ஜனநாயகத்தின் உயிரை உருவி…
நவீன பாசிசம் நாடாளுமன்றத்தின் உயிரை உருவி, ஜனநாயகத்தை உயிரற்ற வெறும் கூடாக மாற்றுகிறது என்று மார்க்சிய அறிஞர் பேரா. விஜய்பிரசாத் சமீபத்தில் ஒரு கட்டுரையில் கூறியிருந்தது எத்தனை சாலப் பொருத்தமானது என்பதை அமெரிக்க நாடாளுமன்றத்திற்குள் புகுந்து வெறிபிடித்த ட்ரம்ப் ஆதரவு கும்பல் அரங்கேற்றியிருக்கும் வன்முறை – கலவரம் நிரூபித்திருக்கிறது.
உலகிலேயே மிகப் பெரியதும், தலைசிறந்ததுமான ஜனநாயகம் எங்களுடையதுதான் என்று அமெரிக்க ஆட்சியாளர்கள் அவ்வப்போது மார்தட்டிக் கொள்வதுண்டு. அதற்கு சாவுமணி அடித்து விட்டார் டொனால்டு ட்ரம்ப். 2020 நவம்பர் 3ல் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் ஜோ பைடன் வெற்றி பெற்றிருக்கிறார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் அதை ஏற்க மறுக்கிறார் ட்ரம்ப். குடியரசுக் கட்சிக்குள் இருக்கும் தனது ஆதரவு கும்பலையும், நாட்டில் இயங்கி வரும் அதிதீவிர வலதுசாரி பிற்போக்கு கும்பல்களையும் அவர் தூண்டிவிட்டதன் விளைவாக, ஜனாதிபதி தேர்தலில் எண்ணப்பட்ட வாக்குகளை உறுதி செய்யும் பணிக்காக அமெரிக்க நாடாளுமன்றம் கூடியிருந்த வேளையில், பெரும் கலவரம் அரங்கேற்றப்பட்டிருக்கிறது. கேப்பிட்டல் (Capitol) என்ற பெயரில் அழைக்கப்படுகிற அமெரிக்க நாடாளுமன்ற கட்டிடத்திற்குள் புகுந்து டிரம்ப் ஆதரவு கும்பல்கள் நடத்தியுள்ள வெறியாட்டக் காட்சிகள் அமெரிக்க மக்களையும், உலகினையும் அதிர்ச்சியடையச் செய்துள்ளன.
இந்த வன்முறை கும்பல்களில் இடம் பெற்றிருந்த வெறியர்களில் இந்தியாவின் ஆர்.எஸ்.எஸ் அமைப்பைச் சேர்ந்தவர்களும் அதன் கொடியோடு பங்கேற்றிருந்த புகைப்படங்களும் வெளியாகியுள்ளன. ஜனநாயகத்தின் உயிரை உருவுவதில் அத்தனை ஆர்வம் ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு என்பது கேப்பிட்டல் கட்டிடத்திற்கு முன்பும் அம்பலமாகியிருக்கிறது. நாடாளுமன்ற கட்டிடத்திற்குள் நுழைந்த ட்ரம்ப்ஆதரவு பாசிச கும்பல்கள் ஏந்தியிருந்த போஸ்டர்களில் ஒன்று, “உண்மையான, ஆனால் கண்ணுக்குத் தெரியாத எதிரி கம்யூனிசமே” என்ற வாசகத்தை தாங்கியிருந்தது. அமெரிக்காவில் மட்டுமல்ல, உலகெங்கிலும் ஜனநாயகத்தின் பாதுகாவலனாக, வலதுசாரி பிற்போக்கு – பாசிச சக்திகளுக்குஎதிராக களத்தில் நின்று போராடிக் கொண்டிருப்பது கம்யூனிசமே என்பதற்கு இதை விட வேறு சான்று தேவையில்லை. அமெரிக்க நாடாளுமன்றத்தில் நடந்துள்ள சம்பவங்கள், அமெரிக்கா உள்பட, இந்தியா உள்படபாசிச வெறி கொண்ட சக்திகளை முளையிலேயே மக்கள் கிள்ளியெறியாவிட்டால் அதன் விளைவுகள் எப்படியிருக்கும் என்பதற்கு உதாரணமாகும். இந்த சம்பவங்கள் தொடர்பாக உலக நாடுகளின் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்திய பிரதமர் நரேந்திர மோடியும், ஜனநாயகமுறைப்படி அமெரிக்காவில் ஆட்சி மாற்றம் நடைபெறுவதற்கு அனுமதிக்கப்பட வேண்டுமென்று கூறியிருப்பது ஒரு பாசாங்கே ஆகும். ஏனெனில் இந்தியாவில் நாடாளுமன்ற ஜனநாயகத்தை அவரது தலைமையிலான பாஜக அரசுதான் மிகக்கொடூரமான முறையில் அழித்தொழித்து வருகிறது. ட்ரம்ப்பும் மோடியும் வேறு வேறு அல்லர். பாசிசத்தின் முகங்கள். ட்ரம்ப் வீழ்ந்துவிட்டார். மோடியும் வீழ்வார்.
-தீக்கதிர்
2021.01.08