பரமேஸ்வரன் அஜித்: கருந்துளை ஆய்வுக்கு இதுவே உகந்த நேரம்!

வானியற்பியலர் பரமேஸ்வரன் அஜித்

ரமேஸ்வரன் அஜித் (40), பெங்களூருவில் வசிக்கும் வானியற்பியலர் (Astrophysicist). ஈர்ப்பலைகள் (gravitational waves) தொடர்பாக ஆய்வுகள் செய்துவருபவர். ‘தி வேர்ல்டு அகாடமி ஆஃப் சயன்ஸ்-சைனீஸ் அகாடமி ஆஃப் சயன்ஸஸ்’ (The World Academy of Science – Chinese Academy of Science: TWAS – CAS) -ன் இளம் அறிவியலருக்கான விருதுக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். அவருடனான உரையாடலிலிருந்து…

வானியற்பியலுக்குள்ளும் கருந்துளைகள் தொடர்பான ஆய்வுகளுக்குள்ளும் எப்படி வந்தீர்கள்?

கேரளத்தின் கிராமப்புறத்தில் வளர்ந்தவன் நான். கல்லூரி போவதற்கு முன்பு ஒரு அறிவியலரைகூட நான் சந்தித்ததில்லை. எனினும், எங்கள் வீட்டில் கிட்டத்தட்ட எல்லோரும் ஆசிரியர்களாக இருந்தார்கள். நல்ல முறையில் செயல்பட்ட கிராமத்து நூலகம் ஒன்று இருந்தது. கேரள சாஸ்திர சாஹித்ய பரிஷத் போன்ற அறிவியல் அமைப்புகளும் துடிப்புடன் செயல்பட்டன. இவையெல்லாம் புத்தகக் கலாச்சாரம் ஒன்றை விதைத்திருக்கக் கூடும். பொதுக் கல்வி அமைப்பும் பெரிய அளவில் அழுத்தங்களை ஏற்படுத்தாததால் ஒருவர் தனக்கு விரும்பிய துறைகளைத் தேர்ந்தெடுத்துப் படிக்க முடியும். தொடர்ச்சியான தற்செயல்கள் மூலம் நான் என் துறைக்கு வந்து சேர்ந்தேன். எனக்கு இயற்பியல் பிடித்திருந்தது என்றாலும் வேறு சில ஆர்வங்களும் இருந்தன. கல்லூரி படிக்கும்போது, திரைப்பட ஒளிப்பதிவுக்குப் படிக்க வேண்டும் என்று கிட்டத்தட்ட என் மனதைத் தயார்ப்படுத்திவைத்திருந்தேன். அது நடக்கவில்லை. என் முதுகலைக்காக மகாத்மா காந்தி பல்கலைக்கழகத்தில் சேர்ந்தேன். அங்கே எனக்கு அருமையான ஆசிரியர்களும் சக மாணவர்களும் கிடைத்தார்கள். என்னுடைய பேராசிரியர் இந்துலேகா என் பெயரை ஈர்ப்பலைகள் ஆய்வில் இந்தியாவில் மிகவும் மதிக்கத் தகுந்தவரான பேராசிரியர் துரந்தரிடம் பரிந்துரை செய்தார். இப்படிப்பட்ட பரிச்சயத்துக்குப் பிறகு வேறொரு துறையைத் தேர்ந்தெடுப்பதைப் பற்றி நான் ஒருபோதும் யோசித்ததே இல்லை.

வானியற்பியலராக இருப்பதற்கு இதுதான் சிறந்த தருணமா?

ஆம். இதுதான் சிறந்த தருணம். கடந்த இருபதாண்டுகளில் நிகழ்த்தப்பட்ட வானியற்பியல் கண்டுபிடிப்புகள் இந்தப் பிரபஞ்சத்தைப் பற்றிய நம் புரிதலில் உள்ள பெரிய இடைவெளிகளை நிரப்பியுள்ளன. பிரபஞ்சத்தின் 70% ஆற்றலாக இருக்கும் ‘கரும் சக்தி’யின் (dark energy) இருப்பு அவற்றுள் ஒன்று. ‘கரும் பொருள்’ (dark matter) குறித்து வெகு காலமாக நிலவும் புதிர்கள் இன்னும் அப்படியே நீடிக்கின்றன. இவை இரண்டும் நவீன வானியற்பியல் விடை காண முயலும் அடிப்படைக் கேள்விகளில் இரண்டு எடுத்துக்காட்டுகளாகும். இனி கிடைக்கக்கூடிய ஏராளமான அவதானிப்புத் தரவுகள், அதிநுட்பக் கணினி மாதிரிகள் போன்றவை இந்தக் கேள்விகளுக்கு விடையளிக்கக் கூடிய சாத்தியத்தைக் கொண்டிருக்கின்றன. ஈர்ப்பலைகளைக் கண்டறிந்தது இந்த முயற்சிகளில் பெரும் பங்காற்றும்,

நோபல் பரிசு பெற்றவரும், ‘இன்டெர்ஸ்டெல்லார்’ (Interstellar) படத்தின் அறிவியல் ஆலோசகருமான கிப் தோர்ன் (Kip Thorne) உங்கள் முதுமுனைவர் பட்ட ஆய்வுக்கான ஆலோசகர்களில் ஒருவராக இருந்தார் இல்லையா?

கிப் தோர்னின் ஆய்வுக் குழுவானது அருமையான சூழமைவு கொண்டது, வெவ்வேறு ஆய்வாளார்கள், வெவ்வேறு நிபுணத்துவம், வெவ்வேறு வயதினரைக் கொண்டது அந்தக் குழு. அவருடைய குழுச் சந்திப்புகள் வேடிக்கையாகவும் அறிவுபூர்வமான எழுச்சி தருபவையாகவும் இருந்தன. “கிப் உருவாக்கிவரும் படம்” பற்றி எல்லா விதமான வதந்திகளின் உலவின, ஆனால் அவர் அதையெல்லாம் பற்றி வாயைத் திறந்ததே இல்லை.

An iconic telescope dome. The 200-inch Hale Telescope at Palomar Observatory in northern San Diego County, California.

2016-ல் ஈர்ப்பலைகள் கண்டறியப்பட்டது அந்த ஆண்டின் மிகப் பெரிய அறிவியல் நிகழ்வு. அதைக் கண்டறிந்த லைகோ நோக்குக்கூடத்தின் (Ligo: Laser Interferometer Gravitational-wave Observatory) ஆயிரத்துச் சொச்சம் அறிவியலர்களில் நீங்களும் ஒருவர் அல்லவா!

லைகோ அறிவியல் கூட்டுப்பணி 18 நாடுகளைச் சேர்ந்த, 100 நிறுவனங்களின் அறிவியலர்களை உள்ளடக்கியது. ஜெர்மனியின் ஈர்ப்புவிசை இயற்பியலுக்கான மாக்ஸ் ப்ளாங்க் நிறுவனத்தில் முனைவர் பட்ட மாணவனாக இருந்தபோது 2004-ல் இந்தக் கூட்டுப்பணியில் இணைந்துகொண்டேன். ஹானோவர் நகரில் உள்ள ஈர்ப்பலை உணர்மானி ஜிஈஓ600-ஐ இந்தக் குழு உருவாக்கி, இயக்கியது. இது சிறிய அளவிலானது (600 மீட்டர் நீளமே கொண்டது!) என்றாலும் மேம்பட்ட லைகோவுக்கான முக்கியமான தொழில்நுட்பங்கள் இங்கேதான் வளர்த்தெடுக்கப்பட்டன. என்னுடைய முனைவர் பட்ட ஆய்வேட்டின் முதல் பகுதியானது உண்மையான ஈர்ப்பலைகளுக்கும் அவற்றைப் போலவே இருக்கும் தற்காலிகமான வேறு பல ஓசைகளுக்கும் இடையிலான வேறுபாடுகளைக் கண்டறிவதைப் பற்றியதுதான். மெல்ல, லைகோ தரவுகளை அலசும் பணிக்கும் எதிர்பார்க்கப்பட்ட ஈர்ப்பலை சமிக்ஞைகளுக்கான மாதிரிகளை உருவாக்குவதற்கான கோட்பாட்டுப் பணிக்கும் என்னை நான் மடைமாற்றிக்கொண்டேன்.

2016-ல் இரண்டு கருந்துளைகள் மோதிக்கொள்வது கண்டறியப்பட்டது கருந்துளை உருவாக்கம், அவற்றின் வரலாறு, ஆரம்பக் கட்ட பிரபஞ்சம் ஆகியவற்றைப் பற்றிய நமது கருத்துகளை எப்படி மாற்றியிருக்கிறது?

இந்த அவதானிப்புகளெல்லாம் இரட்டைக் கருந்துளை மோதல்களுக்கான முதல் நேரடிச் சான்றைத் தந்திருக்கின்றன. இந்த அவதானிப்புகளெல்லாம் ‘கனமான’ கருந்துளைகளின் புதிய கூட்டத்தைக் கண்டறிந்திருக்கின்றன. கடந்த சில பத்தாண்டுகளாக ஊடுகதிர் அவதானிப்புகள் நம் பால்வெளி விண்மீன் குடும்பத்திலிருந்தே பல்வேறு ‘சிறுசிறு’ கருந்துளைகளைக் கண்டறிந்திருக்கின்றன. அவற்றுள் பலவும் சூரியனின் நிறையைப் போல பத்து மடங்குக்கும் குறைவான நிறையைக் கொண்டவை. எனினும், கண்டறியப்பட்ட பெரும்பாலான கருந்துளைகள் சூரியனைவிட 30-லிருந்து 100 மடங்கு நிறையைக் கொண்டவை. இயற்கையானது இப்படிப்பட்ட பெரிய கருந்துளைகளை எப்படி உருவாக்குகிறது என்பது பற்றி முற்றிலும் தெளிவாகத் தெரியவில்லை. அவையெல்லாம் மிகப் பெரிய நிறையைக் கொண்ட விண்மீன்களின் ‘இறப்பினால்’ (அதாவது ஈர்ப்புவிசையால் விளைந்த உட்சிதைவு) உருவாகியிருக்கலாம் என்று பெரும்பாலான வானியற்பியலர்கள் நம்புகிறார்கள். ஆனால், இவையெல்லாம், ‘தொல் கருந்துளைக’ளாக இருக்கலாம் என்று சில வானியற்பியலர்கள் வாதிடுகின்றனர். அதாவது தொடக்க கால பிரபஞ்சத்தின் அடர்த்தி மிகுந்த பகுதிகளின் உட்சிதைவால் உருவான கருந்துளைகளாக இருக்கலாம் என்பது அவர்களின் எண்ணம். அது மட்டும் உண்மையாக இருக்குமென்றால் அது மிக மிகச் சிறப்பு வாய்ந்த ஒரு கண்டுபிடிப்பாக இருக்கும்.

கருந்துளைகளின் மோதல்கள் மிகவும் அரிதானவையா?

இந்த மோதல் நிகழ்வுகளெல்லாம் மிகவும் அரிதானவை – ஒரு விண்மீன் குடும்பத்தில் 10 லட்சம் ஆண்டுகளுக்கு ஒரு முறைக்கும் குறைவான சராசரியிலேயே இது போன்ற மோதல்கள் நிகழ்கின்றன. ஆகவே, மனித இனத்தின் ஒட்டுமொத்த வரலாற்றில் நம்முடைய பால்வெளி குடும்பத்தில் அப்படிப்பட்ட நிகழ்வு நடந்திருப்பதற்குக் கிட்டத்தட்ட வாய்ப்பே இல்லை. அப்படியே நடந்தாலும் எடுத்துக்காட்டாக, ஒரு அணுவின் உட்கரு அளவுக்கு உங்கள் உணவு மேசையை அது அசைக்கக் கூடும். ஈர்ப்பலை நோக்குக்கூடங்களெல்லாம் மிக மிக நுட்பமான உணர்கருவிகளைக் கொண்டிருக்கின்றன. அவற்றால் நமது பிரபஞ்சத்தில் நூறு கோடிக் கணக்கான விண்மீன் குடும்பங்களில் நிகழும் அப்படிப்பட்ட கருந்துளை இணைவுகளைக் கண்டறிய முடியும்.

உண்மையான கருந்துளையின் படமும் 2019-ல் வெளியிடப்பட்டது. இவையெல்லாம் மக்கள் மத்தியில் கருந்துளைகள் பற்றிய ஆர்வத்தைக் குறிப்பிட்ட அளவில் கிளறிவிட்டிருக்கின்றன என்று கருதுகிறீர்களா?

ஆமாம்! கருந்துளைகளெல்லாம் எப்போதுமே பொது மக்களின் மனதை வசியப்படுத்திவந்திருக்கின்றன; லைகோ, நிகழ்வெல்லைத் தொலைநோக்கி (Event Horizon Telescope) ஆகியவற்றின் அசாதாரணமான கண்டுபிடிப்புகள் இன்னும் ஆர்வத்தைத் தூண்டிவிட்டிருக்கின்றன. சமீபத்திய நோபல் பரிசும் இந்த ஆர்வத்தைத் தூண்டிவிட்டிருக்கிறது. பொதுவெளியில் காணப்படும் ஆர்வம் ஒரு புறம் இருக்க, இதுதான் கருந்துளைகளைப் பற்றி ஆய்வு செய்ய அற்புதமான நேரம். கணிதரீதியிலான ஆர்வத்தை மட்டும் தக்கவைத்திருந்த பொருள்கள் அவை என்ற நிலையிலிருந்து, கருந்துளைகள் தற்போது நவீன வானியற்பியலின் முதன்மையான இடத்தைப் பிடித்திருக்கின்றன. ஒருவழியாக, கருந்துளைகள் பற்றிய ஆய்வில் கோட்பாட்டு அளவிலான கணக்கீடுகள், வானியல் அவதானிப்புகள், சூரக்கணினிகளால் (supercomputer) செய்யப்படும் நிகழ்போலிகள் (simulations) எல்லாம் ஒன்றுடன் ஒன்று இணக்கமாகக் கைகோத்துச் செல்கின்றன. இளம் மாணவர்கள் இந்த வாய்ப்புகளையெல்லாம் கூர்ந்து நோக்கிக்கொண்டிருக்கிறார்கள். இந்தியாவில் தற்போது வரவிருக்கும் லைகோ-இந்தியா திட்டம் இந்த ஆர்வத்தையெல்லாம் அதிகரித்திருக்கிறது. உண்மையில், இந்தியாவில் உள்ள லைகோ குழு எங்களோடு சேர்ந்து பணியாற்ற விரும்பும் எல்லா மாணவர்களையும் கையாள முடியாமல் திணறிக்கொண்டிருக்கிறது. எல்லாத் துறைகளும் பாதிக்கப்பட்டிருப்பதுபோல் எங்கள் துறையும் கரோனா பெருந்தொற்றால் பாதிப்படைந்துள்ளது.

இந்தியாவில் ஆய்வகம் அமைப்பதென்று எப்படி முடிவெடுத்தீர்கள்?

இந்தியாவுக்குத் திரும்புவது எனது தனிப்பட்ட விருப்பம். எனக்குப் பயணம் செய்வது பிடிக்கும் என்றாலும் வெளிநாட்டில் எங்கும் என்னால் ‘ஒட்ட’ முடியவில்லை. இந்தியாவில் பணிபுரிவதிலும் சில பாதகங்கள் இருக்கவே செய்கின்றன. ‘சிவப்பு நாடா’ அவற்றுள் ஒன்று. ஒட்டுமொத்த அதிகார மட்டமும் சராசரித்தனத்தை உருவாக்கவே வடிவமைக்கப்பட்டிருக்கிறது. எனினும் சில வாய்ப்புகளும் இருக்கவே செய்கின்றன. நாம் வளர்ந்துவரும் சமூகத்தினர் என்பதால், சரியான வகையிலான உறுதுணை கிடைத்தால் நம்மாலும் மாற்றத்தின் பகுதியாக ஆக முடியும்.

மூலம்: This is a wonderful time to work on black holes: astrophysicist Parameswaran Ajith

சுருக்கமாகத் தமிழில்: ஆசை

Tags: