந்த நிரஞ்சனா நதியில் நீராடவும், புத்த ஞானத்தைக் கற்பதும்தான்.
ஆனால், அதற்காக அவர் அடைந்த இன்னல்களும், சங்கடங்களும் கொஞ்சநஞ்சம் அல்ல. கிட்டத்தட்ட 17 ஆண்டு கால அவரது பயணத்தில் குறுக்கே நின்றவை கொடும்பாலை, கடுங்குளிர், வெப்பக்காற்று, ஆழம் நிறைந்த ஆறுகள், வழிப்பறிகள், வானுயர்ந்த மலைகள், அரசர்களின் சுயநலம் ஆகியவை.
தன் 17 வருட ஆன்மிகப் பயணத்தில் இந்தியாவில் இருந்து யுவான் சுவாங் எடுத்துச் சென்றவை, 22 குதிரைகளில் 627 சமஸ்கிருத நூல்களும், 115 புனிதப் பொருட்களும், புத்தரின் பொற்சிலை ஒன்றும்தான்.
கடும்கட்டுப்பாட்டை மீறி சீனத் தேசத்தை விட்டு வெளியேறி வந்த யுவான் சுவாங், கி.பி.645-ம் ஆண்டு மீண்டும் சீனா வந்தபோது கோலாகலமாக வரவேற்கப்பட்டதும், சீன தேசத்தின் மந்திரியாகும் வாய்ப்பு கிடைத்தபோது தான் வரித்துக்கொண்ட கொள்கைக்காக அதனை ஏற்க மறுத்ததும், இந்தியாவிலிருந்து கொண்டுவந்த சமஸ்கிருத நூல்களை சீனத்தில் மொழிபெயர்க்க ஆட்களை மட்டும் பெற்றுக்கொண்டு, அந்தப் பணியில் மட்டுமே தன்னை அர்ப்பணித்து 65-வது வயதில் இறப்பதுவும், யுவான் சுவாங்கின் வாழ்வு ஒரு கனவுபோல விரிகிறது.
சுவான்சாங் (யுவான் சுவாங்) என்பவர் ஒரு புகழ் பெற்ற சீன மதகுருவும், கல்வியாளரும், பயணியும், மொழிபெயர்ப்பாளரும் ஆவார். இவரது பயணங்கள், சீனாவின் தொடக்க தாங் காலத்தில் சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையில் தொடர்புகளை ஏற்படுத்தின. தனது 17 ஆண்டுகள் பிடித்த இந்தியாவுக்குச் சென்று சீனா திரும்பிய பயணத்தின் மூலம் இவர் பெரும் புகழ் எய்தினார். தனது பயணம் பற்றிய விபரங்களை அவர் தனது தன்வரலாற்றில் குறித்துள்ளார்.
சுவான்சாங் ஹெனானில் உள்ள, லுவோயாங்குக்கு அண்மையிலுள்ள ஓர் இடத்தில் பிறந்தார். இவர் பிறந்த ஆண்டு 602 எனக் கருதப்படுகிறது. 664 ஆம் ஆண்டில் யூ ஹுவா கோங் என்னும் இடத்தில் இவர் காலமானார். சென் ஹுயி என்னும் இயற் பெயர் கொண்ட சுவான்சாங்கின் குடும்பம் பல தலைமுறைகளாகவே கல்வியறிவு கொண்டவர்களாக இருந்தனர். இவர் குடும்பத்தில் நான்கு பிள்ளைகளுள் கடைசியாகப் பிறந்தவர். இவரது பாட்டன், தலைநகரில் இருந்த இம்பீரியல் கல்லூரியில் பேராசிரியராக இருந்தார். இவரது தந்தையார் ஒரு பழமைவாத கன்பூசியன். இவர் அக்காலத்தில் சீனாவைப் பீடித்திருந்த அரசியல் குழப்பங்களில் இருந்து தப்புவதற்காகத் தன் பதவியை உதறிவிட்டுத் தனிமையை நாடிச் சென்றுவிட்டார். மரபுவழிக் கதைகளின்படி, சுவான்சாங், இளம் வயதிலேயே மிகுந்த புத்திசாலியாகவும், ஊக்கம் உள்ளவராகவும் இருந்தார். இவரும், இவரது உடன் பிறந்தோரும், தமது தொடக்கக் கல்வியைத் தமது தந்தையிடமே கற்றனர். மரபுசார் கன்பூசியனியத்தின் பல்வேறு நூல்களை அவர்கள் அவரிடமிருந்து கற்றனர்.
இவரது உறவினர்கள், பெரும்பாலும் கன்பூசிய மதம் சார்ந்தவர்களாகவே இருந்தாலும், இவரது ஒரு தமையனைப் பின்பற்றி புத்த துறவியாக வரும் ஆசை அவருக்கு இளம் வயதிலேயே ஏற்பட்டது. 611 ஆம் ஆண்டில் தந்தையார் இறந்ததும், இவர் தனது மூத்த தமையனுடன், லுவோயாங்கில் இருந்த ஜிங்டு துறவிகள் மடத்தில் தங்கியிருந்தார். இம் மடத்தை சுயி அரச மரபினர் ஆதரித்து வந்தனர். இக் காலத்தில் சுவான்சாங் தேரவாத பௌத்தம், மகாயான பௌத்தம் ஆகிய இரண்டையுமே கற்றறிந்தார். எனினும், மகாயான பௌத்தத்தையே அவர் விரும்பினார்.
618 ஆம் ஆண்டில் சுயி மரபின் ஆட்சி வீழ்ச்சியடைந்ததும், சகோதரர்கள் இருவரும் தாங் அரசின் தலைநகராக அறிவிக்கப்பட்டிருந்த சாங்கான் என்னும் இடத்துக்குத் தப்பிச் சென்றனர். பின்னர் அங்கிருந்து தெற்குப் புறமாக சிச்சுவானில் உள்ள, செங்டுவை அடைந்தனர். அங்கே கொங் ஹுயி என்னும் துறவிமடத்தில் தங்கியிருந்து அபிதர்மகோசம் முதலிய நூல்களைப் படித்தனர். இவருக்குப் 13 மூன்று வயதாக இருந்தபோது புத்த துறவியாகும்படி கேட்கப்பட்டார். எனினும் இவரது அறிவுத் திறன் காரணமாக மடத்தலைவர் இவருக்கு விதிவிலக்கு அளித்தார்.
தனது 20 ஆவது வயதில் இவர் ஒரு முழுமையான புத்த துறவி ஆனார். அக்காலத்தில் சீனாவில் இருந்த பௌத்த நூல்களில் இருந்த பெரும் தொகையான முரண்பாடுகள், அவரை இந்தியாவுக்குச் சென்று, புத்த சமயத்தின் பிறப்பிடத்திலேயே கல்வி கற்கத் தூண்டின. இவர் தனது தமையனைப் பிரிந்து, பிறமொழிகளைப் பயிலவும், புத்த சமயம் பற்றி மேலும் அறிந்து கொள்ளவுமாக, செங்கானுக்குத் திரும்பினார். 626 ஆம் ஆண்டில் சமஸ்கிருதம் கற்கத் தொடங்கினார். இக் காலத்தில் பௌத்ததின் யோகாசாரப் பிரிவிலும் இவருக்கு ஆர்வம் ஏற்பட்டது.
629 ஆம் ஆண்டில், இவர் கண்ட கனவு ஒன்றினால் இவர் இந்தியாவுக்குச் செல்ல முடிவு செய்தார். அந் நேரம் தாங் பேரரசுக்கும், கிழக்குத் துருக்கியரான, கோக்துருக்கியருக்கும் போர் மூண்டது. பேரரசன் தாங் தைசோங் வெளிநாட்டும் பயணங்களைத் தடை செய்தான். சுவான்சாங் சில பௌத்த காவலர்களின் உதவியோடு கான்சு, கிங்காய் மாகாணம் ஆகிய இடங்களூடாகப் பேரரசை விட்டு வெளியேறினார். பின்னர் கோபி பாலைவனத்தின் ஊடாகப் பயணம் செய்து குமுல் என்னும் இடத்தை அடைந்த அவர் அங்கிருந்து மேற்கு நோக்கிச் சென்று துர்பான் என்னும் இடத்தை 630 ஆம் ஆண்டில் அடைந்தார். இங்கே ஒரு புத்த சமயத்தவனான துர்பானின் அரசனைச் சந்தித்த சுவான்சாங், அவனிடமிருந்து அறிமுகக் கடிதங்களையும், பயணத்துக்கான பொருளும் பெற்றுக்கொண்டு பயணத்தைத் தொடர்ந்தார்.
மேற்கு நோக்கிப் பயணத்தைத் தொடர்ந்த அவர் எதிர்ப்பட்ட கொள்ளையரிடம் இருந்து தப்பி யாங்கியை அடைந்தார். இங்கிருந்து, குச்சாப் பகுதியில் உள்ள பல தேரவாதத் துறவி மடங்களுக்குச் சென்றார். தொடர்ந்தும் மேற்குப் புறமாகச் சென்று அக்சு என்னும் இடத்தைக் கடந்தபின் வடமேற்கில் திரும்பி தியன் சானின் பெடல் கணவாய் வழியாக இன்றைய கிர்கிஸ்தானுக்குள் நுழைந்தார்.
கைபர் கணவாய் வழியாக இந்தியாவிற்குள் வந்த யுவான் சுவாங் காஷ்மீரம், பாடலி புத்திரம் முதலான முக்கிய பௌத்தத் தலங்களுக்குச் சென்று புத்த மதம் குறித்த ஆய்வுகளை மேற்கொண்டார். நாளந்தா பல்கலைக் கழகத்திலும் தங்கி்ப் பயின்றுள்ளார். பின்னர் அவர் தமிழ்நாட்டில் உள்ள காஞ்சிபுரத்தில் இருந்த பௌத்தப் பல்கலைக் கழகத்திற்கும் வந்துள்ளார்.
பிரபல தமிழ்ப் புதினமான பார்த்திபன் கனவில் சீனப்பயணியாக சுவான் சாங் காட்டப்பட்டுள்ளார். பல்லவ மன்னனான நரசிம்மவர்மன் காலத்தில் காஞ்சிபுரத்தை இந்த சீனப் பயணி தரிசித்ததாக பார்த்திபன் கனவு புதினம் கூறுகின்றது.