டெல்லியில் விவசாயிகள் போராட்டம்

அதியமான்

வீட்டுக்கொரு போராளி; விருதுகளைத் திருப்பியளிக்கும் பஞ்சாப் வீரர்கள்!

கடும் குளிரையும் கொரோனா அச்சத்தையும் மீறி, காவல்துறையின் கடும் அடக்குமுறைகளையும் முறியடித்து, தலைநகர் டெல்லியின் எல்லையில் லட்சக்கணக்கான விவசாயிகள் குவிந்திருக்கிறார்கள். ஆயிரக்கணக்கான டிராக்டர்களிலும் லாரிகளிலும் டெல்லிக்கு வந்திருக்கும் இவர்கள், ‘மத்திய பா.ஜ.க அரசு கொண்டுவந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களையும் முற்றிலுமாகத் திரும்பப் பெற வேண்டும்’ என்பதை ஒற்றைக் குரலாக முழங்கிவருகிறார்கள்.

டெல்லி எல்லையில் விவசாயிகள் முற்றுகையிட்டிருக்கும் நிலையில், பஞ்சாப், ஹரியானா கிராமங்களிலிருந்து வீட்டுக்கொரு போராளியை டெல்லி நோக்கி அனுப்ப மக்கள் திட்டமிட்டுள்ளனர்.

மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட புதிய விவசாயச் சீர்திருத்தச் சட்டங்களை எதிர்த்து நாடு முழுவதும் பல்வேறு விவசாய அமைப்பினர் கண்டனக் குரல்களை எழுப்பிவருகின்றனர். அதன் ஒரு பகுதியாக பஞ்சாப், அதன் அண்டை மாநில விவசாய அமைப்பினர் வரலாறு காணாத வகையில் ஒன்று திரண்டு புதிய விவசாயச் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரி டெல்லி வரை பேரணியாகச் சென்று போராட்டம் நடத்திவருகின்றனர்.

முதலில், டெல்லியின் ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டம் நடத்த விவசாய அமைப்பினர் திட்டமிட்டிருந்தனர். ஆனால், உள்துறை அமைச்சகம் பாதுகாப்பு வழிமுறைகளை முன்னிறுத்தி, அதற்கு பதிலாக டெல்லி புராரி பகுதியிலுள்ள நிரங்கரி சமகம் மைதானத்தில் போராட்டம் நடத்த அனுமதியளித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டக் குழுவினர் டெல்லி எல்லையில், தேசிய நெடுஞ்சாலையிலேயே போராட்டத்தைத் தொடர்ந்து வருகின்றனர்.

வீட்டுக்கொரு போராளி; வேகமெடுக்கும் போராட்டம்!

டெல்லி எல்லையில் விவசாயிகள் முற்றுகையிட்டிருக்கும் நிலையில், பஞ்சாப், ஹரியானா கிராமங்களிலிருந்து வீட்டுக்கொரு போராளியை டெல்லி நோக்கி அனுப்ப மக்கள் திட்டமிட்டிருக்கிறார்கள். தங்கள் கோரிக்கைகள் நிறைவேறும் வரை வீட்டுக்குத் திரும்ப மாட்டோம் என்று சூளுரைத்துள்ளனர் விவசாயிகள்.

போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் விவசாயிகளுக்குத் தேவையான மருந்துகள், உணவுப்பொருள்கள் உட்பட பிற அத்தியாவசியப் பொருள்களை மக்களிடமிருந்து சேகரித்து அவற்றை டிராக்டர்களின் மூலம் டெல்லிக்குக் கொண்டு செல்ல தயாராகியிருக்கிறார்கள்.

விருதுகளையும் பதக்கங்களையும் திருப்பியளிக்கும் பஞ்சாப் வீரர்கள்?!

டிசம்பர் மாதம், 5-ம் தேதிக்குள் மத்திய அரசு அறிமுகப்படுத்தியிருக்கும் புதிய விவசாயச் சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும் என பஞ்சாப், ஹரியானா மாநில முன்னாள் விளையாட்டு வீரர்கள் வலியுறுத்தியிருக்கிறார்கள். அப்படித் திரும்பப் பெறாதபட்சத்தில், தங்களுக்கு அளிக்கப்பட்ட பதக்கங்களையும் விருதுகளையும் திருப்பியளிக்கத் திட்டமிட்டிருப்பதாக பஞ்சாப், ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த முன்னாள் விளையாட்டு வீரர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.

பாபா ராம்தேவ் குற்றச்சாட்டு!

இது குறித்து பேசிய பாபா ராம்தேவ், “எல்லை மீறிச் சென்றுகொண்டிருக்கும் விவசாயிகளின் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவரும்விதமாக மத்திய அரசு, விவசாயச் சட்டங்கள் குறித்து மக்களுக்கு தெளிவான விளக்கத்தைக் கொடுக்காதது ஏன்… இதன் நன்மைகள் குறித்து விவசாயிகளுக்கு எடுத்துரைப்பது அரசின் கடமை.

