திருநர் சமூகம் முன்னேறுவதற்குக் கல்விதான் கருவி! – தனுஜா பேட்டி

லங்கையிலுள்ள ஒரு சிறிய கிராமத்தில் 1991-ல் பிறந்த தனுஜன் என்ற ஆண் குழந்தை, ஜெர்மனியின் கோலோன் (Cologne) நகரில் 2012-ல் பெண்ணாக மாறுகிறது. தனுஜன் தனுஜாவாகப் பெயர் மாற்றம் அடைகிறது. தன்னைப் பெண்ணாக உணரத் தொடங்கியது முதல் தன் ஆணுடலைப் பெண்ணுடலாக மாற்றியது வரையிலான அவரது பயணம், அதன் பிறகான அவரது போராட்டங்களின் பதிவாக வெளியாகியிருக்கிறது ‘தனுஜா’ எனும் சுயசரிதை நூல். பாலியல் துஷ்பிரயோகங்கள், காதல் தோல்விகள், பாலியல் தொழில் எனக் குறுகிய காலத்தில் பெரிய வாழ்க்கையை வாழ்ந்த தனுஜா, தனது முந்தைய வாழ்க்கைச் சூழலிலிருந்து விடுபட்டு, தற்போது ஜெர்மனியில் உள்ள கல்லூரி ஒன்றில் பல் பராமரிப்பு மாணவியாக இருந்துவருகிறார்.

உங்கள் வாழ்க்கையைப் புத்தகமாக எழுத வேண்டும் என்ற எண்ணம் எப்போது வந்தது?

என்னைச் சுற்றி இருப்பவர்களுக்கு என்னைப் போன்றவர்களின் வாழ்க்கை பற்றி, எங்கள் உணர்வுகள் பற்றி, நாங்கள் அனுபவிக்கும் கஷ்டங்கள் பற்றி எதுவும் தெரியவில்லை. திரைப்படங்கள் எங்களுடைய வாழ்க்கைக்குச் சம்பந்தமில்லாததைக் காட்டுகின்றன. இந்தச் சூழலில் என்னுடைய வாழ்க்கையைப் பற்றி வெளியே பேச வேண்டும், மக்களுக்குத் தெரிவிக்க வேண்டும் என்று தோன்றியது.

உங்கள் எழுத்தில் பகடி இருக்கிறது. இந்தப் புத்தகத்தை ஷோபாசக்தி செம்மையாக்கம் செய்திருப்பதால் அந்தத் பகடித்தன்மை வந்துவிட்டதா?

இல்லை. அது திருநர் சமூகத்திடம் உள்ள பகடி. எங்கள் நெருக்கடிகள் எல்லாவற்றையும் நாங்கள் எங்களுக்குள் நகைச்சுவையாகத்தான் பகிர்ந்துகொள்வோம். வாழ்க்கையில் நிறைய வலிகளை அனுபவித்துவிட்டதால், துன்பங்கள் எங்கள் வாழ்வின் இயல்பாகவே மாறிவிட்டதால், அதை நாங்கள் சிரித்துக்கொண்டு சொல்வதன் வழியேதான் அந்தத் துயர நிலையிலிருந்து எங்களால் விடுபட முடிகிறது. நகைச்சுவையும் பகடியும் எங்களுக்கு நிவாரணியாக இருக்கின்றன.

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் இடையிலான உறவு எப்படி இருக்கிறது?

நான் பெண்ணாக மாறும் வரை எனது குடும்பம் என்னை வெறுத்தது. என் அக்கா மட்டும் உறுதுணையாக இருந்தார். நான் பெண்ணாக மாறிய பிறகு, என் அம்மாவிடம் மன மாற்றம் ஏற்பட்டது. நான் பாலின மாற்று அறுவைச் சிகிச்சை செய்தபோது அம்மா என் கூட இருந்தார். ஆனால், ஒட்டுதலும் விலகுதலுமாகத்தான் குடும்பத்துடனான உறவு போய்க்கொண்டிருக்கிறது. தற்போது தனியாகவே வசித்துவருகிறேன். ‘தனுஜா’ புத்தகம் வெளியான பிறகு இன்னும் விரிசல் அதிகரித்திருக்கிறது. என் வாழ்வில் நடந்தவற்றை இவ்வளவு வெளிப்படையாக எழுதுவேன் என்று அவர்கள் எதிர்பார்த்திருக்கவில்லை.

பொதுவாக, திருநர்கள் பொருளாதாரரீதியாகப் பிற்படுத்தப்பட்ட வகுப்பிலிருந்தே வருகின்றனர், ஏன்?

ஆமாம். மேல்தட்டிலிருந்து திருநர்கள் அவ்வளவாக உருவாவதில்லை. காரணம், சொத்துப் பிரச்சினை. குடும்பத்தின் சமூக, பொருளாதார அந்தஸ்து காரணமாகப் பலர் தங்கள் உணர்வுகளைப் புதைத்துக்கொண்டு வாழ்கிறார்கள். எல்லாவற்றையும் இழந்துவிட்டு நடுத்தெருவுக்கு வருவதற்குப் பதிலாகப் பாதுகாப்பான இடத்தில் இருக்கவே பலர் விரும்புகின்றனர்.

இந்தியா, இலங்கை போன்ற நாடுகள் திருநர்களை எதிர்கொள்வதற்கும், ஜெர்மனி போன்ற ஐரோப்பிய நாடுகள் திருநர்களை எதிர்கொள்வதற்குமான வித்தியாசம் என்ன?

நான் ஜெர்மனி வரும் வரை எனக்கு மேற்கத்திய நாடுகள் மேல் ஒரு மயக்கம் இருந்தது. இங்கு சுதந்திரமாக வாழலாம் என்று. ஆனால், அப்படி இல்லை. நான் படித்துக்கொண்டிருக்கும் கல்லூரியில் என்னைப் பெண் என்றே குறிப்பிட்டிருக்கிறேன். நான் திருநர் என்பதை மறைத்தே வாழ்கிறேன். நடைமுறையில் அவர்கள் திருநர் குறித்துக் கரிசனமாகவே பேசுவார்கள். ஆனால், அவர்கள் பக்கத்தில், அவர்களில் ஒருவர் திருநராக இருப்பதை அவர்கள் மோசமாகவே எதிர்கொள்வார்கள். அந்த வகையில் இந்தியா, இலங்கைக்கும் மேற்கத்திய நாடுகளுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை.

ஜெர்மானிய அரசு திருநர்களை எப்படி நடத்துகிறது?

ஜெர்மன் சட்டங்களைப் பொறுத்தவரை திருநர் என்றால் அவர் ஒரு பெண். பெண்ணுக்கான சலுகைகள்தான் வழங்கப்படுமே தவிர, திருநர்கள் வரலாற்றுரீதியாகப் பின்தங்கியிருப்பவர்கள் என்று சிறப்புச் சலுகை எதுவும் கிடையாது. அதே சமயம், ஜெர்மானியச் சட்டம் திருநர்களுக்குப் பாதுகாப்பு வழங்குகிறது; அவர்கள் மீதான ஒடுக்குமுறையைத் தடுக்கிறது.

நாடு திரும்பும் எண்ணம் இருக்கிறதா?

நிச்சயம் இருக்கிறது. ஆனால், இலங்கை இல்லை; இந்தியா. இந்தியாவில் ஒரு திருநருக்குப் பிரச்சினை என்றால், ஐம்பது திருநர்கள் கூடிவிடுவார்கள். இங்கு நாங்கள் தனித்து விடப்பட்டிருக்கிறோம்.

எந்தப் புள்ளியில் பாலியல் தொழிலிலிருந்து விடுபட்டுக் கல்வியை நோக்கிச் செல்லத் தோன்றியது?

சமூகம் ஏற்றுக்கொள்ள மறுக்கும் எங்கள் சமூகத்துக்குப் பாலியல் தொழில்தான் வருவாய்க்கான வழியாக இருக்கிறது. நானும் மது, பாலியல் தொழில், தற்கொலை எண்ணங்கள் என வாழ்க்கையைக் கழித்தேன். இப்படியே என் வாழ்வு முடிந்துவிடக் கூடாது என்று ஏங்கிக்கொண்டிருந்தேன். இந்தத் தருணத்தில்தான் சுவிஸ் பெண்ணான செலினா என்ற பல்கலைக்கழக ஆசிரியையின் அறிமுகம் கிடைத்தது. நான் மீண்டும் படிப்பதைத் தொடர வேண்டும் என்று அவர் என்னுள் தீயைப் பற்ற வைத்தார். இளமையில் பாலியல் தொழிலில் ஈடுபட்டு, முதுமையில் அநாதையாகத் தெருவில் கிடப்பதா அல்லது திருநர் சமூகத்தின் முன்னேற்றத்துக்காக உழைப்பதா? நான் மீண்டும் கல்வி கற்க முடிவெடுத்தேன்.

இப்போது உங்கள் வாழ்க்கை எப்படிப் போகிறது?

மீண்டும் படிப்பைக் கையில் எடுத்தபோது, அது பொது உலகத்தோடு பழகும் வாய்ப்பை ஏற்படுத்தித் தந்தது. உலகத்தின் மேல் நம்பிக்கை வந்திருக்கிறது. வாழ்தல் மீது பிடிப்பு ஏற்பட்டிருக்கிறது. இந்த இனிமையையும் அமைதியையும்தான் நான் தேடினேன்.

தங்களின் மாற்றுப் பாலியல் உணர்வை, சமூகத்துக்குப் பயந்து அடக்கிக்கொண்டு வாழும் நபர்களுக்கு நீங்கள் சொல்ல விரும்பும் செய்தி என்ன?

ஒரு பெண்ணாகத் தன்னை உணரும் ஆண், ஒரு ஆணாகத் தன்னை உணரும் பெண் தங்கள் உணர்வை வெளிப்படுத்த முடியாமல் அடக்கி வைப்பது மிகுந்த வேதனையானது. அவர்களுக்கு என்னுடைய செய்தி என்னவென்றால், அவசரப்பட்டுப் பாலினம் மாறிவிடாதீர்கள் என்பதுதான். ஏனென்றால், அவசரப்பட்டு நம் பாலினத்தை மாற்றிக்கொள்ளும்போது, இந்தச் சமூகம் விரட்டியடித்துவிடும். சமூக அந்தஸ்தை நாம் நம் கல்வியின் மூலமாகவோ, வேலையின் மூலமாகவோதான் பெற முடியும். அந்தச் சமூக அந்தஸ்தில் நின்றுகொண்டுதான் நாம் நமது அடையாளத்தை மாற்றிக்கொள்ள வேண்டும். நாம் நமக்கான சமூக அங்கீகாரத்தை உருவாக்குவதன் வழியே மட்டுமே நமக்குப் பின்வரும் திருநர் தலைமுறைக்கு நல்ல சூழலை ஏற்படுத்தித் தர முடியும்.

பேட்டி: முகம்மது ரியாஸ்

தனுஜா – புத்தக விமர்சனம்

பொதுவாக ஒடுக்கப்பட்ட, உரிமைகள் மறுக்கப்பட்ட மக்களின் வரலாறு எழுதப்படாமலே போயிருக்கும். அல்லது வேறு யாரோ ஒருவரால் எழுதப்பட்டிருக்கும். மற்றவர்கள் எழுதும்போது தங்களின் புரிதல் அடிப்படையிலேயே அந்தக் கதைகளை எழுதி விடுகின்றனர். இறுதியில் உண்மை வரலாற்றை விட பரிதாபத்தை இறைஞ்சி நிற்கும் ஒரு ஆவணமே வாசிப்பவர்களுக்கு கிடைக்கும்.  அதே நிலமை தான் திருநர்களின் வாழ்க்கை வரலாற்றுக்கும் இருந்து வந்திருக்கிறது. 2007-ல் லிவிங் ஸ்மைல் வித்யா எழுதிய ‘நான் வித்யா’ மற்றும் 2011-ல் ரேவதி எழுதிய ‘வெள்ளைமொழி’ ஆகிய இரண்டு தன்வரலாற்று புத்தகங்களும் அந்த வழமையை உடைத்தன. அதன்பிறகு பத்து வருடங்கள் கழித்து தனுஜாவின் தன் வரலாற்றுப் புத்தகம் வெளிவந்திருக்கிறது. 

தொண்ணூறுகளில் இலங்கையில் பிறந்தது முதல் தனது இருபத்தொன்பது வயது வரைக்குமான வாழ்க்கையை தன் வரலாறாக தனுஜா எழுதி இருக்கிறார். எழுத்தாளர், நடிகர் ஷோபாசக்தி பதிப்பாசிரியராக இருக்கும் இந்த புத்தகத்தை கருப்புப் பிரதிகள் பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது. 

நிறைய திருநங்கைகளின் வாழ்க்கையில் நடந்த சோகமான, சந்தோஷமான சம்பவங்களை நேரடியாகவும், நண்பர்கள் மூலமாகவும், வாசித்தும், பார்த்தும் அறிந்திருக்கிறேன். தங்களது பாலினத்தை உணர்வது, பாலினம் காரணமாக வீடுகளில் வன்முறைக்குள்ளாவது, பள்ளி கல்லூரியில் கிண்டலுக்கு ஆளாவது, வேலை கிடைக்காத சூழ்நிலைக்கு ஆளாவது, பாலியல் தொழிலுக்கு தள்ளப்படுவது, அறுவை சிகிச்சைகள் செய்வதில் சிரமங்கள் அனுபவிப்பது,  காதலர்களால் ஏமாற்றப்படுவது என சில விஷயங்கள் எல்லாருக்கும் பொதுவானதாக நடந்திருக்கும். தனுஜாவின் புத்தகத்தில் சொல்லி இருப்பதைப் போல மற்றவர்களால் கற்பனை செய்து கூடப் பார்க்க முடியாத சம்பவங்களும் நடந்திருக்கும். அவை அனைத்தையுமே தனக்கு வருகின்ற சரளமான மொழியில் தனுஜா எழுதி இருக்கிறார்.

இலங்கையில் பிறந்து தமிழ்நாட்டுக்கு வந்து பின்னர் ஜெர்மனிக்கு சென்று என தனது இப்போது வரைக்குமான வாழ்க்கையை இந்த புத்தகத்தில் ஒன்றன் பின் ஒன்றாக தனுஜா சொல்லிக் கொண்டே செல்கிறார். பால்புதுமையினர் சமுதாயம் பற்றியோ குறிப்பாக திருநங்கைகள் பற்றிய எழுத்துக்களில் “நாங்களும் மனிதர்கள் தானே” “எங்களை ஏன் ஏற்றுக் கொள்ள மாட்டேன் என்கிறீர்கள்?” “நாங்களும் உங்களைப் போல கவுரமாக வாழமுடியாதா?” என்கிற தொனி கொஞ்ச காலத்துக்கு முன்பு வரைக்கும் இருந்ததுண்டு. அதே தொனி தான் இந்த புத்தகத்திலும் இருக்கும் என்று பெரும்பான்மை மக்கள் இந்த புத்தகத்தை வாசித்தால் ஏமாற்றமே மிஞ்சும். தனக்கு நடந்த சம்பவங்களைச் சொல்லும் தனுஜா, தான் செய்த, அதே சமயம் பொதுச் சமூகத்தால் தவறென புரிந்துகொள்ள கூடிய வாய்ப்பிருக்கிற விஷயங்களையும் எந்த ஒளிவுமறைவுமின்றிச் சொல்லுகிறார். தன்னை நியாயப்படுத்த முயலவில்லை. தன் கதையை வெளிப்படையாகச் சொல்லுவதன் மூலமாக பொதுச்சமூகம் தன்னைக் குறித்து என்ன நினைத்தாலும் கவலையில்லை என்கிற அவரது கதை சொல்லலே இந்த புத்தகத்தைத் தனித்துக் காட்டுகிறது.

அது மட்டுமல்லாது இதுவரை பெருமளவில் பேசப்படாத பல விஷயங்களையும் இந்த தன் வரலாற்றுப் புத்தகம் பேசுகிறது. பாலீர்ப்பைப் பற்றியோ பாலினத்தைப் பற்றியோ எந்த உரையாடலும் இல்லாத சமூகத்தில் வளரும் ஒவ்வொரு திருநரும், ஒருபாலீர்ப்பு கொண்டவர்களும் பாலீர்ப்பு/பாலினம் குறித்த குழப்பமான ஒரு காலகட்டத்தைக் கடந்து வந்திருப்பர். தங்களுக்கு சிறுவயதில்  நிகழ்ந்த பாலியல் வன்முறைகள் காரணமாக நாம் இப்படி ஆகிவிட்டோம் என்ற குற்ற உணர்ச்சிக்கு ஆளாகி இருப்பர். தனது தொடர்ந்த தேடல், நண்பர்களின் உதவி காரணமாக தனது பாலினத்தைப் புரிந்துகொண்டது பற்றி பேசுவதோடு இவை அனைத்தையும் தனுஜா பேசுகிறார். அவர்களோடு முப்பத்தைந்து-நாற்பது வயதைக் கடந்து தங்கள் பாலினத்தை உணர்பவர்கள் பற்றியும், திருநங்கைகளின் பாலீர்ப்பு மற்றும் ஒருபாலீர்ப்பு கொண்ட திருநங்கைகள் பற்றிய தகவல்களையும் தனுஜா தருகிறார்.

சொந்த வீடுகளில் இருந்து துரத்தப்படும் திருநங்கைகள் ஏதாவது ஒரு ஜமாத்தில் சேர்ந்து கொள்ள வேண்டிய சூழ்நிலை தான் தெற்காசியச் சூழலில் இருக்கிறது. அதே அமைப்பைத் தான் உலகத்தில் எங்கு வாழ்ந்தாலும் சிங்கப்பூர், மலேசிய, இலங்கை திருநங்கைகள் பின்பற்றுவதாக தனுஜா இப்புத்தகத்தில் சொல்கிறார். குடும்பத்திலிருந்து வெளியேற்றப்பட்ட திருநங்கைகளின் ஒரே ஆதரவாக ஜமாத் தான் இருக்கிறது என்று சொல்லப்பட்டாலும் ஜமாத் மீது பல திருநங்கைகளுக்கு குறைகள் இருக்கின்றன. ஜமாத் முறையை ஆதரிக்காத சிலரைத் தவிர மற்ற யாரும் விமர்சனங்களை முன்வைப்பதில்லை. ஆனால் தனுஜா தன் வாழ்க்கை வரலாற்றில் ஜமாத் குடும்பங்கள் செய்யும் உழைப்புச்சுரண்டல்களைப் பேசுவதோடு பாலியல் தொழில் செய்ய நிர்பந்திப்பதைப் பற்றியும் பேசுகிறார். தங்கள் பேச்சைக் கேட்காதவர்களின் பாலினமே கேள்விக்குள்ளாக்கப்படுவதை பற்றியும் எழுதி இருக்கிறார்.

தன்னுடைய வாழ்க்கை வரலாற்று புத்தகம் என்றாலும் பொதுவான சம்பவங்கள் குறித்து தனுஜா தனக்கிருக்கும் கருத்துக்களை முடியும் இடங்கள் எல்லாம் எடுத்து வைக்கிறார். கூவாகம் திருவிழாவுக்கு செல்லும்போது நடந்த அனுபவங்களைப் பற்றி பேசும்போது அங்கு நடக்கும் அழகி போட்டிகள் பற்றி கேள்வி எழுப்புகிறார். நன்றாக உடையணிந்து கொள்ளுவதில் இருக்கும் ஆர்வம், தாலி, திருமணம் போன்றவற்றின் மீதான ஈர்ப்பு, காதலர்கள், அவர்களுடன் இருந்த உறவு, நம்பிக்கைகள் சிதைந்து போன தருணங்கள் என எல்லாவற்றையும்  குழப்பமே இல்லாமல் சொல்லி இருக்கிறார். 

பால்புதுமையினர் பற்றிய ஆங்கிலப் புத்தகங்கள் படிக்கும்போதோ அல்லது தொடர்கள் பார்க்கும்போதோ அதில் செக்ஸ் சம்மந்தப்பட்ட காட்சிகள் அதிகமாக இருக்கும். ஆனால் இந்தியச்சூழலில் அவை சென்சார் செய்யப்பட்டே தான் எழுதவோ காட்சிப்படுத்தவோ செய்யப்பட்டிருக்கும். ஆனால் தனுஜாவின் புத்தகத்தில் நிறைய பாலியல் நிகழ்வுகள் இருக்கின்றன. அவை வெளிப்படையாகவும் எழுதப்பட்டிருக்கின்றன. அதையும் ஒரு முக்கியமான விஷயமாகப் பார்க்க முடிகிறது.

பாலினம் அல்லது பாலீர்ப்பு காரணமாக பொதுச் சமூகத்தின் பாலியல் வன்முறைக்கும், வன்புணர்வுகளுக்கும் ஆளாகும் வாய்ப்பு பால்புதுமையினருக்கு அதிகம். அதைப்பற்றியும், குடும்பப்பாசம், பண்பாடு என்று சொல்லிக்கொண்டே குடும்பங்களுக்குள் நடக்கும் பாலியல் வன்முறைகள் பற்றியும் இப்புத்தகத்தில் வாசிக்க முடிகிறது.

அறுபதுகளில் கி.ராஜநாராயணன் எழுதிய ‘கோமதி’, தொண்ணூறுகளில் சு. சமுத்திரம் எழுதிய ‘வாடாமல்லி’ போன்ற எதிர்பாலீர்ப்பு கொண்ட ஆண்கள் எழுதிய புத்தகங்கள் மட்டுமே இருந்த இடத்தில் லிவிங் ஸ்மைல் வித்யாவும், ரேவதியும் தங்கள் கதைகளை எழுதினர். இப்போது சூழல் கொஞ்சம் மாறிவிட்டது. சட்டங்களும் மாறி இருக்கின்றன. நிறைய உரையாடல்கள் எல்லா தரப்பிலிருந்தும் வரத் தொடங்கி இருக்கின்றன. இந்த சமயத்தில் திருநங்கைகளின் தன்வரலாற்றுக் கதை சொல்லும் பாணியை அடுத்த கட்டத்துக்கு தனுஜா நகர்த்தி இருக்கிறார்.

பால்புதுமையினர் தங்கள் கதைகளை எழுதும்போது பொதுச் சமூகத்துக்கு அவர்கள் மேல் புரிதல் ஏற்படும் என்பதில் எல்லாம் எனக்கு நம்பிக்கையில்லை. ஆனால் அந்த கதைகள் பல பால்புதுமையினருக்கு தைரியத்தைக் கொடுக்கும். தங்களது வரலாறும் ஆவணப்படுத்தத் தகுதியானவையே என்கிற தன்னம்பிக்கையையும் கொடுக்கும். மேலும் பல புத்தகங்கள் உருவாகக் காரணமாக இருக்கும். அந்த நம்பிக்கையையும் தைரியத்தையும் தனுஜாவின் தன்வரலாற்றுப் புத்தகம் புத்தகம் நிச்சயமாகக் கொடுக்கிறது.

கிரீஷ்

Tags: