தாய்க்குத் திருமணம் செய்துவைத்த மகன்கள்!

-பாரதி ஆனந்த்

குடிசைக்குள் சித்தார்த்தன் படுத்திருந்தான். முதல் நாள் பயணம் தந்த அலுப்பின் காரணமாக காலை 11 மணி வரை படுக்கையை விட்டு எழுந்திருக்கவில்லை. அந்த நேரம் 4 பேர் உள்ளே வந்தனர். முதலில் நுழைந்த நபரின் புன்னகையைப் பார்த்தவுடனேயே அவர்தான் மணமகன் என்பது சித்தார்த்தனுக்குத் தெரிந்துவிட்டது. அம்மா, டீ போடச் சென்றுவிட இயல்பாகப் பேச்சு நீண்டது. சில நிமிடங்களிலேயே மணமகனைப் பிடித்துவிட திருமணம் எப்போது வைத்துக் கொள்ளலாம் என்ற பேச்சு வந்தது. இன்று திங்கள் கிழமை நாளை மறுநாள் புதன்கிழமை நல்லநாள். அதை விட்டால் இரண்டு மாதங்கள் கழித்தே நல்ல நாள் வருகிறது. உங்களுக்கும் அம்மாவுக்கும் சம்மதம் என்றால் புதன்கிழமை முகூர்த்தத்திலேயே திருமணம் வைத்துக்கொள்ளலாம் என்றார் ஏழுமலை. எல்லோரும் ஏற்றுக்கொள்ள புதன்கிழமையன்று கோயிலில் சித்தார்த்தனின் அம்மாவுக்கும் ஏழுமலைக்கும் இனிதே திருமணம் நடந்தது.

இந்த முன்னோட்டத்தைப் படித்துவிட்டு என்னது தாய்க்குத் திருமணமா?! என்று உங்களின் புருவங்கள் உயர்ந்தால், நிச்சயமாக இந்தக் கட்டுரை உங்களுக்கானதே.

ஒரு பெண்ணுக்கு மறுமணம் என்றால் அதை இன்னும் இயல்பாக ஏற்றுக்கொள்ள முடியாத மனநிலையே தமிழகத்தில் நிலவுகிறது. அதுவும் படித்தவர்கள், அரசியல் அறிவு நிறைந்தவர்கள் இருக்கும் திராவிட பூமியின் நிலையே இப்படியென்றால் நாட்டின் பிற பகுதிகளில் கைம்பெண்களின் நிலையோ யோசித்துப் பார்க்கமுடியாத அளவிலேயே இருக்கிறது.

பெண்ணின் மறுமண வெறுப்புக்கு நம்மூரிலேயே சான்று இருக்கிறது. நடிகர் ரஜினிகாந்தின் இரண்டாவது மகளுக்கு முதல் திருமணம் முறிந்த நிலையில் இரண்டாவது திருமணம் நடந்தது. அப்போது அவர் கையில் மருதாணியிட்டு அதை தனது சின்னஞ்சிறு மகனிடம் காட்டும் புகைப்படத்தை ட்விட்டரில் பகிர்ந்திருந்தார். அந்த ஒற்றைப் படத்தை வைத்துக்கொண்டு அத்தனை அநாகரிகமான விமர்சனங்கள் சமூக வலைதளங்களில் உலா வந்தன. அத்தனையும் ஒரு பெண்ணின் இரண்டாம் திருமணத்தை எதிர்த்துப் பதியப்பட்ட கேலி, குத்தல் பேச்சுகள். ஒரு திரை பிரபலத்தின் மகளுக்கே இந்த நிலை. இத்தனைக்கும் அதே ரஜினிகாந்த் பின்னாளில் ‘தர்பார்’ என்ற படத்தில் மகளின் ஏற்பாடு மூலம் நயன்தாராவை மறுமணம் செய்துகொள்வது தொடர்பான பேச்சுவார்த்தைக்கு ஒப்புக்கொள்வார். அக்காட்சிகளுக்கு வரவேற்பு இருந்தது. நிழலோ நிஜமோ இங்கு மறுமணத்துக்கு எதிர்ப்பில்லை, அதைச் செய்வது ஆணா பெண்ணா என்பதைப் பொறுத்தே எதிர்ப்புகள் கிளம்புகின்றன.

அதுவும் மணப்பெண் 45 வயது நிரம்பியவர், கல்யாண வயதில் உள்ள இரண்டு மகன்களின் தாய் என்றால் எத்தனை எதிர்ப்புகளைச் சந்திக்க வேண்டியிருக்கும். ஆனால், அப்படி ஒரு தாய்க்கு மகனே முன்வந்து முன்னுதாரண மறுமணத்தைச் செய்துவைத்துவிட்டு அதைப் புத்தகமாகவும் எழுதியுள்ளார்.

சித்தார்த்தன் கருணாநிதி (இயற்பெயர் பாஸ்கர்), தமிழகத்தின் கள்ளக்குறிச்சி மாவட்டம் வளையாம்பட்டு கிராமத்தில் பிறந்தவர். இப்போது அவருக்கு வயது 28. தம்பி விவேக் 26 வயது இளைஞர். இருவரும் நன்கு படித்து வேலையில் இருக்கின்றனர். இருவரும் இணைந்தே இந்தத் திருமணத்தை நடத்தி வைத்துள்ளனர். திருமணம் முடிந்து இரண்டு ஆண்டுகள் முடிந்த நிலையில், தனது தனிப்பட்ட அனுபவத்தைப் புத்தகமாக எழுதினார் சித்தார்த்தன் கருணாநிதி. அமேசான் கிண்டிலில் வெளியாகியுள்ள இந்தப் புத்தகத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கும் நிலையில், தனது அனுபவங்களை ‘இந்து தமிழ்’ இணையதளத்துடன் பகிர்ந்தார்.

அவருடனான கலந்துரையாடலில் இருந்து…

எனது கடந்த காலம் நினைவு வைத்துக்கொள்ளும் அளவுக்கு ரம்மியமானது இல்லை. பெற்றோருக்குக் கூலி வேலை, குடிசை வீடு. அடுத்த நாளுக்கான நம்பிக்கைகூட ஆடம்பரமாகத் தெரிந்த வறுமைச் சூழல். இப்படியே காலம் செல்ல, அப்பா அம்மாவுக்கு ஆதரவாக சிறு வயதிலேயே மோர் வாலியுடன் விற்பனைக்குச் செல்வது என சிறுசிறு வேலைகளை செய்யத் தொடங்கினோம். ஆனால், அம்மா படிப்பு மட்டும்தன் சொத்து என்று திரும்பத் திரும்ப சொல்லிக்கொண்டே இருப்பார். அவர் சொன்னபடி நன்றாகப் படித்தோம், இப்போது இருவருமே நல்ல வேலையில் இருக்கிறோம்.

நான் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தபோது எனது பள்ளி ஆசிரியர் ஒருவர், அம்மாவுக்கு ஏன் நீங்கள் மறுமணம் செய்துவைக்கக் கூடாது எனக் கேட்டார். எனக்கு அப்போது கோபமோ, மகிழ்ச்சியோ ஏன் குறிப்பிட்டுச் சொல்லும் அளவுக்கு எந்த உணர்வுமே ஏற்படவில்லை. ஆனால் இரண்டு ஆண்டுகளுக்குப் பின் நான் நிறைய பெரியார் புத்தகங்கங்களைப் படித்திருந்த நிலையில், ஆசிரியர் சொன்னதை ஏன் நிறைவேற்றக் கூடாது எனத் தோன்றியது. நீண்ட போராட்டத்துக்குப் பின் அதைச் செய்துவிட்டோம். அம்மா இப்போது மகிழ்ச்சியாக இருக்கிறார். 2 ஆண்டுகளாக நான் எனது வலைப்பக்கத்தில் எழுதிவந்த அனுபவங்களைத் தொகுத்து ஒரு சிறுகதையாக எழுதிவிட்டேன்.

இப்போது எனது செயலைப் பாராட்டிப் பலரும் பேசுகின்றனர். அதில் எனக்குப் பெருமித உணர்வு ஏற்படுவதைக் காட்டிலும் 2021ல் கூட பெண்ணின் மறுமணம் பற்றி எழுதி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டிய நிலையில்தான் இந்தச் சமூகம் இருக்கிறது என்று எண்ணும்போது வேதனையாக இருக்கிறது.