விவசாயிகளின் போராட்டக்குழுவில் சில சமூக விரோதிகள் கலந்திருக்கிறார்கள். அவர்கள் போராட்டக்காரர்களைத் தவறான வழியில் வழிநடத்திச் செல்கிறார்கள்’’ என்று குற்றம்சாட்டியிருக்கிறார்.

தேங்கிய சரக்குகள்; ரத்து செய்யப்பட்ட ரயில்கள்!

மாநில எல்லையில் ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் குவிந்திருப்பதால் பஞ்சாப் – டெல்லியை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை தற்காலிகமாக மூடப்பட்டது. விவசாயிகள் போராட்டம் வேகமெடுத்திருக்கும் நிலையில், இரு மாநிலங்களை இணைக்கும் மேலும் சில நெடுஞ்சாலைகளும் மூடப்பட்டிருக்கின்றன. இதனால் டெல்லியின் `ஆசாத்பூர் மண்டி’யிலிருந்து பஞ்சாப், ஹரியானா மாநிலங்களுக்குச் சென்று சேர வேண்டிய காய்கறி மற்றும் பலசரக்குகள் சந்தையிலேயே பெரும் அளவில் தேங்கியிருப்பதாகக் கூறுகின்றனர். இதன் மூலம், டெல்லியிலும் காய்கறிகளின் விலை கிடுகிடுவென உயர்ந்திருக்கிறது.

போராட்டச் சூழலால் இன்று முதல் இயக்கப்படவிருந்த அமிர்தசரஸ் – அஜ்மீர் சிறப்பு ரயில் ரத்துசெய்யப்பட்டிருக்கிறது. மேலும் சில ரயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்படுகின்றன.

பேச்சுவார்த்தை வேண்டாம்; ரத்து செய்ய வேண்டும்!

விவசாயிகளின் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக மத்திய அரசு விவசாய அமைப்பைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் சிலரைப் பேச்சுவார்த்தைக்கு அழைத்தது. ஆனால், அதற்கு உடன்படாத விவசாய அமைப்பினர், சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும் என்பதே எங்கள் முதன்மையான கோரிக்கை என்று தெரிவித்திருக்கிறார்கள்.

இதனால், சட்டம், ஒழுங்குப் பிரச்னை ஏற்படாமல் தடுக்க டெல்லி எல்லையில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டிருக்கிறது. மேலும், விவசாயிகளின் போராட்டத்தை எதிர்த்து பஞ்சாப், ஹரியானா உயர் நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டிருக்கிறது.

டெல்லி சலோ!’ – வேளாண் சட்டங்களுக்கு எதிராக வீறுகொண்டெழுந்த விவசாயிகள்!

ஆ.பழனியப்பன்

மீபகாலத்தில் இந்தியாவில் நடைபெற்ற விவசாயிகள் போராட்டங்களில், மும்பையில் நடைபெற்ற பேரணி குறிப்பிடத்தக்கது. விவசாயக் கடன் தள்ளுபடி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் பல நாள்களாக, பல கி.மீ தூரம் மும்பையை நோக்கி நடந்தனர். செருப்புகூட அணியாமல் நடந்த அந்த ஏழை விவசாயிகளின் பாதங்கள் பாளம் பாளமாக வெடித்தன. போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு நகர மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்துவிடக் கூடாது என்பதற்காக, நள்ளிரவு நேரத்தில் மும்பைக்குள் அவர்கள் நுழைந்தனர். முழக்கங்களை எழுப்பினால், மறுநாள் காலையில் தேர்வெழுதச் செல்லும் மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதற்காக, மௌனமாக நகருக்குள் நடந்து சென்றனர். அந்தப் போராட்டம், அனைத்துத் தரப்பு மக்களின் நெஞ்சத்தையும் தொட்டது.

இப்போது விவசாயிகள் நடத்திவரும் ‘டெல்லி சலோ’ போராட்டம், வேறுபட்டதாக இருக்கிறது. மத்திய பா.ஜ.க அரசு கொண்டுவந்திருக்கும் மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக வெகுண்டெழுந்த விவசாயிகள், இந்தச் சட்டங்கள் வாபஸ் பெறப்படும் வரை இந்த இடத்தைவிட்டு நகர மாட்டோம் என்று தலைநகரின் எல்லையில் முகாமிட்டுள்ளனர்.

பஞ்சாப், ஹரியானா, உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து பெண்கள், குழந்தைகள் எனக் குடும்பம் குடும்பமாக விவசாயிகள் தலைநகருக்குத் திரண்டுவந்திருக் கிறார்கள். ‘இந்த இடத்தைவிட்டு நகரப் போவதில்லை’ என்ற அவர்களின் அறிவிப்பு, வெறும் வார்த்தை ஜாலம் அல்ல. கோதுமை மாவு மூட்டைகள், உருளைக்கிழங்கு மூட்டைகள், பருப்பு மூட்டைகள் உள்ளிட்ட உணவுப்பொருள்களை ட்ரக்குகளில் ஏற்றிவந்திருக்கிறார்கள். ஆறு மாதங்களுக்குத் தேவையான உணவுப் பொருள்களைக் கொண்டுவந்திருப்பதாக அவர்கள் கூறுகிறார்கள். திறந்தவெளியில் மிகப்பெரிய பாத்திரங்களில் உணவு சமைத்துச் சாப்பிடுகிறார்கள். பல இடங்களில் ‘கம்யூனிட்டி கிச்சன்கள்’ அமைக்கப்பட்டுள்ளன.

இந்தப் போராட்டம் இப்போது தொடங்க வில்லை. கடந்த செப்டம்பர் மாதம், மூன்று வேளாண் சட்டங்கள் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது முதலே போராட்டம் தொடங்கிவிட்டது. இந்தச் சட்டங்களை எதிர்த்து மத்திய அமைச்சர் ஒருவரே ராஜினாமா செய்தார். ராஜினாமா செய்த ஹர்சிம்ரத் கௌர் பாதல், பா.ஜ.க-வின் கூட்டணிக் கட்சியான ‘சிரோமணி அகாலி தள’த்தைச் சேர்ந்தவர். பஞ்சாப் மாநிலத்தில் எதிர்க்கட்சியாக இருக்கும் ‘சிரோமணி அகாலி தள’மும், அங்குள்ள ஆளும் காங்கிரஸ் அரசும் விவசாயிகளின் போராட்டத்தை ஆதரிக்கின்றன. அதனால், அங்கு விவசாயிகளின் போராட்டம் கூடுதல் வீரியத்துடன் முன்னெடுக்கப்பட்டுவருகிறது. அண்டை மாநிலமான ஹரியானாவிலும் விவசாயிகள் போராடிவருகிறார்கள். அங்கு, மனோகர் லால் கட்டார் தலைமையிலான பா.ஜ.க அரசு, விவசாயிகளின் போராட்டத்தை ஒடுக்கும் நடவடிக்கையை மேற்கொண்டுவருகிறது.

டெல்லி போராட்டத்துக்கு ஹரியானா வழியாகச் சென்ற விவசாயிகளுக்குக் காவல்துறை மூலம் பெரும் தடைகளை விதித்ததுடன், பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங்தான் விவசாயிகளைப் போராடத் தூண்டிவிட்டிருப்பதாக ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார் குற்றம் சாட்டினார். அதனால் ஆத்திரமடைந்து இன்னும் பல்லாயிரக்கணக்கில் ஹரியானா விவசாயிகள் டெல்லிக்குப் புறப்பட்டனர்.

விவசாயிகள் டெல்லிக்கு வருவதைத் தடுப்பதற்காக ஆயிரக்கணக்கான போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர். சாலைகளில் ஆங்காங்கே பள்ளங்களைத் தோண்டியும், முள்வேலித் தடுப்புகளை ஏற்படுத்தியும் விவசாயிகளைத் தடுக்கும் நடவடிக்கைகளில் போலீஸார் ஈடுபட்டனர். தடைகள் அனைத்தையும் தகர்த்து முன்னேறிய விவசாயிகள்மீது, கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசியும், குளிர்நீரைப் பீய்ச்சியடித்தும் போலீஸார் விரட்டினர். அப்போது, இளைஞர் ஒருவர் போலீஸ் வாகனத்தின் மீதேறி, தண்ணீர் பீய்ச்சியடிக்கும் குழாயை நிறுத்தினார். ஆத்திரமடைந்த போலீஸார், அந்த இளைஞர்மீது கொலை முயற்சி வழக்கு பதிவுசெய்தனர்.

அடக்குமுறைகள் அனைத்தையும் எதிர் கொண்டு, டெல்லியின் எல்லைக்குள் வெற்றிகரமாக விவசாயிகள் நுழைந்தனர். ஒரு பக்கம் விவசாயிகள்மீது போலீஸார் அடக்குமுறைகளை நிகழ்த்திக்கொண்டிருந்த நேரத்தில், தாங்கள் சமைத்த உணவை போலீஸாருக்கு பஞ்சாப் விவசாயிகள் வழங்கிய நெகிழ்ச்சிச் சம்பவமும் நிகழ்ந்தது.

இந்தப் போராட்டம் குறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலப் பொருளாளர் கே.பி.பெருமாளிடம் பேசினோம். ‘‘பா.ஜ.க அரசு கொண்டுவந்திருக்கும் மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் போராடுவதற்கு எங்கள் அமைப்பு உட்பட இந்தியா முழுவதும் செயல்படும் 270 விவசாயிகளின் அமைப்புகள் ஒன்றிணைந்து, ‘அகில இந்திய விவசாயிகள் ஒருங்கிணைப்புக் குழு’ உருவாக்கப்பட்டுள்ளது. ஒருங்கிணைப்புக் குழு சார்பில், கடந்த மூன்று மாதங்களாகச் சாலை மறியல், ரயில் மறியல் உட்பட பல போராட்டங்கள் நடத்தப்பட்டுவருகின்றன. தலைநகர் டெல்லிக்கு அருகிலுள்ள பஞ்சாப், ஹரியானா, உ.பி., ராஜஸ்தான் மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் நவம்பர் 27-ம் தேதி ‘டெல்லி சலோ’ போராட்டத்தை நடத்த ஒருங்கிணைப்புக் குழு திட்டமிட்டது.

பா.ஜ.க அரசு கொண்டுவந்திருக்கும் இந்த வேளாண் சட்டங்கள் கொரோனாவைவிட மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். இந்தியாவின் ஒட்டுமொத்த விவசாயமும் கார்ப்பரேட் கம்பெனிகளின் கைகளுக்குப் போய்விடும். அரை ஏக்கர், ஒரு ஏக்கர், இரண்டு ஏக்கர் வைத்திருக்கும் விவசாயிகள், இன்னும் பத்து ஆண்டுகளில் இந்தியாவில் இல்லாமல் போய்விடும் நிலை ஏற்படும். எனவேதான், இவ்வளவு பெரிய போராட்டத்தை விவசாயிகள் நடத்திக்கொண்டிருக்கிறார்கள். டெல்லியில் போராடிக்கொண்டிருக்கும் விவசாயிகளுக்கு ஆதரவாக அனைத்து மாநிலங்களிலும் போராட்டத்தைத் தீவிரப்படுத்துவதற்கு முடிவெடுக்கப்பட்டுள்ளது’’ என்றார்.

விவசாயிகள் போராட்டத்தின் தீவிரம், மத்திய அரசை அசைத்திருக்கிறது. ‘பேச்சுவார்த்தைக்குத் தயார்’ என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவித்தார். ஆனால், அவர் ஒரு நிபந்தனை விதித்திருக்கிறார். ‘விவசாயிகள் தற்போது இருக்கும் இடத்திலிருந்து புராரியிலுள்ள நிரங்கரி மைதானத்துக்குச் செல்ல வேண்டும். அங்கு சென்றால், மறுநாளே பேச்சுவார்த்தையை வைத்துக்கொள்ளலாம்’ என்றார். ஆனால், அங்கு போனால் எதுவும் நடக்காது என்று சொல்லும் விவசாயிகள், நெடுஞ்சாலைப் பகுதியைவிட்டு நகர்வதற்குத் தயாராக இல்லை. இந்நிலையில், ‘மன் கி பாத்’ என்ற மாதாந்தர வானொலி நிகழ்ச்சியில் நவம்பர் 29-ம் தேதி பிரதமர் மோடி உரையாற்றும்போது, ‘‘இத்தனை காலமும் விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் அரசியல் கட்சிகள் உறுதியளித்தே வந்திருக்கின்றன. அந்தக் கோரிக்கைகள் தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளன. மத்திய அரசு கொண்டுவந்திருக்கும் வேளாண் சட்டங்கள் புதிய உரிமைகளையும், புதிய வாய்ப்புகளையும் விவசாயிகளுக்கு ஏற்படுத்திக் கொடுத்திருக்கின்றன” என்றார்.

‘விளம்பரப்படுத்திக்கொள்வதற்காக, கார்ப்பரேட் கம்பெனிகளில் புகைப்படங்கள் எடுத்துக்கொள்வதற்கு பதிலாக, சாலையில் இறங்கிப் போராடும் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்துங்கள்!’ என்று எதிர்க்கட்சிகள் மோடியை விமர்சிக்கின்றன. ‘‘விவசாயிகள் குறித்து ‘மன் கி பாத்’தில் மட்டும்தான் உரையாடுவாரா பிரதமர்… எங்களிடம் நேரடியாகப் பேச மாட்டாரா… மயில்களுக்கும் மான்களுக்கும் காட்டும் பாசத்தில் கொஞ்சத்தையாவது மனிதர்களுக்குக் காட்ட மாட்டாரா?’’ என்பதே ஒட்டுமொத்த விவசாயிகளின் குரலாக ஒலித்துக்கொண்டிருக்கிறது!

விகடன்

Tags: