இலங்கை மக்களுக்கும் COVID-19 Vaccine

மர்லின் மரிக்கார்

வீன யுகத்தில் முழு உலகிற்கும் பெரும் சவாலாக விளங்கிக் கொண்டிருக்கும் கொவிட்-19 தொற்று சீனாவின் வுஹான் நகரில் 2019 டிசம்பர் மாத இறுதிப் பகுதியில் தோற்றம் பெற்றது. ஓரூரில் இருந்து மற்றவருக்கு இலகுவில் தொற்றிப் பரவக் கூடிய இயல்பைக் கொண்டுள்ள இவ்வைரஸ் தொற்று தோற்றம் பெற்றது முதலான குறுகிய காலப் பகுதிக்குள் உலகம் முழுவதும் இவ்வைரஸ் பரவியதோடு, உலகின் இயல்பு நிலையிலும் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இத்தொற்றின் தாக்கத்தையும் அதன் பாதிப்புக்களையும் அது தோற்றம் பெற்ற குறுகிய காலப்பகுதிக்குள் உலகினால் உணர்ந்து புரிந்து கொள்ள முடிந்தது.

கொரோனா அச்சுறுத்தல் உலகில் தீவிரமடைந்ததையடுத்து உலக சுகாதார ஸ்தாபனம், கொவிட்19 தொற்றைத் தவிர்த்துக் கொள்ளவோ அல்லது கட்டுப்படுத்திக் கொள்ளவோ கூடிய தடுப்பு மருந்தை விரைவாகக் கண்டுபிடித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர முன்வருமாறு 2020 பெப்ரவரி மாதமளவில் உலகிற்கு அழைப்பு விடுத்தது.

உலகம் பலவிதமான தொற்று நோய்களைக் கண்டுள்ள போதிலும், கொவிட்19 தொற்று போன்று முன்பு எந்தவொரு தொற்று நோய்க்கும் இவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்டிருப்பதாகத் தெரியவில்லை. அவ்வாறு அழைப்பு விடுக்கப்படும் அளவுக்கு இத்தொற்றின் தாக்கமும் பாதிப்பும் அதிகமாக இருந்தது.

தற்போது தொற்று நோய்கள் கட்டுப்பாட்டுக்காகப் பல தடுப்பு மருந்துகள் உலகில் பயன்பாட்டில் உள்ளன. அத்தடுப்பு மருந்துகள் எதுவும் அத்தொற்று நோய்கள் தோற்றம் பெற்ற குறுகிய காலத்தில் கண்டுபிடிக்கப்பட்டு பரீட்சிக்கப்பட்டு புழக்கத்திற்கு வந்தவை அல்ல.பொதுவாக நோயொன்றைத் தவிர்த்துக் கொள்வதற்கும் கட்டுப்படுத்திக் கொள்வதற்கும் தடுப்பு மருந்தொன்றைக் கண்டுபிடித்து பரீட்சித்து மனித பயன்பாட்டுக்கு கொண்டு வர குறைந்தது 08 -, 10 வருடங்கள் செல்லும்.

ஆனால் இவ்வழக்கங்கள் அனைத்துக்கும் அப்பால் கொவிட்19 தவிர்ப்பு மற்றும் கட்டுப்பாட்டுக்கான தடுப்பு மருந்து மிகவும் குறுகிய காலத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. அதாவது அமெரிக்காவின் மொடர்னா நிறுவனம் கொவிட்19 தவிர்ப்புக்காகக் கண்டுபிடித்த தடுப்பு மருந்து 2020 மார்ச் மாதம் 16 ஆம் திகதி முதன் முதலாக மனிதரில் செலுத்தி பரீட்சிக்கப்பட ஆரம்பமானது. ஜெனிபர் ஹல்லர் என்ற 44 வயதுடைய பெண் தன்னார்வலர் இத்தடுப்பு மருந்தைத் தன் உடலில் பரீட்சிப்புக்காக முதன்முதலில் பெற்றுக் கொண்டார்.

உலக சுகாதார ஸ்தாபனத்தின் அழைப்பு மற்றும் கொவிட்19 தொற்றின் தாக்கம், பாதிப்புகள் காரணமாக உலகின் பல நாடுகளும் நிறுவனங்களும் இத்தொற்று தவிர்ப்புக்கான தடுப்பு மருந்தைக் கண்டுபிடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வரும் முயற்சியில் முனைப்புக் காட்டின. இதன் விளைவாக 2020 செப்டம்பர் மாதமாகும் போது கொவிட் 19 தவிர்ப்புக்காக கண்டுபிடிக்கப்பட்டு உருவாக்கப்பட்டு பல்வேறு மட்ட பரீட்சிப்பில் உலகில் 140 க்கும் மேற்பட்ட தடுப்பு மருந்துகள் காணப்பட்டன. அவற்றில் 20 தடுப்பு மருந்துகள் மனிதனுக்கு வழங்கி பரீட்சிக்கப்பட்டுக் கொண்டிருந்தன. குறிப்பாக அமெரிக்காவின் பைஸர் நிறுவனமும், ஜேர்மனியின் பயோ என் டெக் நிறுவனமும் இனைந்து கண்டுபிடித்து உருவாக்கியுள்ள தடுப்பு மருந்து, ரஷ்யா தயாரித்துள்ள ஸ்புட்னிக் தடுப்பு மருந்து, அமெரிக்காவின் மொடர்னா நிறுவனம் தயாரித்துள்ள தடுப்பு மருந்து, ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் அஸ்ட்ராசெனகா நிறுவனத்துடன் இணைந்து தயாரித்துள்ள தடுப்பு மருந்து ஆகிய நான்கும் சுட்டிக்காட்டத்தக்க வகையில் முன்னணியில் இருந்தன. அத்தோடு சீனா உற்பத்தி செய்துள்ள தடுப்பு மருந்தும், இந்தியாவில் தயாரிக்கப்பட்டுள்ள தடுப்பு மருந்துகளும் முன்னணி பரீட்சிப்பில் காணப்பட்டன.

இவ்வாறான சூழலில் பயோ என் டெக் நிறுவனம் தமது தடுப்பு மருந்து 90 வீதம் கொவிட்19 தொற்றிலிருந்து பாதுகாப்பு அளிக்கும் என்று கடந்த நம்பரின் முற்பகுதியில் அறிவித்தது. அதனைத் தொடர்ந்து ரஷ்யா தமது மருந்து 92 வீதம் பாதுகாப்பு அளிக்கும் என்றது. மொடர்னா நிறுவனம் தமது மருந்து 94.5 வீதம் பாதுகாப்பானது என்றது. இந்த நிலையில் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் தமது உற்பத்தி 70 வீதம் மக்களுக்கு பயனளிக்கும் என்றது.

முதலில் அங்கீகரித்த நாடு:

இவ்வாறான சூழலில் நவம்பர் பிற்பகுதியில் அவசரத் தேவையின் நிமித்தம் பைஸர்/பயோ என் டெக் தடுப்பு மருந்தை முன்னுரிமை அடிப்படையில் தம் நாட்டு பிரஜைகளுக்கு வழங்க பிரித்தானிய மருத்துவத் துறை அங்கீகாரம் வழங்கியது. இதன் ஊடாக கொவிட் 19 தொற்றைத் தவிர்ப்பதற்கான தடுப்பு மருந்தை மக்களுக்கு வழங்க அங்கீகரித்த முதல் நாடு என்ற பெருமையை பிரித்தானியா பெற்றுக் கொண்டது.

இந்த நிலையில் டிசம்பர் மாதம் 08 ஆம் திகதி 90 வயதுடைய மார்க்ரெட் கீனன் என்ற பெண்மணிக்கு முதன் முதலாக கொவிட் 19 தவிர்ப்புக்கான பைஸர் நிறுவனத் தடுப்பு மருந்து வழங்கப்பட்டது. அதன் ஊடாக இத்தடுப்பு மருந்தைப் பெற்றுக் கொண்ட முதலாவது நபர் என வரலாற்றில் அவர் இடம்பிடித்துக் கொண்டுள்ளார். அதனைத் தொடர்ந்து சுகாதாரத் துறையினர், பாதுகாப்புத் துறையினர் என்றபடி முன்னுரிமை அடிப்படையில் தடுப்பு மருந்து வழங்கும் நடவடிக்கைகள் ஆரம்பமாகின.

இவ்வாறான சூழலில் ஒரிருவருக்கு இத்தடுப்பு மருந்தினால் பக்கவிளைவுகள் ஏற்பட்டன. அதனைத் தொடர்ந்து மருந்து ஒவ்வாமை உள்ளவர்கள் இத்தடுப்பு மருந்தைப் பெற வேண்டாமென அறிவுறுத்தப்பட்டது. ஆனால் ஏனைய தடுப்பு மருந்துகளைப் பெற்றுக் கொள்ளும் போது வெளிப்படும் சாதாரண பக்கவிளைவுகளான சாதாரண காய்ச்சல், தடுப்பூசி போடப்பட்ட இடத்தில் வலி போன்றவாறான பக்கவிளைவுகள் வெளிப்படலாம் என்று மருத்துவர்கள் தெரிவித்திருக்கின்றனர்.

பிரித்தானியா கொவிட்19 தவிர்ப்புக்கான தடுப்பு மருந்தை வழங்கத் தொடங்கியதைத் தொடர்ந்து ஒமான், சவூதி போன்ற பல நாடுகளும் அத்தடுப்பு மருந்தைத் தம் பிரஜைகளுக்கு பெற்றுக் கொடுக்கும் நடவடிக்கைகளை முன்னெடுத்தன. இவ்வாறான சூழலில் இத்தொற்றினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்கா இத்தடுப்பு மருந்தை வழங்க அங்கீகாரமளித்ததோடு வழங்கும் நடவடிக்கையையும் ஆரம்பித்தது.

இதேவேளை ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் அஸ்ட்ரா செனகா நிறுவனத்துடன் இணைந்து தயாரித்துள்ள தடுப்பு மருந்தையும் அவசரத் தேவையின் நிமித்தம் வழங்க பிரித்தானியா அங்கீகாரம் அளித்ததோடு 2021.01.04 ஆம் திகதி 82 வயதுடைய பிரைன் பிங்கர் என்ற நபருக்கு வழங்கி அதனையும் தொடக்கி வைத்தது.

இவ்வாறு ஒவ்வொரு நாடும் தடுப்பு மருந்தை வழங்கும் நடவடிக்கையை முன்னெடுத்துக் கொண்டிருக்கும் சூழலில் இந்தியா 2021 ஜனவரி 16 ஆம் திகதி முதல் தம் பிரஜைகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் கொவிட்19 தடுப்பு மருந்தை வழங்கும் நடவடிக்கையை ஆரம்பித்தது. அதாவது இந்தியாவின் சீரம் நிலையத்தில் கொவிஷீல்ட் என்ற பெயரில் உற்பத்தி செய்யப்படும் ஒக்ஸ்போரட் பல்கலைக்கழகமும் அஸ்ட்ராசெனகா நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ள தடுப்பு மருந்தை வழங்கத் தொடங்கியது. இம்மருந்தை 2 -, 8 பாகை செல்சியஸ் வெப்ப நிலையில் பாதுகாப்பாக வைத்திருக்கவும் முடியும்.

16ஆம் திகதி முதல் தம் பிரஜைகளுக்கு தடுப்பு மருந்தை வழங்கத் தொடங்கிய இந்தியா 20ஆம் திகதி முதல் தம் அயல் நாடுகளுக்கும் கொவிட்19 தடுப்பு மருந்தை ஏற்றுமதி செய்யவும் ஆரம்பித்தது. அந்த வகையில் இந்தியாவிலிருந்து கொவிட்19 தடுப்பு மருந்தைப் பெற்றுக் கொண்ட முதல் நாடாக பூட்டான் பதிவானது. அதனைத் தொடர்ந்து பங்களாதேஷ், மியன்மார், நேபாளம், மாலைதீவு, பிரேசில் உள்ளிட்ட நாடுகளுக்கும் இந்தியாவிலிருந்து கொவிட்19 தடுப்பு மருந்து ஏற்றுமதி செய்யப்பட்டன.

இலங்கையில் கொவிட் 19 தடுப்பு மருந்து:

இவ்வாறான சூழலில் இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ கொவிட்19 தவிர்ப்புக்கான தடுப்பு மருந்தைப் பெற்றுக் கொள்வதில் விஷேட கவனம் செலுத்தி நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளார். இந்த நிலையில் ஜனாதிபதியின் ஏற்பாட்டில் கொவிட்19 தவிர்ப்புக்கான 6 இலட்சம் தடுப்பு மருந்துகள் முதற்கட்டமாக இலங்கைக்கு இலவசமாக கிடைக்கப் பெற்றுள்ளன. இந்தியா இத்தடுப்பு மருந்து தொகுதியை இலவசமாக வழங்கியுள்ளது. சுகாதாரத் துறையினர், பாதுகாப்பு தரப்பினர் என்றபடி முன்னுரிமை அடிப்படையில் அதனை வழங்கவும் சகல ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதேவேளை இலங்கை சனத்தொகையில் 20 வீதமானோருக்கு கொவிட்19 தவிர்ப்புக்கான தடுப்பு மருந்தை இலவசமாகப் பெற்றுத் தருவதாக உலக சுகாதார ஸ்தாபனம் ஏற்கனவே அறிவித்திருகின்றது. அத்தோடு சீனாவிலிருந்தும் ரஷ்யாவிலிருந்தும் இத்தடுப்பு மருந்துகளைப் பெற்றுக் கொள்வதற்கான பேச்சுவார்த்தைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இந்நாட்டில் கொவிட் 19 தொற்று தவிர்ப்பு மற்றும் கட்டுப்பாட்டுக்காக முன்னெடுக்கபட்டு வரும் பரந்துபட்ட வேலைத்திட்டங்களின் மைல்கல் நடவடிக்கையாக தடுப்பு மருந்து பெற்றுக் கொள்ளல் அமைந்திருக்கின்றது என்பதில் ஐயமில்லை.

புகை பிடித்தல் மது பாவனை கூடாது:

இதேவேளை கொவிட் 19 தவிர்ப்பு மருந்து தொடர்பில் மருத்துவ நிபுணர்கள் ஆலோசனைகளை முன்வைத்துள்ளனர். அந்த வகையில் கொவிட்19 தடுப்பு மருந்தைப் பெற்றுக் கொள்பவர்கள் இரண்டு மாதங்களுக்கு மது அருந்தக் கூடாது என்று ரஷ்ய மருத்துவத் துறையினர் தெரிவித்திருக்கின்றனர். தமிழ்நாட்டு சுகாதார அமைச்சர் டொக்டர் விஜேபாஸ்கர் இத்தடுப்பு மருந்தைப் பெறுபவர்கள் ஒரு மாதம் மது அருந்தக் கூடாது எனக் கூறியுள்ளார்.

இதேவேளை இலங்கையின் புகையிலை மற்றும் மதுசாரம் தொடர்பான தேசிய அதிகார சபையின் தலைவர் டொக்டர் கலாநிதி சமாதி ராஜபக்‌ஷ, ‘​கொவிட் 19 தடுப்பு மருந்து பெறுபவர்கள் மூன்று மாதங்களுக்காவது புகைபிடிப்பதையும் மது அருந்துவதையும் தவிர்த்துக் கொள்ள வேண்டும்’ என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அதேநேரம் கொவிட்19 தொற்று பரவும் அச்சுறுத்தலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் புகைபிடித்தலையும் மதுப்பாவனையையும் ஒரு வருடத்திற்காவது தடை செய்யுமாறு மதுபான விற்பனை நிலையங்களை ஒரு வருடத்திற்காகவது மூடி வைக்குமாறும் இவர் ஏற்கனவே ஆலோசனை வழங்கி இருந்தார்.

‘ஏனெனில் புகைபிடித்தலும் மதுப்பாவனையும் நோயெதிப்பு சக்தியைப் பலவீனப்படுத்தும் செயற்பாடுகளாகும். அதனால் கொவிட்19 தொற்று மற்றும் காய்ச்சலுக்கான தடுப்பு மருந்துகளின் செயற்றிறன் குறைவடைந்து விடும். குறிப்பாக புகைபிடித்தலானது நுரையீரலைப் பலவீனப்படுத்தும். புகைப்பிடித்தலும் மதுப்பாவனையும் நோயெதிர்ப்பு சக்தியின் செயற்றிறனைப் பலவீனப்படுத்துவதோடு, ஈரலின் செயற்பாட்டிலும் பலவீனங்கள் ஏற்பட வழிவகுக்கும். அத்தோடு மூளையின் ஞாபக சக்தி கலங்களின் செயற்றிறனிலும் பலவீனங்களை ஏற்படுத்தும். அதனால் புகைபிடிப்பவர்களுக்கும் மதுப்பாவனையாளர்களுக்கும் கொவிட் 19 தவிர்ப்புக்கான தடுப்பு மருந்தை வழங்குவதன் மூலம் எதிர்பார்க்கும் பலனை அடைய முடியாத நிலை ஏற்படலாம்’ என்று குறிப்பிட்டிருக்கின்றார் டொக்டர் சமாதி ராஜபக்ஷ.

இதேவேளை துருக்கியின் தலைநகரான அங்காரவிலுள்ள சுகாதார அறிவியல் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட பொது மருத்துவ நிபுணர் செவ்டட் ஏர்டொல் செய்தி நிறுவனமொன்றுக்கு அளித்துள்ள பேட்டியொன்றில், புகைப்பிடித்தலும் மதுப்பாவனையும் உடலாரோக்கியத்திற்கு தீங்கு விளைவிப்பதோடு அளிக்கப்படும் சிகிச்சைகளிலும் எதிர்மறையான தாக்கங்களை ஏற்படுத்தும். குறிப்பாக சிக்ரெட் புகை நோயெதிர்ப்பு சக்தியின் பதிலளிப்பில் மாற்றங்களை ஏற்படுத்தி விடும். இது 40 வருடங்களுக்கு முன்னர் சாதாரண முறைமைகளைப் பயன்படுத்தி தடுப்பூசி பெற்றுக் கொண்ட புகைபிடிப்பவர்கள் மத்தியில் நடாத்தப்பட்ட ஆய்வில் கண்டறியப்பட்ட உண்மையாகும். புகைப்பிடித்தல் நோயெதிர்ப்பு சக்தியின் செயற்றிறனைப் பலவீனப்படுத்தும் என்பதற்கு வலுவான சான்றுகள் உள்ளன’ எனச் சுட்டிக் காட்டியுள்ளார்.

இதேநேரம் அவுஸ்திரேலியாவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்றில் தொற்று நோய்களால் புகைபிடிக்காதவர்களை விடவும் புகைபிடிப்பவர்களே அதிகம் பாதிக்கப்படுவது கண்டறியப்பட்டுள்ளது.

இவ்வாறான நிலையில் கொவிட் 19 தவிர்ப்புக்கான தடுப்பு மருந்து உலக மக்கள் மத்தியில் புதிய நம்பிக்கையையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தி வருவது போன்று இலங்கை மக்கள் மத்தியிலும் ஏற்படுத்தியுள்ளது.

ஆகவே கொவிட் 19 தொற்று தவிர்ப்புக்காக தடுப்பு வழங்கப்படும் தற்போதைய சூழலில் புகைப்பிடித்தல் மற்றும் மதுப்பாவனையைத் தவிர்த்துக் கொள்வதிலும் அதிக கவனம் செலுத்த வேண்டும். அது இத்தடுப்பு மருந்து வழங்கும் திட்டத்தின் ஊடாக எதிர்பார்க்கப்படும் பிரதிபலனை அடைந்து கொள்ள அளிக்கப்படும் பெரும் பங்களிப்பாகவும் அமையும். அதேநேரம் தடுப்பு மருந்து வந்துவிட்டது என்பதற்காக முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியைப் பேணுதல், கைகழுவுதல் உள்ளிட்ட அடிப்படை சகாதார பழக்கவழக்கங்களைக் கைவிடவும் முடியாது. அவற்றையும் குறிப்பிட்ட காலத்திற்கு தொடர்ந்தும் பேண வேண்டும். இவற்றின் ஊடாகவே இத்தொற்றை விரைவாகக் கட்டுப்படுத்திக் கொள்ளக்கூடியதாக இருக்கும்.

Tags: