அகதிகளாக ஆக முடியாதவர்கள்
– மு.இராமனாதன்

பிப்ரவரி 1-ம் தேதி மியான்மர் ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியதை அடுத்து இந்தியாவின் எல்லைப்புறத்தில் வசிக்கும் மியான்மர் மக்கள், அடைக்கலம் தேடி மிசோரம், மணிப்பூர் மாநிலங்களுக்கு வருகிறார்கள். புகலிடம் தேடி வந்த மியான்மரின் சின் (Chin) இன மக்களும், மிசோரம் மக்களும் ஒரே தொப்புள் கொடியில் கிளைத்தவர்கள். மாநில அரசுகளால் கதவடைக்க முடியவில்லை. இதுவரை வந்தவர்கள் 3,000 பேர் இருக்கலாம். ஆனால் இந்தியாவில் அவர்களால் அகதிகளாக முடியாது. ஏன்?
ஏனெனில், ஐநா 1951-ல் உருவாக்கிய சர்வதேச ‘அகதி உடன்பா’ட்டில் இந்தியா அங்கம் வகிக்கவில்லை. இந்த உடன்பாடு யார் அகதி என்பதை வரையறுக்கிறது. இனம், மதம், தேசிய அடையாளம், அரசியல் சார்பு ஆகிய காரணத்தால் சொந்த நாட்டில் வசிக்க முடியாதவர்களும் வசிக்க அஞ்சுபவர்களும் அச்சுறுத்தப்படுபவர்களும் அகதிகள் ஆகிறார்கள். 1967-ல் இந்த வரையறைக்குள் யுத்தங்களாலும் வன்முறைகளாலும் சொந்த நாட்டில் வசிக்க முடியாமல் போனவர்களும் சேர்த்துக்கொள்ளப்பட்டார்கள். ஒரு புதிய நாடு ஒரு அகதியை ஏற்றுக்கொண்டால், அதன் பிறகு அவர் புதிய நாட்டின் குடிநபர் ஆவார். 1951-ஐநா உடன்பாட்டில் அங்கம் வகிக்கும் நாடுகள்தான் அகதிகளை ஏற்றுக்கொள்ளும். இதில் இந்தியா உட்படப் பல ஆசிய நாடுகள் அங்கம் வகிக்கவில்லை. இந்தியாவின் அரசமைப்புச் சட்டத்திலும் அகதிகளை அனுமதிப்பதற்கோ பராமரிப்பதற்கோ கூறுகள் இல்லை.
இந்தியாவில் அகதிகள் இல்லையா?
அப்படியானால் இந்தியாவில் அகதிகளே இல்லையா? இருக்கிறார்கள் – முதலாவதாக, 1959-ல் திபெத் போராட்டத்துக்குப் பிறகு இந்தியா, தலாய் லாமாவுக்கு அடைக்கலம் வழங்கியது. அப்போது இந்தியாவுக்கு வந்த திபெத்தியர்கள். இப்போது சுமார் ஒரு லட்சம் பேர். அடுத்ததாக, 1972-ல் இலங்கை உள்நாட்டுப் போருக்குப் பிறகு வந்த ஈழத்தமிழர்களும் இந்திய வம்சாவளி தமிழர்களும். சுமார் ஒரு லட்சம் பேர். மூன்றாவதாக ரோஹிங்கியா முஸ்லிம்கள். மியான்மரிலிருந்து வந்தவர்கள். 2017-ல் ரோஹிங்கியாக்களுக்கு எதிராக நடந்த வன்முறைக்குப் பிறகுதான் இவர்களின் இடப்பெயர்வு பெருமளவில் நிகழ்ந்தது. அப்போது அவர்கள் மிகுதியும் (7 லட்சம்) வங்கதேசத்துக்குப் போனார்கள். இந்திய அரசின் கட்டுப்பாடுகளால் குறைவானவர்களே (40,000 பேர்) இந்தியாவுக்கு வந்தார்கள். வங்கதேசத்திலிருந்து இந்தியாவுக்கு வந்தவர்கள் கணிசமானவர்கள். அவர்களைக் குறித்த துல்லியமான புள்ளிவிவரங்கள் இல்லை. திபெத்தியர், ஈழத் தமிழர், ரோஹிங்கியர் ஆகிய மூன்று பிரிவினரும் அகதிகள் என்று பொதுவெளியில் அழைக்கப்பட்டாலும், சட்டம் அவர்களை அகதிகளாக ஏற்பதில்லை.
கடந்த ஆண்டு அமலாக்கப்பட்ட குடியுரிமைத் திருத்தச் சட்டம் பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளைச் சார்ந்த, துன்புறுத்தலுக்கு உள்ளாகிய மதச் சிறுபான்மையினருக்குக் குடியுரிமை வழங்க வகைசெய்கிறது. இவர்கள் இந்துக்களாகவோ சீக்கியர்களாகவோ பௌத்தர்களாகவோ சமணர்களாகவோ பார்சிகளாகவோ கிறிஸ்தவர் களாகவோ இருக்க வேண்டும். இந்தியாவில் குறைந்தது ஆறு ஆண்டுகள் வசித்திருக்க வேண்டும். இந்தச் சட்டத்தின்படியும் மேற்கூறிய மூன்று பிரிவினரால் இந்தியக் குடியுரிமை பெற முடியாது. திபெத்தியர்கள் பௌத்தர்களாக இருந்தாலும், திபெத்தோ சீனாவோ புதிய சட்டத்தில் இடம்பெறவில்லை. ஈழத் தமிழர்கள் இந்துக்களாக இருந்தாலும், இலங்கை எனும் நாடு குடியுரிமைச் சட்டத்துக்குள் வரவில்லை. ரோஹிங்கியாக்களுக்கு அவர்களது மதம், நாடு இரண்டுமே சட்டத்தில் இடம்பெறவில்லை.

ஹாங்காங் எடுத்துக்காட்டு
ஹாங்காங்கும் 1951 உடன்படிக்கையில் ஒப்பம் இடவில்லை. ஆனால், புகலிடம் தேடி வந்தவர்களை ஹாங்காங் திருப்பி அனுப்புவதில்லை. அவர்கள் ஐநாவின் அகதி ஆணையத்தில் அகதிக் கோரிக்கையைச் சமர்ப்பிக்க வேண்டும். ‘அரசப் படைகள் அல்லது பயங்கரவாத அமைப்புகளினால் அச்சுறுத்தலுக்கு உள்ளாகிறோம், எங்களால் சொந்த நாட்டுக்குப் போக முடியாது’ என்று அவர்கள் நிறுவ வேண்டும். கோரிக்கை ஏற்கப்பட்டால் அவர்கள் அகதிகளாவார்கள். அதன் பிறகு அகதி உடன்படிக்கையில் ஒப்பமிட்டிருக்கும் ஒரு நாட்டுக்கு விண்ணப்பிப்பார்கள். அவர்களது விண்ணப்பம் ஏற்கப்பட்டால் புதிய நாட்டுக்கு அகதியாகப் போகலாம். சொந்த நாட்டில் அச்சுறுத்தல் இருப்பதை நிரூபிக்க முடியாதவர்கள் திருப்பி அனுப்பப்படுவார்கள். அவர்களால் அகதிகளாக முடியாது. இந்த வழக்கும் விசாரணையும் ஆண்டுக் கணக்கில் நடக்கும். அப்போது ஹாங்காங் அரசு அவர்களுக்கு இருப்பிடமும் அரிசி பருப்பும் சிறிய உதவித்தொகையும் வழங்கும். அவர்களது பிள்ளைகளைப் படிக்கவைக்கும். வளரும் நாடுகள் பலவும் மேலை நாடுகளும் அகதிகளை ஏற்கின்றன. ஆனால், நமது சட்டங்களில் மட்டுமல்ல, நமது குடிமைச் சமூகத்திலும் சிலருக்கு அகதிகளைக் குறித்து ஒவ்வாமை இருக்கிறது. சமீபத்தில் ஓர் இணைய இதழில் மியான்மரின் சின் அகதிகளை நாம் பேண வேண்டும் என்று ஒரு செய்தியாளர் எழுதியிருந்தார். அதற்கு, அகதிகளை அனுமதிக்கக் கூடாது என்று பல வாசகர்கள் கடுமையான சொற்களில் பின்னூட்டம் இட்டிருந்தார்கள்.
சமீபத்தில் மியான்மருக்குத் திரும்புமாறு அறிவுறுத்தப்பட்ட ரோஹிங்கியாக்கள் நீதிமன்றத்தை நாடினார்கள். ஆனால், நமது சட்டப் புத்தகத்தின் எந்தக் கூறும் அவர்களுக்குச் சாதகமாக இல்லை. விசா இல்லாமல் இந்தியாவுக்குள் நுழையும் எவரும் சட்டத்துக்குப் புறம்பாகக் குடியேறியவர்கள்தான். அவர்கள் அகதிகள் ஆக மாட்டார்கள்.
என்ன செய்யலாம்?
நீண்ட வரலாறும் நாகரிகமும் பாரம்பரியமும் ஜனநாயக விழுமியங்களும் மிக்க இந்தியா, தனது அகதிக் கொள்கையை மறுபரிசீலனை செய்ய வேண்டும். 1951 ஐநா உடன்பாட்டில் இணைவதைத் தொலைநோக்காக வைத்துக்கொள்ளலாம். முதற்கட்டமாக, குடிமக்கள், குடியேற்றக்காரர்கள், சட்டவிரோதமாகக் குடியேறியவர்கள், புகலிடம் நாடுபவர்கள், அகதிகள் முதலான ஒவ்வொரு பிரிவினருக்கும் சட்டரீதியிலான வரையறைகளை வகுத்துக்கொள்ள வேண்டும். அவை ஐநா அகதி ஆணையத்தின் வழிகாட்டல்களுக்கு இசைவாக இருக்க வேண்டும். இதன் மூலம் எல்லாப் பிரிவினருக்கும் சட்டரீதியான பாதுகாப்பு கிடைக்கும். சட்டம் மாட்சிமையோடு விளங்கும். அகதிகளின்பால் பரிவோடு நடந்துகொள்ள வேண்டும். ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்பது முழக்கமாக மட்டுமில்லாமல் வாழ்க்கை நெறியாகவும் மாற வேண்டும்.
-இந்து தமிழ்
2021.04.20
மியான்மர் அகதிகளுக்கு இந்தியா உதவாதா… மணிப்பூரின் பல்டியும், மிசோரமின் மனிதாபிமானமும்!
–ர.சீனிவாசன்

மியான்மரில் இருக்கும் இந்தியர்கள் பலரும் இனி அங்கிருப்பது பாதுகாப்பானதல்ல என்பதை உணர்ந்து ‘வந்தே பாரத்’ விமானங்கள், மியான்மரின் இந்தியத் தூதரகம் ஏற்பாடு செய்யும் சிறப்பு விமானங்கள், சார்டர்ட் விமானங்கள் எனக் கிடைத்த வழியில் எல்லாம் தாயகம் திரும்பி வருகின்றனர். ஆனால், ராணுவ கலகத்தால் இந்திய மாநிலமான மிசோரம் – மியான்மர் எல்லையில் இருக்கும் மக்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகிவருகின்றனர். அவர்கள் மியான்மரின் குடிமக்களாகவே இருந்தாலும், கலாசார ரீதியாக அவர்களில் பலர், மிசோரம் மாநில மக்களுடன் இணக்கமாகவே இருக்கின்றனர். மியான்மரில் கலவரம் என்றதும் அவர்கள் அகதிகளாக மிசோரமில் தஞ்சம் புகுவதற்கே வருகின்றனர். அங்கேதான் சிக்கல் ஏற்பட்டது.
மிசோரமில் என்ன நடக்கிறது?
இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்ட மியான்மர் மக்கள் மிசோரமில் அடைக்கலம் தேடி வந்துள்ளனர். அவர்களில் பலர் மிசோரம் மாநில அரசால் திருப்பி அனுப்பப்பட்டனர். அப்படித் திருப்பி அனுப்பப்பட்டவர்களில் மீண்டும் நூறு பேர் போக இடமின்றி, வேறு வழியின்றி, மீண்டும் மிசோரமின் கதவையே தட்டியுள்ளனர். அரசு செய்தி நிறுவனம் வெளியிட்ட அறிக்கையின்படி, கடந்த திங்கள் கிழமைவரை 1042 மியான்மர் மக்கள் மிசோரம் வழியே இந்தியா வந்துள்ளனர். அவர்களில் பலர் இந்திய எல்லையோர கிராமங்களில் உள்ளூர் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் ஏற்பாடு செய்துள்ள முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும் சிலர், தங்களின் இந்திய உறவினர்களின் வீடுகளில் அடைக்கலம் புகுந்துள்ளனர்.
இவர்களில் பெரும்பாலானோர் மியான்மரின் எல்லையிலிருக்கும் சின் மாகாணத்தைச் சேர்ந்த ஸோ (Zo) என்ற இனத்தைச் சேர்ந்தவர்கள். வம்சாவளியாகவும் கலாசார ரீதியாகவும் இவர்களுக்கும் மிசோரமின் மிசோஸ் (Mizos) இன மக்களுக்கும் நிறைய ஒற்றுமைகள் உண்டு.
இந்த நிலையில்தான் கடந்த மார்ச் 10-ம் தேதி இந்திய உள்துறை அமைச்சகம் எல்லையோர மாநிலங்களான மிசோரம், மணிப்பூர், நாகாலாந்து, அருணாசலப் பிரதேசம், அஸ்ஸாம் உள்ளிட்ட மாநிலங்களுக்குக் கடிதம் ஒன்றை எழுதியது. அதில் மியான்மரிலிருந்து இந்தியா வரும் மக்களைக் கண்காணிக்க வேண்டும் எனவும், சட்டவிரோதமாக உள்ளே வருபவர்களைத் திருப்பி அனுப்பவேண்டும் எனவும் தெரிவித்தது.
ஆனால், மிசோரம் முதல்வர் ஸோரம்தங்கா (Zoramthanga), மியான்மரின் சின் இன மக்களுடன் கலாசார ரீதியாகத் தொடர்பில் இருப்பதால் அவல நிலையில் அடைக்கலம் தேடி வருபவர்களுக்கு உதவி செய்யாமல் இருக்க முடியாது எனத் தெரிவித்துள்ளார். மேலும் பிரதமர் நரேந்திர மோடிக்கு அவர் எழுதிய கடித்தத்தில் இத்தகைய அசாதாரண சூழலில் இந்திய அரசு அம்மக்களுக்கு நிச்சயம் அடைக்கலம் தரவேண்டுமென வேண்டுகோள் விடுத்திருக்கிறார். அதேபோல், மியான்மர் அகதிகளுக்கு தன் மாநில அரசு, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உத்தரவாத திட்டத்தின் கீழ் வேலைவாய்ப்புக்கும் ஏற்பாடு செய்துதரும் என்று அறிவித்துள்ளார்.
மணிப்பூரின் அரசியல்!
மியான்மருக்கு அருகிலிருக்கும் மற்றொரு மாநிலமான மணிப்பூரின் உள்துறை அமைச்சகத்தின் சிறப்புச் செயலாளர் கியான் பிரகாஷ், கடந்த மார்ச் 26-ம் தேதி ஓர் உத்தரவை வெளியிட்டார். மியான்மரைத் தொடும் ஐந்து மணிப்பூர் மாவட்டங்களின் துணை ஆணையர்களுக்கு அவர் எழுதிய கடிதத்தில், சட்டவிரோதமாக மியான்மர் மக்கள் உள்ளே நுழைய முற்பட்டால் அவர்களை பணிவாகப் பேசித் திருப்பி அனுப்பிவிடுமாறு அதில் குறிப்பிட்டிருந்தவர், ஒருவேளை அவர்களுக்குக் காயம் ஏற்பட்டிருந்தால், அவசரமாக மருத்துவ உதவி ஏதேனும் தேவைப்பட்டால், அதை மனிதாபிமான அடிப்படையில் உதவி செய்யலாம் என்றும் எழுதியிருந்தார். முக்கியமாக அந்தக் கடிதத்தில், எந்த மாவட்ட நிர்வாகமும் மியான்மர் மக்களுக்கு உதவும் வகையில் உணவு, உறைவிடம் கொண்ட முகாம்கள் அமைக்கக்கூடாது என்றே தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கடிதம் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது. மணிப்பூர் அரசின் மனிதாபிமானமற்ற இந்த உத்தரவுக்கு பல்வேறு தரப்புகளிலிருந்து கண்டனங்களும் விமர்சனங்களும் எழுந்தன. மக்களின் எதிர்ப்பைக் கண்டு, மார்ச் 29-ம் தேதியிட்ட மற்றொரு அறிக்கையை வெளியிட்டிருக்கிறார் சிறப்புச் செயலாளர் கியான் பிரகாஷ்.
அதில் அவர், “மணிப்பூர் மாநில அரசு, மியான்மர் மக்களுக்குத் தேவையான அனைத்து வகையான மீட்பு நடவடிக்கைகளையும் மனிதாபிமான அடிப்படையில் தொடர்ந்து செய்து வருகிறது. காயமடைந்தவர்களை இம்பால்வரை கொண்டு சென்று தேவையான மருத்துவ உதவிகளை அளித்துவருகிறோம். கடந்த 26-ம் தேதி வெளியிட்ட உத்தரவுக் கடிதம் பலராலும் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டிருக்கிறது. சொல்லவந்த விஷயத்தை விடுத்து அது வேறு வகையில் புரிந்துகொள்ளப்பட்டுவிட்டது. இதனால், மேலும் குழப்பங்கள் ஏற்படாமல் தடுக்க, அந்தக் குறிப்பிட்ட கடிதத்தைத் திரும்பப் பெற்றுக்கொள்கிறோம்” என விளக்கியுள்ளார்.
ஆனால், 26-ம் தேதி வெளியான கடிதத்தில், குறிப்பிடப்பட்ட ஐந்து விஷயங்களில், மாவட்ட நிர்வாகங்கள் உணவு, உறைவிடம் அடங்கிய முகாம்கள் எதையும் ஏற்பாடு செய்யக்கூடாது என்று தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. அதேபோல் சிவில் சமூக அமைப்புகளும் எந்த உதவியையும் செய்யக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. மருத்துவ உதவி, அவசர உதவி தேவைப்படுபவர்களுக்கு மட்டுமே உதவவேண்டும் எனவும் மற்றவர்களைப் பணிவாகப் பேசித் திருப்பி அனுப்பவேண்டும் எனவும் கூறப்பட்டிருந்தது. முக்கியமாக, ஆதார் சேர்க்கை நடைபெறக்கூடாது எனவும், அது தொடர்பான கிட்கள் அனைத்தும் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்படவேண்டும் என்றும் சொல்லப்பட்டிருந்தது.

சிறப்புச் செயலாளர் கியான் பிரகாஷ் இத்தனை தெளிவாக ஓர் அறிக்கையை வெளியிட்டுவிட்டு, ‘இது தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டுவிட்டது’ என்று எப்படி முற்றிலும் முரணான ஒரு விளக்கத்தை அளிக்கிறார் எனப் பல்வேறு தரப்பினரும் தற்போது கேள்வி எழுப்பி வருகின்றனர். ஒரு சிலர், முதல் உத்தரவில் மத்திய அரசின் அழுத்தம் இருந்திருக்கலாம் எனவும், எதிர்ப்பு வரவே அந்த உத்தரவு பின்வாங்கப்பட்டுள்ளதாகவும் விமர்சனம் செய்து வருகின்றனர்.
எது எப்படியோ, மியான்மரிலிருந்து தங்களின் உயிரைக் காத்துக்கொள்ள இந்தியாவை நம்பி ஓடிவரும் மக்களுக்கு மத்திய அரசும் இந்தியாவின் எல்லையோர மாநில அரசுகளும் உதவ வேண்டும் என்பதுதான் ஒட்டுமொத்த மக்களின் கோரிக்கையாக இருக்கிறது.
–விகடன்
2021.03.31