இந்தப் புத்தகத்துக்கு நான் ‘ரைட் டூ மேரி’ (Right To Marry – திருமணத்துக்கான உரிமை) என்றே தலைப்பு வைத்தேன். மறுமணம் பற்றிப் பேசும் கதைக்கு ஏன் இப்படி ஒரு தலைப்பு என்று கேட்கின்றனர். திருமணம், மறுமணம் என்று பிரித்துப்பார்க்க எனக்கு விருப்பமில்லை. இரு மனங்கள் இணையும் நிகழ்வு திருமணம் மட்டுமே.

ஊரில் எங்களின் செயலை எதிர்த்துப் பழித்துப் பேசிய பலரும், இந்த இரண்டாண்டுகளுக்குப் பின்னர் மெல்ல மெல்ல எங்களுடன் வந்து பழகத் தொடங்கியிருக்கின்றனர். இதனால் அவர்களின் மனநிலை முழுவதுமாக மாறிவிட்டது என்று சொல்ல முடியாது. இருந்தாலும் சிலர் எங்கள் செயலின் நியாயத்தைப் புரிந்து கொண்டுள்ளனர்.

இப்போதெல்லாம் இளைஞர்கள் முற்போக்குச் சிந்தனையுடன்தான் இருக்கின்றனர். நமக்கு ஒன்றிரண்டு தலைமுறைக்கு முந்தையவர்கள்தான் பழமையிலிருந்து விடுபட பிடிவாதம் காட்டுகின்றனர். என் அம்மாவின் திருமணத்தை மஞ்சப்புத்தூரில் கொண்டாடினர். ஏனென்றால் அது ஓர் ஆண் சார்ந்தவர்களின் பார்வையில் இருந்து பார்க்கப்பட்டது. எதிர்ப்பு என் தாய் பிறந்த வளையாம்பட்டில்தான் அதிகம் இருந்தது.

எனது இலக்கெல்லாம் ஒரே குடும்பமாக இருந்தாலும், அந்தக் குடும்பத்தில் ஒவ்வொரு தனிநபருக்கும் ஓர் உரிமை, சுதந்திரம் இருக்கிறது. அந்த உரிமையை யாரும் பறிக்காமல் அனைவரும் சுதந்திரமாக வாழ்ந்தால் குடும்பம் மகிழ்ச்சியின் பிறப்பிடமாக இருக்கும்.

என் அம்மா இப்போது மகிழ்ச்சியாக இருக்கிறார். எனக்குச் சிறு வயதிலேயே விவரம் தெரிந்திருந்தால் நான் அப்போதே அம்மாவைத் திருமணம் செய்துகொள்ளச் சொல்லியிருப்பேன். இப்போது அம்மா அவரைப் போல் மிக இளம் வயதில் வாழ்க்கைத் துணையைத் தொலைத்தவர்கள் குறிப்பாக பெண்களை மீண்டும் வாழ்க்கையைப் புதுப்பித்துக் கொள்ள ஊக்கப்படுத்துகிறார். என்னால், ஒரு சிலரின் பார்வையை, செயலை மாற்ற முடிந்திருப்பதை மட்டுமே நான் வெற்றியாகக் கருதுகிறேன்.

இவ்வாறு சித்தார்த்தன் கூறினார்.

மகிழ்ச்சியாக இருக்கிறேன்…

அப்படியே சித்தார்த்தின் தாய் செல்வியிடமும் பேசினோம். அவர் தான் எடுத்த முடிவில் மிகத் தெளிவாக இருக்கிறார். நான் இப்போதுதான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். யதார்த்தமான வாழ்க்கைக்குள் நான் நுழைந்திருக்கிறேன். என்னைப் போலவே துணையை இழந்த ஒருவரைத்தான் நான் திருமணம் செய்திருக்கிறேன் ஆகையால், யாருடையை வாழ்க்கையையும் பறித்துவிட்டதாக எனக்கு எந்த வருத்தமும் இல்லை. என் கணவர் இறக்கும்போது எனக்கு 35 வயது. அப்போது என்னைப் பலரும் மறுமணம் செய்து கொள்ள முன்வந்தார்கள் ஆனால், என் பிள்ளைகள் எதிர்காலம் என்னவாகுமோ, சமூகம் என்ன நினைக்குமோ என்ற அச்சத்திலேயே நான் அதை மறந்துவிட்டேன்.

ஆனால், இப்போது என் மகன்கள் எல்லோரும் பணி நிமித்தமாக வெளியூர் சென்றுவிட தனிமை மிகப்பெரிய வெறுமையை ஏற்படுத்தியது. சிறிய வேலைக்குக்கூட மற்றவர்களைச் சார்ந்திருக்கும் சூழலில் நான் யாரிடம் பேசினாலும், இயல்பாகப் பழகினாலும் அது விமர்சனக் கண்களாலேயே பார்க்கப்பட்டது. அப்போதுதான் என் மகன் என்னிடம் நீங்கள் ஏன் மீண்டும் திருமணம் செய்துகொள்ளக் கூடாது எனக் கேட்டது நினைவுக்கு வந்தது.

எனது விருப்பத்தை என் மகனிடம் தயக்கமின்றி சொன்னேன். அவன், உங்களுக்குப் பிடித்தவரை நீங்களே தேர்வு செய்யுங்கள் என்று சொன்னார். என் தோழி மூலம் என் பக்கத்து ஊர் நபர் பற்றி அறிந்தேன். மகனிடம் சொன்னேன். இன்று நான் மீண்டும் வாழ்க்கைத் துணையோடு மகிழ்ச்சியாக இருக்கிறேன். அவர் படிக்கவில்லை. விவசாயி. ஆனால், மிகவும் நல்ல மனிதர். எனக்கு நல்ல நண்பராக இருக்கிறார்.

எனக்குத் தெரிந்த பெண்கள், ஏன் என்னைவிட மூத்த பெண்கள் பலரும் இப்போது என்னிடமே உன்னைப் போல் துணிவிருந்திருந்தால் நாங்களும் எங்களுக்கான வாழ்க்கையை அமைத்திருப்போம் என்று ஆதங்கப்படுகின்றனர். சிலர் வெளிப்படையாகப் பாராட்டுகின்றனர்.

மனைவியின் மறைவுக்குப் பிறகு ஒரு ஆண், குழந்தைகளைக் காரணம் காட்டியே மறுமணம் செய்கிறார். ஆனால், ஒரு பெண்ணோ அதே குழந்தைகளைக் காரணம் காட்டி பொருளாதாரச் சுமை தொடங்கி அனைத்தையும் தானே சுமக்க இந்தச் சமூகம் ஒரு பெண்ணைப் பழக்கப்படுத்தி வைத்திருக்கிறது. என் மகன்களை இன்று பலரும் பெருமையாகப் பேசுகின்றனர். அப்படியே இந்தச் சமூகம் பெண்கள் மறுமணத்தையும் விமர்சிக்காமல் ஏற்றுக்கொண்டால் என்னைப் போன்றோர் நிம்மதியாக வாழ்வார்கள்.

தனித்து வாழவே முடியாதா?

வாழ்க்கைத் துணையை இழந்தபின் ஒரு பெண் தனித்து வாழவே முடியாதா என்று சிலர் வாதிடுகின்றனர். நிச்சயமாக முடியும், திருமணம் செய்து கொள்ளாமலேயோ அல்லது திருமணத்திற்குப் பின் ஏற்பட்ட மணமுறிவு அல்லது மரணத்தால் ஏற்படும் இழப்பால் ஒரு பெண் தனித்து வாழ அவருக்கு எல்லா சுதந்திரமும் இருக்கிறது.

மறுமணம் என்பது இன்னொரு எஜமானரிடம் தன்னை அடமானம் வைக்கும் செயலாக இருக்கும் என்று கருதும் பட்சத்தில் நிச்சயமாகத் தனித்து வாழலாம். ஒருவேளை தோழனாக இன்னொரு துணை வரும்போது அதை ஏற்கலாம் என்று தோன்றினால் ஏற்றுக்கொள்ளலாம். விருப்பம் தனி நபர் சார்ந்தது.

ஆனால், ஒரு பெண் குழந்தைக்காக அவ்வாறாக தனித்து வாழ்வதை மெச்சும் சமூகம் ஏன் அதே பெண் தன் வாழ்க்கைக்குப் புது அர்த்தத்தைக் கொடுத்தால் மட்டும் வெகுண்டெழுகிறது என்பதே கேள்வி. பெண்ணின் வாழ்க்கையை அவளின் முடிவுக்கே விடுங்கள் என்பதே சமூக ஆர்வலர்களின் கேள்வியாக இருக்கிறது.

அண்மையில், 70 வயதுப் பெண் ஒருவர் தனக்கு வாழ்க்கைத் துணை வேண்டும் என்று விளம்பரம் செய்தது செய்தியானது. ஆனால், அன்றாடம் எத்தனையோ ஆண்கள் இதுபோன்ற விளம்பரத்தைக் கொடுக்கின்றனர். அவையெல்லாம் கண்டும் காணாமல் கடந்து செல்லப்படுகின்றன.

சமூக ஆர்வலர் ஓவியா

இதுகுறித்து சமூக ஆர்வலர் ஓவியா கூறியதாவது:

“இந்திய வரலாற்றில் நூறாண்டு காலமாக மறுமணம் பற்றிப் பேசப்பட்டு வருகிறது. ஆரம்பக் காலத்தில் பேசியவர்கள் எல்லோருமே, பால்ய விவாகத்தில் கணவரை இழந்த சிறுமிகளின் அதுவும் பூப்பெய்தாத சிறுமிகளின் மறுமணத்தைப் பற்றியே பேசினர். பெரியார்தான் இதில் விதிவிலக்கு என்று சொல்லலாம். பின்னர் மெல்ல மெல்லக் குழந்தை இல்லாத இளம் பெண்களின் மறுமணம் ஊக்குவிக்கப்பட்டது. குழந்தை இருந்தால், அது இன்னமும் கூட சற்று சவாலான சூழலாகவே கருதப்படுகிறது. ஒரு ஆண் மறுமணம் செய்யும்போது உடனே அவருடைய பிள்ளைகள் புதிய உறவை சித்தி என ஏற்றுக்கொள்கின்றனர்.

ஆனால், பெண் அவ்வாறு திருமணம் செய்யும்போது அந்த உறவுக்கு அப்பா என்றுதான் மீண்டும் ஒரு உருவகம் கொடுக்கப்படுகிறது. சித்தப்பா என்று அழைக்க அனுமதிக்கப்படுவதில்லை. அப்படி ஓர் உரையாடலைக் கூட சமூகம் தொடங்கத் தயாராக இல்லை. சித்தப்பா என்றால் அது அப்பாவின் சகோதரரோ அல்லது அம்மாவின் சகோதரி கணவராகத்தான் பார்க்கப்படுகின்றனர். நான் ஏன் இந்த வார்த்தைக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறேன் என்றால் பேச்சளவில் அப்படி ஓர் உறவுக்குத் தயாராகாமல்தான் இந்தச் சமூகம் இருக்கின்றது என்பதைச் சுட்டிக்காட்டவே. அதனால் தான் இன்றளவும் சித்தார்த்தன் போன்ற இளைஞர்கள் விழிப்புணர்வு புத்தகங்களை எழுத வேண்டியுள்ளது. சித்தார்த்தனின் முயற்சியை நான் வெகுவாகப் பாராட்டுகிறேன்” என்றார்.

மாற்றம் வேண்டும்..

பெரும்பாலான பழங்குடி சமூகங்கள் வரதட்சணையை ஊக்குவிப்பதில்லை. அங்கு ஆண்களே பெண்களுக்குப் பரிசுகளைக் கொடுத்து திருமணம் செய்கின்றனர். அதுபோல், பெண்களின் மறுமணத்தையும் பெரும்பாலான பழங்குடி சமூகங்கள் இயல்பாக ஏற்றுக்கொள்கின்றன. ஆனால், நாகரிகச் சமூகம் என்று சொல்லிக்கொள்ளும் நாம்தான் இன்னும் பெண்ணைப் பிற்போக்குத்தனத்தில் அழுத்திக் கொண்டிருக்கிறோம். சட்டங்கள் பல வந்ததால் இன்று பெண்கள் மீது வெளிப்படையாக சீண்டல்கள், சுரண்டல்கள், அத்துமீறல்களுக்கு கடிவாளம் இருக்கிறது. ஆனாலும், மறைமுகமாக பெண்ணின் மாண்பைச் சிதைக்கும் வாய்ப்பை சமூகம் தவறவிடுவதே இல்லை.

சித்தார்த்தன் தாய்க்குச் செய்துவைத்த திருமணத்தையும் ஏற்றுக்கொள்ள வேண்டும்; அதேபோல் ஒரு பெண் தானாக முடிவெடுத்து செய்யும் மறுமணத்தை அவரைச் சார்ந்தோரும் ஏற்றுக்கொள்ள வேண்டும். அப்படியொரு மாற்றம் சமூகத்தில் வர வேண்டும்.

-இந்து தமிழ்
2021.04.13

Tags: