சுயசார்பே எமது தற்காப்புக் கேடயம்
–பிரதீபன்
இலங்கை ஒரு விவசாய நாடு. விவசாயத்தை அடிப்படையாகக் கொண்ட பொருளாதாரமாவே எமது பொருளாதாரம் 1977 வரை இருந்தது. அதனால் உணவு தேவையைப் பொறுத்தவரை எமது நாடு சுயாதாரமாவே இருந்தது.
1977 இல் ஆட்சிக்கு வந்த ஜே.ஆர்.ஜெயவர்த்தன தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் இந்த நிலைமையை மாற்றி அமைத்தது. ‘திறந்த பொருளாதாரக் கொள்கை’ என்ற பெயரில் உலக வட்டிக்கடைக்காரனான உலக வங்கியின் ஆலோசனைகளை ஏற்ற ஜே.ஆர். அரசு, இலங்கையின் தேசிய பொருளாதாரத்தைப் படிப்படியாகச் சீர்குலைக்கத் தொடங்கியது.
கட்டுப்பாடற்ற இறக்குமதிக் கொள்கையை நடைமுறைப்படுத்தியதின் மூலம், இந்தியாவில் இருந்து எல்லா வகையான உணவுப் பொருட்களும் இறக்குமதியாகி இலங்கையின் விவசாயம் சீர்குலைந்தது. குறிப்பாக, இதனால் கூடுதலாகப் பாதிக்கட்டவர்கள் வட பகுதி விவசாயிகளே. அதற்கு முதல் 1970 முதல் 1977 வரை ஆட்சியில் இருந்த சிறீமாவோ பண்டாரநாயக்க தலைமையிலான அரசாங்கம் பின்பற்றிய கட்டுப்பாடான இறக்குமதி கொள்கையால் வட பகுதி விவசாயிகள் பெற்ற நன்மையை எல்லோரும் அறிவர்.
இன்னொரு பக்கத்தில், ஜே.ஆர். அரசின் கட்டுப்பாடற்ற இறக்குமதிக் கொள்கையால் யப்பானிலிருந்து பெருமளவான துணி வகைகள் இறக்குமதியாகி இலங்கையின் நெசவுத் தொழில் படுத்துக் கொண்டது. இதன் காரணமாக கிழக்கிலங்கையின் மட்டக்களப்பு, அம்பாரை மாவட்டங்களில்; நெசவுத் தொழிலை நம்பியிருந்த குடும்பங்கள் வாழ வழியற்ற நிலைக்குத் தள்ளப்பட்டன. இவர்களில் அநேகர் முஸ்லீம் மக்கள். முன்னைய ஆட்சியில் இறக்குமதிக் கட்டுப்பாடு நிலவிய காலத்தில் பண்டத்தரிப்பு பலநோக்குக் கூட்டுறவுச் சங்க மின்தறி நெசவாலையில் யப்பானியத் தரத்துக்கு நிகரான காற்சட்டைத் துணிகள் உற்பத்தியாகின என்பதையும் இங்கு குறிப்பிட வேண்டும்.
ஜே.ஆரின் ஐ.தே.க. ஆட்சி பின்பற்றிய சிங்களப் பேரினவாதக் கொள்கைகள், தீவிர ஏகாதிபத்திய சார்புக் கொள்கைகள் என்பனவற்றுடன், அவரது அரசு பின்பற்றிய திறந்த பொருளாதாரக் கொள்கையும் சேர்ந்தே தமிழ் மக்கள் மத்தியில் தமிழ் இனவாத அடிப்படையிலான பிரிவினைவாத சிந்தனையைத் தோற்றுவித்தது என்பதையும் வரலாற்றை ஆராய்பவர்கள் கவனத்தில் எடுக்க வேண்டும்.
ஐ.தே.க. ஆட்சி போய் சந்திரிக குமாரதுங்க தலைமையிலான ஆட்சி வந்தது. ஆனால் அவரது இரண்டு ஆட்சிக் காலத்திலும் அவர் ஜே.ஆர்.ஜெயவர்த்தன அறிமுகப்படுத்திய நாட்டை நாசம் செய்த திறந்த பொருளாதாரக் கொள்கையை மாற்றியமைக்கவோ அல்லது தமது தந்தை பண்டாரநாயக்கவும், தாயார் சிறீமாவோ பண்டாரநாயக்கவும் ஆட்சியில் இருந்தபோது அவர்களது சிறீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான அரசுகள் பின்பற்றிய கொள்கைகளை அமுல்படுத்தவோ முயற்சிகள் எதனையும் எடுக்கவில்லை. அதுமாத்திரமல்லாமல் யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவரவும் அவரால் இயலவில்லை.
இந்த நிலைமையில் சந்திரிகவுக்குப் பின்னர் மகிந்த ஜனாதிபதியானார். அவரும் இரு தடவைகள் ஜனாதிபதிப் பதவி வகித்தார். விடுதலைப் புலிகளைத் தோற்கடித்து யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்தவர் என்ற ரீதியில் அவருக்கு நாட்டு மக்கள் மத்தியில் செல்வாக்கும் பூரண ஆதரவும் இருந்தபோதும் அவராலும் ஜே.ஆர். அரசு கொண்டு வந்த திறந்த பொருளாதாரக் கொள்கையை இல்லாதொழித்து நாட்டில் மீண்டும் தேசிய பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப முடியவில்லை.
புலிகளின் பாதுகாவலர்களான மேற்கத்தைய நாடுகள் மகிந்த மீது போர்க்குற்றங்கள் சுமத்தி அவரைத் தண்டிக்கவும், அவரது ஆட்சியைக் கவிழ்க்கவும் முயன்று வந்ததால், அவரால் தேசிய விவகாரங்களில் பூரண கவனம் செலுத்து முடியாத ஒரு நிலையே நிலவியது. அவர் அஞ்சியபடியே அவரது ஆட்சியை 2015 இல் மேற்கத்தைய நாடுகளும் அவர்களது பிராந்திக் கூட்டாளிகளும் சேர்ந்து கவிழ்த்துவிட்டார்கள்.
2015 இல் ‘நல்லாட்சி’ என்ற பெயரில் ஐ.தே.கவும், சிறீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்த துரோகிகளும் சேர்ந்து ஒரு ஆட்சியை அமைத்தனர். அந்த ஆட்சியின் இலட்சணம் எப்படியிருந்தது என்பதை இங்கு விபரிக்கத் தேவையில்லை. ஏனெனில் அந்த நல்லாட்சியும் முன்னைய ஐ.தே.க. ஆட்சிகளின் தொடர்ச்சிதான்.
இந்த நிலைமையில்தான் 2019 நொவம்பரில் நடந்த ஜனாதிபதித் தேர்தலில் கோத்தபாய ராஜபக்ச வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தார். அத்துடன் இவ்வருடம் நடைபெற்ற பொதுத் தேர்தலில் அவரது கட்சி மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்ததுடன், அவரது சகோதரரும் முன்னைய ஜனாதிபதியுமான மகிந்த ராஜபக்ச பிரதமராகவும் பதவியேற்றுக் கொண்டார். எனவே தற்போதைய அரசு மிகவும் பலம் வாய்ந்த ஒன்றாகவும், நாட்டு மக்களில் ஏகப்பெரும்பான்மையோரின் ஆதரவு பெற்றதாகவும் இருக்கின்றனது. அதாவது தற்போதைய அரசு தான் விரும்பியதைச் செய்யக்கூடிய நிலையில் இருக்கின்றது. இன்னும் சொல்லப்போனால் 1977 இல் ஜே.ஆர். பெற்ற வெற்றிக்குப் பின்னர் ஏறக்குறைய அத்தகைய ஒரு வெற்றி தற்போதைய அரசுக்குக் கிடைத்திருக்கிறது.
எனவே, அதலபாதாளத்தில் வீழ்ந்து கிடக்கும் இலங்கையின் பொருளாதாரத்தை மீண்டும் நிமிர்த்தி நிமிர வைப்பதற்கு தற்போதைய அரசு என்ன நடவடிக்கைகளை எடுக்கப் போகின்றது என்பதுதான் அனைவரதும் எதிர்ப்பார்ப்பாக இருக்கின்றது.
கோத்தபாய ஆட்சிக்கு வந்தது முதல் நாட்டு மக்களின் நலன் கருதி தனது சக்திக்கு ஏற்ற நடவடிக்கைகளை எடுத்து வருவதை அவதானிக்க முடிகிறது. அதாவது கிராமப்புற மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தவும், விலைவாசிகளைக் குறைக்கவும், உட்கட்டமைப்பு வசதிகளை மேலும் வலுப்படுத்தவும், வீட்டு வசதிகளை விரிவுபடுத்தவும், வேலை வாய்ப்புகளை உருவாக்கவும் அவர் பல நடவடிக்கைகளை எடுத்திருக்கிறார். பாதகமான சர்வதேசச் சூழல், கொரோனா நோய்த்தாக்கம் என்பனவற்றுக்கு மத்தியில் இவைகள் சாதனைகள்தான் என்பதை மறுப்பதற்கு இல்லை. ஆனால் இலங்கையின் பொருளாதாரத்தை நிலைநிறுத்த இவை மட்டும் போதுமா என்பதே கேள்வி.
அண்மையில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட உயர்மடட சீனத் தூதுக்குழு ஒன்றிடம் பேசிய ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச, ‘இலங்கை மேலும் மேலும் வெளிநாட்டுக் கடன்களை எதிர்பார்ப்பதை விட முதலீடுகளையே எதிர்பார்க்கிறது’ எனக் குறிப்பிட்டார். இது ஒரு சரியான கருத்துநிலை. இந்தக் கருத்தின் மூலம் அவர் தனது அரசின் பொருளாதாரக் கொள்கையின் திசை மார்க்கத்தைக் கோடிகாட்டியுள்ளார்.
ஆனால் வெளிநாட்டு முதலீடுகள் எனும் போது முதலிட வருபவர்கள் சர்வதேசச் சந்தையில் இலாபகரமாக விற்கக்கூடிய பொருட்களை உற்பத்தி செய்யக்கூடிய துறைகளிலேயே முதலீடு செய்ய விரும்புவர். அது பெரும்பாலும் கைத்தொழில் துறையாகவே இருக்கும். அதன் மூலம் இலங்கை சுயசார்புப் பொருளாதாரம் ஒன்றைக் கட்டியெழுப்ப முடியுமா என்பது சந்தேகமே.
இலங்கையைப் பொறுத்தவரை முதலில் உணவுத் தன்னிறைவுக்கான விவசாய அபிவிருத்திக்கு முன்னுரிமை கொடுப்பதுதான் சரியாக இருக்கும். அதன் பின்னர் விவசாயத்தை அடிப்படையாகக் கொண்ட கைத்தொழிலையும், விவசாயப் பொருட்களின் ஏற்றுமதியையும் உருவாக்க வேண்டும். இது ஒன்றே எம்மை சுயசார்புக்கு இட்டுச் செல்லும் அடிப்படையாகும்.
இந்த விடயத்திலும் கோத்தபாய அரசு முன்னைய அரசுகளைக் காட்டிலும் அதிக கரிசனையுடன் இருப்பதாகத் தெரிகிறது. விவசாயத்தை வளர்த்தெடுப்பதே தனது பிரதான நோக்கம் எனக் குறிப்பிட்டதன் மூலம் கோத்தபாய சரியான திசை வழியில் காலடி எடுத்து வைத்திருப்பதை அவதானிக்க முடிகிறது. ஆனால் அதை நடைமுறையில் செயல்படுத்துவதிலேயே அதன் வெற்றி தங்கியுள்ளது.
நாட்டிலுள்ள குளங்கள் அனைத்தையும் புனரமைப்பது என எடுத்த முடிவு சரியானது. ஏனெனில் விவசாயிகளைப் பொறுத்தவரையில் நிலப் பிரச்சினையை விட இருக்கிற நிலங்களுக்கு நீர் இல்லாமையே பெரும் பிரச்சினையாக இருக்கிறது. அடுத்த பிரச்சினை விவசாயம் செய்வதற்கான பண முதலீட்டுப் பிரச்சினை. இந்தப் பிரச்சினையை குறைந்தபட்சம் இலகு கடன்கள் மூலமாவது தீர்க்க வேண்டும். இவை தவிர, நல்ல ரக விதைகள், மானிய விலையில் உரம் – கிருமிநாசினி என்பவைகள், விளைபொருட்களை நியாய விலையில் சந்தைப்படுத்தும் வசதி, விளைபொருட்களை நீண்ட காலத்துக்கு பாதுகாத்து வைக்கும் வசதி எனப் பல பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வேண்டும். இவை எல்லாம் ஒத்த சீரில் அமையும்போதுதான் விவசாயம் வளர்ச்சி அடைந்து சுயசார்பை எட்ட முடியும்.
இலங்கை எதிர்நோக்கும் அதிக வட்டியுடனான கடன் பிரச்சினை, மேற்கத்தைய நாடுகளின் பொருளாதாரத் தடை மிரட்டல், நாட்டில் பஞ்சம் ஏற்படாமல் தடுத்தல், நாட்டு மக்களின் வருமானத்தை அதிகரித்தல் போன்ற இன்னோரன்ன பிரச்சினைகள் அனைத்துக்கும் பொருளாதாரத்தை சுயசார்பாகக் கட்டியெழுப்புதலே ஒரே தீர்வாகும்.