இலங்கையில் தற்போது பரவிவரும் கொரோனா வைரஸ் தொடர்பில் வெளியான புதிய தகவல்

Dr. Chandima Jeewandara

லங்கையில் தற்போது பரவும் கொரோனா வைரஸானது, பிரித்தானியாவில் பரவும் B.1.1.1 என்ற உரு திரிபடைந்த வைரஸ் என்பது கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின், ஒவ்வாமை, எதிர்ப்பு சக்தி ஆய்வு மற்றும் மரபணு விஞ்ஞான நிறுவகத்தின் பணிப்பாளர் கலாநிதி சந்திம ஜீவந்தர (Dr. Chandima Jeewandara) இதனைத் தெரிவித்துள்ளார்.

தமிழ், சிங்கள புத்தாண்டின் பின்னர், நாட்டில் பரவும் கொரோனா வைரஸ் தொடர்பாக குறித்த நிறுவகம் பரிசோதனைகளை மேற்கொண்டது.

இதற்கமைய, கொழும்பு, குருணாகல் மற்றும் பொரலஸ்கமுவை முதலான பகுதிகளில் இருந்து பெறப்பட்ட மாதிரிகளை பரிசோதனைக்கு உட்படுத்தியதில் பிரித்தானியாவில் பரவும் B.1.1.1 என்ற உரு திரிபடைந்த கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதாக கலாநிதி சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.

கடந்த இரண்டு, மூன்று வாரங்களில் இலங்கையில் மிக வேகமாக தொற்றுறுதியானவர்கள் அடையாளம் காணப்பட்டனர்.

இதையடுத்து, வைரஸ் திரிபு குறித்து கண்டறிவதற்கான பரிசோதனைகளை மேற்கொள்வதற்கு தமது நிறுவகத்திற்கு சுகாதார அமைச்சினால் பொறுப்பளிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கமைய கடந்த சில தினங்களில் இது தொடர்பில் மிக தீவிரமாக பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

கொழும்பு, பொரலஸ்கமுவ, குருணாகல் முதலான பகுதிகளில் இருந்து பெறப்பட்ட 43 மாதிரிகளின் அடிப்படையில் இந்தப் பரிசோதனைகள் இடம்பெற்றன.

இந்த ஆய்வுகளின் முடிவுகளின்படி, தற்போது பரவும் வைரஸானது, இங்கிலாந்தில் பரவும் B.1.1.1 என்ற வைரஸ் வகையைச் சார்ந்தது என்பது இன்று (28) காலை நூற்றுக்கு நூறு வீதம் உறுதிப்படுத்தப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த 8 ஆம் திகதி பொரலஸ்கமுவயில் இருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட மாதிரிகளின்போது, இந்த திரிபு தொடர்பில் முதல்முறையாக சந்தேகம் ஏற்பட்டது.

இவ்வாறான பிரச்சினைக்குரிய திரிபு பரவுகின்றமை தொடர்பில், சுகாதார அமைச்சுக்கு குறித்த சந்தர்ப்பத்தில் அறிவுறுத்தப்பட்டதாக வைத்தியர் சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.

இது மிகவும் பிரச்சினைக்குரிய திரிபாகும்.

மரணத்தை ஏற்படுத்தும் நிலைமையானது, சாதாரண திரிபை விடவும், இந்த திரிபுக்கு 55 சதவீதம் வரையில் உள்ளது.

அத்துடன், பரவலும் 50 சதவீதம் வரையில் அதிகரிக்கின்றது.

தற்போது நாட்டில் பயன்படுத்தப்படும் ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ராசெனெக்கா தடுப்பூசியினால் இந்த வைரஸை கட்டுப்படுத்த முடியும்.

எனவே தடுப்பூசி செலுத்தலின் மூலம் இறுதிப் பெறுபேற்றைப்பெற தாங்கள் எதிர்பார்ப்பதாக வைத்தியர் சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.

குறித்த காலம் செல்லும் வரையில், அடுத்து வரும் இரண்டு, மூன்று மாதங்களுக்கு ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு இந்த வைரஸ் பரவுவதைத் தடுப்பது மிகவும் முக்கியமானதாகும்.

திரிபடைந்த இந்திய வைரஸ் தொடர்பில் பரவலாக கருத்து தெரிவிக்கப்படுகிறது.

ஆனால், பிரித்தானிய வைரஸ் திரிபின் காரணமாகவே இந்தியாவில் அதிகளவான தொற்றாளர்கள் பதிவாகின்றனர்.

எனவே, இந்தியாவில் பதிவாகும் மரணங்களுக்கு பிரித்தானிய வைரஸே அதிகளவில் காரணமாக அமைகின்றது.

இவ்வாறான நிலையில், இந்த திரிபடைந்த வைரஸ் ஏனையவர்களுக்கும் பரவாமல் தடுப்பதற்காக அவதானத்துடன் செயற்படவேண்டிய பொறுப்பு அனைவருக்கும் உள்ளது.

திரிபு கண்டறியப்பட்டுள்ள மூன்று இடங்கள் தவிர்ந்த, ஏனைய இடங்களில் இருந்து பெறப்பட்ட மாதிரிகள் தற்போது பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன.

எதிர்வரும் 7 நாட்களுக்குள், இலங்கை முழுவதும் பரவும் ஏனைய நிலைமைகள் தொடர்பான தங்களது நிலைப்பாட்டை வெளியிட எதிர்பார்ப்பதாக வைத்தியர் சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்

Tags: