‘மல்லிகை’ ஆசிரியர் டொமினிக் ஜீவா காலமானார்.

ஈழத்து சஞ்சிகையான ‘மல்லிகை’ ஆசிரியர் டொமினிக் ஜீவா தனது 94வது வயதில் இன்று (2021.01.28) கொழும்பில் காலமானார்.
டொமினிக் ஜீவா, ஒரு விளிம்புநிலை மனிதர், படிக்காத மேதை, சிறந்த மனிதாபிமானி, முற்போக்கு சிந்தனையாளர், தலை சிறந்த தமிழ் மொழி ஊடகவியலாளர், சிறந்த எழுத்தாளர், திறனாய்வாளர், சிறுகதையாசிரியர், சமூக சீர்திருத்தவாதி, உன்னதமான மேடைப்பேச்சாளர், கடின உழைப்பாளி, நவீன தமிழ் இலக்கியத்தின் வற்றாத ஜீவன் என பன்முக ஆளுமை படைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இவரது 93வது பிறந்ததினத்தில், இவரைப்பற்றிய சுருக்கமான விளக்கங்களுடன் ‘தினகரன்’ பத்திரிகை 2020.01.29 அன்று வெளியிட்ட கட்டுரை நன்றியுடன் இங்கு மறுபிரசுரம் செய்யப்படுகின்றது.

டொமினிக் ஜீவா ஈழத்து இலக்கிய இதழியல் சாதனையாளர். 1966 இல் ‘மல்லிகை’ எனும் சஞ்சிகையை ஆரம்பித்து 2012 நவம்பர்-_டிசம்பர் மாதம் வரை தொடர்ந்து பதிப்பித்தவர். 46 வருடங்கள் 401 இதழ்களை வெளியிட்டு பெருமை சேர்த்தவர். கம்யூனிஸ்ட் கட் சியின் மிக உன்னதமான பிரமுகரானதுடன், இலங்கையின் முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் முன்னோடிகளில் ஒருவராகவும் திகழ்ந்தவர். இலங்கையில் சிறுகதைகளுக்கான சாகித்திய மண்டலப் பரிசினை முதன் முதலாகப் பெற்ற புகழுக்குரியவர். அடுத்தடுத்து இரு தடவைகள் அப்பரிசினைப் பெற்ற பெருமைக்குரிய படைப்பாளி.
அத்துடன் அமெரிக்கா, ஆசியா, ஐரோப்பா ஆகிய நாடுகள் பலவற்றுக்கு இலக்கியப் பயணம் செய்த சஞ்சிகையாளர். வாழ்நாள் முழுவதையும் இலக்கியத்திற்காகவே அர்ப்பணித்த இலக்கிய தியாகி. உன்னதமான சொற்பொழிவாளர் என்பதுடன் அசுரத்தனமான உழைப்பாளியுமாவார். இலங்கையின் எழுத்தாளர் பரம்பரையின் பிதாமகன். மொத்தத்தில் உலகறிந்த ‘மல்லிகை’ என்ற மாதாந்த சஞ்சிகையை தொடர்ந்து நடத்தி ஓய்வு பெற்ற அதிஉன்னத மானுடன்.
யாழ்ப்பாணத்தில் வாழ்ந்து வந்த திரு,திருமதி.ஜோசெப் -மரியம்மா தம்பதியரின் இரண்டாவது புதல்வராக 1927ம் ஆண்டு ஜுன் மாதம் 27ம் திகதி இவர் பிறந்தார். இவர் யாழ் சென். மேரிஸ் பாடசாலையில் தனது ஆரம்பக் கல்வியை மேற்கொண்டார். ஐந்தாம் வகுப்புடன் தனது கல்வியை நிறுத்திக் கொள்ள வேண்டிய துர்ப்பாக்கியசாலியானார். அவ்வாறு வெளியேறியவர்தான் உலக அரங்கில் அனைவராலும் அங்கீகரிக்கப்படும் ஒரு இலக்கிய கர்த்தாவாக உருவெடுத்தார். நேற்றுமுன்தினம் தனது 93வது அகவையில் காலடி எடுத்து வைத்தார் மல்லிகை ஜீவா.

அக்காலத்தில் யாழ் மண்ணில் நிலவி வந்த சாதிய கட்டமைப்புகளை மீறி எழ வேண்டிய தேவையை நன்குணர்ந்த ஜீவா அதற்கான வல்லமைகளை தன்னுள் வளர்த்துக் கொண்டிருந்தார். கார்த்திகேயன் மாஸ்டர், பொன்.கந்தையா, அ.வைத்திலிங்கம், பிரம்மஸ்ரீ இராமசாமி ஐயர், அரியரெத்தினம், எம்.ஸி.சுப்பிரமணியம் போன்ற கம்யூனிச சித்தாந்திகளுடன் சகவாசம் கொண்டு அரசியல் அறிவைப் பெற்றுக் கொண்டார்.
ஜீவா இயல்பாகவே எதனையும் தேடல் செய்து கொண்டிருப்பவர்.பிரபலமான எழுத்தாளர்களான மாக்கிம் கோக்கி, டால்ஸ்டாய், ஒஸ்ரவோத்தி, ஜூலியஸ் பியூஜிக், சரச் சந்திரா, விந்தன் ஆகியோரது நூல்களை வாசித்து தெளிவு பெற்றார். ஐந்தாம் வகுப்பு வரை படித்த ஒருவர் இத்தகைய அறிஞர்களது எழுத்துகளை வாசித்து விளங்கிக் கொண்டிருந்தமை வியப்புக்குரியதாகும். வாசிப்பதோடு மாத்திரம் நின்று விடாது தானும் எழுத முயன்றார்.
அந்த வேளையில் தமிழ்நாட்டிலிருந்து அரசியல் சிக்கல் காரணமாக யாழ்ப்பாணத்திற்கு வந்து தலைமறைவாக வாழ்ந்து வந்த தோழர் ப.ஜீவானந்தத்தை இவர் சந்தித்தார். இருவரும் இடதுசாரிகள் ஆவர். அவரது தொடர்பினால் இவர் தனது பெயரையும் டொமினிக் ஜீவா என மாற்றிக் கொண்டார்.
அந்த வேளையில் வெளிவந்து கொண்டிருந்த ‘சுதந்திரன்’ பத்திரிகை அவரது படைப்புக்களுக்கு இடம் கொடுத்தது. அதனால் 1948 இல் ‘எழுத்தாளன்’ என்ற புனைபெயரில் தனது முதலாவது சிறுகதையை எழுதி வெளியிட்டார்.
1956ம் ஆண்டு இவரது சிறுகதைக்கு சுதந்திரனால் பரிசு வழங்கப்பட்டது. அன்று முதல் இவர் நாடறிந்த எழுத்தாளரானார். அதைத் தொடர்ந்து ஜீவா இந்திய சஞ்சிகைகளுக்கும் தனது படைப்புகளை அனுப்ப ஆரம்பித்தார். அக்காலத்தில் தமிழ்நாட்டிலிருந்து வெளிவந்த விஜயபாஸ்கரனின் ‘சரஸ்வதி’ சஞ்சிகையும்,’தாமரை’ சஞ்சிகையும் இவரது படைப்புகளை விரும்பி பிரசுரித்து வந்தன. இவற்றில் வெளிவந்த சிறுகதைகள் பின்னர் தொகுப்புகளாவும் வெளியிடப்பட்டன. சரஸ்வதி சஞ்சிகை 1958இல் இவரது புகைப்படத்தினை அட்டையில் பிரசுரித்து இவரைக் கௌரவித்திருந்தது.

சரஸ்வதியில் வெளிவந்த சிறுகதைகளின் தொகுப்பான ‘தண்ணீரும் கண்ணீரும்’ 1960இல் நூல் வடிவில் வெளிவந்தது. தொடர்ந்து இவரது சிறந்த சிறுகதையான ‘பாதுகை’ 1963இல் வெளிவந்தது. அடுத்து ‘தாமரை’ சஞ்சிகையும் இவரது படத்தினை அட்டையில் பிரசுரித்து கௌரவித்தது. இக்கால கட்டத்தில் டொமினிக் ஜீவாவின் படைப்புகள் இலங்கைப் பத்திரிகைகளிலும் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருந்தன. பேராசிரியர் கைலாசபதியின் உதவியினால் இவரது படைப்புகள் தினகரன் பத்திரிகையிலும் வெளிவந்து கொண்டிருந்தன. பேராசிரியர் கா.சிவத்தம்பியும் இவருடன் தொடர்பில் இருந்தார்.
இந்தியாவில் இருந்து வெளிவந்து கொண்டிருந்த பிரபல சஞ்சிகைகளான கல்கி, தாமரை, கணையாழி, சமூக நிழல், மக்கள் செய்தி, ஜனசக்தி, இந்தியன் எக்ஸ்பிரஸ், சிகரம், தீபம், சகாப்தம், தினக்கதிர், இதயம் பேசுகின்றது , சாவி ஆகிய சஞ்சிகைகள் இவரை அடிக்கடி பேட்டி கண்டு பிரசுரித்து வந்ததன.
அது மாத்திரமன்றி இந்தியாவிலுள்ள பல்கலைக்கழகங்களும் இவரை தமது விழாக்களில் உரையாற்ற வரவழைத்தன. வானொலிகளும் அடிக்கடி இவரை செவ்வி கண்டு ஒலிபரப்பி வந்தன. இவருக்குக் கிடைத்த மதிப்பும், மரியாதையும் அக்காலத்தில் வேறெந்த எழுத்தாளர்களுக்கும் கிடைக்கவில்லை. யாழ்ப்பாணத்தில் பிறந்த இவரை எழுத்தாளனாக்கியது தமிழ்நாடு, கௌரவப்படுத்தியது தமிழ்நாடு. ஜெயகாந்தன் “எழுத்து ஒரு தொழிலோ, பிழைப்போ அல்ல. அது நமக்கு கிடைக்கும் யோகம். அந்த யோகம் நமது ஜீவிதம்.நண்பர் ஜீவாவுக்கு எனது வாழ்த்துக்கள்” என எழுதி பதிவு செய்திருந்தார். 1966 ஓகஸ்ட் 15ம் திகதி அவரது ‘மல்லிகை’ சஞ்சிகை முதன்முதலாக வெளிவந்தது.வெளியீட்டு விழாவில் நானும் கலந்து கொண்டமை இன்னும் என் நினைவில் நிற்கின்றது. இந்நிகழ்ச்சி மிக சிலருடனேயே நிகழ்ந்தது. ஜீவாவின் இலக்கிய தாகம் சிறப்புறத் தொடர்ந்தது.
முற்போக்கு எழுத்தாளர் அணியை உருவாக்குதல், சாதிய ஒடுக்கு முறைக்கு எதிராகக் குரல் கொடுத்தல், தமிழகத்தின் சஞ்சிகைகளின் தரத்துக்கு இதனை உயர்த்துதல் என்பதே அவரது இலட்சியமாயிற்று.

மல்லிகையை வெளியே எப்படி விற்பனை செய்வதென்பது கேள்விக்குறியாயிற்று. ஊர்களில் புத்தகக் கடைகள் எதுவுமில்லை. ஒரு சைக்கிளில் புறப்பட்டு ஊர் ஊராகச் செல்வார். அவமானங்கள் ஏற்பட்டாலும் அவற்றைத் தாங்கிக் கொள்வார். இவ்வாறு பல வருடங்கள் ஓடின. பின்பு பல எழுத்தாளர்கள் இவரது மலருக்கு எழுதத் தலைப்பட்டனர். பல்கலைக் கழக விரிவுரையாளர்கள், பேராசிரியர்கள் என பலரும் எழுதி வந்தார்கள். இதன் காரணமாக ஓர் எழுத்தாளர் பரம்பரையே உருவாகிற்று, தனி மனித நிறுவனமாகவே மல்லிகை இயங்கி வந்தது. யுத்த சூழலால் பாதிப்படைந்தார். சஞ்சிகைக்கு கடதாசி இல்லாமல் போயிற்று. அடிக்கடி மின்சார தடை ஏற்பட்டது. எல்லாவற்றையும் முறியடித்து மல்லிகை வெற்றிகரமாக தொடர்ந்து வெளிவந்து கொண்டிருந்தது.
செங்கை ஆழியான், செம்பியன் செல்வன், துரைமோகன், பிறேம்ஜி, பேராசிரியர்கள் சிவத்தம்பி, மற்றும் மௌனகுரு, எம்.சமீம், டானியல், சுமந்திரன், நுஃமான், தெணியான், நீர்வை பொன்னையன், சபா ஜெயராஜா, ரகுநாதன் போன்ற நூற்றுக்கணக்கான எழுத்தாளர்கள் அன்று எழுதி வந்தனர்.
ஜீவா சிங்கள எழுத்தாளர்களுடனும் தொடர்பைப் பேணி வந்தார். மல்லிகை பந்தலின் கீழ் வளர்ந்தவர்கள் எனக் கூறிக் கொள்ளும் எழுத்தாளர்கள் இன்னமும் ஊரின் பல பகுதிகளில் இருந்து எழுதிக் கொண்டிருக்கின்றார்கள்.

1997இல் கொழும்புக்கு இடம்பெயர்ந்து ஸ்ரீகதிரேசன் வீதியில் தங்கி சஞ்சிகையை வெளியிட்டார். போர் நெருக்கடிகளின் போதும் அவர் ஓய்ந்து விடவில்லை. மல்லிகை அந்நிய நாடுகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டது. இனம், மதம், மொழி ஆகிய வேறுபாடுகளற்ற ஒரு சமூக மறுமலற்சி சஞ்சிகையாக மிளிர்ந்தது. இலங்கையின் தமிழ் சஞ்சிகைகளின் தந்தை என ஜீவா பலராலும் அழைக்கப்பட்டார். எழுத்தில் மட்டுமல்ல வாழ்விலும் அவர் ஒரே இலட்சிய புருஷராகவே திகழ்ந்தவராவார். ஜீவா ஒரு வரலாற்று சின்னம் மாத்திரமல்ல, அவர் வரலாற்றின் பொருளும் கூட.
ஜீவா தனது வரலாற்றை எழுதி முடித்தவர். இதற்கு இவர் கொடுத்த தலைப்பு வித்தியாசமானது. ‘எழுதப்படாத கவிதைக்கு வரையப்படாத சித்திரம்’. எதற்காக இப்படி பெயர் வைத்தார் என்று இன்னமும் புரியவில்லை. வாழ்க்கையில் நொந்து வேதனைப்பட்ட ஒருவரின் முனகலாக இது இருக்கலாம். அவரது மனச்சுமை அவ்வளவும் இங்கு இறக்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த நூலை அவுஸ்திரேலியாவில் வாழ்ந்த அவரது நண்பர் கந்தையா குமாரசாமி மொழிபெயர்த்துள்ளார்.
இந்நூலில் அவரது எழுத்துக்களை வாசித்தால் கண்கள் பனிக்கும். புழுப் போல் சமூகத்தில் கிடந்து நெளிந்தவர் அவர். எவரது உதவியும் இன்றி நிமிர்ந்து நின்றவர். எனினும் இன்று உலகெங்குமுள்ள பலரின் இதழ்களினால் உச்சரிக்கப்படுபவர்.
சாகித்திய மண்டல பரிசு,மூதறிஞர் விருது,கௌரவ முதுமாணி பட்டம்(யாழ் பல்கலைக் ழகம் வழங்கிய இந்த கௌவரவத்தை சில காரணங்களால் அவர் ஏற்றுக் கொள்ளவில்லை), சாகித்திய ரத்னா,இலக்கிய விருது,அகேனம் விருது, இயல் விருது,வாழ் நாள் சாதனையாளர், ஈழத் தமிழ் எழுச்சியின் சின்னம்,தேச நேத்ரு என்பவை அவருக்கு வழங்கப்பட்ட கௌரவங்கள் ஆகும்.
ஜீவா இன்று முதுமையின் பிடியில் சிக்கி தளர்ந்து போயுள்ளார்.”மல்லிகையின் 50வது ஆண்டு மலரை வெளியிட்டு விட்டு ஓய்வு பெறுவேன்” என்று கூறிய ஜீவா அதற்கு முன்பே ஓய்வு பெற வேண்டி ஏற்பட்டு விட்டது.