நியாயமானபோராட்டத்தை தடுக்காதீர்கள்!
யாழ்ப்பாணம் – நல்லூரில் உணவு தவிர்ப்பு போராட்டத்தை முன்னெடுப்பவர்களுக்கும் யாழ்ப்பாண மாநகர சபை உறுப்பினருக்கும் இடையில் இன்று முறுகல் நிலை ஏற்பட்டது.
நல்லூரில் யாழ்ப்பாண மாநகர சபைக்கு சொந்தமான காணியில் காவல்துறையினரின் பாதுகாப்போடு, அனுமதி பெறாது கொட்டகை அமைத்து நேற்று காலை முதல் உணவு தவிர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
தமிழீழ விடுதலைப் புலிகளினாலும் ஏனைய தமிழ் ஆயுத குழுக்களாலும் கடத்தப்பட்டு, கொல்லப்பட்டோருக்கு நீதி வேண்டும் என வலியுறுத்தி யாழ்ப்பாண சிவில் சமூக அமைப்பு எனும் குழுவினரால் குறித்த அடையாள உணவு தவிர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இந்த நிலையில் இன்றைய தினம் குறித்த இடத்தில் அனுமதி பெறப்படாது கொட்டகை அமைக்கப்பட்டமை தவறு எனவும், உடனடியாக இன்று இரவிற்குள் அதனை அகற்றுமாறும் தெரிவித்து யாழ்ப்பாண மாநகர முதல்வரின் எழுத்து மூலமான கடிதம் ஒன்றினை வழங்குவதற்கு மாநகர சபை உறுப்பினர் வ.பார்த்தீபன் மற்றும் உத்தியோகத்தர்கள் சென்றிருந்தனர்.
யாழ்ப்பாண மாநகர முதல்வரின் எழுத்துமூலமான கடிதத்தினை மாநகர சபை உறுப்பினர் வ.பார்த்தீபன் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் வாசித்தார்.
இதனையடுத்து, போராட்டக்காரர்களுக்கும் மாநகர சபை உறுப்பினர் மற்றும் உத்தியோகத்தர்களுக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.
இதுவரை யாழில் எத்தனையோ அமைப்புக்கள் போராட்டம் செய்த போது அமைதியாக இருந்த யாழ் மாநகர சபைக்கு தற்போது தான் கண் திறந்து இருப்பதாக யாழ் சிவில் சமூகத்தின் தலைவர் அருண் சித்தார்த் கூறுகிறார்.
தமது போராட்டத்தை குழப்பினால் எமது போராட்டம் கண்டி தலதா மாளிகை முன்பாக இடம்பெறும். நாம் உண்மைக்காக போராடுகிறோம். தமிழ் மக்களை வைத்து வியாபாரம் செய்பவர்களுக்கு எமது போராட்டம் பயத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்று அருண் சித்தார்த் மேலும் கூறினார்.
இதன்போது குறித்த இடத்திற்கு வருகை தந்த காவல்துறையினர், இருதரப்பினரையும் சமாதானப்படுத்தியதுடன். நீதிமன்ற அனுமதி பெற்றால் மாத்திரமே போராட்டக்காரர்களை அந்த இடத்தில் இருந்து அகற்ற முடியும் என தெரிவித்துள்ளனர்.
நீதியான முறையில் போர்க்குற்றங்கள் விசாரிக்கப்பட வேண்டும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியான முறையில் நீதி வழங்கப்பட வேண்டும். சர்வதேச ரீதியில் குற்ற விசாரணை உரிய முறையில் முன்னெடுக்கப்பட வேண்டும் போன்ற காரணங்களை முன்னிறுத்தி யாழ் சிவில் சமூகத்தின் ஏற்பாட்டில் அடையாள உணவு தவிப்பு போராட்டமொன்று நல்லூர் பின் வீதியில் 21.03.2021 அன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
“தற்பொழுது ஜெனீவாவில்மனித உரிமை மாநாடு இடம்பெற்றுவரும் நிலையில் , உண்மையில் இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல் குறித்து ஐக்கிய நாடுகளின் மனித உரிமை காரியாலயம் கவனம் செலுத்துவதாக இருந்தால் இலங்கையில் இடம்பெற்ற அனைத்து மனித உரிமை மீறல்களும் விசாரிக்கப்பட வேண்டும்.
விடுதலைப் புலிகளால் செய்த குற்றமாக இருக்கலாம், புளாட், டெலோ , ஈபிஆர்எல்எஃப் போன்ற தமிழ் ஆயுதக்குழுக்களாள் செய்யப்பட்ட குற்றங்கள் எல்லாம் விசாரிக்கப்பட வேண்டும். இந்திய இராணுவத்தால் இந்த மண்ணில் நிகழ்த்தப்பட்ட எல்லா குற்றங்களும் விசாரிக்கப்பட வேண்டும். மனித உரிமை என்று அவர்கள் யோசிக்கும் பொழுது உண்மையில் சகல விதமான மனித உரிமை மீறல்களும் விசாரிக்கப்பட வேண்டும். அது தண்டனைக்கும் உட்படுத்தப்பட வேண்டும். அப்படி இல்லாது விட்டால் நாடு என்ற ரீதியில் இடம்பெற்ற சிவில் யுத்தம் முடிந்துவிட்டது, மேற்கொண்டு எங்களுடைய நாட்டுக்கு ஏற்ற விதத்தில் உள்ளக ரீதியாக ஒரு பொறிமுறையை அமைத்து நாங்கள் மேற்கொண்டு நாடு என்ற ரீதியில் முன்னேறுவதற்கான உதவிகளை இந்த மேற்குலக நாடுகள் வழங்கப்பட வேண்டும். வெறும் எனவே ஒரு தரப்பினருடைய மனித உரிமை மீறல்களை பிடித்துக் கொண்டு இவ்வாறு பக்க சார்பான விசாரணை செய்வது நாங்கள் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை.
நாங்கள் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்கள். பலர் விடுதலைப் புலிகளால் காணாமல் ஆக்கப்பட்ட கொலை செய்யப்பட்டுள்ளார்கள். சித்தார்த்தன் தலைமையிலான புளொட், பல்லாயிரக்கணக்கான குற்றங்களை செய்துள்ளது. சுரேஷ் பிரேமச்சந்திரன் அவர்களுடைய ஈபிஆர்எல்எப் பல்லாயிரக்கணக்கான குற்றங்களில் ஈடுபட்டு இருந்தது. ரெலோவின் செல்வம் அடைக்கலநாதன் சிவாஜிலிங்கம் போன்றவர்கள் பல்வேறு குற்றங்களில் ஈடுபட்டு உள்ளார்கள். இவர்கள் அனைவரும் குற்றங்களை செய்துவிட்டு பாராளுமன்றம் சென்று விட்டால் குற்றங்கள் மறைக்கப்பட்டதா அர்த்தப் படமாட்டாது. அனந்தி சசிதரன் அவளுடைய கணவன் எழிழன் இருக்கும் பொழுது தான் மாவிலாறு அணைக்கட்டு பூட்டப்பட்டு பாரிய யுத்தம் இடம் பெற காரணமாக இருந்தது. அவரும் செல்கிறார் மனித உரிமை ஆணையத்துக்கு. உண்மையில் இது ஒரு கேலிக்கூத்தான விடயம். எங்களுக்கு எந்தவிதமான நிவாரணமும் கிடையாது. குற்றங்கள் செய்தவர்கள் அனைவரும் மனித உரிமை கேட்டு போய்க் கொண்டிருக்கிறார்கள். ஆகவே இந்த மாதிரியான நிலைப்பாடு மாற்றப்பட்டு உண்மையான பக்கசார்பற்ற நியாயமான பொறிமுறையொன்று அமைக்கப்பட வேண்டும்” என யாழ் சிவில் அமைப்பின் தலைவர் அருண் சித்தார்த் தெரிவித்தார்.