நான்காம் நிலை கைத்தொழில் புரட்சியை நோக்கி இலங்கை

கலாநிதி எம். கணேசமூர்த்தி,
பொருளியல்துறை,
கொழும்பு பல்கலைக்கழகம்.

லங்கையின் தொழில்நுட்ப முன்னேற்றம் குறித்து பல்வேறு மட்டங்களில் அடிக்கடி பேசப்பட்ட போதிலும் மாறிவரும் தொழில்நுட்பங்களை உள்வாங்கிக் கொள்வதில் இலங்கை போதியளவு செயலாற்றத்தை வெளிப்படுத்தவில்லை என சுட்டிக்காட்டப்படுகிறது. உற்பத்தித்துறையில் புதிய தொழில் நுட்பப் பிரயோகம் மாத்திரமின்றி பொதுமக்களின் அன்றாட வாழ்க்கையிலும் புதிய தொழிநுட்பப் பிரயோகம் உலகளாவிய ரீதியில் அதிகரித்து வருகின்ற சூழ்நிலையில் இலங்கையிலும் அதன் செல்வாக்கு அதிகரித்தாக வேண்டும்.

இலங்கையில் ஒவ்வொருவருடைய கையிலும் செல்லிடத் தொலைபேசிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றமையை தொழில்நுட்பப் பிரயோகத்திற்கான ஒரு குறிகாட்டியாக பலரும் கூறுகின்றனர். ஆனால் இலங்கையின் சனத்தொகையில் மூன்றில் ஒரு பங்கினர் மாத்திரமே இணையத்தைப் பயன்படுத்துவதாக அறியப்படுகிறது. சமூகக் குறிகாட்டி என்ற வகையில் இலங்கை மக்களின் எழுத்தறிவு வீதம் 91.71 என்றும் உயர்மட்டத்தில் இருந்தாலும் கணணி எழுத்தறிவு வீதம் 30.1 சதவீதம் மாத்திரமேயாகும். 5 வயதுக்கும் 69 வயதுக்கும் இடைப்பட்டோரில் நாலில் ஒருவர் மாத்திரமே கனணி எழுத்தறிவுடையவாகவும் இதே வயதுப்பிரிவினரில் சுமார் 44.3 சதவீதத்தினர் டிஜிட்டல் எழுத்தறிவுடையவராகவும் உள்ளனர். அதேபோன்று இலங்கையிலுள்ள குடும்பங்களில் 25 சதவீதமானவை மாத்திமே மேசைக்கனணி அல்லது மடிக்கணணி ஒன்றைக் கொண்டுள்ளன.

தேசிய மட்டத்தில் இவ்வாறான நிலை காணப்பட்ட அதேவேளை நகர்ப்புறம், கிராமியத்துறை மற்றும் பெருந்தோட்டத்துறை என்பவற்றுக்கிடையில் கனணி எழுத்தறிவில் பாரிய இடைவெளி காணப்படுகிறது. உதாரணமாக தேசிய கணணி எழுத்தறிவு வீதம் 30.1 சதவீதமாயினும் நகர்ப்புறத்தில் இது 41.5 வீத மட்டத்தில் இருக்கிறது. கிராமியத்துறையில் 28.6 சதவீதமாகவும் பெருந்தோட்டத்துறையில் வெறும் 13.7 வீதமாகவும் காணப்படுகிறது. ஏனைய குறிகாட்டிகள் தொடர்பாகவும் இதேபோன்ற வேறுபாடுகள் காணப்படுகின்றன. உதாரணமாக தேசிய மட்டத்தில் 25 சதவீதமான குடும்பங்கள் மேசைக்கணணி அல்லது மடிக்கணணி ஒன்றைக் கொண்டுள்ளபோதிலும் பெருந்தோட்டத்துறையில் இது 0.1 சதவீதம் என்னும் மிகவும் குறைந்த மட்டத்தில் உள்ளது. எனவே மிகப் பின்தங்கியுள்ள பிரதேசங்கள் குறித்து அதிக கரிசனையும் கவனமும் செலுத்தினால் தேசிய மட்டத்தில் இந்த அடைவுகளை மேலும் துரிதமாக அதிகரிக்கலாம்.

எனவே புதிய தொழில்நுட்பப் பிரயோகம் தொடர்பில் இலங்கை உறுதியான நடவடிக்கைகளை எடுக்கவேண்டியது அவசியமாகிறது. உலகில் நான்காம் தலைமுறைத் தொழினுட்பங்கள் பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில் இலங்கையில் அதற்கான தயார் நிலைகுறித்து விசனம் வெளியிடப்படுகிறது. குறிப்பாக நான்காம் கைத்தொழிற்புரட்சி பற்றியும் அதில் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பங்களை உள்வாங்குவது பற்றியும் அதிக அக்கறை கொள்ளப்பட வேண்டும்.

குறிப்பாக இணைய பொருள்கள் (internet of things) ரோபோ தொழில்நுட்பம் (robotics), மெய்நிகர்நிலை (virtual reality), முப்பரிமாண அச்சிடல் (3D printing) மற்றும் செயற்கை நுண்ணறிவு (artificial intelligence) போன்ற தொழில் நுட்பங்களும் அவற்றின் உள்வாங்குகை பற்றியும் அதிக கரிசனை காட்டப்படவேண்டும். ஏற்கெனவே இத்தொழில் நுட்பங்களில் மக்களின் வாழ்க்கையில் உட்புகுந்து விட்டன. நாம் அன்றாடம் பயன்படுத்தும் ஸ்மார்ட் போன்களில் இத்தொழில் நுட்பங்களில் சில ஏற்கனவே உள்ளன. ஆனால் அவற்றைப் பயன்படுத்துவதற்கான ஆற்றல் பலருக்கு இருப்பதில்லை. கூகுள் மெப்பைப் பயன்படுத்தி வொய்ஸ் உதவியாளருடன் தாம் செல்லவேண்டிய இடத்தைச் சென்றடைகின்றனர். வொய்ஸ் ரெக்கக்னிசன் மூலம் டைப்செய்வது போன்ற வேலைகளை செய்கின்றனர்.

தகவற் தொழில்நுட்பம் சார்ந்த இத்தகைய விடயங்களை மட்டுமன்றி இணையத்தைப்பயன்படுத்திச் செய்யும் வேலைகளில் நவீன தொழில் நுட்பப் பண்பாட்டைத் தீரமானிக்கும் காரணிகளில் கனணி மற்றும் டிஜிட்டல் எழுத்தறிவு முக்கிய பங்காற்றும் அதேநேரம் இவற்றைப் பயன்படுத்தத் தேவையான கருவிகள் மற்றும் உபகரணங்களின் விலை அத்துடன் இணையத் தொடர்பு வலைக்கட்டமைப்பின் கிடைப்பனவு மற்றும் இணைய சேவைக் கட்டணங்களின் அளவு என்பனவும் நவீனதொழில் நுட்பத்தின் உள்வீச்சினைத் தீர்மானிக்கின்றன.

இணைய சேவைக் கட்டணங்கள் மிக உயர்வாகவுள்ள நாடுகளின் பட்டியலில் இலங்கையும் உள்ளது. நாடுமுழுவதும் முறையான தொலைத்தொடர்பு கட்டமைப்புகள் இல்லை. கொழும்பை அண்டிய பிரதேசங்களில் கூட கனெக்டிவிட்டி பிரச்சினைகள் உள்ளது. அது மட்டுமன்றி டேட்டா ஸ்பீட் என்பது மிகவும் மோசமான நிலையில் உள்ளது. போட்டி நிறுவனங்கள் தரவுகளின் வேகம் குறித்து கவர்ச்சிகரமான விளம்பரங்களைச் செய்தாலும் ஸ்பீட் செக்கரில் சென்று செக் செய்தால் அவற்றின் வேகம் ஆமைவேகம் என்பது தெரியவரும். தற்போது எதிர்நோக்கப்படும் சுகாதார அச்சுறுத்தல் காரணமான ஸும் போன்ற செயலிகளைப் பயன்படுத்துபவர்களில் கணிசமாண எண்ணிக்கையினர் நிலையற்ற டேட்டா டரான்ஸ்பர் காரணமாக தொடர்புகளை இழக்க நேரிடுகிறது.

நான்காம் நிலை கைத்தொழிற்புரட்சித் தொழில் நுட்பங்களைப் பயன்படுத்த அதிவேக இணையசேவை அத்தியாவசியமான ஒன்றாகும். அது மட்டுமன்றி புதிய தொழில் நுட்பங்கள் உட்பொதிந்துள்ள பொருள்களைப் பெற்றுக் கொள்வதிலும் நாட்டுக்குள் அவற்றைக் கொண்டுவருவதிலும் கட்டுப்பாடுகள் நிலவுகின்றன.

இலங்கை இப்போதும் இரண்டாம் கைத்தொழிற்புரட்சியின் போது கண்டுபிடிக்கப்பட்ட தொழில்நுட்ப முறைகளையும் உற்பத்தி நடைமுறைகளையும் பிரதானமாகப் பயன்படுத்திவரும் சூழலில் நான்காம் நிலைத் தொழில்நுட்பங்களுக்கு மாறுவது சுலபமானதன்று. கடைநிலைச் செயற்பாடாக் கீழைத்தேய நாடுகளில் கருதப்படும் சுத்திகரிப்புத் தொழிலில் கூட நவீன தொழில் நுட்பங்கள் புகுத்தப்பட்டுள்ளன. இலங்கை இன்னமும் தும்புத்தடியையும் விளக்குமாற்றையும் வைத்து கூட்டிப்பெருக்கிக் கொணடிருக்கிறது.

நிதி வசதிகள் இருந்தாலும் புதிய நுட்பங்களைப் புகுத்துவதில் கொள்கை வகுப்பாளர்களும் அவற்றை நடைமுறைப்படுத்த வேண்டிய அதிகாரிகளும் அக்கறை காட்டாமலும் குறைந்த செலவு என்னும் கொள்கையில் ஊறிப்போய்க்கிடப்பதும் நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதும் ஊக்குவிப்பதும் அவ்வளவு இலகுவான காரியமல்ல. ஏனென்றால் நான்காம் நிலைத் தொழினுட்பங்கள் மலிவானவையல்ல. இரண்டாம் நிலைத்தொழில் நுட்பத்திலிருந்து நான்காம் நிலைத்தொழில் நுட்பத்திற்கு மாற வேண்டுமாயின் இலங்கை மிகப்பெரிய ஒரு பாய்ச்சலை மேற்கொள்ள வேண்டியிருக்கும். ஆனால் நடைமுறையில் உள்ள செயற்பாடுகளை அவதானிக்கும் அத்தகைய ஒரு அசுரப்பாய்ச்சல் இப்போதைக்கு சாத்தியமில்லை என்றே கருதத்தோன்றுகிறது.

இலங்கையின் கைத்தொழில் உற்பத்திகளில் சுமார் 6.7 சதவீதம் மாத்திரமே உயர்தொழில்நுட்ப அல்லது இடைநிலைத் தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படுகின்றமை கண்டறியப்பட்டுள்ளது. இது இலங்கையின் கைத்தொழில் உற்பத்தித் துறையில் நவீன தொழில்நுட்ப உள்வாங்கலின் அளவு பற்றிய தற்போதைய நிலையை வெளிக்காட்டுகிறது. இலங்கையின் கைத்தொழில் கட்டமைப்பில் சிறிய மற்றும் நடுத்தரக் கைத்தொழில்களின் பங்களிப்பு கூடுதலாக உள்ளமை அதற்கொரு காரணமாக இருக்கலாம்.

இலங்கையின் தொழிற்படை விரைவாக மூப்படைந்து வரும் சூழ்நிலையில் நவீன தொழில் நுட்பத்திற்கு மாறாவிடில் இலங்கை சந்தை வாய்ப்புக்களை இழக்க நேர்வது தவிர்க்க முடியாததாகி விடும். மறுபுறம் இலங்கையின் போட்டியாளர்களின் நவீனமயப்படுத்தல் துரிதமாக அதிகரித்து வருகிறது. எனவே இலங்கையின் தொழிற்படையை நான்காம் நிலைத் தொழில் நுட்பத்திற்கு தயார் படுத்த வேண்டும். குறிப்பாக இலங்கையின் வெகுதூரப் பிரதேசங்களிலுள்ள பாடசாலை மாணவருக்கும் பெருந்தோட்டப் பகுதி பாடசாலை மாணவருக்கும் நவீன தொழில் நுட்பம் கொண்டு செல்லப்பட வேண்டும். தேசிய மட்டத்தில் நான்காம் நிலைத்தொழில் நுட்பத்திற்கு மாறும் வேலைத்திட்டங்கள் விரைவுபடுத்தப் படுவதுடன் ஏலவே நாம் அடையாளம் கண்ட பெருந்தோட்டப்புற மற்றும் கிராமப்புற மாணவருக்கான சிறப்பு முன்னோடி வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். இலங்கை பூராகவும் நம்பகரமானதும் நுகர்வோரால் தாங்கக்கூடியதுமான இணைய சேவைகள் வழங்கப்பட வேண்டும்.

தொழில்நுட்பக் கல்லுாரிகள் உள்ளிட்ட மூன்றாம் நிலைக்கல்வி நிறுவனங்கள் மற்றும் பல்கலைக் கழகங்களில் பயிலும் மாணவருக்கும் ஆசிரியர்களுக்கும் உத்தியோகபூர்வ நடவடிக்கைகளுக்காக மட்டும் இலவச இணைய வசதிகளும் கனணி மற்றும் பல்லூடக உபகரணங்களும் வழங்கப்பட வேண்டும். உரிய துறைகளில் நவீன தொழில்நுட்பப் பயன்பாடு பற்றிய செய்முறைப்பயிற்சிகள் ஆசியர்களுக்கு வழங்கப்பட வேண்டும். அதன் பின்னர் முறையான வழிகாட்டல்களுடன் இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டு செயற்படுத்தப்பட வேண்டும். இவ்வாறு செய்து முறையான கண்காணிப்பு மற்றும் முன்னேற்ற மதிப்பீடுகளை மேற்கொள்வதன் மூலம் நான்காம் நிலை கைத்தொழில் புரட்சிக்குத் தேவையான மனித வளத்தை உருவாக்கலாம்.

இன்றைய நிலையில் ஏற்பட்டுள்ள அசாதாரண புறச்சூழலில் கற்பிப்போரும் கற்போரும் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்த வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகியுள்ளனர். தமது சொந்தப் பணத்தைச் செலவிட்டு உபகரணங்களைக் கொள்வனவு செய்து இணையக் கட்டணங்களைச் செலுத்தி கற்பித்தலைச் செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு கற்பிப்போர் தள்ளப்பட்டுள்ளனர். மாணவர்களில் பெரும்பாலானோர் மிகமோசமான பிரச்சினைகளுக்கு மத்தியில் கைத்தொலைபேசிகளைப் பயன்படுத்தி கற்க வேண்டிய நிலையில் உள்ளனர். இவ்வாறான நிலையில் உரிய நிறுவனங்கள் இப்பிரச்சினைகளைக் கையாள்வதில் குருட்டுத் தனமான போக்கை கைகொள்வதை அவதானிக்க முடிகிறது.

தினகரன்
2020.12.13

Tags: