பாசிசத்துக்கு எதிரான போராட்டத்தில் இடதுசாரி சக்திகளும் ஜனநாயக சக்திகளும் ஓரணியில் திரள வேண்டும்
–எஸ்.கே.கங்கா
நம் இந்தியத் திருநாட்டில் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் என்பது ஒரு வாடிக்கையான ஒன்றுதான். நம்மை ஆள்பவர்களை நாமே தேர்ந்தெடுக்கின்ற ஜனநாயக மரபு அது. ஏனெனில் ஆயிரம் விமர்சனங்கள் இருந்தாலும், அண்ணல் அம்பேத்கர் தலைமையில் உருவான அரசியல் சாசனம் என்பது சுதந்திர இந்தியாவை வழி நடத்தும் வழிகாட்டியாக இருந்து வந்தது. உலக நாடுகளில் மிகப்பெரிய ஜனநாயக நாடு என்பதில் நமக்கு பெருமிதமும் இருந்தது. குறிப்பாக இந்தியச் சமூகத்தில் செய்ய வேண்டிய மாற்றங்களை செய்கின்ற அரசியல் ஆற்றல் அந்த சாசனத்திற்கு இருந்தது. எனவே தேர்தல் மூலமாக நடைபெற்ற அரசியல் மாற்றங்களை நாம் மனப்பூர்வமாக ஏற்றுக் கொண்டோம்.
ஆனால் 2014 நாடாளுமன்றத் தேர்தல் நடந்து முடிந்த போது பாரதிய ஜனதா கட்சி பெரும்பான்மை பெற்று திரு நரேந்திர மோடி அவர்கள் இந்தியாவின் பிரதமர் ஆனார். இதற்கு முன்பும் பாரதிய ஜனதா கட்சி பிற ஜனநாயகக் கட்சிகளுடன் கூட்டுச் சேர்ந்து திரு வாஜ்பாய் தலைமையில் ஆட்சி நடத்தி இருக்கிறது. ஆனால் திரு நரேந்திர மோடி ஆட்சிக்கு வந்தபோது பாரதிய ஜனதாக் கட்சிக்குத் தனிப்பெரும்பான்மை இருந்தது. எனவே பாரதிய ஜனதா கட்சி தன்னுடைய இந்துத்துவத் திட்டங்களை நிறைவேற்றுவதற்கு முழு மூச்சாக இறங்கியது.
இந்த அரசியல் சாசனத்தின் அடிப்படையில் ஆட்சிக்கு வந்ததோ, அந்த அரசியல் சாசனத்திற்கே விடை கொடுத்துவிட்டு, அந்த இடத்தில் மனுதர்மத்தின் அடிப்படையிலான அரசியல் சாசனத்தை உருவாக்குவதற்கான பூர்வாங்கப் பணிகளைத் தொடங்கியது. அதேபோல் ஜனநாயகம் என்பது ஜனநாயக ஸ்தாபனங்களின் மூலம் செயல்படுத்தப்படுகின்ற ஒரு அரசியல் முறை. அந்த முறைக்கும் விடைகொடுத்து அரசியல் சாசனத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட ஜனநாயக ஸ்தாபனங்கள் ஒவ்வொன்றாகச் சிதைந்து போவதற்கான நடவடிக்கைகளும் தொடங்கின. எல்லாவற்றுக்கும் மேலாக, இந்திய அரசியல் சாசனத்தின் அடிப்படை அம்சமான மதச்சார்பின்மை என்ற கோட்பாட்டிற்கு டாட்டா காட்டிவிட்டு இந்தியாவை இந்துமத அரசியலின் கைப்பாவையாக ஆக்கும் கைங்கரியம் படிப்படியாக நடக்கத் தொடங்கியது.
ஜனநாயகம் படுகொலை செய்யப்படுகிறது, மதச்சார்பின்மையின் கழுத்து நெரிக்கப்படுகிறது என்பதை உணர்ந்து மாற்றுக் குரல்கள் எழுந்தால், எதிர்ப்புக் குரல்கள் உயர்ந்தால், அப்படி செய்தவர்களை அன்னியர்கள் என்றும், தேச துரோகிகள் என்றும் நிந்திக்கப் பட்டார்கள். பத்திரிகைகள் பாரதிய ஜனதா கட்சியின் ஊதுகுழல் களாக மாறின. அரசியல் சாசனத்தின் பாதுகாவலனான நீதிமன்றத்தின் துலாக்கோலும் ஆளுவோருக்கு ஆதரவாக சாயத் தொடங்கியது.
எனவே 2019 நாடாளுமன்றத் தேர்தல் வந்தபோது இந்திய மக்கள் திசை திரும்பி போய்க் கொண்டிருக்கிற அரசு எந்திரத்தை மீண்டும் ஜனநாயகப் பாதையில் மீட்டுக் கொண்டு வருவார்கள் என்று எதிர்பார்த்தோம். ஆனால் தேர்தல் முடிவுகள் நேர்மாறாக இருந்தன. இந்த நேர் மாறான தேர்தல் முடிவுகளுக்கு முக்கிய காரணம், மக்கள் அல்ல. மாறாக இடதுசாரி ஜனநாயக சக்திகள் அனைத்தும் ஓரணியில் ஒன்றுதிரளாததுதான் என்பதில் எந்த ஐயமும் இல்லை. ஏனெனில் வெற்றி பெற்ற பாரதிய ஜனதா கட்சி அணிக்கு கிடைத்த வாக்குகள் ஏறத்தாழ 34 சதவீதம்தான். ஆனால் 66 சதவீதம் வாக்குகளை பெற்ற எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையின்மை மீண்டும் பாரதிய ஜனதா கட்சியை 2019 ஆட்சியில் கொண்டு அமர்த்தியது.
எனவே, 2024 இல் நடக்கவிருக்கும் அடுத்த நாடாளுமன்றத் தேர்தலை எதிர்நோக்கி நாடு காத்திருக்கிறது. இந்த வேளையில்தான் 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்து இன்று தேர்தல் முடிவுகளும் வந்துவிட்டன. திரு மு.க. ஸ்டாலின் தலைமையில் அமைந்த தி மு க முற்போக்கு கூட்டணி தமிழகத்தில் வெற்றி வாகை சூடியிருக்கிறது. தோழர் பிணராயி விஜயன் தலைமையிலான கம்யூனிஸ்ட் கூட்டணி தொடர்ந்து இரண்டாவது முறையாக வெற்றி வாகை சூடி இருக்கிறது. இந்த இரண்டு தேர்தல் முடிவுகளும் நாம் எதிர்பார்த்தது போலவே அமைந்தன. மட்டுமல்ல, 2019 இல் நாடாளுமன்ற தேர்தலின்போது இந்த இரண்டு மாநிலங்களும் எந்த அணிகளுக்கு வெற்றியைக் கொடுத்ததோ அதே அணிகளைத்தான் இப்போதும் மக்கள் வெற்றிபெற வைத்திருக்கிறார்கள் என்பதும் இங்கே கவனிக்கத்தக்கது.
ஆனால் மேற்கு வங்கத் தேர்தல் எட்டுக் கட்ட வாக்குப்பதிவுகளோடு நடந்தது என்பது மட்டுமல்லாமல், 2019 முதலே பாரதிய ஜனதா கட்சி திட்டமிட்டு, 2021இல் மேற்கு வங்கத்தை கைப்பற்றியே ஆக வேண்டும் என மிகுந்த ஆக்ரோஷத்துடன் செயல்பட்டு வந்தது என்பதை நாடே அறியும். எனவே மேற்கு வங்க தேர்தல் நிகழ்ச்சிப் போக்கின் போது, வேறு எந்த மாநிலத்திலும் காணாத காட்சிகளையெல்லாம் அரங்கேறின. என்றாலும் தேர்தல் முடிவுகள் பாரதிய ஜனதா கட்சியின் கனவைத் தற்சமயம் நிராகரித்துவிட்டன. எனவே செல்வி மம்தா பானர்ஜி தலைமையிலான மேற்கு வங்க வெற்றி என்பது தனித்துவமானது. பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சி என்பது பாசிச ஆட்சி என்று நன்கு அறிந்த போதிலும், அதற்கு எதிராக அனைத்து கட்சிகளையும் ஓரணியில் திரட்ட வேண்டிய நோக்கத்தைக் கை கொள்ளாததன் விளைவுதான் மேற்கு வங்க தேர்தல் மிக சிக்கலான சூழலுக்கு உள்ளானது என்பதை நம்மால் எளிதில் உணர முடிகிறது.
எனவே தற்சமயம் தமிழ்நாடு, கேரளம், மேற்கு வங்கம் ஆகிய 3 மாநிலங்களில் கிட்டியிருக்கிற தேர்தல் வெற்றிகள் நமக்குப் பெருமிதம் அளிக்கின்றவைதான். ஆனால் இந்த வெற்றிகள் முழுமையான வெற்றிகளாக ஆகவேண்டும் என்று சொன்னால், இப்போதிருந்தே பாசிசத்துக்கு எதிரான போராட்டத்தில் இடதுசாரி சக்திகளும் ஜனநாயக சக்திகளும் ஓரணியில் ஒன்று திரண்டு நின்று 2024 நாடாளுமன்றத் தேர்தலைச் சந்திப்பதற்கு தயாராக இருக்க வேண்டும்.
ஏனெனில் 2024 நடக்கப்போகின்ற நாடாளுமன்றத் தேர்தல் எனபது, 1947இல் அந்நிய ஆதிக்கத்தில் இருந்து நாட்டுக்கு விடுதலை வாங்கித் தந்து சுதந்திர இந்தியாவை நிர்மாணித்த நம் முன்னோர்களின் வழியில் இந்தியாவை வழிநடத்த போகிறோமா இல்லை, சமூக ஒடுக்குமுறையை தன் தத்துவமாகக் கொண்டிருக்கிற மனுதர்மத்தின் அடிப்படையிலான இந்துத்துவக் கொள்கையின் வழியில் இந்தியாவை நடத்துவதற்கு அனுமதிக்கப் போகிறோமா என்பதை முடிவு செய்கிற தேர்தலாகும்.
இது ஒருவகையில் ஜீவ மரணப் போராட்டம் போன்றது. நாம் எந்தப் பக்கத்தில் இருக்கப் போகிறோம் என்பது மிக முக்கியம். அதிலும் குறிப்பாக மக்களை வழிநடத்துகின்ற இடதுசாரி ஜனநாயக சக்திகள் எப்படி ஓரணியில் ஒன்று திரளப்போகிறது என்பது அதைவிட மிக மிக மிக முக்கியம்.