பறவைகள் வேகமாக அருகி செல்வதால் புவியில் உயிரின சமநிலைக்கு ஆபத்து!
–மர்லின் மரிக்கார்

இன்றைய நவீன அறிவியல் வளர்ச்சியும் நாகரிக முன்னேற்றங்களும் மனிதனுக்கு அபரிமித மான நன்மைகளைப் பெற்றுக் கொடுத்துள்ள போதிலும், அவற்றின் விளைவாக தீமைகளும் பாதிப்புகளும் ஏற்படவே செய்திருக்கின்றன.
இந்த நவீன வளர்ச்சிகளும் முன்னேற்றங்களும் மனிதன் தவிர்ந்த புவிவாழ் ஏனைய உயிரினங்களுக்கு சவாலாக அமைந்திருக்கின்றனவா? அல்லது அவற்றின் இருப்பில் தாக்கம் செலுத்தக் கூடியனவாக உள்ளனவா? இவ்வாறான கேள்வியும் எழவே செய்கின்றன. இதற்கு வலு சேர்க்கக் கூடிய வகையிலான விடயங்களும் அவதானிக்கக் கூடியனவாக உள்ளன.
அந்த வகையில் பறவைகளை எடுத்துப் பார்த்தால் அவற்றின் வாழ்வியல் செயற்பாடுகளில் அண்மைக் காலத்தில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்களும் வித்தியாசங்களும் இதற்கு நல்ல எடுத்துக்காட்டுகளாக விளங்குகின்றன.
பொதுவாக நகரங்களை விடவும் கிராமிய சூழலில் பறவைகளின் நடமாட்டம் வழமையாக அதிகரித்துக் காணப்படும். ஏனெனில் அவற்றுக்குத் தேவையான உணவு, அவை கூடுகளை அமைத்துக் கொள்வதற்கான மூலப்பொருட்கள் மற்றும் அவை கூடு கட்டிக் கொள்வதற்குப் பொருத்தமான இடம் என்பன கிடைக்கப் பெறுவதன் வௌிப்பாடே அதுவாகும். அதன் காரணத்தினால் அவை கிராமங்களை அதிகளவில் நாடிச் செல்கின்றன.
ஆனால் கடந்த 15 – 25 வருட காலப் பகுதியில் பறவைகள் கிராமத்திற்கு வருவதிலும், அவற்றின் வாழ்வியல் நடத்தைகளிலும் குறிப்பிடத்தக்களவில் மாற்றங்கள் ஏற்பட்டிருப்பதை தௌிவாகக் காண முடிகின்றது.குறிப்பாக முன்பு கிராமப் பிரதேசங்களில் இருந்தபடி காலையிலும் மாலையிலும் ஆகாயத்தை அண்ணாந்து பார்த்தால் பறவைகள் கூட்டம் கூட்டமாக நூறு இருநூறு என்றபடி பயணிப்பதை அவதானிக்கலாம். அவற்றின் பயண ஒழுங்கு நேர்த்தியாகவும் கச்சிதமான வரிசைக் கிரமத்திலும் இருக்கும். அவை கண்கொள்ளாக் காட்சியாகும்.
வௌ்ளைக் கொக்கு (உண்ணி கொக்கு), நீர்க்காகம், பச்சைக் கிளி, மைனா, புறா போன்றவாறான பறவைகள் இவ்வாறு பயணிப்பதைப் பார்க்க முடிந்தது. ஆனால் அண்மைக் காலம் முதல் பறவைகள் சில கிராமங்களுக்கு வருகை தருவதையும், முன்பு போன்று ஆகாயத்தில் பறப்பதையும் பெரிதாக அவதானிக்க முடியாதுள்ளது. இதற்கான காரணம் என்ன? இது தொடர்பில் கவனம் செலுத்தப்பட வேண்டும். அவ்வாறு கவனம் செலுத்தாதிருப்பது நல்லதல்ல. ஏனெனில் மனிதனுக்கு பல்வேறு வழிகளிலும் பறவைகள் நன்மை பயக்கக் கூடியவை என்பதை மறந்து விடலாகாது.

அதாவது தமக்கு உணவும், கூடுகட்டி வாழத் தேவையான மூலப்பொருட்களும், கூடு கட்டி வாழ வசதியான இடங்களும் காணப்படும் இடங்களுக்கு வருகை தருவதே பறவைகளின் இயல்பாகும்.
அந்த வகையில் உண்ணி கொக்குகளும், மைனாக்களும் ஆடு, மாடுகள் வளர்க்கப்படும் கிராமங்களுக்கும் அவற்றின் பட்டிகள் காணப்படும் இடங்களுக்கும் நிறையவே வருகை தரும். உண்ணி கொக்குகள் அந்த கால்நடைகளுடனேயே பகல் வேளையில் காணப்படும். ஏனென்றால் கால்நடைகளின் காதுகளிலும், கண் இமைப் பகுதிகளிலும் கறவைப் பசுக்களின் பால்மடிகளிலும் காணப்படும் உண்ணிகளை உணவாகக் கொள்ளும் பழக்கத்தை அவை கொண்டிருப்பதே அதற்கான காரணமாகும். அத்தோடு மைனாவும் உண்ணிகளை மாத்திரமல்லாமல், பிரதேசத்தில் காணப்படும் வெட்டுக்கிளி உள்ளிட்ட பூச்சிகளையும் உணவாகக் கொள்ளும்.
மேலும் பச்சைக்கிளிகள் பழங்களை பிரதான உணவாகக் கொள்ளும் ஒரு பறவை. அவை தானியங்களையும் உண்ணத் தவறுவதில்லை. புறாக்கள் தானியங்களை உண்ணுகின்றன. சிட்டுக்குருவிகள் தானியங்களையும் பூச்சிகளையும் உணவாகக் கொள்ளும்.
ஆந்தை எலிகளை உணவாகக் கொள்ளக் கூடிய பறவையாக விளங்குகின்றது. அது நாளொன்றுக்கு 3 – 4 வரையான எலிகளை வேட்டையாடி உணவாகக் கொள்ளும். குறிப்பாக எலிகளின் பெருக்கத்தைக் கட்டுப்படுத்தக் கூடிய முக்கிய உயிரியாக ஆந்தை திகழுகின்றது. அத்தோடு மரங்கொத்தி, காகம், கிங்க்பிஸர், ஆள்காட்டி, நீர்க்காகம் போன்ற பறவைகளும் கூட கிராமங்களுக்கு வருகை தருபவையே.
ஆனாலும் பெரும்பாலான கிராமங்களில் இப்பறவைகளின் வருகையிலும் நடமாட்டத்திலும் அண்மைக் காலம் முதல் பெருவீழ்ச்சி ஏற்பட பல காரணங்கள் துணை புரிந்திருக்கின்றன. அவற்றில் கிராமங்கள் நகராக்கலுக்கு உட்படுதல், கால்நடை வளர்ப்பில் வீழ்ச்சி, வயல்வௌிகள் நிரப்பப்பட்டு கட்டடங்கள் எழுப்பப்படுதல், உட்கட்டமைப்பு அபிவிருத்தியின் நிமித்தம் மரஞ்செடிகள் வெட்டப்படுதல், காடுகள் அழிக்கப்படுதல், கிருமிநாசினி, களைகொல்லி, இரசாயனப் பசளைப் பாவனை என்பவற்றின் அதிகரிப்பு என்பன குறிப்பிடத்தக்க காரணங்களாக விளங்குகின்றன.
இவற்றின் விளைவாக காலாகாலமாக உணவு, கூடு கட்டுவதற்கான மூலப்பொருட்கள் மற்றும் கூடு கட்டுவதற்கு பொருத்தமான இடங்களைப் பெற்றுக் கொண்ட கிராமங்களில் இப்போது அவற்றைப் பெற்றுக் கொள்ள முடியாத நிலையை பெரும்பாலான பறவைகள் எதிர்நோக்கியுள்ளன.
குறிப்பாக நகராக்கலுக்கு உட்பட்டுள்ள கிராமங்களில் கால்நடை வளர்ப்பு வீழ்ச்சியடைந்துள்ளதால் உண்ணிக் கொக்குகளின் வருகையிலும், பழச்செய்கையும் பழ மரங்களும் குறைவடைந்து வருவதால் பச்சைக்கிளிகளின் வருகையிலும், வயல் நிலங்கள் செய்கை பண்ணப்படாமை, வேளாண்மைக்கு கிருமிநாசினி, களைகொல்லி மற்றும் இரசாயனப் பசளைப் பாவனை என்பவற்றின் அதிகரிப்பு காரணமாக வெட்டுக்கிளிகள், பூச்சிகள், புழுக்கள் பெரிதும் குறைவடைந்துள்ளதனால் மைனா, புறா, சிட்டுக்குருவிகள் என்பவற்றின் வருகையிலும் வீழ்ச்சியை அவதானிக்க முடிகின்றது.

அதேநேரம் களைகொல்லி, கிருமிநாசினிகளின் நச்சு த்தன்மையால் உயிரிழந்த வெட்டுக்கிளிகள், பூச்சி, புழுக்களை பறவைகள் உணவாகக் கொள்ளும் போது அந்த நச்சுத்தன்மை அவற்றின் இனப்பெருக்கத் தொகுதியைப் பாதிப்பதாகவும் அவை உயிரிழக்க காரணமாக அமைவதாகவும் சுற்றுச்சூழல் ஆய்வாளர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர்.
இதேவேளை வீட்டு எலிகளையும் காட்டு எலிகளையும் கட்டுப்படுத்தவென இன்றைய காலகட்டத்தில் நச்சுப் பதார்த்தங்கள் பயன்படுத்தப்படுவதோடு அவ்வாறு கொல்லப்படும் எலிகள் கண்ட கண்ட இடங்களில் வீசப்படுகின்றன. அவை நஞ்சூட்டி கொல்லப்பட்ட எலிகள் என்பதை அறியாத ஆந்தைகள், காகங்கள் அவற்றை உணவாகக் கொள்ளும் போது அவையும் உயிரிழக்கவே செய்கின்றன.
இவை இவ்வாறிருக்க, மனிதத் தேவைகளின் நிமித்தம் மேற்கொள்ளப்படும் காடழிப்பு மற்றும் மரம் செடிகள் வெட்டி அப்புறப்படுத்துவதால் காகம், சிட்டுக்குருவி, தூக்கணாங்குருவி போன்றவாறான பறவைகளுக்கு கூடுகளை அமைப்பதற்கான மூலப்பொருளோ, கூடு அமைப்பதற்குப் பொருத்தமான இடமோ கிடைக்கப் பெறாத நிலைமையும் ஏற்பட்டிருக்கின்றது. அதாவது சிட்டுக்குருவி வைக்கோல் போன்ற மெல்லிய பொருட்களை கொண்டும், தூக்கணாங்குருவி சுமார் 2500 நார்களைக் கொண்டும், காகம் சில மரங்களின் மெல்லிய குச்சிகளைக் கொண்டும் கூடுகளை அமைக்கும் பண்பைக் கொண்டிருப்பவையாகும்.
அதேவேளை கூடுகளை அமைத்துக் கொள்ளாது பறவைகள் இனப்பெருக்க நடவடிக்கைகளில் ஈடுபடுவதில்லை. அதனால் காடழிப்பும், மரஞ்செடிகளை வெட்டி அப்புறப்படுத்துவதும், பறவைகளின் வாழ்வியல் நடத்தைகளில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்களுக்கும் அவற்றின் எண்ணிக்கை குறைவடையச் செய்வதில் முக்கியமாக பங்களித்திருக்கின்றன என்பதில் ஐயமில்லை.
இவ்வாறாக மனிதனின் செயற்பாடுகளின் விளைவாகவே பறவைகள் கிராமங்களுக்கு வருகை தருவது குறைவடைந்திருப்பதோடு, அவற்றின் எண்ணிக்கையிலும் வீழச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது. இந்நிலைமை தொடர இடமளிக்கலாகாது. பறவைகளின் எண்ணிக்கை குறைவடைவதும், அவை அருகி அழிவதும் பல்வேறு விதமான சுற்றுச்சூழல் நெருக்கடிகளுக்கு வழிவகுக்க முடியும். குறிப்பாக பல மரங்களதும் செடிகளதும் இருப்புக்கு பறவைகளே துணை செய்கின்றன. அது மாத்திரமல்லாமல் காடுகளின் இருப்புக்கும் வளர்ச்சிக்கும் பறவைகள் பெரும் பங்களிப்புச் செய்கின்றன. பறவைகள் உணவாகக் கொண்ட பழங்களின் வித்துகளை அவை எச்சங்களாக வௌியேற்றும். அந்த வித்துகள் சாதாரணமாக நடப்படும் வித்துகளை விடவும் சிறப்பாக செழித்து வளரும் என்று இந்திய பறவையியல் நிபுணர் சந்துரு வெங்கட்ராமன் குறிப்பிடுகின்றார்.

அந்த வகையில் ‘வேம்பு, ஆலமரம், அரச மரம் என்றவற்றின் இருப்புக்கும் பரவுதலுக்கும் காகம் அதிக பங்களிப்பு செய்து வருகின்றது’ என்று தெரிவித்துள்ள அவர், ‘சில உயரமான கட்டடங்களிலும் வீட்டுக் கூரைகளிலும் சில மரங்கள் தானாக வளர்வதற்கும் பறவைகள்தான் காரணம்’ என்கிறார்.
அதேநேரம் இற்றைக்கு 600 வருடங்களுக்கு முன்பு மொறிஷீயஸ் நாட்டில் ‘கல்வாறு நேச்சர்’ என்றொரு தாவரம் காணப்பட்டுள்ளது. அத்தாவரத்தின் இருப்புக்கு அந்நாட்டில் காணப்பட்ட ‘டோடோ’ பறவையே காரணமாக இருந்து வந்தது.
அப்பறவை அழிந்து அருகி விட்டதால் அத்தாவரமும் அந்நிலையை அடைந்து விட்டது என்று இந்திய சுற்றுச்சூழல் ஆர்வலரும் சூழலியல் எழுத்தாளருமான கோவை சதாசிவம் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதேவேளை ஹோர்ன்பில்ஸ் (Hornbills) என்ற பறவை இனம் அழியுமாயின் உலகம் 08 – 10 தாவரங்களை இழந்து விடும் என்று பறவைகள் தொடர்பான சுற்றுச்சூழல் ஆய்வாளர் திவ்யபாரதி இராமமூர்த்தி குறிப்பிட்டுள்ளார். அத்தோடு காகம் அழிந்து அருகினாலும் கூட மூன்று தாவரங்களை இந்த மண் இழப்பதை தவிர்க்க முடியாது என்கிறார் அவர்.
இவ்வாறுதான் ஏனைய பறவைகளும் காடுகளதும் மரஞ்செடிகளதும் பரவலுக்கு பங்களிக்கின்றன. ஆனால் மனிதனுக்கு காடுகளும் மரஞ்செடிகளும் எவ்வளவு முக்கியமானவை என்பதை சொல்லித்தான் தெரிய வேண்டியதில்லை.ஆகவே சுற்றுச்சூழலிலுக்கு கெடுதல் ஏற்படாத வகையில் ஒவ்வொருவரும் செயற்படுவதில் அதிக கவனம் செலுத்த வேண்டும். அது மனிதனுக்கே நன்மைகள் பயப்பதாக அமைவதோடு ஏனைய உயிரினங்களின் இருப்புக்கும் பாதுகாப்பு அரணாக இருக்கும்.
–தினகரன்
2020.12.02