எழுத்தைவிடவும் குரலுக்கு பெரிய வலிமை இருக்கிறது: பவா செல்லதுரை

மிழ் நவீன சிறுகதைகளில் தனது தனித்துவமான மொழியாலும், கதை மாந்தர்களாலும், கதைகள் முழுவதும் நிரம்பி வழியும் மனிதர்களின் பேரன்பாலும் கவனத்தைப் பெற்றவர் எழுத்தாளர் பவா செல்லதுரை. அவர் எழுத்தாளராக மட்டுமில்லாமல், கலை இலக்கிய செயல்பாட்டாளர், கதை சொல்லி, திரைப்பட நடிகர், இயற்கை விவசாயி என்று பல முகங்களுக்கு சொந்தக்காரர். கடந்த சில ஆண்டுகளாக அவர் கதை சொல்வதன் மூலம் மிகப்பெரிய அளவில் வாசகர்களையும் கதை கேட்பவர்களையும் தன் வசப்படுத்தியுள்ளார். அதற்கு காரணம், அந்த கதைகள் மட்டுமல்ல. பவா செல்லதுரையின் கம்பீரமான, அதே நேரத்தில் சினேகமான குரலும் மிக முக்கிய காரணம் என்றால் அது மிகையல்ல. இன்று நாடுகளைக் கடந்து, கதை சொல்லியாக வலம் வரும் எழுத்தாளர் பவா செல்லதுரை தன்னுடைய கதை சொல்லல் அனுபவங்கள் குறித்து  இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழுக்கு அளித்த நேர்காணல் இது.

கேள்வி: ஒரு எழுத்தாளராக இருக்கிற நீங்கள் எப்படி ஒரு கதை சொல்லியாக உருவெடுத்தீர்கள்?

பவா செல்லதுரை: இன்றும் நான் ஒரு எழுத்தாளன்தான், இன்றும் கூட நான் எழுதிக்கொண்டிருக்கும் புதிய நாவலில் ஒரு பாகத்தை எழுதிவிட்டுதான் திருவண்ணாமலையில் இருந்து சென்னைக்கு வந்தேன். நான் எழுத்தைக் கைவிடவில்லை. நான் கதை சொல்வது என்பதை திட்டமிட்டு ஆரம்பிக்கவில்லை. ஒரு நாள் எனது நண்பன் ஜே.பி.யுடன் பேசிக்கொண்டிருந்தேன். அந்த உரையாடல் முடிய ஒன்றரை மணிநேரம் ஆனது. முடிந்த பிறகு, ஜே.பி, என்னிடம் நாம் இரண்டு பேரும் பேசியதில் 12 கதை சொல்லி இருக்கிறாய் என்று கூறினார். அந்த வார்த்தை எனக்கு பயங்கர அதிர்ச்சியாக இருந்தது.

ஜே.பி என்னிடம் இது பெரிய விஷயம் பவா. அது உனக்குத் தெரியவில்லை. இந்த கதையை எல்லாம் ஒரு கூட்டத்தில் சொல்லுங்கள். இபோது நான் உங்களிடம் இருந்து 12 கதைகளைக் கேட்டேன். இதை ஏன் ஒரு 50 பேர் கேட்கக் கூடாது என்று கேட்டார். ஜே.பி.யின் இந்த கேள்வி எனக்கு ரொம்ப புதுசா இருந்தது.

அதன் பிறகு, நண்பர் ஜே.பி. திருவண்ணாமலையில் தான் நடத்தும் குவார்டிஸ் என்ற பல்சமய உரையாடல் மையத்தில் வெள்ளிக்கிழமை தோறும் சாயங்காலம் கதை சொல்வது நிகழ்த்தலாம் என்று முடிவானது. அதற்கு ஒரு காரணம் இருக்கிறது.

அந்த கதையை சொல்லும்போது கேட்பவர்கள், அந்த வாசகன் மிக நிச்சயமாக அந்த எழுத்தாளரைத் தேடுவான். கதை கேட்கிற 100 பேரில், 25 பேர்களாவது அந்த எழுத்தாளரையும் புத்தகங்களையும் தேடுவார்கள்.

அதே போல, கதை சொல்லும் நிகச்சியின்போது, நான் எந்த எழுத்தாளரின் கதையை சொல்கிறேனோ அந்த எழுத்தாளரின் புத்தகத்தை கொண்டுவந்து வைப்பது. அப்போது அந்த வாசகர்கள் வெள்ளிக்கிழமை கதை கேட்டுவிட்டு செல்லும்போது அந்த புத்தகங்களை வாங்கி செல்வார்கள். சனி ஞாயிறு கிழமைகளில் அவர்கள் இந்த கதை கேட்ட மனநிலையிலேயே அந்த புத்தகத்தின் மொத்த கதைகளையும் படிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இதை திட்டமிட்டோம்.

நான் கேளிக்கையாக கதை சொல்ல வேண்டும் என்று நினைக்கவில்லை. ஒரு எழுத்தாளரின் கதைகள் வாசகர்களால் படிக்கப்பட வேண்டும் என்றுதான் திட்டமிட்டேன். கதை சொல்லும் நேரம் வெள்ளிக்கிழமை சாயங்காலம் என்பதை இதற்காகத்தான் தேர்வு செய்தோம்.

இந்த கதை சொல்லும் நிகழ்வை அடுத்த வெள்ளிக்கிழயே தொடங்கினோம். அதற்கு பெரிய திட்டம், போஸ்டர், பேனர் எதுவும் இல்லாமல், கதை சொல்லல் இந்த இடத்தில் நடக்கப்போகிறது என்று சாதாரணமாக ஃபேஸ்புக்கில் ஒரு பதிவு போட்டோம். அதற்கு சுமார் 60 பேர் வந்துவிட்டார்கள். அதுவே எனக்கு ரொம்ப ஆச்சரியமாக இருந்தது.

ஆரம்பத்தில் சொன்ன கதைகள் எல்லாம் யூ டியூப்பில் இல்லை. அப்போதெல்லாம் கதை சொல்வதை யூ டியூப்பில் பதிவேற்ற வேண்டும் என்ற எந்த திட்டமும் இல்லை. ஒரு முறை எழுத்தாளர் சோபாசக்தி எழுதிய மூன்று கதைகளைச் சொன்னேன். கதையைக் கேட்டவர்கள் ரொம்ப டிஸ்டர்ப் ஆனார்கள். அப்போது வாசகர்களுக்கு சோபாசக்தியின் புத்தகங்களை எங்களால் வரவழைக்க முடியவில்லை. ஆனால், அடுத்த நாளில் இருந்து எனக்கு நிறைய செல்போன் அழைப்புகள் வந்தது. சோபாசக்தி புத்தகங்கள் எல்லாம் எங்கே கிடைக்கும் என்று நிறைய வாசகர்கள் கேட்டார்கள். அப்போதுதான் நான் கதை சொல்லல் மூலமாக ஏதோ ஒன்றை செய்திருக்கிறோம் என்று தோன்றியது.

அதன்பிறகு எப்போது கதை சொல்ல நிகழ்ச்சி நடத்தலாம் என்று தோன்றுகிறதோ அப்போதெல்லாம் கதை சொல்லல் நிகழ்வை நடத்தினோம்.

ஏனென்றால், ஒவ்வொரு மாதமும் 2வது சனிக்கிழமை இலக்கிய மன்ற கூட்டம் நடக்கும் என்று நடத்தப்பட்ட எல்லா நிகழ்வுகளும் எனக்குத் தெரிந்து நீர்த்துப்போய்விட்டது. கலை இலக்கியத்தில் எதுவும் திட்டமிட்டு நடக்காது. கலையில் எதுவுமே எதேச்சையாக நிகழ்வதுதான் கலை என்று நான் நினைக்கிறேன்.

அதன் பிறகு, ஒரு இரண்டு வாரம் கழித்து இன்னொரு கதை சொல்ல நிகழ்வை வைத்தோம். அந்த நிகழ்வில் சொல்லிய கதையை எழுதிய எழுத்தாளரின் புத்தகங்களை எல்லாம் வாசகர்களுக்காக வரவழைத்தோம். அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்த கூட்டத்தில் 150 பேர் வந்தார்கள். இந்த 150 பேரும் இதற்கு முந்தைய நிகழ்வில் கதை கேட்டவர்கள் மற்றவர்களிடம் கதை சொல்வது நன்றாக இருக்கிறது என்று சொல்லி அழைத்துக்கொண்டு வந்தவர்கள். இது எங்களுக்கு பயங்கர உற்சாகமாகிவிட்டது.

இதற்கு அடுத்து தொடர்ந்து நிகழ்ந்த 3வது, 4வது கதை சொல்லல் நிகழ்வில் எனது மகன் வம்சி ஒருநாள் விளையாட்டாக நான் கதை சொல்வதை கேமிராவில் பதிவு செய்து யூ டியூப்பில் ஒரு சேனல் ஆரம்பித்து அதில் பதிவேற்றினான். அவன் அப்போதுதான் ஒரு கேமிரா வாங்கி போட்டோ கிராஃபி எல்லாம் கற்றுக்கொண்டிருந்தான்.

உண்மையில் எனக்கு இந்த யூடியூப் சேனல், அதை எப்படி தொடங்குவது என்பது என்று எனக்கு எதுவுமே தெரியாது. ஃபேஸ்புக்கில் கொஞ்சம் கொஞ்சம் தெரியும் அவ்வளதுதான். தொழில்நுட்ப ரீதியாக நான் ஒரு 20 ஆண்டுகள் பின் தங்கியவன். தொழில்நுட்பத்தை கற்றுக்கொள்ள வேண்டாம் என்றே எனக்கு தோன்றியது. எனக்கு டைப் செய்யக்கூட தெரியாது. எங்கள் கடையில் அல்லது யாரிடமாவது கொடுத்து டைப் செய்து தரச்சொல்லிதான் வாங்குவேன். கம்ப்யூட்டர், ஐ பாட் இருந்தாலும் கையில் எழுதுவதுதான் எனக்கு பிரியமான ஒரு விஷயம்.

கதை சொல்லல் நிகழ்வை வம்சி யூ டியூப்பில் பதிவேற்றிய பிறகு, அதற்கு ஒரு நல்ல வரவேற்பு இருந்தது. அதற்கு பலரும் உங்கள் கதை சொல்லல் நன்றாக இருக்கிறது, பிரமாதமாக இருக்கிறது என்று கம்மெண்ட் செய்தார்கள்.

இது போல மற்றவர்கள் நன்றாக இருக்கிறது என்று சொல்லும்போது வழக்கமாக ஒரு படைப்பாளி பெரிய உற்சாகம் அடைவான் இல்லையா, அதைப்போல நான் உற்சாகமாகிவிட்டேன். அடுத்தடுத்து கதை சொல்ல வேண்டும் என்ற உற்சாகம் வந்துவிட்டது.

ஒரு கட்டத்தில் நான் என்னுடைய கதையையோ அல்லது வேறு ஒரு எழுத்தாளரின் கதையையோ சொல்லும்போது கதை கேட்பதற்கு 500 பேர்கள் அந்த இடத்தில் அமர்ந்திருந்தார்கள். அதைப் பார்த்து எனக்கு பயங்கர ஆச்சரியமாகிவிட்டது. அந்த திறந்தவெளி அரங்கில் 500 பேர்தான் அமர முடியும் சேர் போதவில்லை. பலரும் தரையில் உட்கார்ந்திருந்தார்கள், வீட்டின் கூரைகளில் அமர்ந்திருந்தார்கள். எனக்கு பெரிய ஆச்சரியமாக இருந்தது.

நான் எப்போதுமே, ஏதாவது ஒரு விஷயத்தை கலை இலக்கியத்தில் முழு ஈடுபாட்டுடன் செய்யும்போது அது அதனுடைய உச்சத்தை அடையும் என்று நினைப்பேன். அதே மாதிரிதான் நாங்கள் திருவண்ணாமலையில் நடத்திய கலை இலக்கிய இரவு. முதலில் சிறிய அளவில் தொடங்கினோம். முதல் கலை இலக்கிய இரவுக்கு வந்தவர் ஒருவர் அவரே அனைவருக்கும் டீ வாங்கிகொடுத்தார். அந்தளவுக்கு மிகவும் குறைவாகவே மக்கள் வந்தார்கள். கடைசியாக நாங்கள் கலை இலக்கிய இரவு நடத்தி முடிக்கும்போது கிட்டத்தட்ட பத்தாயிரம் பேர் இருந்தார்கள். பத்தாயிரம் பேர் ஒரு இலக்கிய நிகழ்ச்சிக்கு வந்தார்கள் என்பது இந்தியாவிலேயே எங்கும் நடந்ததாக எனக்குத் தெரியவில்லை. கண்ணுக்கு எட்டிய தூரம் வரை மக்கள் கூட்டமாக இருக்கும். நாங்கள், பத்தாயிரம் பேர் ஒரு இரவு முழுவதும் ஒரு இலக்கிய நிகழ்ச்சியை கேட்க முடியும் என்பதை உருவாக்கி இருந்தோம்.

சென்னை மாதிரியான நகரங்களில் ஒரு இலக்கிய கூட்டத்துக்கு 20 பேர்களை வரவழைப்பது என்பது எவ்வளவு கஷ்டம். ஆனால், நாங்கள் பத்தாயிரம் பேரை வரவழைப்பதற்கு எவ்வளவு கடுமையாக உழைத்திருப்போம் என்றால், பல வீடுகளுக்கு நாங்கள் நேரில் சென்று நிகழ்ச்சிக்கு அழைத்து கதவு தட்டுவோம். அப்போது கதவு திறப்பவர்கள் சிலர். ஏன் மத்தியானத்தில் வந்து தொந்தரவு செய்கிறீர்கள் என்று திட்டுவார்கள். அவர்களிடம் நாங்கள் கலை இலக்கிய இரவு நடைபெறுகிறது என்று நோட்டீஸ் தருவோம். ஒரு 100 ரூபாய் கொடுங்க சார் என்று கேட்போம். பலபேர் திட்டுவார்கள். இதைவிட பிச்சை எடுக்கலாம் என்பார்கள். இப்படியெல்லாம் கேள்விகளை எதிர்கொண்டுதான் நாங்கள் திருவண்ணாமலையில் கலை இலக்கிய இரவுக்கு பத்தாயிரம் பேர்களை கூட்ட முடிந்தது.

அதனால், நீங்கள் இலக்கியத்தில் ரொம்ப முழு ஈடுபாட்டுடன் ஒரு விஷயத்தை செய்தால் அருமையான வாசகர்களைக் அழைத்துக்கொண்டு வரமுடியும். ஆனால், அதில், நமக்கு பல மனத்தடைகள் இருக்கிறது.

அது என்னவென்றால், உதாரணத்துக்கு நம்முடைய வீட்டைச் சுற்றி 50 வீடுகள் இருக்கிறது. இந்த 50 வீட்டுக்கார்களுக்கும் நமக்கும் எந்த தொடர்புமே இருக்காது. அதாவது பிறந்தநாள் போன்ற விசேஷங்களுக்கு அழைப்பது, உணவுகளை பரிமாறிக்கொள்வது போன்ற லௌகீக தொடர்பு இருக்கும். நான் குறிப்பிடுவது அவற்றை அல்ல. இலக்கிய சமூக செயல்பாடுகளுக்கு அவர்களைப் போய் நாம் அழைக்கவே மாட்டோம். ஏனென்றால், நாம் மனதில் அவர்களையெல்லாம் முட்டாள், நித்தம் சோறு தின்று செத்துப்போகிறவர்கள் என சாதாரணமானவர்கள் என்று நினைக்கிறோம். நாம்தான் பெரிய ஆள் என்று நினைக்கிறோம்.

உண்மையில், அதெல்லாம் இல்லை. அவர்களைப் போய் நாம் கைகொடுத்து எங்கள் நிகழ்ச்சிக்கு வா என்று நாம் கூப்பிட்டதே இல்லை. ஆனால், நாங்கள் அவர்களை நிகழ்ச்சிக்கு வாங்க என்று கூப்பிடுவோம்.

மக்களுடன் செல்வது, மக்களுடன் தொடர்பில் இருப்பது என்பதுதான் கதை சொல்ல நிகழ்ச்சியின் மையமாக நான் பார்க்கிறேன். நீங்கள் என்னதான் கதை சொன்னாலும் எதிரில் அவ்வளவு பார்வையாளர்கள் இருக்கும்போதுதான் ஒரு எழுத்தாளனுக்கோ, கதைசொல்லிக்கோ ஒரு பெரிய உற்சாகம் வரும்.

அந்த உணர்வைப் பற்றி சுந்தரராமசாமி, கரகோஷம் கேட்டு விரியும் சிறகை எழுத்தாளன் கோதிக்கொண்டிருப்பான் என்று கூறுவார். ஆனால், ஒரு எழுத்தாளனுக்கு அது தெரியாது. ஒரு எழுத்தாளனின் கதையை உலகின் எங்கேயோ ஒரு நாட்டில் ஒரு வாசகன் படிக்கிறான் என்பது எழுத்தாளனுக்கு தெரியாது. ஆனால், உங்கள் கதையை எதிரிலேயே ஒருவன் கேட்கிறான் என்றால் நீங்கள் நேராகவே பார்ப்பீர்கள்.

அதே நேரத்தில், இது ஒரு பெரிய வரவேற்பு என்று நினைப்பவன் ஒரு கதை சொல்லியாகவே மீந்து போகிறான். அவன் ஒரு பேச்சாளனாகவே வாழ்க்கையைக் கழித்துவிட்டு இறந்துவிடுவான். ஆனால், அதை தாண்டி இது இல்லை நமது எல்லை. நமக்கான எழுத்தை எழுதிவிட வேண்டும் என்று நினைப்பதுதான் முக்கியம் என்று நான் நினைக்கிறேன்.

நான் இடையிடையே எழுதுவதை விட்டிருந்தாலும்கூட முழுவதுமாக கைவிடவில்லை. இயக்குனர் பாலுமகேந்திரா அவர்கள் உலகிலேயே மிகப்பெரிய எழுத்து சோம்பேறி பவாதான் என்பார். ஆனால், அவரே பெரிய எழுத்து சோம்பேறிதான். ஏனென்றால், நாங்கள் அவருடைய பிளாகில் இருந்து அவர் எழுதியவைகளைக் கொண்டு ஒரு புத்தகம் பதிப்பித்துள்ளோம். அவர் மொத்தமே 7 கட்டுரைகள்தான் எழுதியுள்ளார். ஏனென்றால், அவருக்கு சினிமா மீது ஒரு மிகப்பெரிய காதல் இருந்தது. அதில் பெரிதாக சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. ஆனால், அவர் அடிப்படையில் ஒரு எழுத்தாளர். அவர் கதை எழுதியிருக்கிறார். விகடன், குமுதத்தில் எல்லாம் அவருடைய கதைகள் வெளியாகியுள்ளது. சிறுபத்திரிகைகளில் கதை எழுதியுள்ளார்.

மனிதர்களுக்கு வேறு ஒரு மீடியம் கிடைக்கும்போது, அதற்குள் ஈடுபடுகிறார்கள். அப்படிதான் நான் கதை சொல்லலில் ஈடுபட்டேன். ஆனால், ஒவ்வொரு வினாடியும் இதுவல்ல நான். இன்னும் நான் எழுத வேண்டிய விஷயம் நிறைய இருக்கிறது என்று நினைக்கிறேன். குறிப்பாக வட ஆற்காடு நிலப்பரப்பு. அது வறண்ட அல்லது செழுமையான என இரண்டும் மட்டுமே இல்லாத ஒரு கலவையான நிலப்பரப்பு. திருவண்ணாமலையில் எங்கள் நிலம் இருக்கும் இடத்தில் வறண்டு இருக்கும். பக்கத்தில் 5 கிலோ மீட்டரில் கொளக்குடியில் செழுமையாக இருக்கும். ஒரே நிலப்பரப்பில் இப்படி வேறுபாடு இருக்கிறது. இந்த நிலப்பரப்பை இலக்கியத்தில் எழுத வேண்டும் என்று தோண்றுகிறது.

இந்த நிலப்பரப்பை மிகவும் குறைவாக எனது முன்னோடி எழுத்தாளர்கள் தொட்டிருக்கிறார்கள். குறிப்பாக ராஜேந்திர சோழன், வேலூர் பக்கம் அழகிய பெரியவன். எங்கள் திருவண்ணாமலைப் பகுதியைப் பற்றி மிகவும் குறைவாக எழுதப்பட்டிருக்கிறது.

ஜி.முருகன் மாதிரியான எழுத்தாளர்கள் அதை எழுதிவிடுவார்கள் என்று எனக்கு தோன்றியது. ஆனால், ஜி.முருகன் இந்த நிலப்பரப்பை எழுதுவதோடு மட்டுமல்லாமல், குறிப்பாக 45 வயதுக்கு மேல், மனிதனுக்குள் ஏற்படுகிற காமம் பற்றி அவர் பிரமாதமாக எழுதுகிறார். ஆனால், அவர் மண், மண்ணின் மக்களைப் பற்றி எழுதவில்லை. அதை நான் குறையாக கூறவில்லை. ஜி.முருகன் அந்த பகுதியில் எழுதுகிறார்.

அதனால், இன்னொருவர் வேறு ஒன்றை எழுதலாம். எங்கள் பகுதியில் ரொம்ப எளிமையான ஒட்டர்கள், இருளர்கள், தொம்மையர்கள், குடுகுடுப்பைக்காரர்கள், நரிக்குறவர்கள் மக்கள் இருக்கிறார்கள். பொதுவாக தலித் என்றால் பறையர்கள், அருந்ததியர்கள் என்ற பெரும் சாதிகள் முன்வரலாம். ஆனால், அவர்களுக்கு கீழ் அடுக்கில் இந்த மாதிரியான சமூகங்கள் தரைக்கும் கீழே இருக்கிறார்கள்.

ரொம்ப சாதாரணமாக போய் இந்த சாதியில் உள்ளவர்களை ஒருவர் அடித்துவிடலாம். அவர்கள் புகார் கொடுக்க போலீஸ் ஸ்டேஷனுக்கே போக மாட்டார்கள். ஏனென்றால், அவர்களுக்கு தெரியும் நமக்கு சாதி பலம் இல்லை. நமக்கு பெரிய பின்னணி இல்லை. இந்த அடியை வாங்கிக்கொண்டு நாம் பேசாமல் போய்விட வேண்டும் என்ற ஒரு உணர்வோடு ஒருவன் வாழ்கிறான். அது எவ்வளவு பெரிய வன்முறை. அவனைப் பற்றி எல்லாம் யாரும் எழுதவே இல்லை. அந்த மாதிரியான பதிவுகளே வரவில்லை. என்னுடைய கதைகளில் ரொம்ப ரொம்ப குறைவாக எழுதியிருக்கிறேன். மொத்தமாக ஒரு 20 கதை எழுதியிருக்கிறேன். அதில் 15 கதைகளில் இவர்களைப் பற்றிதான் எழுதி இருக்கிறேன்.

ஒரு நரிக்குறவரை நீங்கள் அடித்துவிட்டீர்கள் என்றால் அவர் போய் அவருடைய ஊரில்கூட சொல்ல மாட்டார். ஏனென்றால், அவர்களுக்கு ஊர் ஏது. அவர்கள் ஆல மரத்தடியில் ஒரு டெண்ட் போட்டு வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு நாம் பலமற்றவர்கள் என்பது தெரியும்.

சமகாலத்தில் வாழும் ஒரு மனிதனை நீ பலமற்றவன். உன்னால் ஒன்றுமே செய்ய முடியாது என்று வைத்திருந்தால் அது எவ்வளவு துயரமான சமூகம். இந்த மாதிரியான மனிதர்களை நான் மையப்படுத்த வேண்டும் என்று நினைத்தேன்.

கேள்வி: கதை சொல்லலின்போது சொல்வதற்கு ஒரு கதையை எப்படி திட்டமிடுகிறீர்கள்?

பவா செல்லதுரை: கதை சொல்லும்போது, எந்த கதைகளையுமே நான் திட்டமிட்டு சொல்லவில்லை. அந்த கதையை சொல்வதற்கு முந்தைய வினாடி வரை என்னிடம் எந்த திட்டமிடலும் இல்லை. ஆனால், என் மனதில் இந்த 40 வருட வாசிப்பில், ஊரித் திளைத்த ஆயிரக் கணக்கான கதைகள் எனக்குள் இருக்கின்றன. அதில் ஏதாவது ஒரு கதையை சொல்லலாம் என்று நான் ஞாபகப்படுத்துகிறேன். பல கதைகளை நான் என்னுடைய நினைவில் இருந்தே சொல்கிறேன். அப்படி சொல்லும்போது, ஏராளமான பெயர்கள், ஊர்கள் காலம் ஆகியவற்றில் பிழை வரும். அதைப்பற்றி கவலையே படாமல் இருந்தேன். ஆனால், ஒரு கட்டத்தில், இது ரொம்ப தவறு என்று தோன்றியது. அந்த எழுத்தாளருக்கு நாம் செய்யும் சிறிய துரோகம் என்று தோன்றியது. அதற்குப் பிறகு அந்த கதையை தேடி எடுத்து மீண்டும் ஒருமுறை வாசித்துவிட்டு, அந்த கதைகளை என்பார்வையில் இருந்துதான் சொல்கிறேன்.

அப்படி சொல்லும்போது, அந்த கதையின் எழுத்தாளன் இரண்டாம் பட்சமாகிவிடமாட்டாரா என்ற கேள்வி எழலாம். கண்டிபாக எழுத்தாளர் இரண்டாம்பட்சமாக மாட்டார். ஏனென்றால், ஒரு கதையை எழுத்தாளன் எழுதிவிட்டார். அது பொது சமூகத்துக்கு வந்துவிட்டது. அந்த கதையை நான் வேற மாதிரியும் நீங்கள் வேற மாதிரியும் புரிந்துகொள்வீர்கள்.

நான் இப்போது ஒரு கதையை ஒரு அம்மாவினுடைய பார்வையில் இருந்து சொல்கிறேன். நீங்கள் ஒரு மகளுடைய பார்வையில் இருந்து அந்த கதையை சொல்லலாம். இந்த இரண்டு பார்வையுமே அந்த எழுத்தாளரின் கிரீடத்தில் பதிக்கப்பட்ட 2 மாணிக்க கற்களை பதிப்பதாகத்தான் இருக்கும். ஒரு போதும் அது அவருடைய கிரீடத்தை கழட்டுவதாக இருக்காது. இந்த மாதிரிதான் நான் கதை சொல்வதை நகர்த்திக்கொண்டு செல்வதாக கருதுகிறேன்.

கேள்வி: பொதுவாக கதை சொல்வது என்பது அனைவருக்கும் அவர்களுடைய தாத்தா பாட்டி சொல்வதாகத்தான் இருந்துள்ளது. அந்த கதைகள் பெரும்பாலும் அவர்களுடைய சொந்த வாழ்க்கையில் நடந்த விஷயங்களாக இருக்கும். ஆனால், நீங்கள் ஒரு எழுத்தாளர் எழுதிய கதையை சொல்கிறீர்கள். நீங்கள் அந்த கதையை மாற்றவே முடியாது. ஆனால், ஒரு கதை சொல்லும்போது அது அவர்கள் ஒவ்வொருத்தரிடமும் செல்லும்போது வேறு ஒன்றாக மாறும். ஆனால், நீங்கள் எழுத்தாளரின் கதையை சொல்லும்போது அது மாறாத ஒன்றாகிறதா?

பவா செல்லதுரை: இதுவரை சொல்கதைகள் மட்டும்தான் நம்முடைய தாத்தா பாட்டிகள், அப்பா, அம்மாக்களால் வழிவழியாக மீண்டும் மீண்டும் சொல்லப்பட்டு வந்தது. நான் அதிலிருந்து மாறி ஒரு எழுத்தாளன் எழுதிய கதையை சொல்கிறேன். சொல் கதைகளை நீங்கள் எப்படி வேண்டுமானாலும் மாற்றிக்கொள்ளலாம். எனக்கு என்னுடைய அம்மா ஒரு கதையை 7 முறையில் சொல்லியிருக்கிறார்கள். அதில் வேறுவேறு ஆட்கள், வேறுவேறு முடிவுகள் இருக்கும்.

உதாரணத்திற்கு நான் பிரபஞ்சனுடைய ஒரு மனுஷி கதையை சொல்கிறேன். அந்த ஒரு மனுஷி கதையில் ஒரு பத்திரிகை போட்டோ கிராஃபர் அவருடைய ஒரு நாள் வாழ்க்கை அதை மட்டும்தான் சொல்ல முடியும். அதை மாற்றவே முடியாது. அதனால் என்ன? நான் அந்த எழுத்தாளனின் கதையை நான் மறுபடியும் சொல்வதாக வைத்துக்கொண்டால்கூட, அது நான் அந்த எழுத்தாளனுக்கு சாதகமாக செய்யக்கூடிய ஒன்றுதான்.

நான் இதுவரை சுமார் 50 எழுத்தாளர்களுடைய 200 – 250 கதைகளை சொல்லியிருப்பேன். அதில், ஒரே ஒரு எழுத்தாளர்கூட எனக்கு ஒரு போன் செய்து எனக்கு எதிர்வினையாற்றி நீங்கள் ஏன் என்னுடைய கதையை இப்படி மாற்றி சொன்னீர்கள் அல்லது என்னுடைய கதையை நீங்கள் ஏன் சொன்னீர்கள் என்று கேட்டதில்லை.

அ.முத்துலிங்கம் நான் வியந்து பார்க்கக்கூடிய ஒரு எழுத்தாளர். புனைவுக்கும் புனைவல்லாததற்கும் இடையில் ஒரு மொழியை அவர் வைத்துள்ளார். அவருடைய எழுத்துகளில் எது புனைவு, எது புனைவல்லாதது என்று கண்டுபிடிக்க முடியாது.

நான் அவருடைய நிலம் எனும் நல்லாள் என்கிற கதையை சொன்னேன். அவர் அந்த கதையை கேட்டுவிட்டு எனக்கு ஒரு மெயில் அனுப்பினார். நான் இத்தனை வருடம் எழுதியதற்கான பலனை இன்றுதான் அன்பவித்தேன் என்று எழுதியிருந்தார். நான் நீங்கள் எவ்வளவு பெரிய எழுத்தாளர். நீங்கள் இப்படி சொல்லலாமா என்று கேட்டேன். இல்லை, உலகம் முழுவதும் உங்கள் குரலால் என் கதையை கேட்கிற சிலிர்ப்பு இருக்கிறது இல்லயா, அதை என்னால் தாங்கவே முடியவில்லை என்று எழுதியிருந்தார்.

உண்மையிலேயே, இந்த கதைகள் என்னமாதிரி சென்றடைந்துள்ளது என்பதற்கு நான் ஒரு சின்ன எடுத்துக்காட்டு சொல்கிறேன். கனடாவில் விவேகானந்தன் என்பவர் இந்த ஒரு கதையை மட்டும் கேட்டுவிட்டு எனக்கு போன் செய்து,  நான் கனடாவில் இருக்கிறேன். உங்களுடைய கதைகளைக் கேட்டேன் அண்ணா. என்னுடைய சொத்துசுகம் எல்லாவற்றையும் எழுதி கொடுத்துவிட்டு நான் மரித்துவிடலாம் என்றிருக்கிறேன் என்று கூறினார்.

அதனால், ஒரு கதை என்னை இதுவரை பார்த்திராத எங்கேயோ கனடாவில் இருக்கும் மனிதனை எனக்கு எதுவுமே வேண்டாம், நீ இன்னும் பத்து கதை சொல் உனக்கு எல்லாவற்றையும் எழுதி கொடுத்துவிட்டு செத்துப்போகிறேன் என்று சொல்வது எழுதிக்கொண்டு மட்டும் இருக்கிற ஒரு எழுத்தாளனுக்கு கிடைத்திருக்கிறதா என்று எனக்கு தெரியாது. எழுத்தைவிடவும் குரலுக்கு ஒரு பெரிய வலிமை இருப்பதாக நான் நம்புகிறேன். அதற்கு எனக்கு தினமும் வரக்கூடிய தொலைபேசி அழைப்புகள், எங்கள் வீட்டைத் தேடி வரக்கூடிய நண்பர்கள்தான் சான்று.

கேள்வி: நீங்கள் கதை சொல்லும்போது, ஒரு கதையை எப்படி தேர்வு செய்கிறீர்கள்? கதை கேட்பவர்கள் கதையை எழுதிய எழுத்தாளரை நோக்கி எந்தளவுக்கு பயணிக்கிறார்கள்?

பவா செல்லதுரை: முதலில் நான் இந்த கதைகளைத்தான் சொல்ல வேண்டும் என்று யாரும் ஒருமுறைகூட தேர்வு செய்தது இல்லை. தேர்வு முழுக்க என்னுடைய தனிப்பட்ட விருப்பம்தான். பிறகு, என்னுடைய ஒரு கதையை சொல்லுங்கள் என்று 100 தொகுப்புகள் எங்கள் வீட்டில் அடுக்கி வைத்திருக்கிறே. அந்த கதைகளை எல்லாம் நான் சொல்லக்கூடாது என்று இல்லை. அந்த கதைகளையெல்லாம் நான் படித்து, அது எனக்குள் பதிந்து அதை சொல்வதற்கு 20 வருடம் ஆகும். அதுவரை நான் உயிருடன் இருக்க வேண்டும். இந்த கதை தேர்வில் எனக்கு எந்தவிதமான பாரபட்சமும் இல்லை. எனக்கு வேண்டிய எழுத்தாளர், வேண்டாத எழுத்தாளர் என்று இல்லை. இதுவரை சொல்லிய கதைகளில் ஜெயமோகன் கதையை அதிகமாக சொல்லியிருக்கிறேன். ஜெயமோகன் ஒரு இந்துத்துவாவாதி, அவருடைய கதைகளை நீங்கள் ஏன் சொல்கிறீர்கள் என்றால் அது தனியாக விவாதிக்க வேண்டிய விஷயம். அவருடைய எந்த கொள்கைகளிலும் நான் உடன்பட்டது கிடையாது. ஆனால், ஜெயமோகன் புனைவில் விளையாடுகிறார். தேவகி சித்தியின் டைரி என்று ஜெயமோகனின் ஒரு கதை சொல்லியிருக்கிறேன். அந்த தேவகி சித்தி நான் தான் சார் என்று பல பெண்கள் பேசியிருக்கிறார்கள். நான் கதை சொல்ல வேண்டும் என்று முடிவு செய்யும்போது இந்த மாதிரி நல்ல கதைகளை சொல்ல வேண்டும் என்று நினைக்கிறேன். கதை தேர்வு முழுக்க முழுக்க எனக்கானது. அந்த கதை சொல்லும்போது ஏற்படும் உயர்வும் தாழ்வும் என்னை சார்ந்தது. எனக்கு யாரும் பரிந்துரை செய்தது இல்லை. அதே போல, நான் நிறைய மொழிபெயர்ப்பு கதைகளை சொல்லியிருக்கிறேன். பால்சக்கரியா, எம்.முகுந்தன் அவர்களுடைய கதைகளை சொல்லியிருக்கிறேன்.

அதே நேரத்தில், சில கதைகளை என்னால் சொல்ல முடியாது என்று முடிவு செய்திருக்கிறேன். முகுந்தனுடைய பிறகு என்று ஒரு கதை. அந்த கதையை என்னால் சொல்லவே முடியாது என்று தெரியும். ஆனால், நான் ஒரு நாள், அந்த கதையை முழுக்க வாசித்தேன். அந்த கதையை முகுந்தன் எப்படி எழுதுகிறார் என்றால், அந்த கதையில் வரும் முகுந்தன் டெல்லியில் ஒரு பத்திரிகையாளன். அவன் அவனுடைய மனைவிக்கு ஒரு முத்தம் தருவான். அதை, பிரவுன் நிற மரத்தில் இருந்து ஒரு பட்டையை பெயர்த்தெடுத்து அதை அப்படியே காய்ச்சி வடிக்கப்பட்ட ஒயினின் சுவையை ஒத்திருந்த உதடுகளில் இருந்து அவன் ஒரு முத்தம் தந்தான் என்று எழுதுகிறார்.

இந்த உவமையை நான் கதை சொல்லும்போது விட்டுவிட்டால் நான் முகுந்தனுக்கு செய்யும் பெரிய துரோகம். அதே நேரத்தில், அது ஒரு பெரிய கதை. அதை சொல்லும்போது, இந்த உவமை சொல்ல மறந்துபோகும். ஆனால், சொல்லியே ஆகவேண்டும். அதனால், நான் அந்த கதையை சொல்வதைவிட வாசிக்கலாம் என்று ஒரு பரீட்சார்த்த முயற்சியாக வாசித்தேன். ஆனால், பல பேரால் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இதற்கு காரணம் பொது வாசகர்கள் அவர் கதை சொன்னால் நன்றாக இருக்கும் என்று மனதில் வைத்திருப்பார்கள்.

நான் எல்லா கதையையும் அப்படி வாசிப்பதில்லை. அந்த ஒரு கதையை மட்டும்தான் வாசித்தேன். இருப்பினும், அந்த கதை பலருக்கும் பிடித்திருந்தது. அந்த கதையை யூ டியூப்பில் 20,000 பேர் பார்த்திருக்கிறார்கள்.

மீட்பு என்று போகன் சங்கருடைய ஒரு கதை. அந்த கதையை சொல்ல ஆரம்பிக்கும்போது என்னுடைய மனைவி ஷைலஜாவும் மகள் மானசியும் முதல் வரிசையிலிருந்து வெளியே போய்விட்டார்கள். அது எனக்கு பயங்கர டிஸ்டர்ப் ஆகிவிட்டது ஏனென்றால், அந்த கதை பள்ளிக்கு போன இரண்டு குழந்தைகளும் விபத்தில் இறந்துவிடும். அந்த குழந்தைகளை பட்டாம்பூச்சிகள் பறப்பதைப் பார்ப்பதற்காக ஒரு கிறிஸ்துமஸ் நாளில் கொடைக்கானலுக்கு அழைத்து செல்வதற்காக அந்த அப்பாவும் அம்மாவும் திட்டமிட்டிருப்பார்கள். ஆனால், அந்த குழந்தைகள் ஒரு மார்ச்சுவரியில் கிடத்தப்பட்டிருக்கும்.

நான் இந்த கதையை சொல்ல ஆரம்பிக்கும்போதே ஷைலஜாவுக்கு எங்களுடைய மகன் சிபி ஒரு விபத்தில் மரணம் அடைந்தது நினைவுக்கு வருகிறது. அடுத்த 5 நிமிடத்தில் இந்த கதையை என்னால் சொல்லவே முடியாது என்று முடிவுக்கு வந்தேன். அந்த கதையில் வரும் குழந்தை என்னுடைய சிபியாகவும் நான் மார்ச்சுவரிக்கு வெளியே உட்கார்ந்திருந்த இடமாகவும் எனக்கு தோன்றியது. அதனால், அந்த கதையை என்னால் சொல்ல முடியவில்லை. பிறகு அந்த கதையை வாசித்தேன்.

கதைகளுக்குள்ளாக வாழ்வது என்று ஒன்று இருக்கிறது. கதை சொல்வது கேளிக்கை ஊட்டுவது இல்லை. ஒரு முறை நான் ஜெயமோகனிடம் பேசும்போது நான் கதை சொல்வதை நிறுத்திவிடப் போகிறேன் என்று கூறினேன். அதற்கு அவர் ஏன் என்று கேட்டார். நான், நீங்கள் எல்லாம் நிறைய எழுதுகிறீர்கள். நான் வெறும் கதை சொல்லியாக மாறிவிடுவேனோ என்று தோன்றியது.

அதற்கு ஜெயமோகன், அப்படி இல்லை. நான் உங்களை கவனித்துக்கொண்டே வருகிறேன். ஒருபோதும் நீங்கள் யாருக்காகவும் யாருடைய கதைகளையும் சொல்வதே இல்லை. உங்களுடைய கதை தேர்வு உங்களிடம் இருக்கும் வரை இதை நீங்கள் நிறுத்தவே கூடாது என்று கூறினார். எனக்கு அது ஒரு சரியான விமர்சனமாக தெரிந்தது. அதற்குப் பிறகு நான் தொடர்ந்தேன்.

அடுத்து கதை கேட்டுவிட்டு போயிவிடுவார்கள் என்று சொல்கிறார்கள். அப்படி போகிறவர்கள் எனக்கு தெரிந்து ஒரு 20 சதவீதம் பேர்தான். அப்படிதான் சும்மா கதை கேட்டுவிட்டு போகட்டுமே. அதனால், என்ன? அவர்கள் அதுவரை அதுகூட கேட்காமல்தானே இருந்தார்கள். அவர்களுக்கு தி.ஜானகிராமன், லாசரா, வண்ணதாசன் பெயரும் தெரியாமல்தான் இருந்தார்கள் இல்லையா. அவர்களுக்கு இந்த பெயர்களாவது தெரியட்டுமே.

நேர்காணல்: பாலாஜி எல்லப்பன்

Tags: