பெண்ணுக்காக ஆண்கள் பேசலாமா?

பிருந்தா சீனிவாசன்

பெண்ணைப் பற்றிய சித்திரமெல்லாம் பெரும்பாலும் ஆண்களால் எழுதப்பட்டவையாகவே இருக்கின்றன. பெண்களுக்கான குணங்களையும் இயல்புகளையும் ஆண்களே வரையறுத்துவைத்திருக்கிறார்கள். பெண்ணுக்கு இதுதான் பிடிக்கும், பெண் இதைத்தான் விரும்புவாள் என்று பெண்ணின் ஆழ்மன உணர்வுகளைக்கூட ஆண்களே தங்களுக்குச் சாதகமாக மொழிபெயர்த்துவிடுகிறார்கள்.

ஆண்களில் சிலர் பேசுகிற பெண்ணியமும் சில நேரம் அப்படித்தான் அமைந்துவிடுகிறது. தனக்குச் சாதகமானதை மட்டுமே ஆதரிப்பார்கள். ‘சிங்கப் பெண்ணே வெளியே வா’ என்று முழங்குவார்கள். தங்கள் வீட்டுப் பெண்களையோ, பேசக்கூட விடாமல் அடக்கிவைப்பார்கள்.

ஆனால், எவ்விதப் பூச்சும் அலங்காரமும் இன்றிப் பெண்களின் துயர் துடைக்கப் பங்காற்றிய ஆண்களும் நம்மிடையே உண்டு. பெண்ணின் அழகையும் ஆசார குணங்களையும் வர்ணித்த வரிகளுக்கு நடுவே, பெண்களின் நிராதரவான நிலையையும் ஆண்களின் ஆதிக்கத் திமிரையும் அம்பலப்படுத்திய வரிகளும் ஆண்கள் சிலரால் எழுதப்பட்டிருக்கின்றன.

பெண்ணுக்காக ஆண்

பெண்ணியக் குரல்கள் ஓரளவு ஒலிக்கத் தொடங்கியிருக்கிற இந்தக் காலத்தில் பெண்களின் நிலை குறித்துப் பேசுவது ஆணுக்கு எளிதாகவும் ஒரு வகையில் பெருமிதம் கொள்ளத்தக்கதாகவும் இருக்கிறது. ஆனால், ஒட்டுமொத்தச் சமூகமும் பிற்போக்குத்தனத்தில் மூழ்கிக் கிடந்தபோது, பெண்ணுக்கு ஆதரவாக வந்துவிழுந்த ஒற்றைச் சொல்லுக்குக்கூட ஆயிரமாயிரம் எதிர்க்குரல்கள் எழுந்திருக்கும். திசையெங்கும் கண்டனங்கள் புறப்பட்டிருக்கும்.

இவ்வளவையும் மீறி, பெண்களின் நிலை குறித்துச் சிற்சில ஆண்கள் நூறாண்டுகளுக்கு முன்பே பதிவுசெய்திருக்கின்றனர். முதுபெரும் எழுத்தாளர் அ. மாதவையா, அப்படியான சீர்திருத்த எழுத்துக்குச் சொந்தக்காரர். 1910இல் ஆங்கிலத்தில் அவர் எழுதிய சிறுகதைகளைத் தமிழில் மொழிபெயர்த்து, ‘குசிகர் குட்டிக் கதைகள்’ என்கிற தலைப்பில் வெளியிட்டார். அந்தத் தொகுப்பில் இடம்பெற்ற சிறுகதைகளில் பெரும்பாலானாவை சமூகச் சீர்கேடுகளைச் சாடின. குறிப்பாக ‘திரௌபதி கனவு’ சிறுகதை, ஆணாதிக்கத்தின் கோரமுகத்தைப் பகடிசெய்தது.

திரௌபதி கனவு

12 வயதில் திருமணமான மறுநாளே கணவனை இழந்த பிராமணக் கைம்பெண் திரௌபதி. ஐம்பது வயதைக் கடந்த அவளுடைய தந்தை, அவளைவிட இளைய பெண்ணை மறுமணம் செய்துகொண்டுவிட்டார். ஆனால், திரௌபதியோ பட்டினி, விரதம், கட்டுப்பாடு என்று நாள்தோறும் அவதிப்படுகிறாள். பள்ளி விடுமுறையால் ஆண்டுக்கு இரு முறை வீட்டுக்கு வரும் தன் சகோதரன் மூலம் மற்ற நாடுகளில் பெண்களும் கைம்பெண்களும் நடத்தப்படும் விதம் குறித்து அறிகிறாள். தான் மட்டும் ஏன் கைம்பெண் கோலம் பூண்டு, இயல்பான வாழ்க்கை மறுக்கப்பட்டு வாழ வேண்டும் என்று எண்ணி நொந்துபோகிறாள். அப்போது அவள் கண்ட கனவைச் சொல்கிறாள்.

மோட்டார் கார்களும் குதிரை வண்டிகளும் விரையும் சாலையில் திரௌபதி செல்கிறாள். சாலை முழுவதும் பெண்களை மட்டுமே பார்க்க முடிகிறது. அப்போது சில வீடுகளில் ஜன்னலுக்குப் பின்னிருந்து எட்டிப் பார்க்கும் சில உருவங்களைப் பார்த்து மிரண்டுபோகிறாள். அவர்கள் எண்ணெய் காணாத பரட்டைத் தலையும் நீளமான நகங்களுமாகப் பார்க்கவே பயங்கரமாக இருந்தார்கள். அதைப் பற்றித் தெரிந்துகொள்வதற்காக அங்கே இருந்த ஒரு வீட்டுக்குச் செல்கிறாள் திரௌபதி. அங்கிருந்த பெண், நாற்காலியில் ஓய்வாக அமர்ந்திருக்க, சேவகன் ஒருவன் விசிறிக்கொண்டிருக்கிறான். அந்தப் பெண்ணுக்கும் திரௌபதிக்கும் நடக்கிற உரையாடலின் ஒவ்வொரு வரியும் இன்றும்கூட நம்மால் நிகழ்த்த முடியாதவை.

பெண்ணே குடும்ப வாரிசு

திரௌபதி ஊருக்குப் புதிது என்பதால் தாங்கள் வாழும் ‘பெண் நாட்டின்’ சட்டங்கள் குறித்து அந்தப் பெண் விளக்குகிறாள். அவ்வளவு நேரம் அவளுக்கு விசிறிக்கொண்டிருந்தவன் அவளுடைய இரண்டாம் கணவன். முப்பதுகளின் நடுவே இருக்கும் அந்தப் பெண் இருபது வயது ஆணை மறுமணம் செய்திருக்கிறாள். “எங்கள் நாட்டில் பெண்கள் எத்தனை தரம் வேண்டுமானாலும் விவாகம் செய்துகொள்ளலாம். யாராவது ஒரு கிழப் பிணத்தைத் தேடிக் கலியாணம் செய்து கொள்வார்களா? இந்த நாட்டிலே ‘பெண்கள் வாழ்க்கைப்படுவது’ என்று சொல்வதில்லை. ‘ஆண் கொள்ளல்’ என்று சொல்வதுதான் வழக்கம்” என்கிறாள் அந்தப் பெண். அந்த ஊரில் ஆண் குழந்தைக்கு மதிப்பில்லை. பெண் குழந்தை பிறக்கவில்லை என்பதற்காக அவளுடைய அக்கா, மறுமணம் செய்துகொள்கிறாள். அவன் இறந்துவிட, நாற்பது வயதாகும் அவள் தற்போது இரண்டு ஆண்களை ஒரே நேரத்தில் மணந்திருப்பதாகச் சொல்கிறாள். அவள் சொத்தையெல்லாம் கட்டியாள ஒரு பெண் வேண்டாமா என்கிறாள். ஏனென்றால், அங்கே பெண்களுக்கு மட்டுமே சொத்துரிமை.

ஆண் விதவைகள் படும் பாடு

தங்களுக்கு அமைகிற எஜமானியைப் பொறுத்துத்தான் ஆண்களின் வாழ்க்கை. வீட்டுவேலைகளையும் மனைவியின் சௌகரியங்களையும் நல்லவிதமாகக் கவனித்துக்கொள்ளும் தன் கணவன் ராமனைப் போல் நல்ல ஆத்துக்காரனைப் பார்ப்பது அரிது என்கிறாள் அந்தப் பெண். கணவனைப் பெயர் சொல்லி அழைத்து வேலை ஏவுகிறாள். “எங்கள் புராதன சாஸ்திர விதிப்படி ஆண் விதவைகள் மறுபடியும் கல்யாணம் செய்துகொள்ளக் கூடாது. அன்றியும் ஒரு ஆண் விதவை ஒரு மயிரையேனும் ஷவரம் செய்துகொண்டால் அல்லது ஆண்டில் இரண்டு தடவைக்கு அதிகம் ஸ்நானம் செய்தால் அல்லது நகங்களை வளராமல் கத்தரித்தால் அல்லது என்றேனும் ஒரு தரத்துக்கு மேல் போசனம் செய்தால் அவனும் அவன் பிதுர்களும் சாசுவதமான கொடிய நரகத்தை அடைவார்கள் என்று விதிக்கப்பட்டிருக்கிறது” என்று அந்தப் பெண் சொல்ல, அவள் புருஷன் தேநீர் தயாரிக்க வீட்டுக்குள் போய்விடுகிறான்.

பிறகு அவள் கொஞ்சம் அந்தரங்கமாக திரௌபதியிடம் பேசுகிறாள். “ஆண் விதவைகளில் சிலர் அதி சுந்தரமான யௌவன புருஷர்களாக இருப்பதால் ஸ்திரீகளாகிய நாமே மோகத்தினால் அவர்களைக் கற்பழித்துக் கெடுத்துவிடுகிறோம். அந்த அவமானமும் பாவமும் அவர்களைச் சேர்ந்தது. அதிக பகிரங்கமாகி ஊர்க்கேலியாகாமல் இலை மறைவு காய் மறைவாக மட்டும் இருந்தால், இந்த மாதிரி விஷயங்களில் கண்டும் காணாமலும், அப்படி இப்படித்தான் இருக்கும்.

ஆசாரச் சீர்திருத்தக் கட்சியாகிய நாங்கள், ஆண் விதவைகள் புனர் விவாகம் செய்து கொள்ளலாமென்று புதிதாக ஒரு சட்டத்தை உண்டாக்கியிருக்கிறோம். ஆனால், ஊர் வாய்க்குப் பயந்து ஓர் ஆண் விதவையுமே இதுவரையும் புனர் விவாகம் செய்து கொள்ளவில்லை. ருது சாந்தியாகும் முன்னர், குழந்தைப் பருவத்திலேயே மனைவிகளை இழந்து விதவைகளாகிவிட்ட ஆண்களாவது மறுபடியும் விவாகம் செய்து கொள்ள வேண்டுமென்பது எங்கள் கோரிக்கை. என்ன செய்வது? வைதீகர்கள் வெகு பிடிவாதமாக, குருட்டுத்தனமாக நடக்கிறார்கள். எல்லாம் கல்வியறிவு பரவப் பரவ நாளடைவில்தான் சீராக வேண்டும்” என்கிறாள்.

ஆணுக்கு ஆணே தடை

ஆனால், ஆண்கள் தங்களுக்குத் தாங்களே தடைகளாகிவிட்டார்கள் என்று அந்தப் பெண் சொல்வதை அவளுடைய கணவனும் ஆமோதிக்கிறான். “அவர்கள் ஸ்திரீகள். நாங்கள் புருஷர்தானே. அவர்கள் எத்தனை முறை வேண்டுமாயினும் கல்யாணஞ் செய்து கொள்ளலாம். ஆனால், எந்த வெட்கங்கெட்ட ஆண் விதவை தெய்வத்தை எதிர்த்துப் புனர் விவாகம் செய்துகொள்ளும் மகா பாதகத்தைச் செய்யத் துணிவான்? உலகத்திலுள்ள தர்ம சாஸ்திரங்கள் எல்லாவற்றிலும் எங்களுடையதே அதி சிரேஷ்டமானது. மகா ஞானிகளும் பண்டிதைகளுமான ஸ்திரீ ரத்னங்களால் எழுதப்பட்டது” என்கிறான்.

கடைசியில் அன்று மாலை, புருஷரை மேம்படுத்தும் சபைக் கூட்டத்தில் பங்கேற்க அந்தப் பெண் புறப்படுகிறாள். அவளுடைய புருஷன், வீட்டையும் குழந்தையையும் பார்த்துக்கொண்டு வீட்டில் இருந்தான். சபையின் விவரத்தையும் குறைக் கனவையும் பின்னால் வெளியிடுகிறேன் என்று திரௌபதி சொல்வதுடன் கதை முடிகிறது.

பெண்ணுக்கு நடப்பவை எல்லாம் ஆணுக்கு நடந்தால் எப்படி இருக்கும் என்பதைக் கச்சிதமாக வடித்திருக்கிறார் அ.மாதவையா. இது எழுதப்பட்டு நூறாண்டுகள் கடந்த பிறகும் பெண்களின் நிலையில் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு முன்னேற்றமில்லை. பெண்க ளுக்கு நடக்கும் அநீதிக்குப் பெண்களும் பெண்ணியவாதிகளும் மட்டுமே குரல்கொடுக்க வேண்டும் என்கிற பொதுப் புத்தியிலும் எந்த மாற்றமும் நிகழவில்லை.

பெண் விடுதலைக்காக ஆண் பேசுவது என்பது ஆடுகளுக்காக ஓநாய் பேசுவதைப் போன்றது என்று கூறிய பெரியார்கூடப் பின்னாளில், பெண் விடுதலைக்கு ஆணும் துணைநிற்க வேண்டும் என்றார். ஆனால், இன்றைக்கு ஆண்களில் எத்தனைப் பேர் அப்படித் துணைநிற்கிறார்கள்? இலக்கியம், திரைப்படம், சமூக ஊடகம் உள்ளிட்டவை மூலம் பெண்ணுக்குச் சாதகமான கருத்துகளை விதைக்கிறார்கள்? உண்மையில் பெண்களின் பிரச்சினைகள் எல்லாம், பெண்களின் பிரச்சினைகள் மட்டுமா? அவை ஆண்களின் பிரச்சினைகளும்தானே? அப்படியிருக்கும்போது அதற்கான தீர்வுக்குத் தனியாக ஓர் இனம் மட்டுமே எப்படி உழைக்க முடியும்?

இந்து தமிழ்
2020.11.01

Tags: